ஆட்சியாளர்களின் குளறுபடிகளால்
மாணவர்களின் எதிர்காலம் இருளாகக் கூடாதுதமிழ்நாட்டின் ஒப்பீட்டுரீதியில் உயர்வான மருத்துவ தரத்தை சீர்குலைக்க ஒன்றிய அரசு விடாப்பிடியான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
தமிழக அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிடி மேற்படிப்புகளுக்கு இந்த ஆண்டு 50% இட ஒதுக்கீடு தரப்படாது என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. தமிழக அரசு அது நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் தனது மாநில தேவைகளுக்கு, நலன்களுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கை நடத்துவதில், அப்படி நடத்தி இது வரை மேம்பட்ட மருத்துவ கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கும்போது, இருக்கிற நடைமுறை மேலானது என்று யதார்த்தத்தில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளபோது, அதில் நுழைந்து குழப்பம் உருவாக்குவதில், தமிழ்நாட்டு உரிமைகளை பறிப்பதில் மோடியின் பாஜக ஆட்சி சிறப்பு கவனம் செலுத்துகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் தமிழ்நாட்டைப் போல் மருத்துவ கட்டமைப்பை உருவாக்க என்ன செய்யலாம் என்று திட்டமிடுவதை விட்டுவிட்டு மேலான நிலையில் இருக்கிற கட்டமைப்பை குலைத்து விடப் பார்க்கிறது.இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகளிலும் குளறுபடிகள். ஒப்பீட்டு மதிப்பீட்டில் 500க்கும் மேல் மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கு பூஜ்ஜியம் என்று மதிப்பெண் வெளியிடப்பட்டு பிறகு சரிசெய்யப்பட்டு... மதிப்பெண்களைக் கூட சரியாக வெளியிடத் தெரியாதவர்கள் மாணவர்கள் தகுதியை தீர்மானிக்க முடியாது என்றுதான் நாம் சொல்கிறோம்.
கொரோனா கொடுமைகளுக்கு ஊடாகவே நீட் தேர்வு வைத்து, மூன்று மாணவர்கள் உயிரிழக்கக் காரணமானதால் ஏற்பட்ட மக்கள் சீற்றத்தைத் தணிக்க, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு கொண்டுவரும் நிர்ப்பந்தம் ஊழல், அடிமை அஇஅதிமுக ஆட்சியாளர்களுக்கு உருவானது. சட்டமன்றம் இயற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் சட்ட ஆலோசனை கேட்க வேண்டும் என்று கிடப்பில் போட்டு தமிழக மாணவர்களை, பெற்றோரை இன்னும் ஒரு சுற்று மனஉளைச்சலுக்கு ஆளாக்கினார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் முடிவு செய்தபின் எந்த சட்ட ஆலோசனை அவசியப்படுகிறது? ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று குரல் எழுந்த பிறகு, உண்மையில் ஆளுநரை காப்பாற்ற அரசாணை போடப்பட்டது. அக்டோபர் 29 அன்று அரசாணை வெளியிடப்பட்ட பிறகு, அக்டோபர் 30 அன்று ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
இங்கும் ஒரு வஞ்சகம் நடந்தது. ஜுன் 8 அன்று நீதிபதி கலையரசன் குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஜுன் 15 அன்று நடந்த அமைச்சரவை கூட்டம் நீதிபதி கலையரசன் குழு பரிந்துரைத்த 10% உள்ஒதுக்கீட்டை ஏற்றிருந்த போது, அரசாணை 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு வந்தது. இந்த 7.5% தனது எண்ணத்தில் உதித் தது என்று முதலமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்.
அரசு மருத்துவ கல்லூரிகளில் 227 எம்பிபிஎஸ் இடங்கள், தனியார் மருத்துவ கல்லூரிகளில் 86 எம்பிபிஎஸ் இடங்கள் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் சேர்ந்து பிடிஎஸ் படிக்க 92 இடங்கள், மொத்தம் 405 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.
26 அரசு மருத்துவ கல்லூரிகள், இரண்டு அரசு பல் மருத்துவ கல்லூரிகளில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15% இடங்கள் போக மீதம் முறையே 3,032 மற்றும் 165 இடங்களும், 15 தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 1147, நிர்வாக ஒதுக்கீடு 953 எம்பிபிஎஸ் இடங்களும், 18 தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1065, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 695 இடங்கள் என இருக்க, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 23707 விண்ணப்பங்களும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,276 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் 951 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த 951 பேரில் 405 பேருக்குத்தான் அரசுக் கட்டணத்தில் மருத்துவ படிப்பு.
அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக முடியும் என்பதை எங்களது அரசு நடத்திக் காட்டியிருக்கிறது என்றார். இன்று உலக அளவில் புகழ் பெற்ற மருத்துவர்களாக இருக்கும் பல தமிழர்கள் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் என்பதை யாரும் இப்படியெல்லாம் சொல்லி புறந்தள்ளிவிட முடியாது. அந்த 7.5% ஒதுக்கீட்டில் இடங்கள் ஒதுக்க துவங்கியபோது அடுத்த பிரச்சனை எழுந்தது. அரசுப் பள்ளி மாணவர் பலருக்கு அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் தனியார் கல்லூரிகளில் பல லட்சங்கள் கல்வி கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமை உருவானது. அவர்களது கல்விச் செலவை திமுக ஏற்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்த சில மணி நேரத்தில், தனியார் கல்லூரியில் செலுத்த வேண்டிய கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் முழுவதையும் தமிழக அரசு ஏற்கும், அதற்காக ஒரு சுழல் நிதி உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் சொல்கிறார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வருவதற்குள் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டு அந்த லட்சங்களைக் கண்டு அஞ்சிய அரசுப் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் வேறு வழியின்றி அந்த இடங்கள் வேண்டாம் என்று எழுதியும் கொடுத்து விட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு போய்விட்டார்கள்.
கலந்தாய்வுக்கு வந்தபோது, இன்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிடலாம் என்று கனவு டன் வந்த மாணவர்கள் சிலருக்கு இதுபோன்ற குளறுபடிகளால் கனவு கேள்வியாகி நிற்கிறது. அரசின் அறிவிப்பு தாமதமாக வந்ததற்கு, அறிவு படைத்த மாணவர்கள், நீட் தேர்வும் எழுதி இவர்கள் சொல்லும் பாழாய்ப்போன தகுதியை மெய்ப்பித்த மாணவர்கள் ஏன் மனஉளைச்ச லுக்கு ஆளாக வேண்டும்? தனியார் மருத்துவ கல்லூரியில் சேர முடியாது என்பதால் இடம் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தபோது, அந்த மாணவியின், அவரது பெற்றோரின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்? ஏன் இப்படி நமது மாணவர்களை சித்திரவதை செய்கிறார்கள். ஏழைகள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் நன்றாகப் படிப்பது தவறா?
சென்ற ஆண்டு ஆள்மாறாட்டம் நடந்தது. ஆதார் அட்டை கொண்டு அவர்களை அடையாளம் காண முடியவில்லை என்று சொன்னார்கள். நீட், ஆதார் எல்லாம் வெற்று நடவடிக்கைகள் என்பதை இந்த நடப்பு காட்டியது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டபோது, பிற மாநில மாணவர்கள் பெயர்கள் தமிழ்நாட்டு மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் இருந்ததாகவும் அந்த மாணவர்கள் போலியாக இரண்டு மாநிலங்களுக்கும் இருப்பிட சான்றிதழ் பெற்றுள்ளதாகவும் புகார்கள் வந்தன. தவறு செய்தவர்களை சும்மா விடமாட்டோம் என்று சுகாதார அமைச்சர் சொன்னார். அவர் பெயரே ஊழல் புகார்களில் சிக்கியுள்ளபோது, அவர் இந்த முறைகேட்டில் என்ன நியாயம் வழங்குவார்?
நீட் என்றால் தரம் என்று நீதிமன்றம் வரை சென்று, மாணவர்களின் தற்கொலைகளைக் கண்டும் கொள்கை மாறாமல், நீட் நீட்தான், உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது என்று சொன்னவர்கள் இன்று, மத்திய அரசின் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்களித்து, வேறு ஒரு தேர்வு வைக்கிறார்கள். உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கும்போது, இந்த விலக்கு மட்டும் எப்படி சாத்தியம்? அப்படியானால், தமிழ்நாட்டுக்கும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியும். அப்படியானால் நீட் தேர்வே இல்லாமல் போகவும் முடியும்.
இப்படியெல்லாம் தலையைச் சுற்றி மூக்கை தொடாமல் நீட் வேண்டாம் என நேரடியாகவே தமிழக மக்கள் சொல்கிறார்கள். மாநில ஊழல், அடிமை ஆட்சியாளர்களும் ஒன்றிய பாசிச ஆட்சியாளர்களும் அவர்களது நடவடிக்கைகளாலேயே அம்பலப்பட்டுள்ளார்கள். ஆட்சியாளர்களின் குளறுபடிகளால் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்று, கட்டணம் செலுத்த முடியாததால் தனியார் கல்லூரி வேண்டாம் என்று எழுதிக் கொடுத்திருந்தாலும், அந்தக் கடிதம் ரத்து செய்யப்பட்டு அவர்களது மருத்துவ படிப்பு அரசு செலவில் உறுதி செய்யப்பட வேண்டும்.
7.5% மக்கள் சீற்றத்தை தணித்துவிட்டது என ஏமாறாமல், நீட் விலக்குக்கு, நீட் ரத்துக்கு, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதற்கு, தமிழக அரசு உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.