குடியிருப்புப் பகுதி மக்கள் மத்தியில்
திருவள்ளூர் மாவட்ட வேலைகள்விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவள்ளூர் மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியும் இடது தொழிற்சங்க மய்யமும் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன் தலைமையில் காரனோடை சந்தையில் டிசம்பர் 8 அன்று நடத்திய மறியல் போராட்டத்தில் 250 பேர் கலந்துகொண்டனர்.
தோழர்கள் மத்தியில் உரையாற்றிய கட்சியின் மூத்த தோழரும் எல்டியுசி மாநிலத் தலைவருமான தோழர் எஸ்.குமார் டில்லியில் போராடும் விவசாயி களின் கோரிக்கைகளை விண்ணதிர முழக்கமிட்டு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். கட்சியின் மாநில அமைப்புக் குழு தோழர்கள் ஆர்.மோகன் கே.பழனிவேல், அன்புராஜ், சேகர், சாந்தி, ராமன், வே.சீதா மற்றும் மாவட்ட முன்னணி தோழர்கள் பாலாஜி, சீனிவாசன், மலைராஜ், சுரேஷ், வேணு, லட்சுமி, மனோ, சம்பத், ரஹ்மதுல்லா, சின்னகொண்டையா இவர்களுடன் ஜனநாயக வழக்கறிஞர் சங்க தோழர் கே.சுரேஷ், எழுவர் விடுதலைக்காக காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்திய மக்களுக்கான இளைஞர்கள் அமைப்பின் தோழர் ஜே.ஆண்டனி தினகரன் ஆகியோர் முன் நிற்க மறியல் போராட்டம் நடைபெற்றது.
கட்சியின் ஆலோசனைக்குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி ஆற்றிய எழுச்சிமிகு உரையுடன் போராட்டம் நிறைவு பெற்றது. சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டம் வணிகர்கள் பொது மக்கள் என பல நூற்றுக்கணக்கான மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது. இரண்டு நாட்களில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் கணிசமான தோழர்களை ஈடுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.
அன்று மாலை அழிஞ்சிவாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதியில் கட்சியின் முன்னணிகளின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் ஆலோசனைக் குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி, எல்டியுசி மாநில தலைவர் எ.எஸ்.குமார், கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன், உழைப்போர் உரிமை இயக்கத்தின் தோழர் அன்புராஜ், கட்சியின் அம்பத்தூர் பகுதி பொறுப்பாளர் தோழர் ஆர்.மோகன், ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தோழர் சுரேஷ், தோழர் வே.சீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். பகுதி கோரிக்கைகள் மீது டிசம்பர் 12 அன்று ஜனப்பன்சத்தி ரம் கூட்டு சாலையில் கண்டன கூட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி எம்ஜிஆர் நகர், மல்லையா நகர் மக்களுக்கு, அகற்றப்பட்ட குடியிருப்புகளுக்கு வருவாய்த்துறையினர் மாற்று இடம் வழங்கும் வரை தற்காலிக மின்சாரம் வழங்கலாம், குடியிருப்போர் மின்வசதி கேட்டு தனித்தனியாக விண்ணப்பிக்கலாம் என்ற உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி 165 குடியிருப்புகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்கப்பட்டும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக பகுதி மக்கள் கிராம சபையில் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் பஞ்சாயத்து நிர்வாகம் மக்கள் கோரிக்கையை நிராகரிக்கிறது. ஆனால் எம்ஜிஆர் நகர், முல்லை நகர் பகுதிக்கு அருகில் உள்ள புறம்போக்கு நில பகுதியில் பன்றிகள் வளர்க்க கட்டப்பட்டுள்ள இடத்திற்கு மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. சாய்கிருபா நகர், கணேஷ் நகர் பகுதிகளில் பூங்காவும் அதில் நடைபயிற்சி நடை மேடை அமைக்கப்பட்டு அங்கும் மின் இணைப்பு தரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குடியிருப்பு மக்களின் அடிப்படை கோரிக்கை நிராகரிக்கப்படுவதை கண்டித்து நடந்த கூட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தோழர்கள் எஸ்.ஜானகிராமன், ஜி.அன்புராஜ், க.ராமன், சாந்தி, சி.மலைராஜ், வே.சீதா, பி.வேணு மற்றும் பகுதி குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாநிலச் செயலாளர் தோழர் கே.பாரதி உரையாற்றினார்.
கூட்டம் முடிந்தவுடன் கட்சியின் முன்னணிகள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளுடன் தோழர் கே.பாரதி கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மின்வாரிய வளாகத்தில் குடியேறும் போராட்டம், சாலை மறியல் என போராட்டங்கள் தொடர மக்களைத் தயார் படுத்த வேண்டும் என்றும், உடனடியாக மின்வாரிய தலைவருக்கு மனு அளிப்பது, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனைப் பட்டா, வீட்டுவரி ரசீது, சாலை வசதி கோரி பதிவு தபால் மூலம் மனு அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அடுத்த கட்ட போராட்டத்திற்கு முன்னணி தோழர்கள் தயாராகி வருகின்றனர். செங்குன்றம் பகுதி மக்கள் கோரிக்கைகளுக்கான போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டது.