பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
எஸ்.குமாரசாமி
2020 நவம்பர் 7 அன்று, பீகாரில், நான்காவது முறையாக நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்றார். கரப்ஷ்ன், க்ரைம், கம்யூனலிசம், அதாவது, ஊழல், குற்றம், மதவாதம் என்ற மூன்றுக்கும் தமது அரசியல் எதிரானது என்றார் நிதிஷ்குமார்.
2017 ஜ÷லையில் அணி மாறி, 53 தொகுதிகள் பெற்றிருந்த பாஜகவுடன் கூட்டு சேர்ந்த நிதிஷ், 2019 மக்களவைத் தேர்தலிலும் 2020 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவோடு கூட்டணி அமைத்து, மதவாத அரசியலுக்கு வலு சேர்த்ததால், இளநிலைக் கூட்டாளியாக இருந்தும், பாஜக, அவரை பொம்மை முதலமைச்சராக்கியுள்ளது. ஆனால், இரண்டு துணை முதலமைச்சர்கள் போட்டு, நிதிஷ் செல்வாக்கு சரிய காய் நகர்த்துகிறது.
மேல்சாதி பார்ப்பனர், ராஜ்புத், பூமிஹார் ஆதரவு கூட்டணிக்கு வலு சேர்க்க, வணிக சாதியில் ஒருவரை பாஜக துணை முதலமைச்சர் ஆக்கியுள்ளது. பெண்கள் மத்தியில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் நிதிஷ÷க்கு இருக்கும் செல்வாக்கைப் பறிக்க, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவரையும் பாஜக துணைமுதலமைச்சர் ஆக்கியுள்ளது.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. பாஜக, அய்க்கிய ஜனதா தளம், இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சிகள், 2019 மக்களவைத் தேர்தலில் 56.51% வாக்குகளுடன், பாஜக 96 சட்டமன்றத் தொகுதிகள், அய்க்கிய ஜனதா தளம் 92 சட்டமன்றத் தொகுதிகள், இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா 2 சட்டமன்றத் தொகுதிகள் என 190 தொகுதிகளில் முன்னிலை வகித்தனர். ஒன்றரை ஆண்டுகளில் முன்னிலையில் இருந்த சுமார் 70 தொகுதிகளையும் 20% வாக்குகளையும் இழந்துள்ளனர். 2020ல் வெற்றி பெற்ற அணி வெறும் 13,000 வாக்குகளே கூடுதலாகப் பெற்று தப்பிப் பிழைத்து வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் சொல்லும் சில முக்கிய செய்திகள்
பீகாரின் சீமாஞ்சல் பிரதேச நிகழ்வு மேற்கு வங்கத்தில் மமதாவுக்கு கவலையை உருவாக்கியுள்ளது. அடுத்த சுற்றில், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. 2019 மக்களவைத் தேர்தலில் மமதாவின் திரிணாமூல் 22 தொகுதிகளிலும் மோடி, அமித் ஷாவின் பாஜக 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். பாஜகவை விட திரிணாமூல் 3% மட்டுமே கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளது. பீகாரைக் காட்டிலும் மேற்கு வங்கத்தில் மக்கள் தொகையில் இசுலாமியர் சதவீதம் கூடுதல். பீகாரின் சீமாஞ்சல் பிரதேசத்தின் மக்கள் தொகையில், கிருஷ்ணாகஞ்சில் 70%, கதிஹாரில் 43%, அராரியாவில் 42%, பூர்னியா வில் 38% இசுலாமியர் உள்ளனர். காங்கிரசும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான பிரச்சாரம் நடத்தவே தயங்கினர், கூட்டணியில் தமக்கு உரிய இடம் தரவில்லை என்று சொல்லி போட்டியிட்ட ஓவைசியின் ஏஅய்அய்எம்எம் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இசுலாமியர், இசுலாமிய கட்சியை மட்டுமே நம்ப முடியும் என்ற நிலை, காங்கிரஸ் போன்ற கட்சிகள் பின்பற்றும் இந்திய பாணி மதச்சார்பற்ற அரசியலின் பலவீனத்தையும் திவாலாத்தன்மையையும் காட்டுகிறது.
ஓவைசி போட்டியிட்டதால் ராஷ்ட்ரிய ஜனதா தள அணி தோற்றது என்பதற்கு சான்றுகளோ, ஆதாரமோ இல்லை. வங்கத்தில், வருகிற தேர்தலில், இசுலாமியர்கள் மமதாவை துறந்து ஓவைசியின் பக்கம் சென்றுவிட வாய்ப்பு இன்றளவில் தெரியவில்லை.
பாஜக வந்துவிடக் கூடாது என்பதற்காக, ஆட்சியில் உள்ள திரிணாமூலுடன் கூட்டு சேர்வது நிச்சயம் சரியாக இருக்காது. அதே நேரம் மமதாவுக்கு மாற்று துருவமாக, மக்கள் சார்பு அரசியல் வலுப்பெறுவது மட்டுமே, பாஜக வளர்ச்சியை தடுக்கும். திரிணாமூலை, பாஜகவை, மத்திய மாநில அரசுகளை, இடதுசாரிகள் துணிச்சலுடன் எதிர்ப்பது, போராடுவது என்பது மட்டுமே வங்கத்துக்கு சரியாக இருக்கும்.
இந்த முறை காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணியில் இடதுசாரிகள் இடம் பெற்றதும் இடதுசாரி கட்சிகளுக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதும், அவர்கள் பங்களிப்புடன் தேர்தல் சமயத்தில் மக்கள் சார்பு திட்டம் முன்வைக்கப்பட்டதும், போட்டியிட்ட 29 தொகுகளில் 16 தொகுதிகளில் இடதுசாரிகள் வெற்றி பெற்றதும் பீகார் நாட்டுக்கு தந்துள்ள நல்ல செய்தி.
மாலெ கட்சியின் தேர்தல் தந்திரம் கவனத்தில் கொள்ளத்தக்கதும் சரியானதும் ஆகும். மத்தியிலும் மாநிலத்திலும் பதவியில் உள்ள கட்சிகளை முறியடிக்க, இந்து ராஷ்ட்ரா திட்டத்தின் முன்னேற்றத்தை தடுக்க, பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் இருக்க, பீகாரின் அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி அமைந்தது, பாஜக அணியை கிட்டத்தட்ட தோற்கடித்தது. அய்க்கிய ஜனதா தளத்துக்கு எதிராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் போட்டியிட்ட 71 தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 50 தொகுதிகளிலும் அய்க்கிய ஜனதா தளம் 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அய்க்கிய ஜனதா தளத்துக்கு எதிராக இடதுசாரிகள் போட்டியிட்ட 16 தொகுதிகளில் 11 தொகுதிகளில் இடதுசாரிகளும் 5 தொகுதிகளில் அய்க்கிய ஜனதா தளமும் வெற்றி பெற்றுள்ளன. அய்க்கிய ஜனதா தளத்துக்கு எதிராக காங்கிரஸ் போட்டியிட்ட 28 தொகுதிகளில் 17 தொகுதிகளில் அய்க்கிய ஜனதா தளமும் 11 தொகுதிகளில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரசுக்கு 70க்கு பதில் 50 இடங்கள், அந்த மீதி 20 இடங்களில் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் இடதுசாரிகளும் அய்க்கிய ஜனதா தளத்துக்கு எதிராக போட்டியிட்டிருந்தால் பீகார் தேர்தல் முடிவுகள் மாறியிருக்கும்.
மாலெ கட்சியின் தேர்தல் தந்திரம் நல்விளைவுகளை தருவதாக, இடதுசாரிகள் செல்வாக்கை பெருக்கிக் கொள்ள களம் அமைப்பதாக இருந்தது. கூட்டணி/தேர்தல் உறவுகளால் இடதுசாரிகள் உடனடி/நீண்டகால நலன் பெற முடியும் என்பதையும் காட்டியது.
பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் 2000ல் 6 தொகுதிகள், 2005 பிப்ரவரியில் 7 தொகுதிகள், 2005 அக்டோபரில் 5 தொகுதிகள், 2010ல் எந்தத் தொகுதியிலும் வெற்றி இல்லை, 2015ல் 3 தொகுதிகள் என வெற்றி பெற்ற மாலெ கட்சி, 2015ல் 98 தொகுதிகளில் போட்டியிட்டு, 5,87,021 வாக்குகள் பெற்ற மாலெ கட்சி, 2020 தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்று, 19 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு, 13,33,569 வாக்குகள் பெற்றது. கூட்டணி பலத்தால், 19 தொகுதிகளில் 9,89,835 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. (2020ல் போட்டியிட்ட வாரிஸ் நகர், அவுராய் தொகுதிகளில் 2015ல் மாலெ கட்சி போட்டியிடவில்லை).
2019 தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் ஆதரவுடன் அராவில் 4,19,195, சிவானில் 76,644, கராகட்டில் 24,932, ஜெகனாபாதில் 26,325 என 5 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மக்களவைத் தொகுதியில் வாக்குகள் பெற்ற மாலெ கட்சி திறன்வாய்ந்த கூட்டணி தந்திரத்தால், கராகட் மக்களவைத் தொகுதியின் கராகட் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 82,200 வாக்குகள் பெற்றுள்ளது. ஜெகனாபாதில், ஆர்வால், கோசி என்ற இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் 1,42,998 வாக்குகள் பெற்றுள்ளது. சிவானின், தரோலி மற்றும் சிராதே தொகுதிகளில் மட்டும் 1,50,509 வாக்குகள் பெற்றுள்ளது.
தேர்தல் தந்திரம் எல்லா விதத்திலும் சரியானதே. ஆனால், இடதுசாரி கட்சிகளின் குறைவளர்ச்சியை, தேர்தல் தந்திரங்கள், தேர்தல் முடிவுகள் கொண்டு மட்டும் காண்பது சரியல்ல. வளர்ச்சியின்மைக்கான காரணங்களை வலுவான மக்கள் போராட்டங்களோடு அவர்களுக்கு தொடர்பிருக்கிறதா, அவர்களுக்கு எந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்பதில் தேடுவதுதான் சரியாக இருக்கும். புதிய ஆற்றல், புதிய சக்திகள், புதிய செல்வாக்கு, வலுவான மக்கள் திரள் போராட்டங்கள், புதிய நண்பர்கள், புதிய கூட்டாளிகள், புதிய படைப்பாற்றல், புதிய கற்பனைத் திறன் கொண்டே இடதுசாரிகள் வளர்ச்சி அடைய முடியும்.
மாலெ கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள், சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் கோரிக்கைகளுக்கு தீவிரமாக களம் காண்பது, இடதுசாரி அரசியலுக்கு வலு சேர்க்கும். இடதுசாரி ஆதரவாளர்களுக்கு, சாமான்ய மக்களுக்கு நம்பிக்கை தரும்.