தோழர் கீதாராணிக்கு செவ்வணக்கம்
ஜெயபிரகாஷ் நாராயணன்
தோழர் ந.கீதாராணி மறைந்துவிட்டார். தோழர் ந.கீதாராணிக்கு செவ்வணக்கம்.
கோவை பிரிக்காலில் சுரண்டலுக்கு எதிரான ஆரம்பகால கிளர்ச்சிக் கலகங்களின் முன்னணிகளில் முதன்மையான பெண் தோழராக செயல்பட்டதால் தோழர் ந.கீதாராணி 2007 பேரெழுச்சிக்கு முன்னரே நிர்வாகத்தின் கடுமையான பழிவாங்கலுக்கு உள்ளானட்ர்.
2007 போராட்டத்தில் முன்னணித் தோழராக துடிப்புடன் செயல்பட்டதால் பகுதி கதவடைப்பு செய்யப்பட்டோர் பட்டியலில் தோழர் கீதாராணியும் சேர்க்கப்பட்டார்.பகுதி கதவடைப்பிற்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு, மலுமிச்சம்பட்டி வதை முகாமிற்கு அனுப்பப்பட்டார். போராட்டத்தை அரித்தொழிக்கும் நிர்வாகத்தின் சூழ்ச்சிகளை திறம்பட முறியடித்து தொழிலாளிகளின் பக்கம் நின்றார். தொழிலாளர்களும் சங்கமும் இக்கட்டான சூழலில் இருந்த போதெல்லாம் உறுதுணையாக இருந்தார்.
2011 முதல் கோவை மாவட்ட பிரிக்கால் ஒற்றுமைச் சங்கத்தில் துணைத் தலைவராக துடிப்புடன் செயல்பட்டார். வளர் இளம்முன்னணித் தோழர்களுக்கு முன்மாதிரித் தோழராகவும் சிறந்த வழிகாட்டியாகவும் நல்ஆலோசகராகவும் செயல்பட்டார். 2009ல், பிரிக்கால் தொழிலாளர் பிரச்சனையில், தமிழக அரசு தலையீடு செய்து 10 பி உத்தரவு போட வலியுறுத்தி நடந்த காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் தோழர் ந.கீதாராணி 16 நாட்கள் பட்டினிப் போராட்டத்தை தொடர்ந்தார்.
தோழரின் பணிமூப்பிற்கு பிறகான காலத்திலும் சிறையிலுள்ள தோழர்களின் பராமரிப்பிற்கான ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளில் பங்கெடுத்துக் கொண்டார். தனது வாழ்க்கை முழுவதும் முதலாளித்துவ எதிர்ப்பில் உறுதியாக வாழ்ந்த தோழர் ந.கீதாராணி இறுதி வரை இடது தொழிற்சங்க மய்யத்தின் மீதும் கம்யூனிஸ்ட் கட்சி மீதும் தீராத பற்றாளராக இருந்தார். தோழரின் மறைவு பிரிக்கால் தொழிலாளர்களுக்கும், இடது தொழிற்சங்க மய்யத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
தோழர் ந.கீதாராணி உங்கள் போராட்டம், உங்கள் தியாகம் வீண் போகாது. உங்களின் போராட்ட மரபை மேலும் முன்னெடுத்துச் செல்ல உறுதிஏற்கிறோம்! தோழர் ந. கீதாராணிக்கு செவ்வணக்கம்!
16.12.2020 மாலை தோழரின் இறுதிச் சடங்கு முடிந்த பிறகு சங்க அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக் குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி, ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின் தோழர் சுரேஷ், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநில நிர்வாகிகள், எல்டியுசி நிர்வாகிகள் மற்றும் பிரிக்கால் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை தலைமையகத்தில், உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் மோகன் தலைமையில் பகுதி மக்களுடன் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.