மறைந்த அமைச்சர் துரைகண்ணு தொடர்பான சொத்து குவிப்பு விவகாரத்தில்
முறையான விசாரணை நடந்தாக வேண்டும்தமிழ்நாட்டு விவசாயம் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது. சிறுகுறு, நடுத்தர விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற தொழிலாளர்கள் என விவசாய சமூகத்தின் வாழ்க்கை துயரம் நிறைந்ததாகவே இருக்கிறது. நிலமற்றவர்கள் நிலம் வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பும்போது,
இருக்கிற விவசாய நிலத்தை பாதுகாத்துக் கொள்ள விவசாயிகள் பெரும் போராட்டங்கள் நடத்த வேண்டியுள்ளது. கஜா புயல் தாக்கத்தில் இருந்து இன்னும் முழுவதும் மீளாத நிலையில் கொரோனா காலத்து கொடூரங்களும் சேர்ந்து கொள்ள தமிழ்நாட்டின் விவசாய சமூகத்திற்கு எதிர்காலம் இருட்டாகவே தெரிகிறது.ஆனால், தமிழ்நாட்டின் விவசாய அமைச்சர் துரைகண்ணுவுக்கு நெருங்கியவர்களிடம் இருந்து ரூ.300 முதல் ரூ.800 கோடி வரை சிக்கியுள்ளதாக, கன்டெய்னரில் பணம் வந்து சேர்ந்ததாக செய்திகள் வெளியாகின்றன. அமைச்சர் கொரோனாவால் தாக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். தஞ்சையில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர், பிறகு சென்னை காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்படுகிறார். அக்டோபர் 28 அன்று அவர் இறந்துவிட்டதாக தஞ்சையில் செய்தி பரவுகிறது. பிறகு அக்டோபர் 31 அன்று அவர் இறந்துவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
கும்பகோணம் அருகிலுள்ள கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் நவம்பர் 5 அன்று கைது செய்யப்படுகிறார். அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் அதனால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் சொல்கின்றனர். இந்த முருகன் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது. அமைச்சருக்கு நெருக்கமான இன்னும் நான்கு பேரும் கைது செய்யப்படுகின்றனர். முருகன் கைதைக் கண்டித்து நடந்த சாலை மறியலை சமாளிக்க காவல் துறையினர் 500 பேர் கும்பகோணத்தில் குவிக்கப்படுகின்றனர். ஊராட்சி மன்றத் தலைவர் கைதை ஒட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் இருந்து நிலைமையை கட்டுக்குள் வைக்கிறார்.
விவசாய அமைச்சர் துரைகண்ணு பாபநாசம் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றவர். அஇஅதிமுக அரசு பற்றி தவறாக பேசுபவர் நாக்கை அறுப்பேன் என்று ஒரு கூட்டத்தில் சொன்னவர். இந்த அளவுக்கு அஇஅதிமுகவுக்கு விசுவாசமான ஓர் அமைச்சர் இறந்த பிறகு, அவரது ஆதரவாளர்கள் ஏன் கைது செய்யப்படுகிறார்கள், அவரது மகன் மற்றும் குடும்பத்தார் ஏன் பத்திரிகையாளர் யாருடனும் பேச மறுக்கின்றனர், ஊராட்சி மன்றத் தலைவர் கைதுக்கு ஏன் இந்த அளவுக்கு பெரிய காவல்துறை கெடுபிடிகள் என்று கேள்விகள் எழுகின்றன.
புலனாய்வு பத்திரிகையான நக்கீரன், ஜனரஞ்சக பத்திரிகையான விகடன், எதிர்க்கட்சியினர் நடத்தும் பத்திரிகையான தினகரன் உட்பட எல்லா தமிழ் பத்திரிகைகளிலும் ரூ.300 கோடி, ரூ.800 கோடி வரையிலான கட்சியின் பணம் அமைச்சர் கையில் இருப்பதாக அமைச்சர் துரைகண்ணு மரணத்தை ஒட்டி செய்திகள் வந்தன.
சென்னையில் தந்தை தீவிர சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருக்கும்போது, அவரது மகன் அய்யப்பன், சென்னையில் இருந்து தஞ்சை, தஞ்சையில் இருந்து திண்டுக்கல், திண்டுக்கல்லில் இருந்து உடுமலைப்பேட்டை, அங்கிருந்து எர்ணாகுளம் சென்று எர்ணாகுளத்தில் இருந்து சென்னை திரும்பியிருக்கிறார். ஒப்புக்கொள்கிறார். தந்தை நலம் பெற வேண்டி யாகம் செய்ததாகச் சொல்கிறார். அவர் சென்னை திரும்பிய பிறகு அமைச்சர் துரைகண்ணு இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.
அமைச்சர் துரைகண்ணுவுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பணத்தை மீட்கவே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஜெயலலிதா மரணத்தில் நடந்தது போலவே, துரைகண்ணு மரணத்திலும் நடந்துள்ளதாகவும் எடப்பாடி அரசுக்கு பணமே பிரதானம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டுகள் முன் வைக்கும்போது, அவதூறு வழக்கு போடப்படும் என்று வழக்கமாக மிரட்டும் அஇஅதிமுககாரர்கள் இந்த விசயத்தில் அப்படி எதுவும் செய்யவில்லை. மாறாக, சுகாதாரத் துறை அமைச்சர் பதில் சொல்கிறார். இதற்கு அவர் ஏன் பதில் சொல்கிறார் என்று மீண்டும் கேள்வி எழுந்த பிறகு முதலமைச்சர் பதில் சொல்கிறார். பதில் சொல்வதுடன் முடித்துக் கொண்டார்களே தவிர அவதூறு வழக்கு என்று எதுவும் இது வரை ஸ்டாலின் மீது போடப்படவில்லை.
நக்கீரன் அலுவலகத்துக்குள் புகுந்து காவல்துறையினர் நடத்திய அத்துமீறல்கள் இன்னும் நினைவில் உள்ளன. இன்று அதே நக்கீரன் அமைச்சர் துரைகண்ணு மரணம், அதற்குப் பின் நடக்கும் கைதுகள், சோதனைகள் பற்றி செய்தி வெளியிடும்போது, அந்த பத்திரிகை பற்றி முதலமைச்சர் வரை யாரும் பேசவில்லை. விகடன் பத்திரிகை மீது கூட ஒரு தாக்குதல் நடந்தது. அமைச்சர் துரைகண்ணு விவகாரத்தில் விகடன் மீதும் அஇஅதிமுகவினர் யாரும் பாயவில்லை. அஇஅதிமுகவினர் இப்படி அமைதி காப்பதாலேயே ரூ.300 கோடி, ரூ.800 கோடி தொடர்பான சந்தேகங்கள் மேலும் வலு பெறுகின்றன.
இந்த சந்தேகங்களை ஒட்டிய செய்திகளில், தினகரன் நாளேட்டின் செய்தி ஒன்று அமைச்சர் ரூ.5,000 கோடிக்கு சொத்து சேர்த்திருப்பதாகவும், அவர் இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு பினாமிகள் பெயரில் 500 ஏக்கர் நிலம் வாங்கியதாகவும் சொல்கிறது.
இப்போது செய்திகளில் அடிபடும் ரூ.300 கோடியோ, ரூ.800 கோடியோ, ரூ.5,000 கோடி அளவுக்கு சொத்து சேமிப்போ, 500 ஏக்கர் நிலம் வாங்குவதோ, ஓர் அமைச்சருக்கு சட்டபூர்வமான வழிகளில் சாத்தியமில்லை. இந்தப் பணம், இந்த சொத்து பற்றிய விவாதம் பொது வெளிக்கு வந்துவிட்டது. ஊழல் செய்தால் மட்டுமே இந்த அளவுக்கு பணம் புழங்குவது சாத்தியம். அதாவது மக்களுக்குச் சேர வேண்டிய பணத்தை வேறு வழியில் திருப்புவது, மக்களுக்கு துரோகம் இழைக்கும் நடவடிக்கைககளுக்கு துணை போனதற்கு கைமாறாக மாறி வந்தது என முறைகேடாக வந்த பணமாகவே இருக்க முடியும். உண்மை வெளிச்சத்துக்கு வர வேண்டும்.
தலைமைச் செயலகத்திலேயே சோதனை நடத்திய ஒன்றிய அரசு நியாயவான்கள், இந்த அளவுக்கு செய்திகள் வந்த பிறகும், என்ன, ஏன் என்று ஒரு கேள்வி கூட கேட்கவில்லை.
ஒரே ஒரு அமைச்சரைச் சுற்றி, அதிலும் பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாத ஓர் அமைச்சரைச் சுற்றி இருப்பவர்கள் மட்டுமே பல நூறு கோடிகள், பல ஆயிரம் கோடிகள் என வைத்திருப்பார்கள் என்றால், மொத்த அமைச்சரவை, அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வைத்திருப்பது என தமிழ்நாட்டில் பணம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஜெயலலிதா மறைவை ஒட்டி நடந்த கொடநாடு பங்களா சோதனைகள், கொலைகள், தற்கொலைகள் எல்லாம் பார்த்தும் வேதா நிலையம் அரசுடைமையாக்கப்படும் என்ற அரசாணை மட்டுமே கடைசியில் தமிழ்நாட்டு மக்களிடம் காட்டப்பட்டது. அதற்கும் தமிழக அரசு வரி பாக்கி கட்டி சில கோடிகள் மக்கள் பணம் போனது.
ஒன்றிய, மாநில ஆட்சியாளர்களின் குற்றமய அலட்சியத்தால் கொரோனா கட்டுக்கடங்காமல் சாமான்ய வாழ்வை துன்பகரமாக்கிய அந்த உச்ச காலகட்டத்தில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் ஒன்றிய அரசின் திட்டத்தில் விவசாயிகளுக்கு நிதி வழங்குவதில் ரூ.110 கோடி ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு முறைகேடாக நிதி பெற்றவர்கள் அந்த நிதியை வங்கிகளில் திருப்பி செலுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டது.
அஇஅதிமுக ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் நிறைந்திருப்பதை அமைச்சர் மறைவை ஒட்டிய நிகழ்வுகள் காட்டுகின்றன. விவசாய அமைச்சர் மீது, அவர் இறந்த பிறகு சொத்து குவிப்பு புகார் வருவதற்கும், அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற 2006 முதல் அமைச்சராக பதவியில் இருந்த 2016 முதல் 2020 வரை அவரது பதவிக் காலம் நெடுக தமிழ்நாட்டு விவசாய சமூகம் பெரும்துன்பங்களைச் சந்தித்து வருவதற்கும் நிச்சயம் தொடர்புள்ளது.
மறைந்த அமைச்சர் துரைகண்ணு தொடர்பான சொத்து குவிப்பு புகார்களில், முறையான விசாரணை மூலம் மக்கள் பணம் என்னவாயிற்று என்று தெரிந்தாக வேண்டும். அதற்கு ஊழல், அடிமை அஇஅதிமுக அரசாங்கத்தை விரட்டியாக வேண்டும்.