COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, January 4, 2021

 

பெரியார் சொல் கேளீர்.....

பொட்டுக்கட்டு நிறுத்தும் சட்டம்

டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி மசோதா

குடி அரசு - கடித அறிக்கை - 30.03.1930

டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியின் பொட்டறுப்பு மசோதா விஷயமாக அபிப்பிராயம் தெரிவிக்க வேண்டுமென்று சென்னை சர்க்கார் கேட்டுக் கொண்டதற்கிணங்க திரு. ஈ.வெ.ராமசாமியார் சென்னை சட்ட சபை காரியதரிசிக்கு அனுப்பி இருக்கும் ஒரு கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது

1. ஹிந்துப் பெண்களை ஹிந்து ஆலயங்களில் பொட்டுக் கட்டுவதினால் அவர்கள் வியபிசாரம் செய்யும்படி தூண்டப்படுகிறார்கள்.

2. பண ஆசையினால் தேவதாசிகள் வியபிசாரம் செய்வதினால் அவர்களது வாழ்க்கை இயற்கைக்கு விரோதமாகவும், ஆபாசமாகவும் இருக்கிறது. இந்த வியபிசாரிகளால் மேக வியாதிகள் பரப்பப்படுவதினால் அந்நோய் அந்நியர்களுக்குப் பரவாமல் தடுக்க வேண்டியதும் முக்கியமானதாகும்.

3. டாக்டர். முத்துலட்சுமி மசோதாவின் நோக்கம் வியபிசாரத்தை அடியோடு ஒழிப்பதல்லவானாலும் வியபிசாரம் விருத்தியாவதற்குள்ள ஒரு முக்கியமான வழியை அடைப்பதுதான் அதன் நோக்கம். வியபிசாரத்தை அடியோடு ஒழிக்கத்தக்கவாறு இந்திய சமூகம் இன்னும் முன்னேற்றமடையவில்லை. வெளிநாட்டு நிலைமையும் இவ்வாறே இருந்து வருகிறது. பணத்துக்காகப் பெண்கள் வியபிசாரம் செய்வதைத் தடுக்க சட்டம் இயற்றும் காலம்இன்னும் வரவில்லை. ஆனால் சமயத்தின் பேரால் மதக் கடமையாகப் பெண்கள் வியபிசாரம்  செய்வதைத் தடுக்க நாம் முன்னாடியே சட்டம் இயற்றி இருக்க வேண்டும். தற்காலச் சட்டப்படி 18 வயதிற்குப் பிறகு பொட்டுக் கட்டப்படும் பெண்களுக்கும் கூட இளவயது முதலே பெற்றோராலும் வளர்ப்போராலும் வியபிசாரம் செய்யத் தூண்டப்பட்டும் தயார் செய்யப்பட்டும்வருகிறார்கள். பொட்டுக் கட்டி வியபிசாரம் செய்வது மோட்ச்ச சாதனமானதென்றும், பணம் சம்பாதிக்க நல்ல வழி என்றும், சிறு வயது முதலே அப்பெண்களுக்குப் போதிக்கப்பட்டு வருகிறது. பெண்களை வியபிசாரத்தில் ஈடுபடுத்தாமல் சட்டம் ஏற்படும் வரை பெற்றோரும் வளர்ப்போரும் அவர்களை வியபிசாரம் செய்யப் பழக்கிப் பணம் சம்பாதிக்கத்தான் செய்வார்கள்.

4. மைனர் பெண்களுக்குப் பொட்டுக் கட்டக் கூடாதென்று ஏற்கனவே சட்டம் ஏற்படுத்தி மதவிதிகள் அப்போதே மீறப்பட்டு விட்டது. எனவே இம்மசோதா விஷயத்தில் மதத்துக்கு ஆபத்து என்னும் வாதத்தைக் கிளப்ப இடமே இல்லை. பருவமடைந்த பெண்களுக்குப் பொட்டுக்கட்ட சாளுதிரங்களில் அனுமதி இல்லை. ஆதலால், சாளுதிரங்களுக்குப் பயந்து பருவமடைந்த பெண்கள் பொட்டுக் கட்டைத் தடுக்க சட்டமியற்ற சர்க்கார் பயப்படத் தேவையில்லை. டாக்டர். முத்துலட்சுமி மசோதா விரும்பும் சீர்திருத்தம் இந்து சமூக சுயமரியாதையை உத்தேசித்து எவ்வளவோ காலத்துக்கு முன்னாடியே அமுலில் வந்திருக்க வேண்டும். எனவே அம்மசோதாவை நான் பூர்ணமாக ஆதரிக்கிறேன்.

பக்கம் 119 - 120, குடி அரசு 1930 - 1

பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10

Search