ஜனவரி 8, 2021 சின்னியம்பாளையம் தியாகிகள் தினத்தில்
அனைத்து விதமான சுண்டலுக்கும் எதிராக
தொழிலாளர் வர்க்க அரசியலை உயர்த்திப் பிடித்திட உறுதி ஏற்போம்!ஜெயபிரகாஷ் நாராயணன்
'சுரண்டலும் ஒடுக்குமுறையும் இருக்கும் வரை முதலாளித்துவத்திற்கு எதிரான போராட் டம் தொடரும்', 'இந்தப் போர் எங்களால் துவக்கப்படவும் இல்லை. எங்களோடு முடியப் போவதும் இல்லை'. இவை வெறும் முழக்கங் கள் அல்ல. தொழிலாளர் வர்க்கத்தின் வாழ் முறை.
இந்தியா பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தில் இருந்தபோது, 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பகத்சிங் தனது தோழர்களோடு தூக்குமேடை ஏறினார். ஜனவரி 8, 1946ல் கோவை பஞ்சாலைகளில் முதலாளிகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடியதால் கோவை சின்னியம்பாளையம் தோழர்கள் நால்வர் தூக்கிலிடப்பட்டார்கள். அவர்கள் வழிமரபில் அவர்கள் கைமாற்றி விட்டுசென்ற செங்கொடியை உயர்த்திப் பிடித்து, கோவை பிரிக்கால் நிறுவனத்தில், தாங்கள் விரும்பும் சங்கம் வைக்கும் உரிமைக்காக போராடிய தோழர்கள் மணிவண்ணன், ராமமூர்த்தி டிசம்பர் 3, 2015ல் சிறை சென்று 5 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவிக்கிறார்கள்.
20ஆம் நூற்றாண்டின் இறுதியில் நுழைந்த உலகமயம் தனியார்மயம் தாராளமயமாக்க லால் முதலாளித்துவம் பாய்ச்சலில் வளர்ந்தது. முதலாளித்துவத்தின் கோர முகத்தை 21ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே தொழிலாளர்கள் உணர துவங்கினர். ஆட்டோமொபைல் துறையில் வெடிப்புகள் துவங்கியது. கோவை பிரிக்கால் (2007), மனேசர் மாருதி (2012), ஏனாம் ரீஜென்ஸ் செராமிக் (2012) தொழிலாளர் போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.
கோவையில் தொழிற்சங்க இயக்கம் தனது இயல்பை இழந்து முதலாளிகளின் தொங்கு சதையாக மாற துவங்கிய நிலையில், கோவை பிரிக்காலில் தொழிலாளர் வர்க்கம் கிளர்ந்தெழுந்தது. தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்க பணியிட மாற்றம், சம்பளப் பிடித்தம், பணியிடை நீக்கம், பொய்ப் புகார்கள் பாய்ந்தன. 8 பெண்கள் உட்பட 57 பேர் சிறைவாசம் என தொழிலாளர்களை பழிவாங்கியும் சமரசமற்ற போராட்டத்தை தொழிலாளர்கள் முன்னெடுத்துச் சென்றனர். சோர்ந்து போன பிரிக்கால் நிர்வாகம், செப்டம்பர் 2009ல், அரசு, காவல்துறை துணையோடு 4 பெண் தொழிலா ளர்கள், முன்னணிகள், சங்க நிர்வாகிகள் வெளித் தலைவர்கள் இருவர் உட்பட 27 பேர் மீது கொலை வழக்குகள் ஜோடித்தது. 03.12.2015 அன்று கீழமை நீதிமன்றம் 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் 6 பேரை விடுதலை செய்து இருவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில், மனு விசாரணைக்கு உட்படுத்தப்படாமலேயே தள்ளுபடி செய்யப் பட்டுவிட்டது. இதற்கிடையில் வழக்கு விசாரணை கட்டத்தில் தொழிலாளி மணிகண்டனின் துயரமான இறப்பு, தோழர் சம்பத்குமாரின் மனைவி, தனது கணவரின் தண்டனை காலத்திற்கு பிறகான வாழ்க்கையை எண்ணியே தனது உயிரை மாய்த்துக் கொண்டது என இரு துயர நிகழ்வுகளும் நடந்தது.
துயரங்களையே வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொண்ட பிரிக்கால் தொழிலாளர்கள், வர்க்க சமரசமற்ற போராட்டத் தலைமையின் கீழ் நின்றதால் 2012 மற்றும் 2014 என இரண்டு முறை போராடும் சங்கம் அங்கீகரிக்கப்பட்டு ஊதிய உயர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
ஒட்டச் சுரண்டலும் ஒடுக்குமுறையும் பறிபோவதை சீரணிக்க முடியாத பிரிக்கால் நிர்வாகம், சங்கத்தை ஒழித்துக்கட்ட ஆன தெல்லாம் செய்தது. 2018 ஊதிய உயர்வு கோரிக்கையில் பிரச்சனைகளை உருவாக்கி, 302 தொழிலாளர்களின் பணியிட மாற்றம் செய்து, வேலைநீக்கமும் செய்தது. தொழிலா ளர் துறை, அரசு தலையீட்டுக்கு முட்டுக் கட்டை போட்டதால் நீதிமன்றம் மூலம் அரசை நிர்பந்திக்க வேண்டி வந்தது. தடைகள் பல கடந்து நீதிமன்ற கதவுகளைத் திறந்து நீதியைப் பெற தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள்.
தலைநகருக்கு அருகில் உள்ள மனேசரில் மாருதி கார் தொழிற்சாலையில், தொழிலாளர்கள் சங்கம் சேர்ந்தார்கள், உரிமை கோருகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக குண்டர்களை வைத்து செயற்கை கலவரத்தை உருவாக்கிய நிர்வாகம், உள்ளூர் பஞ்சாயத்துகள், காவல்துறை, மாநில அரசு நிர்வாகத்தின் துணையோடு தொழிலாளர்களை வேட்டையாடியது. 2350 நிரந்தரத் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது. ஆலைவளாகத்தில் போர்க் கைதிகளைப்போல் தொழிலாளர்களை மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தது. கைது செய்யப்பட்ட 148 தொழிலா ளர்கள் வழக்கு விசாரணை காலம் முழுவதும் பிணை வழங்கப்படாமல் சிறைதண்டனை அனுபவித்தனர். வழக்கு விசாரணையில், போராட்டங்களால் முதலீட்டாளர்கள் அச்சம் கொள்கிறார்கள், முதலீடு வெளியே சென்று விடும் சூழல் உள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கும் வெளிநாட்டு முதலீடு பெறுவதற்கும், உத்தரவாதம் இருக்க வேண்டுமெனில் எதிர்காலத்தில் தொழிலாளர்கள் போராடாமல் இருக்க குற்றச்சாட்டப்பட்ட தொழிலாளர்க ளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரியானா மாநில அரசின் வழக்கறிஞரின் வாதம் இருந்தது. வழக்கில், நான்கரை ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு 117 தொழிலாளர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர். 14 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், 4 பேருக்கு 5 ஆண்டுகள் தண்டனையும் 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டன. 13 தொழிலாளர்களும் அவர்தம் குடும்பத்தார்களின் வாழ்வும் சிதைக்கப்பட்டதோடு, விடுவிக்கப்பட்ட 117 பேர் மற்றும் தண்டனை முடிந்து வெளியே வந்த 18 பேர் என 135 பேர் தொழிலாளர்கள் விடுதலை பெற்றாலும் அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியின் ஏனாமில் உள்ள ரீஜன்ஸ் செராமிக் நிறுவன தொழிலாளர்கள் சங்கம் அமைத்தற்காகவே வேலைநீக்கம் செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் தொழிலாளர்கள் வெற்றி பெற்றாலும், நிர்வாகம், அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தால்தான் வேலைக்கு அனுமதிக்க முடியும் என மிரட்டியது. அடிமை சாசனத்தை ஏற்க மறுத்த தொழிலாளர்கள், பணி நிரந்தரம், பி.எப் கோரிக்கைகள் என ஒப்பந்த தொழிலாளர்களின் நலன்காக்கும் கோரிக்கைகளோடு அவ்ர்களையும் சேர்த்துகொண்டு புதிய உத்வேகத்தோடு மீண்டும் போராட்டத்தை துவக்கினர்.
முதலாளிகளின் மரபுப்படி போராட்டத்தை ஒடுக்க நிர்வாகம் காவல்துறை உதவியை நாடியது. சங்க நிர்வாகிகள் 10 பேரை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியது. காவல்துறையின் கொடுந்தாக்குதலால் தொழிற்சங்க செயலாளர் முரளிமோகன் இறந்தார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட போராட்டத்தில் தொழிலாளர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. பலர் படுகாயமுற்றனர். அதை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தை பயன்படுத்தி 84 பேர் மீது வழக்கு பதியப்பட்டு 46 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. 38 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆக ஏனாம் ரீஜன்ஸ் செராமிக் தொழிற்சாலையில் 84 பேர் பொருளாதார மரண தண்டனை அனுபவிக்கிறார்கள்.
பிரிக்கால், மாருதி, ரீஜன்ஸ் செராமிக் நிறுவன தொழிலாளர்களின் போராட்டங்கள் மீதான வழக்குகள் அனைத்தும் திட்டமிட்டு வலிந்து புனையப்பட்ட வழக்குகளே ஆகும்.
2020ல் உலகெங்கும் மக்கள் கொரோனா பெருந்தொற்றில் சிக்கி தவிக்கும்போது, மிருக பலத்தோடு ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாசிச பாஜக அரசு, தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஆதாரமாக இருக்கும் தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யவும், தொழிலாளர்களது போராடும் உரிமையை பறிக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களை வெறும் 4 சட்டத் தொகுப்புகளாக வெட்டிச் சுருக்கி சட்டத் திருத்தங்களை நிறைவேற்றுகிறது. ஏற்கனவே தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த மறுக்கும் இந்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் மேலும் ஒட்டச் சுரண்டுவதற்கே இந்த புதிய சட்டத் தொகுப்புகள் வழி வகுக்கும்.
தொழிலாளி வர்க்கத்தின் போராட்டமும், வெடிப்புகளும் இந்த சட்டத்தொகுப்புகளால் அதிகரிக்குயொழிய குறையாது என்பதற்கு சென்னை பெருநகருக்கு அருகில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலமே சாட்சி. மதர்சன், மேக்னா தொழிலாளர்கள் சங்கத்தை அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் எனும் நிறுவனம், ஆப்பிள் அய்போன் உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனமாகும். இங்கு 10000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு ரூ.21,000 சம்பளம் எனச் சொன்ன நிர்வாகம் கடந்த 8 மாதங்களாக ரூ.12,000 முதல் ரூ.16,000 மட்டுமே வழங்கி வந்துள்ளது. தனியார் ஏஜென்சி மூலம் அமர்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.11,000 சம்பளம் எனச் சொல்லிவிட்டு வெறும் ரூ.5,000 மட்டுமே வழங்கி வந்துள்ளது. சிலருக்கு அதுவும் கிடைக்கவில்லை. சம்பளம் குறைவு என்பதால் மிகை நேரப்பணியாக தினமும் 12 மணிநேரம் வேலை செய்ததற்கும் கூடுதல் சம்பளம் எதுவும் வழங்கவில்லை. இது பற்றி நிர்வாகத்திடம் பலமுறை பேசிப் பார்த்தும் பயனில்லாததால் தொழிலாளர்கள் வன் முறையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. நிறுவனத் தரப்பில் தொழிலாளர்களின் வன்முறையால் ரூ.437 கோடி சேதம் என சொல் வதை ஊடகங்கள் பெரிதாக காட்டுகிறார்கள். (பிறகு அதே நிர்வாகம் ரூ.41 கோடிதான் சேதம் என்றது). நிர்வாகம் ஒவ்வொரு தொழிலாளியின் சம்பளத்தில் இருந்தும் ரூ.10,000 பிடித்துள்ளது. 10000 தொழிலாளர்கள் $ ரூ.10,000 = ரூ.10,00,00,000. இதில் மிகை நேரப்பணிக்கான தொகையை சேர்த்தால் மாதத்திற்கு ரூ.15 கோடி. தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்வாகம் திருடி உள்ளது. மாதம் ரூ.15 கோடி வீதம் 8 மாதங்களாக ரூ.120 கோடி திருட்டு நடந்துள்ளது. தொழிலாளர் துறைக்கோ, தொழிற்சாலை ஆய்வாளர்களுக்கோ இது தெரியாமல் இருக்க முடியாது. அப்போதெல்லாம் கண்டு கொள்ளாத அரசும் ஊடகங்களும் இப்போது தொழிலாளர்கள் வன்முறையாளர்கள் என கூப்பாடு போடுகிறார்கள்.
தொழிலாளர் போராட்டத்துக்கு காரணம் முதலாளியும் அதிகாரிகளுமே. எனவே முதல் குற்றவாளிகள் அவர்களே. குற்றவாளிகள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கூடாது. அவர்களிடம் பிடிக்கப்பட்ட சம்பளம் உடனடியாக திரும்பத் தரப்பட வேண்டும். அச்சத்தால், மன உளைச்சலில் உள்ள தொழிலாளர்களுக்கு மனநல மருத்துவர்கள் கொண்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட குணத்தை முதலாளித்துவ ஆட்சியாளர்களின் எந்த சட்ட திருத்தங்களாலும் அழித்துவிட முடியாது. உலகில் அதற்கான சட்டங்களோ ஆயுதங்களோ முழுமையானதாக உருவாக்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு எதிரான தற்போதைய நடவடிக்கைகள் அனைத்தும் சீறிப் பாயும் காட்டாற்று வெள்ளத்திற்கான தற்காலிக தடுப்புகளே அன்றி வேறில்லை.
ஜனவரி 8, 2021ல் சின்னியம்பாளையம் தியாகிகள் தினத்தில், அனைத்து விதமான சுரண்டலுக்கும் எதிராக, தொழிலாளர் வர்க்க அரசியலை உயர்த்திப் பிடித்திட உறுதி ஏற்போம்.