COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, January 4, 2021

 

விவசாயிகள் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கடிதத்துக்கு திறந்த பதில் கடிதம்

பெறுநர்

நரேந்திர சிங் தோமர் 

விவசாயிகள் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் 

இந்திய அரசு

அய்யா, டில்லியில் நடந்து கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக விவசாய சகோதர சகோதரிகளுக்கு தாங்கள் எழுதியுள்ள 17, டிசம்பர் 2020 தேதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன்.

நான் விவசாயி இல்லையாயினும் எனக்கும் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நான் விவசாயி இல்லையாயினும், சோறு சாப்பிடுபவன் என்ற விதத்தில், எனக்கும் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே உங்கள் கடிதத்துக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கு உள்ளது.

உங்கள் கடிதத்தில் எல்லை ராணுவ வீரர்கள் பற்றி நீங்கள் கொண்டுள்ள அதீத அக்கறையை வெளிப்படுத்தியுள்ளீர்கள். அவர்கள் நாட்டைக் காப்பதுபோல்தான் இந்த மகத்தான நாட்டின் விவசாயிகள், அந்த ராணுவ வீரர்கள் உட்பட, நாட்டில் வாழும் மக்களை, பசியில் இருந்து பாதுகாக்கிறார்கள். எனவே விவசாயிகளையும் ராணுவ வீரர்களையும் ஒருவருக்கு ஒருவர் எதிரிகள்போல் சித்தரிக்கப் பார்க்கும் உங்கள் முயற்சியை எந்த ராணுவ வீரரும் ஏற்கப் போவதில்லை என்பதை உங்களுக்கு பணிவுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, ராணுவ வீரர்கள் தாங்கள் பெற்ற பதக்கங்களை திருப்பித் தந்திருப்பதையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

ராணுவ வீரர்களையும் போராடும் விவசாயிகளையும் பிரித்து நிறுத்தப் பார்ப்பதுபோல், நாட்டு மக்களையும் விவசாயிகளையும் கூட பிரித்து நிறுத்தும் உங்கள் முயற்சியும் உங்கள் கடிதத்தில் வெளிப்படுகிறது. நீங்கள் இந்தக் கடிதத்தை விவசாய சகோதர, சகோதரிகளுக்கு எழுதியிருக் கிறீர்கள் என்றால், போராடுகிற விவசாயிகள் தவிர வேறு விவசாயி யார் என்று நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் விவசாயி அல்லாத எனக்கு கடிதம் அனுப்ப சிரமம் எடுத்துக் கொள்ளும்போது, தலைநகரில், அருகிலேயே திரண்டிருக்கும் விவசாயிகளின் பிரதிநிதிகளோடு நீங்கள் விளைவு தரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

விவசாயிகள் இப்போது நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம் நாட்டுப் பற்றுப் போராட்டம் என்பதில் எனக்கு எள்ளளவு அய்யமும் இல்லை. உங்கள் கடிதம் மூலம் நீங்கள் இந்தப் போராட்டத்தை ராணுவ வீரர்களுக்கு எதிராக நிறுத்த முயற்சி செய்துள்ளபோது, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவான எனது கருத்து மேலும் வலுப்பெறுகிறது. ஏனெனில் நாட்டு மக்கள் மீது உங்களது ஆட்சி நடத்திய போர்களில் ஒன்றான பணமதிப்பிழப்பின்போதும் நீங்கள் எங்களை ராணுவ வீரர்களுக்கு எதிராக நிறுத்தப் பார்த்தீர்கள். இப்போதும் நீங்கள் அதே முயற்சி மேற்கொள்வதால் விவசாயிகள் போராட்டம் நூற்றுக்கு நூறு சரியே என்பது உறுதியாகிறது.

மேலும் "கடந்த ஆறு ஆண்டுகளில், ஒரே மாதிரியான அமைப்புகளைச் சேர்ந்த, ஒரே மாதிரியான நெறிகளைக் கொண்டவர்கள் சமூகத்தில் அதிருப்தியை பரப்பி, பல்வேறு போர்வைகளில் இருந்து கொண்டு நாட்டில் குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டு வருகிறார்கள். சில நேரங்களில் மாணவர்கள், அல்லது தலித் மக்கள், சில நேரங்களில் பெண்கள் அல்லது சிறுபான்மையினர் குழுக்கள் என்ற போர்வையில் அவர்கள் செயல்படுகின்றனர். என்று நீங்கள் உங்கள் கடிதத்தில் குறிப்பிடுவதால், இந்தப் போராட்டம் உண்மையில் நாட்டு மக்களுக்கான போராட்டம் என்பதை இன்னும் திடமாக உறுதிசெய்து கொள்ள முடிகிறது. ஏனெனில் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த அரசு வாழ்வின் அனைத்து தளங்களிலும் சொந்த நாட்டு மக்கள் மீது தொடுத்து வரும் போருக்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டங்களை நீங்கள் இப்படித்தான் விவரித்துள்ளீர்கள்.

உங்கள் அரசாங்கமும் நீங்கள் சிலாகிக்கும் பிரதமர் மோடியும் கடந்த ஆறு ஆண்டுகளாக நாட்டு மக்கள் மத்தியில் ஒரு முறை கூட உண்மை பேசியதில்லை என்பதோடு பல பொய்கள் சொல்லி வருகிறீர்கள். எனவே, உங்கள் கடிதத்தில் விவசாயிகள் விரோத சட்டங்கள் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் பொய்களை நாங்கள் நம்பத் தயாராக இல்லை என்று சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் சொல்லியிருப்பவை பொய்கள் என்பதுடன் மக்கள் பிரச்சனைகள் பற்றி, மக்கள் போராட்டங்கள் பற்றி உங்கள் ஆட்சி இது வரை பொய்கள் மட்டுமே பேசி வருவதால், விவசாய சட்டங்கள் பற்றி நீங்கள் சொல்லியிருப்பவை பொய்கள் தவிர வேறெதுவுமாக இருக்க முடியாது என்றும் நம்புகிறேன்.

நீங்களும் ஒரு விவசாயி என்று உங்கள் கடிதத்தில் குறிப்பிடுகிறீர்கள். இருந்திருக்கலாம். ஆனால், ஒரு சங்கி ஒருபோதும் விவசாயியாகவோ, தொழிலாளியாகவோ, தலித்தாகவோ, மாணவராகவோ, பெண்ணாகவோ, சிறுபான்மையினராகவோ இருப்பதில்லை. நீங்கள் சங்கிகள் மட்டுமே. இருண்மை வாதங்கள் மட்டுமே உங்கள் அடையாளம். எனவே, சங்கியான பிறகு நீங்கள் விவசாயியாக இருக்க முடியாது.

உங்கள் கடிதத்துக்கு பதில் எழுத இன்னும் நிறைய அம்சங்கள் இருக்கின்றன. நாங்கள் உழைத்துப் பிழைப்பவர்கள். எனக்கு வேறு உடனடி வேலை இருக்கிறது. எனவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

இறுதியாக, நாட்டு மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருப்பது உண்மை என என்னைப் போன்ற குடிமக்களுக்கு நீங்கள் நிரூபிக்க வேண்டுமானால், நீங்கள் ஒரே ஒரு நடவடிக்கை மூலம்தான் அதைச் செய்ய முடியும்.

உடனடியாக மொத்த அமைச்சரவையும் பதவி விலகி விடுங்கள்.

நன்றி.

இப்படிக்கு

உங்கள் ஆட்சியில் வாழ நேர்ந்து விடப்பட்ட துரதிர்ஷ்டசாலி

Search