மோதலில் துவங்கி
கொண்டாட்டத்தில் முடிந்த ஒரு போராட்டம்கொரோனா காலத்தில் சம்பளம் முழுமையாக வேண்டும் என்று கேட்டதற்காக மெட்ராஸ் ஜிம்கானா கிளப் தொழிலாளர்கள் 149 பேரில் 56 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அதே காரணத்திற்காக மெட்ராஸ் போட் கிளப்பில் 76 தொழிலாளர்களில் 39 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.
வேறு வேறு நாட்டு முதலாளிகளுக்கும், உள்நாட்டு முதலாளிகளுக்கும் கொத்தடிமை கூடாரமாக உள்ள திருபெரும்புதூர் மண்டலத்தின் ஒரகடத்தில் உள்ள கனடா நாட்டு பன்னாட்டு நிறுவனமான மேக்னா தனது தொழிலாளர்கள் மீது முரட்டுத்தனமாக பணியிடை நீக்கம், கொரோனா அதிகம் உள்ள மாநிலத்திற்கு பணி யிடமாற்றம் என தாக்குதல்கள் தொடுத்திருந் தது. சீற்றம் கொண்டிருந்த இந்த தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும், சென்னை பாரிமுனையிலிருந்து கோட்டை நோக்கி தொழிலாளர் குடும்ப பேரணி நடத்த 21.12.2020 காலை 9:00 மணியிலிருந்தே திரள ஆரம்பித்தனர். 200, 300, 400 என்றிருந்த எண்ணிக்கை 10:30 மணிவாக்கில் 500அய் தாண்டியது, காவல் துறையினர் கலக்கமடைந்து பதறிப் போயினர்.பாரிமுனையின் வேறு வேறு இடங்களில் இருந்த தொழிலாளர்களை சிதறடிக்க பார்த்தார்கள். வேறு வேறு இடங்களில் தடுப்புகள் போட்டு ஒன்று திரள விடாமலிருக்க தீவிரமாக முயற்சி எடுத்தார்கள். தோழர்கள் சுரேஷ், ஜேம்ஸ், மோகன், ராஜகுரு, தினகரன், சீதா உள்ளிட்ட தோழர்கள் தலைமையில் தொழிலாளர் குடும்பங்கள் அனைத்து தடைகளையும் தகர்த்து குறளகம் வாயிலில் திரண்டனர். கம்யூனிஸ்ட் கட்சியின், இடது தொழிற்சங்க மய்யத்தின் தலைவர்களான எ.எஸ்.குமார், ஜானகிராமன், பழனிவேல் ஆகியோரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
தோழர் கே.பாரதி தலைமையில் பேரணி நடக்கும் என முன்னரே நகரெங்கும் சுவரொட் டிகள் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. தோழர்கள் கே.பாரதியும் எஸ்.குமாரசாமியும் 11:30 மணி வாக்கில்தான் பேரணி துவங்குமிடம் வந்தனர். அது வரையில் காவல்துறையின் கலைக்கும் முயற்சிகளை மற்ற முன்னணி தலைமைத் தோழர்கள் திறமையோடும் துணிச்சலோடும் எதிர்கொண்டு முறியடித்தார்கள்.
இடது தொழிற்சங்க மய்யத்தின் மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார், முதலாளிகளின் அநீதிகளை தட்டிக் கேட்காமல் தொழிலாளர்களை கலைக்க பார்க்கின்ற காவல்துறை முயற்சிகள் முறியடிக்கப்படும் என முழங்கி பேரணியை துவக்கி வைத்தார். தோழர் கே.பாரதி ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய பிறகு காவல்துறை ஒரு மோதல் அணுகுமுறையை கையாண்டதால் அந்த பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமும் பரபரப்பும் நிலவியது. பின்னர் கைது செய்யப்பட்ட 50 பெண்கள் உள்ளிட்டோர் முழக்கம் எழுப்பியபடி இருக்க காவல்துறை வாகனங்களில் ஏற்றப்பட்டனர். ராயபுரம் பருக் மஹாலில் கீழ் தளம், முதல் மாடி என 50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 300 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்ட தோழர்கள் ஒரு மாநாடாய் திரண்டு அமர்ந்திருந்தார்கள். மாலை தோழர்கள் விடுதலை செய்யப்படும் வரை அந்த போராட்டம் கொண்டாட்டமாய் மாறியது. திண்டாட்டங்கள் நிறைந்த வாழ்க்கையை கொண்டிருந்த தொழிலாளர்கள், அன்று தங்கள் போராட்டத்தை கொண்டாட, மண்டபம் அமைத்து மதிய உணவுக்கு ஏற்பாடு செய்து, ஒடுக்குமுறை அரசே வழி செய்து கொடுத்தது.
திரண்டிருந்தவர்கள் மத்தியில் தோழர்கள் ராஜகுரு, ஜேம்ஸ் வழி நடத்திய கூட்டத்தில் தோழர்கள் ஜானகிராமன், கே.சுரேஷ், அன்பு ராஜ், சீதா, ஆண்டனி தினகரன், மோகன், முனுசாமி, பசுபதி, சோலையப்பன், அர்ஜ÷ன், செல்வம் மற்றும் மூன்று கிளப்புகளின் தோழர்கள் பேசினார்கள். போராட்டத்திறகு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமத்துவத்திற்கான வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் பார்வேந்தன் காவலில் வைக்கப்பட்டிருந்த தோழர்கள் மத்தியில் பேசினார்.
கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே தொழிலாளர் துறை அமைச்சரை சந்திக்க காவல் துறையினர் ஏற்பாடு செய்தார்கள். தோழர்கள் எஸ்.குமாரசாமி, எ.எஸ்.குமார், கே.பாரதி, எஸ்.ராஜகுரு, ஜேம்ஸ் ஆகியோர் அமைச்சரை சந்திக்க சென்று சந்தித்து பின்னர் திரும்பினார்கள். தோழர் கே.பாரதி சந்திப்பு பற்றி திரண்டிருந்த தோழர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். நாம் போராட்ட இயக்கம் நடத்துபவர்கள் என்பதையும் நம் தலைமையி லான போராட்டங்கள் எங்கும் பரவி வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்ததாக குறிப் பிட்டார். மேக்னா பிரச்சனையில் தொழில் தகராறுகள் சட்டம் 1947 10 பி பிரிவின் கீழ் ஆணை பிறப்பிப்பது தொடர்பாக, அதிகாரிகளோடு பேசி முடிவெடுப்பதாகவும் மெட்ராஸ் ஜிம்கானா கிளப், மெட்ராஸ் போட் கிளப், தி நகர் சோசியல் கிளப், மேக்னா பிரச்சனைகளை பேசித் தீர்க்க, மனுக்களிலேயே கையொப்பமிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி அவர்களிடம் தொலைபேசி மூலம் தெரிவிப்பதாக சொன்னதையும் விளக்கினார். பன்னாட்டு மூலதனம் குவிந்துள்ள திருபெரும்புதூர் மண்டலத்திலும் செல்வச் சீமான்கள் தொழிலாளர் வாழ்வோடு விளையாடுவதே பொழுதுபோக்காக கொண்டுள்ள கேளிக்கை விடுதிகளிலும் தொழிலாளர்கள் உயர்த்தி பிடித்துள்ள செங்கொடி வெற்றி கிடைக்கும் வரை ஓயாமல் போராடும் என சூளுரைத்தார்.
தோழர் எஸ்.குமாரசாமி, 2020 சிஎஎ எதிர்ப்பு எழுச்சியோடு துவங்கி விவசாயிகளின் தலைநகர் டெல்லி முற்றுகையோடு முடிகிறது எனவும், இந்த போராட்டம் மோடி ஆட்சியின் முடிவின் துவக்கமாக இருக்க வாய்ப்புண்டு எனவும் தெரிவித்தார். மேக்னாவில் அடுத்தடுத்து தீவிரமாக போராட்டங்கள் நடைபெறும் எனவும், அவை 2021 துவக்கத்திலேயே தீர்வு என்பதை நோக்கி செலுத்தப்படும் என்றும், ஜிம்கானா கிளப்பிலும், போட் கிளப்பிலும் ஒரு தொழிலாளியை கூட விட்டுக் கொடுக்காமல் நம் ஒற்றுமையால் போராட்ட வலிமையால் வேலைக்கு திரும்புவோம் என்றும் உறுதிபட சொன்னார். 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் பிரச்சனைகள், தொழிலாளர் பிரச்சனைகள் எதிரொலிக்க வேண்டுமென்றும் அதற்காக ஜனவரி 4 முதல் 100 நாட்கள் பிரச்சார இயக்கம் நடக்குமென்றும் இந்த இயக்கம் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு தூக்கிலிடப்பட்ட மார்ச் 23 முதல் டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14 வரை தீவிரமடையும் எனவும் தோழர் எஸ்.குமாரசாமி அறிவித்தார்.
ஆக, டிசம்பர் 21, மோதலில் துவங்கி கைது, அமைச்சர் சந்திப்பு ஊடாக, போராட்டத்தை கொண்டாடி, போராட்ட இயக்க அறிவிப்போடு முடிவுற்றது.