COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, January 4, 2021

 

பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம், பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு 2020

தொழிலாளர்களை காக்குமா? தாக்குமா?

எஸ்.குமாரசாமி

இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் 29.09.2020 அன்று ஒப்புதல் தந்த பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம், பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு 2020ன் 143வது பிரிவு, தொழிற்சாலைகள் சட்டம் 1948, தோட்டத் தொழிலாளர் சட்டம் 1981, சுரங்கங்கள் சட்டம் 1952, பணிபுரியும் ஊடகவியலாளர்கள் மற்றும் மற்ற செய்தித்தான் ஊழியர்களின் பணி நிலைமைகள் மற்றும் இதர பிரிவுகள் சட்டம் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் சம்பள விகிதங்கள் நிர்ணயம் செய்யும் சட்டம் 1958,

வாகனப் போக்குவரத்து தொழிலாளர் சட்டம், பீடி மற்றும் சுருட்டு தொழிலாளர்கள் பணி நிலைமைகள் சட்டம் 1946, ஒப்பந்த தொழிலாளர் முறை ஒழுங்குபடுத்துதல் நீக்குதல் சட்டம் 1970, விற்பனை முன்னேற்ற ஊழியர்கள் பணி நிலைமைகள் சட்டம் 1976, மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயரும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 1979, திரைத் தொழிலாளர்கள் மற்றும் திரையரங்க தொழிலாளர்கள் பணி நிலைமைகள் ஒழுங்கு படுத்துதல் சட்டம் 1981, துறைமுக தொழி லாளர்கள் பாதுகாப்பு சுகாதார நல உரிமைகள் சட்டம் 1986, கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு மற்றும் பணிநிலைமைகள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 1996 என, சுதந்திர இந்தியாவில் 1948ல் இருந்து 1996 வரை இயற்றப்பட்ட 13 சட்டங்களை ஒரேயடியாய் ஒழித்துக் கட்டிவிடுகிறது.

பதின்மூன்று சட்டங்களை இழந்த தொழிலாளர்கள்  அவற்றை விட கூடுதலாக, மேன்மையாக ஏதாவது பெற்றார்களா? தொழிற்சாலைகள் சட்டம், 1948, பிரிவு 5 பொது அவசர நிலைமை இருக்கும்போது சிறுவர்களை பணியில் அமர்த்தக் கூடாது என்ற சட்டப்பிரிவு நீங்கலாக, இதர சட்டப் பிரிவுகளை முழுமையாகவோ,  பகுதியாகவோ ஒரு தொழிற்சாலையில் அல்லது ஒரு குறிப்பிட்ட வகைப்பட்ட தொழிற்சாலைகளில் விலக்கி வைக்கலாம் என்று சொன்னது. 2020 சட்டத் தொகுப்பு பிரிவு 127 (2)படி, மாநில அரசாங்கம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்க, கூடுதல் பொருளாதார நடவடிக்கைகள் செயல்பட வாய்ப்பு உண்டு என பொது நலனில் திருப்தி அடைந்தால், புதிய தொழிற்சாலைகளுக்கு அனைத்து அல்லது ஒரு பகுதி சட்டப் பிரிவில் இருந்து விலக்கு தரலாம் என்று சொல்கிறது. இந்தியா முழுவதும் மத்திய மாநில அரசுகள் புதிய முதலீடு வர வர பொருளாதார நடவடிக்கைகளும் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்கிறார்கள். மூலதன வருகையே பொது நலனாகும். அப்படியானால் இனி மாநில அரசுகள் புதிய தொழிற்சாலைகளுக்கு இந்த சட்டத் தொகுப்பில் எல்லா சட்டப் பிரிவுகளிலிருந்தும் மிகவும் எளிதாக விலக்கு தர முடியும்.

ஏற்கனவே இருந்த தொழிற்சாலைகள் சட்டப்படி, பொது அவசரநிலை இருந்தால்தான், சட்டப் பிரிவுகளிலிருந்து விலக்கு பெற முடியும். போர் அல்லது அந்நிய ஆக்கிரமிப்பு அல்லது உள்நாட்டு கொந்தளிப்பே பொது அவசர நிலை என கருதப்படும். இந்த சட்டப் பிரிவை பயன்படுத்தி கொரோனா காலத்தில் மிகை நேரப் பணிக்கு இரட்டிப்பு சம்பளம் இல்லை, 12 மணி நேர வேலை நாள், 72 மணி நேர வேலை வாரம் என்று குஜராத் மாநில அரசாங்கம் 20.04.2020 முதல் 19.07.2020 வரை, 20.09.2020 முதல் 19.10.2020 வரையில், தொழிற்சாலைகள் சட்டப் பிரிவிகளிலிருந்து அனைத்து தொழில், வர்த்தக நடவடிக்கைகளுக்கும் விலக்கு தந்தது. இந்திய உச்சநீதி மன்றம் ரிட் மனு (சிவில்) எண் 78/2020ல், கொரோனா பொது அவசரநிலை ஆகாது என, 01.10.2020 அன்று தீர்ப்பு வழங்கியது. கொரோனா நிச்சயமாக அரசின் பாதுகாப்பை அச்சுறுத்தும் உள்நாட்டு கொந்தளிப்பு அல்ல எனத் தீர்ப்பு வழங்கியது. மாநில அரசாங்கம் அளித்த விலக்கு சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்டது. பழைய சட்டம் எதிர்மறையான பாதகமான சூழ்நிலையில் விலக்கு தரலாம் என்று சொல்கிறது. ஆனால் மோடியின் அரசு, நல்ல நாட்கள் வந்தால், அதாவது சாதகமான மூலதன வருகை இருந்தால், சட்டப் பிரிவுகளை விலக்கி வைக்கலாம் என்கிறது. இந்த விஷயமே சட்டத் தொகுப்பு எவ்வளவு மோசமானது என்பதை புலப்படுத்தும்.

தொழிலாளர்களின் கவுரவத்தை, உடல் நலத்தை, உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், அநியாயமான சுரண்டலை தடுப்பதற்காகவும் தொழிலாளர் போராட்டங்களால், தொழிலாளர் இயக்கங்களால் நலச்சட்டங்கள் வந்தன என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. அத்துடன், தொழிலாளர்களின் சம்மதம் பெற்றுக் கொண்டு கூட, அவர்களை சட்டப்பிரிவுகளின் பாதுகாப்பிலிருந்து விலக்கி வைக்க முடியாது என்கிறது. எவருடைய சம்மதமும் பெறாமல் புதிய தலைமுறைகளுக்கு நலச்சட்டங்களை விலக்கி வைக்க இந்த சட்டத் தொகுப்பு வழி செய்கிறது.

6ஆவது பொருளாதார கணக்கெடுப்பு படி இந்தியாவிலுள்ள ஒரு கோடியே மூன்று லட்சம் (1,03,00,000) பொருளுற்பத்தி நிறுவனங்களில், 81,61,000 நிறுவனங்கள், அவற்றில் பணிபுரியும் 3,04,00,000 தொழிலாளர்களில் 2,23,60,000 பேர், பத்து பேருக்கும் கீழே உள்ள எண்ணிக்கையில் பணியாளர்களை கொண்டுள்ள, நிறுவனங்களில்தான் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு ஒன்றிய அரசு பணியிட பாதுகாப்பை, உடல்நலத்தை, நல உரிமைகளை உறுதி செய்திருக்க வேண்டும். மின்சாரம் பயன்படுத்தும்போது 10 பேர், மின்சாரம் பயன்படுத்தாதபோது 20 பேர் அல்லது அதற்கு மேல் பணிபுரிகின்ற உற்பத்தி நிறுவனங்கள் தொழிற்சாலைகள் என்று 1948 தொழிற்சாலைகள் சட்டம் சொன்னது. மின்சாரம் பயன் படுத்தும் போது குறைந்தபட்சம் 20 அல்லது அதற்கு மேலான எண்ணிக்கையில், மின்சாரம் பயன்படுத்தாதபோது 40 அல்லது அதற்கு மேலான எண்ணிக்கையில் பணியாற்றும் உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே தொழிற் சாலைகள் என்று புதிய சட்டத் தொகுப்பு சொல்கிறது. பாதுகாப்பு குடைக்குள் கொண்டு வருவதற்கு பதிலாக, பாதுகாப்பு குடைக்கு வெளியே பலர் தள்ளப்படுகின்றனர்.

ஏற்கனவே இருக்கின்ற ஒப்பந்த தொழிலாளர் சட்டம், 20 அல்லது அதற்கு மேலுள்ள வர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு பொருந்தும். புதிய சட்டத் தொகுப்பு படி ஒப்பந்தத் தொழிலாளர் முறை தொடர்பான சட்ட பிரிவுகள், 50 அல்லது அதற்கு மேல் பணியாற்றுபவர்கள் உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இங்கேயும் புதிய சட்டத் தொகுப்பு தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கு பதிலாக அவர்களை சட்டப் பாதுகாப்பிலிருந்து வெளியேற்றுகிறது. அவர்களுக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் வழங்குவது பற்றி இந்த சட்டத் தொகுப்பு அக்கறை காட்டவில்லை.

இந்த சட்டத் தொகுப்பு பல வகைப்பட்ட தொழிலாளர்களுக்கான சிறப்பு சட்டங்கள் என்பவற்றை ஒழித்துக்கட்டுகிறது. வெவ்வேறு தொழில்கள் வெவ்வேறு தொழிலாளர்கள் என்ற பல்வகை தன்மையை சமச்சீரற்ற தன்மையை அங்கீகரிக்க மறுக்கிறது. ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்ற ஒற்றை தன்மையை திணிப்பது போல் பலருக்கும் ஒரே சட்டம் என்கிறது.

ஒப்பீட்டுரீதியாக இதைவிட மேலான பழைய சட்டங்கள் நிலைமை என்ன?

அரசியலமைப்பு சட்டத்திற்கு பதில் மனு தர்மம், அரசியலமைப்புச்சட்ட குடியரசுக்கு பதில் இந்து ராஷ்ட்ரம், ஜனநாயகத்திற்கு பதில் கார்ப்பரேட் ராஜ்ஜியம் என்றிருக்கின்ற இந்தியாவில், சட்டத்தின் ஆட்சி நிச்சயமாக அமலில் இல்லை. உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகள், நம் நாட்டு சட்டங்களை, குறிப்பாக, தொழிலாளர் சட்டங்களை மதிப்பதற்கு தயாராக இல்லை.

பெங்களூருக்கு 70 கிலோமீட்டர் தள்ளி உள்ள நரசபுராவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து வழங்கும் தைவான் நாட்டு விஸ்ட்ரான் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் டிசம்பர் 11.12.2020 அன்று மிகப்பெரும் தொழிலாளர்கள் கிளர்ச்சி நடந்து, அந்த கிளர்ச்சியில் 7,000 பேர் வரை தொடர்பு கொண்டுள்ளனர் என முதல் தகவல் அறிக்கை பதிவானது. முதலில் ரூ.450 கோடி வரை சொத்துகளுக்கு சேதம் என்று சொன்னவர்கள், பின்னர் ரூ.40 கோடி சேதம் என மாற்றி சொன்னார்கள். 127 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். வன்முறை, வெறியாட் டம் என ஒன்றிய, மாநில அரசுகளும் ஊடகங்களும் ஊளையிட்டனர்.

வேலை நேரம் தொடர்பான நிர்வாகம் சரியில்லாததால் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பணப்பட்டுவாடா தாமதமானது, சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம், விஸ்ட்ரான் சரி செய்யும் வரை புதிய ஆர்டர் தர மாட் டோம் என ஆப்பிள் நிறுவனம் அறிக்கை விட்டது. விஸ்ட்ரான் நிறுவனம் சம்பளம் சரியாகவும் நேரத்திலும் தராததற்க்கு மன்னிப்பு கேட்டு சரி செய்வதாக சொன்னது. அந்த நிறுவனத்தின் இந்திய பொறுப்பாளர் பணியிலிருந்து அகற்றப்பட்டார். இந்த நிறுவனம் தொழிற்சாலைகள் சட்டம், குறைந்தபட்ச சம்பள சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம், சம ஊதிய சட்டம் ஆகியவற்றை மீறியுள்ளது.

5,000 பேரை மட்டுமே வேலைக்கு அமர்த்த ஒப்புதல் பெற்றிருந்த நிறுவனம், தொழிலாளர் துறை ஆய்வுப்படி, 1,343 நிரந்தர தொழிலா ளர்களையும் 6 ஒப்பந்தாரர்கள் மூலம் 8,490 ஒப்பந்த தொழிலாளர்களையும் பணிக்கமர்த்தியது. அய்டிஅய் படித்தவர்கள், பட்டயப் படிப்பு முடித்தவர்கள், பொறியியல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் அனைவருக்குமே ரூ.15,000 மட்டும் சம்பளமாக தந்தது. ரூ.22,000 தருகிறேன் என்று தான் சொன்னதை தானே மீறியது. பெண்களிடம் ஒப்புதல் பெறாமலே அவர்களை இரவு நேரப் பணிக்கு அமர்த்தியது. ஆப்பிளும் விஸ்ட்ரானும் தவறுக்கு வருந்திய பிறகும் ஒன்றிய, மாநில அரசுகள் அவர்களை குறை சொல்லவில்லை. முதலீட்டாளர்கள் கவலைப்பட கூடாது, நிறுவனம் விரைந்து திறக்கப்பட வேண்டும் என்று மட்டுமே கவலைப்பட்டார்கள்.

ஒப்பீட்டுரீதியில் மேலான பழைய சட்டங்களின் காலத்திலேயே தொழிலாளிக்கு இது தான் கதி என்றால், புதிய சட்டத் தொகுப்பு காலத்தில் நிலைமை மேலும் மோசமாவது மட்டுமே நடக்கும். இந்த சட்டத் தொகுப்பு தொழிலாளியை காக்காது. தொழிலாளி தாக்கப்படுவதை தீவிரப்படுத்துவதை மட்டுமே செய்யும்.

Search