ஜனவரி 25 - மொழிப்போர் தியாகிகள் தினம்
உமாமகேஸ்வரன்
தமிழ் மொழி நீண்ட வரலாறு கொண்டது. அதேபோல், தமிழ் மொழி தனது நீண்ட வரலாறு முழுவதிலும் பிறமொழி - கலாச்சார பண்பாடு ஆதிக்கத்தை எதிர்த்தும் போராடிக் கொண்டிருக்கும் மொழியும் ஆகும். புராதன காலம் தொட்டு, பக்தி இயக்க காலம் முதல், இன்றைய காலம் வரை அது சமஸ்கிரதத்தையும், ஹிந்தியையும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது. தமிழ் உலகத்தின் மூத்த செம்மொழி 6ல் ஒன்றாக இருந்தபோதும் தன் சொந்த நாட்டில் செம்மொழியாக அங்கீகாரம் பெற கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது என்பது எவ்வளவு மோசமான விஷயம். தமிழ் மக்களின் மகத்தான மொழிப் போர் இயக்க வரலாறு நாம் மீண்டும் ஒருமுறை தெரிந்து கொள்வது இன்றைய அவசியத் தேவை.
கடந்த மூன்று நூற்றாண்டுகளில் தேசியவாதத்தின் வளர்ச்சி காரணமாக பல ஐரோப்பா மற்றும் ஆசியா நாடுகளில் ஏற்பட்ட தேசிய சுய நிர்ணய உரிமைக்கான போராட்டங்கள் மொழி உரிமைக்கான போராட்டமாகும். 19ம் நூற்றாண்டு ரஷ்யப் பேரரசில் நடந்த பல கலகங்களுக்கும், புரட்சிகளுக்கும் மையமாக மொழியும் கலாச்சார உரிமைகளும் இருந்திருக்கின்றன. 20ம் நூற்றாண்டில் கூட, பல அண்டைய நாடுகளிலும், தூரக்கிழக்கு நாடுகளிலும் மொழி போராட்ட இயக்கங்கள் நடந்தன. இந்தியாவிலும், தமிழ் மொழி இயக்கமும் அத்தகைய மகத்தான இயக்கம் ஆகும்.
தமிழ் மொழி போராட்ட இயக்கத்தின் முதல் பகுதி 1937ல் தொடங்கியது. பிர்ட்டீஷ் இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தலில் சென்னை மாகாண தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. இந்தியாவின் பொது மொழியாக இந்தியை கொண்டு வருவது என்கிற காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவை, புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு 1938 ஏப்ரல் மாதம் ஒரு அரசாணை மூலம் நிறைவேற்றியது. அதன்படி, சென்னை மாகாணத்திற்கு உட்பட்ட பிரதேசங்களிலுள்ள உயர்நிலைப் பள்ளிகளில் இந்தி மொழி கற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டது.
இந்த ஆதிக்கத்தை எதிர்த்து தமிழ் தேசிய வாதிகள் அந்த பிராந்தியம் முழுவதும் பெரும் போராட்டங்களைத் துவக்கினர். இந்தித் திணிப்பு என்பது தமிழர்களின் தனித்துவமான அடையாளத்தை அழிப்பதற்கும் வடவர்களின் கலாச்சார மேலாதிக்கத்தை தமிழர்களின் மேல் நிறுவுவற்குமான முயற்சி என்பதை புரிந்து கொண்ட தமிழ் அறிஞர்களும், இலக்கியவாதிகளும் மிகுந்த ஆர்வத்தோடு இந்த எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்றனர். 1938ஆம் ஆண்டு முழுவதும் பல நீண்ட நடைபயணங்கள், மாநாடுகள் நடந்தன.
1938 செப்டம்பர் மாதத்தில் நடந்த ஒரு மாநாட்டில் தந்தை பெரியார் தமிழ் நாடு தனி நாடாக வேண்டும், 'தமிழ் நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தை முன் வைத்தார். இந்த இயக்கத்தின் மிகவும் முக்கியமான, போற்றத்தக்க விஷயம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் பெண்களின் மகத்தான பங்கேற்பாகும். 1939ல் தமிழ் மொழிக்கான ஒரு மாநாடு முழுவதும் பெண்களுக்காகவே நடத்தப்பட்டது.
பிரிட்டீஷ் சென்னை மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட முதலாவது அரசு. பிரிட்டீஷ் ஏகாதிபத்திய அரசு அதிகாரத்தைவிட மிக மூர்க்கத் தனமாக இந்த எதிர்ப்பை அடக்குமுறை மூலம் ஒடுக்க முயற்சித்தது. ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு கால அளவுகளில் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதில் 73 பெண்களும் அடங்குவர். அதில் பாதிக்கு மேற்பட்டவர்கள் குழந்தைகளுடன் உள்ள தாய்மார்கள் ஆவர். தந்தை பெரியாருக்கும், மற்ற தலைவர்களுக்கும் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. ஜனவரி 1939ல் சிறையிலடைக்கப்பட்ட 2 எதிர்ப்பாளர்கள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோர் சிறையிலேயே இறந்தனர். அவர்கள் நோய் காரணமாக இறந்துவிட்டதாக அரசு சொன்னது. ஆனால் உண்மையில் அவர்கள் சிறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டு மரணமடைந்ததாக போராட்ட இயக்கத்தினர் கூறினார்கள். இதற்குப் பின் போராட்ட இயக்கம் மிகவும் தீவிரமான கட்டத்தை அடைந்தது. 3 ஆண்டுகளாக நடந்த அந்தப் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத ராஜாஜியால் தலைமை தாங்கப்பட்ட அந்த அரசு ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்பின்னர், 1940ல் அன்றைய பிரிட்டீஷ் கவர்னர் எர்ஸ்கின் துரையால் 'கட்டாய இந்தித் திணிப்பு' அரசு ஆணை ரத்து செய்யப்பட்டது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் அடுத்த பகுதி 1963ல் துவங்கியது. அதற்குமுன், அந்தப் போராட்டம் துவங்குவதற்கான பின்புலத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் பிரிட்டீஷ் ஆட்சி 1947ல் முடிவுக்கு வருகின்ற கால கட்டத்தில் இந்தியாவின் தேசிய மொழி பற்றிய விஷயம் ஓரு முக்கியமான பிரச்சனையாக மாறியது. அதாவது இந்தியாவின் குடியரசு பற்றிய வரையறையும் அதற்கான அரசியல் சாசனமும் உருவாக்க வேணடிய கால கட்டம் அது. அப்போது இந்தியாவின் ஆட்சி மொழி ஆங்கிலமா அல்லது இந்தி மொழியா என்கின்ற கேள்வி எழுந்தது.
ஒரு புறம் காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைவர்களான ஜவஹர்லால் நேரு, அப்துல் கலாம் ஆசாத் மற்றும் இந்து தேசியவாதத் தலைவர்கள் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என விரும்பினர். ஆனால் அதற்கு எதிர்ப்பு பிரதானமாக தென்இந்தியாவைச் சேர்ந்த தலைவர்களிடமிருந்து வந்தது. அவர்கள் ஆங்கிலத்தையே ஆட்சி மொழியாக தொடர வேண்டும் என்று விரும்பினார்கள். அதன் உச்ச கட்டம் ஒரு வட இந்திய காங்கிரஸ் தலைவர் அரசியல் சாசன சபையிலேயே “'இந்தி தெரியாதவர்களுக்கு இந்தியாவில் வாழும் உரிமை கிடையாது. இந்த அவையில் இந்தியாவுக்காக ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்க அமர்ந்திருப்பவர்கள் இந்தி தெரியாமல் இருப்பது, அரசியல் சாசன சபையில் இருப்பதற்கே தகுதி இல்லாதவர்கள் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று கூறுமளவிற்குச் சென்று விட்டார் என்றால் அதை நேருவே ஆதரித்தார். இந்த விவாதம் 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது.
தென் இந்தியாவின் தலைவர்களின் விடாப்பிடியான எதிர்ப்பின் காரணமாக, ஒரு சமரசத் தீர்வு எட்டப்பட்டது. அதன்படி, ஆங்கிலம் 15 ஆண்டுகள் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும் என்றும், இந்த இடைப்பட்ட கால கட்டத்தில் இந்தியை தேசிய மொழியாக ஆக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மெதுவாக ஆங்கிலத்தை அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் முடிவானது. அந்த கால கட்டம் துவங்குவதற்கான நேரம் அதாவது 1965ஐ நெருங்கும் சமயம், பெரும் வன்முறையோடு இந்தி எதிர்ப்பு என்னும் அந்த வெடிகுண்டு மீண்டும் வெடித்தது.
இந்த கால கட்டத்தில், தந்தை பெரியாரால் தலைமை தாங்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்ட இந்தி மீண்டும் தமிழகத்தில் நுழைவதற்கு காத்திருந்தது. பெரியாரின் சீடர்களான அண்ணாதுரை தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கி காங்கிரசிற்கு எதிரான கட்சியாக வேகமாக வளர்ந்து வந்த தருணம்அது. திமுகவும் அதன் தலைவர்களும் இந்தித் திணிப்பு மீண்டும் வருவதை எதிர்த்து தீவிரமாக பிராச்சாரம் மேற்கொண்டனர். 1963ல் ஒரு கூட்டத்தில் திரு. அண்ணாதுரை பேசும் போது 'இந்தியாவின் ஒரு பகுதியில் தாய் மொழியாகக் கொண்டவர்களால் பேசப்படும் ஒரு மொழியை (இந்தியை) இந்திய மக்கள் அனைவருக்குமான ஆட்சி மொழியாக ஆக்குவது ஒரு பெரும் கொடுமை, அது ஒரு பிரிவினருக்கு சாதகமாகவும் மேலாண்மை செலுத்துவதாகவும் அமைந்து விடும். அது இந்தி பேசும் மக்கள் எங்களை ஆட்சி செலுத்துவது போல் ஆகிவிடுவதுடன், நாங்கள் மூன்றாந்தார குடிமக்களாக நடத்தப்படுவோம்'' என்றார்.
அவர் இந்தி ஆதரவாளர்களின் பெரும்பான்மை வாதத்தை மிக அழகாக கிண்டலடித்தார். இந்தி தான் இந்தியாவின் பொது மொழியாக இருக்க வேண்டும், ஏனென்றால் அதுதான் பெரும்பான்மையினரால் பேசப்படுகிறது என்று சொல்லுகிறவர்களைப் பார்த்து இப்படி கேட்டார். அப்படியானால் ஏன் நாம் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள எலிகளுக்குப் பதிலாக புலியை தேசிய மிருகமாக அறிவித்திருக்கிறோம் அல்லது காக்கைகளுக்குப் பதிலாக மயிலைதேசியப் பறவையாக வைத்திருக்கிறோம்''.
ஜனவரி 26, 1965லிருந்து இந்தி ஆட்சி மொழியாக ஆவதற்கான நிலையில் தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் ஜனவரி முதல் மீண்டும் வெடிக்கத் துவங்கின. முதல் கட்டத்தைப் போல் அல்லாமல் 1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் மிக அதிகமாக பொது மக்களாலும் மற்றும் மாணவர்களாலும் தலைமை தாங்கப் பட்டன. ஜனவரி 25ஆம் தேதி அனைத்துக் கல்வி நிலையங்களிலும் மாநிலந் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. அண்ணாதுரை ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தை துக்க தினமாக அறிவித்தார். பிரம்மாண்டமான பேரணிகள் தமிழ் நாடு முழுவதும் அமைதியாக நடந்த வேளையில் ஆளும் கட்சியினரும், காவல் துறையும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஜனவரி 27ஆம் தேதி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர் ராசேந்திரன் காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இந்த மரணம் போராட்ட இயக்கம் காட்டுத் தீயாக பரவ உதவியது. மாணவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கினர். போராட்டம் கட்டுக்கடங்காமல் போக, மத்திய அரசு ராணுவத்தையும், துணை ராணுவத்தையும் அனுப்பி போராட்டத்தை மிருகத் தனமாக ஒடுக்கியது. ஜனவரி 25தேதிக்கும் பிப்ரவரி 15தேதிக்கும் இடையே குறைந்த பட்சம் 63 பேர் கொல்லப்படடு ஆயிரக் கணக்காணோர் காயமுற்றனர். இந்தித் திணிப்புக்கு எதிராக பலர் தீக்குளித்து மாண்டனர். இந்தச் சூழ்நிலையில் இறுதியாக, மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து. பிப்ரவரி 11ஆம் தேதி அன்றைய பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி, ஆங்கிலம் தமிழ் மக்கள் விரும்பும் வரைஆட்சி மொழியாகத் தொடரும் என்கின்ற உறுதி மொழியை பகிரங்கமாக அறிவித்தார். அத்துடன் தமிழ் நாட்டில் இந்தித் திணிப்பு என்பது முற்றிலுமாக அடங்கிவிட்டிருந்தது.
மத்தியில் கூட்டணி ஆட்சிகள் ஏற்படத் துவங்கியவுடன் திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாக 1918ல் பரிதிமால் கலைஞரால் முன் வைக்கப்பட்ட கோரிக்கையான தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன் காரணமாக தமிழ் நாட்டில் சென்னையில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் 12.10.2006ல் அமைக்கப்பட்டது. 14 ஆண்டுகள் கடந்த பின்பும் அதற்கு ஒர் இயக்குநர் நியமிக்கப்படவில்லை. நிரந்தரப் பணியாளர்கள் இல்லை. தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆராய்ச்சி அறிஞர்களுக்கு பல மாதங்களாக முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை. பணி நிரந்தரம், முறைப் படுத்தப்பட்ட பணி நிலைமைகளுக்காக போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. போதுமான நிதி ஒதுக்கீடும் மத்திய மோடி அரசால் செய்யப்படவில்லை. இதுதான் 'செம்மொழி' அந்தஸ்து வழங்கப்பட்ட மத்திய செம்மொழி தமிழாய்வு ஆராய்ச்சி நிறுவனத்தின் லட்சணம்.
அரசியல் சாசனம் 8வது அட்டவணையில் 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. அதில் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 24821 பேர் மட்டுமே பேசக்கூடிய யாருக்குமே தாய்மொழி அல்லாத சமஸ்கிருதம் இடம் பெற்றுள்ளது. அம்பானி, அதானி போன்ற முதலாளிகளின் தாய்மொழியான சிந்தி மொழி அதற்கென்று வரையறுக்கப்பட்ட நிலப் பரப்பு இல்லாத போதும் சில லட்சம் பேர்களே பேசுகின்ற போதும் அட்டவணையில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் பேசுகின்ற மொழிகளான போடோ, டோக்ரி, மைதிலி, சந்தாலி ஆகிய மொழிகள் பெரும் போராட்டங்களுக்குப்பின் 100வது சட்டத் திருத்தத்தாலும், கொங்கனி, மணிப்புரி, நேப்பாளி ஆகிய மொழிகள் 73வது சட்டத் திருத்தத்தின் மூலமாக 8வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. இன்னும் 99 மொழிகள் 8வது அட்டவணையில் இல்லாத மொழியாகவும், போஜ்புரி, கோண்ட் போன்ற இன்னும் பல மொழிகள் லட்சக்கணக்கான மக்களின் தாய்மொழியாகவும் பேசப்படுகின்ற மொழிகளாகவும் இருந்த போதும் அவை இன்று வரை சட்ட அங்கீகாரம் பெறாமல் உள்ளன. இதைவிட பெரிய கொடுமை இந்தி பேசுகின்ற தொகுப்பின் கீழ் கிட்டத்தட்ட 80 மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன. அவைகள் வட்டார மொழிகள், ஆதிவாசி மொழிகள் என்று அவமானப் பட்டு நிற்கின்றன. எனவே இந்தியாவில் மொழிக் கொள்கை என்பது முற்றிலுமாக மேலாதிக்க அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. அதை ஜனநாயகப் படுத்த வேண்டிய தேவையும், அவசியமும் இருக்கிறது. மக்களால் பேசப் படுகின்ற எல்லா மொழிகளும் அதற்குரிய சட்ட ரீதியான அங்கீகாரம் பெறுவதும், சம அந்தஸ்துடன் நடத்தப் படுவதையும் உறுதிப் படுத்த வேண்டும்.
மோடி அரசின் அடாவடியான மொழித் திணிப்பு பல வடிவங்களில் நடந்து வருகின்றது. தமிழ் நாடு முதலமைச்சருக்கு உள்துறை அமைச்சகம் இந்தியில் கடிதம் அனுப்புகின்றது. அதை எதிர்த்துக் கேட்கக் கூட தைரியம் இல்லாத வெட்கக் கேடான எடப்பாடி அடிமை அரசு தமிழகத்தில் ஆட்சி நடத்துகின்றது. மதுரை பாராளுமன்ற உறுப்பினர் தோழர் வெங்கடேசனுக்கு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இந்தியில் கடிதம் அனுப்புகிறது. தமிழ் நாட்டில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்று சுற்றறிக்கைகள் வருகின்றன.
மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை மிக மோசமான பல அம்சங்களைக் கொண்டுள்ளது. அதில் ஒன்று மும்மொழி கொள்கையை மீண்டும் தமிழ் நாட்டி லும் நடைமுறை படுத்துவதாகும். ஒரே நாடு , ஒரே மொழி ஒரே பண்பாடு என்கின்ற சித்தாந்த்தை கொண்டுள்ள பாஜக \ RSS கும்பல் நிச்சயம் அதை வெகுவிரைவில் நாடு முழுவதும் நடைமுறைபடுத்துவார்கள். இத்தகைய சூழலில் , தமிழ்நாட்டில் மீண்டும் தமிழ்மொழி, இனம் பண்பாடு காக்க மிகப் பெரிய அளவில் போராட வேண்டிய அவசியம் உள்ளது. இந்தி ஆதிக்கத்தை ஒரு போதும் தமிழகம் ஏற்றுக் கொள்ளாது. ஏற்கனவே 2019ல் இந்தித் திணிப்பிற்கு வெள்ளோட்டமாக சில முயற்சிகளை மத்திய மோடி அரசு மேற்கொண்டபோது தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்ததன் விளைவாக அது சற்று பின்வாங்கியது.
கம்யூனிஸ்ட் கட்சி சென்னையில் 18-11-2019ல் எழுச்சி மிக்க ''எழுக தமிழ்'' பேரணி நடத்தியது. ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்ற அந்தப் பேரணியில் கீழ்கண்ட முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன:
· தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் இந்தி ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறை படுத்த விட மாட்டோம்.
· எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்கின்ற முழக்கத்தின் அடிப்படையில், ஆரம்ப கல்வியிலிருந்து, உயர் கல்வி, ஆராய்ச்சிக்கல்வி வரை தமிழ் பயிற்று மொழியாக ஆக்கப்பட வேண்டும்.
· உயர்நீதிமன்றம் உள்ளிட்ட எல்லா நீதிமன்றங்களிலும், வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும்.
· தமிழில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசுத் துறையில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளான ஜனவரி 25ந் தேதி '' தமிழ் மொழிக் காக்க '' உறுதியேற்போம்.