COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, January 4, 2021

 

இந்துத்துவ சக்திகளும்

அவர்களுக்கு இடம் தருபவர்களும் முறியடிக்கப்பட்டாக வேண்டும்

கடுமையான சவால்கள் நிறைந்த 2020 முடிந்து போகும், 2021 நல்ல செய்தி இல்லையென்றாலும் கெட்ட செய்தி இருக்கக் கூடாது என்று மக்கள் எதிர்ப்பார்த்திருக்க, கொரோனா 2.0 2021 வாசலில் நின்று வரவேற்கிறது

. இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் காட்டிய மெத்தனத்தில் புதிய கொரோனோ கிருமியும் இந்தியாவில் பரவ துவங்கிவிட்டது. கொரோனாவுடன் வாழ மக்கள் பழகிவிட்டார்கள் போலவே தெரிகிறது. ஏனெனில் கொரோனாவை விட கொடிய ஆட்சியாளர்களின் வஞ்சக நடவடிக்கைகளை நாளும் பொழுதும் எதிர்கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டின் விவசாயி முதலமைச்சர் விவசாயிகள் விரோத சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டே விவசாயிகள் நலன் பற்றி பேசுகிறார். மக்கள் வாக்களிக்க மாட்டார்களே, தண்டித்து விடுவார்களே என்பதை விட, மோடி அரசாங்கம் பிரயோகித்து விடக் கூடிய அமலாக்கத் துறையையும் வருமான வரித் துறையையும் நினைத்தே பெரிதும் அச்சம் கொள்கிறார். குழப்பத்தில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2,500 கோடி தருவதாக அடிமை முதலமைச்சர் சொல்ல, அவரை அறிவாளியாக்கிவிட, ஏசுவை கோட்சே சுட்டதாக திண்டுக்கல் சீனிவாசன் சொன்னார். ராமாயணத்தை சேக்கிழார் எழுதும் போது திருக்குறளை அவ்வையார் எழுதக் கூடாதா என்று அஇஅதிமுகவினர் கேட்கின்றனர். வெளிநாடுகளில் தமிழர் படும் துன்பம் அறிந்து, விதியே விதியே தமிழச் சாதியை என் செய நினைத்தா யெனக்குரையாயோ என்று பாடியபோது கூட பாரதி மனம் தளரவில்லையாம். இன்றைய ஆட்சியாளர்களைப் பார்த்தால் அவனுக்கு தற்கொலை எண்ணம் நிச்சயம் வரும்.

உருமாறிய கொரோனா வந்தவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது, தீவிரம், பாதிப்பு என்ன போன்றவை பற்றி வெளிப்படையாக சொல்லாமல் சிகிச்சை அளிக்கிறோம் என்று மட்டும் சொல்கிறார்கள். மறுபக்கம் செய்யாத பணிகளை செய்ததாகக் காட்டி மக்கள் பணத்தில் லட்சக்கணக்கில் செலவு செய்து நாளேடுகளிலும் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் விளம்பரங்கள் வெளியிடுகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் செலவு என்று காட்டப்பட்ட நிதியுடன், புயல், மழை, வெள்ளம், கொள்ளை நோய் என அடுத்தடுத்த துன்பங்கள் வந்தபோது ஒதுக்கப்பட்டதாகச் சொன்ன நிதியில் மக்கள் நலனில் செய்ய வேண்டியவற்றைச் செய்திருந்தால் இப்போது மீண்டும் மக்கள் பணத்தை திருப்பிவிட்டு விளம்பரம் செய்ய வேண்டிய தேவை எழுந்திருக்காது. அரசாங்கத்தின் செலவிலான விளம்பரங்களில் முதலமைச்சர் பழனிச்சாமிதான் வெற்றி நடை போடுகிறாரே தவிர அவரது ஆட்சி காலத்தில் அமைச்சரவையும் அதிகாரிகளும் சேர்ந்து நடத்திய ஊழல், அடிமை நிர்வாகத் தால் தமிழகம் தடுமாற்றம்தான் காண்கிறது.

ஆளும் கட்சியினரின் பெரிய ஏழு ஊழல் குற்றச்சாட்டுகள் கொண்ட பட்டியலை எதிர்க் கட்சித் தலைவர் ஆளுநரிடம் தந்துள்ளார். நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகப் போவதாக சொல்கிறார். ஆளுநர் எப்படிப்பட்டவர், என்ன நடவடிக்கை எடுப்பார் என்பது தமிழ்நாட்டு மக்கள் அறிந்த செய்தி. ஊழல் செய்தவர்கள் நீதிமன்றங்களில் கூட தப்பி விடலாம். ஆனால் மக்கள் விரோத ஆட்சியாளர்களை தக்க விதத்தில் தண்டிக்க தமிழ்நாட்டு மக்கள் காத்திருக்கிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளாக மாநிலத்தின் கருவூலத்தை ஒட்டச் சுரண்டி, நல்வாழ்வு நடவடிக்கைகளை சீர்குலைத்து, தொழிலாளர்கள், விவசாயிகள் என உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை நிலையற்றதாக்கி, வேலை வாய்ப்பு உரிமைகளை, கல்வி உரிமைகளை, நிதி உரிமைகளை, நில உரிமைகளை அடகு வைத்து தமிழ்நாட்டின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிட்ட அஇஅதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டவில்லை என்றால், தமிழ்நாடு பெரும்துன்பத்தில் தள்ளப்பட்டுவிடும் என்று போதுமான அளவு புரிந்து கொண்டு விட்டார்கள். எதிர்வருகிற பிரச்சனை இங்கு முடிந்துவிடவில்லை.

இந்த ஊழல் அடிமை ஆட்சி, 2011ல், 2016ல் வந்ததுபோல் அல்லாமல், இன்று ஒரு வலுவான மேலும் நாசகர கூட்டாளியையும் கூட்டி வருகிறது. வேல் யாத்திரைக்கு தமிழக மக்கள் வரவேற்பு தரவில்லை என்பது உண்மைதான். பெரியார், அம்பேத்கார், எம்ஜிஆர் சிலைகளை சேதப்படுத்தி கலவரமூட்ட நடந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டு, தமிழக மக்கள் முதிர்ச்சியுடன் அமைதி காத்தார்கள் என்பதும் உண்மைதான். தொலைக்காட்சி விவாதங்களில் கூட பிளவுவாத, இந்துத்துவ, இருண்மை சக்திகள் புறக்கணிக்கப்பட்டார்கள். தமிழ்நாட்டு முறிவு மருந்து திறம்பட செயல்படுகிறது. இதுவரை எல்லாம் சரியே, முறையே நடப்பதால் மட்டும் படுக்கையறைக்குள் புகுந்த நச்சுப்பாம்பு என்று விவரிக்கப்பட்ட பாஜகவை தேர்தல் களத்தில் குறைத்து மதிப்பிட்டுவிட முடியுமா? அவர்கள் தேர்தல்களில் தோற்றுப் போனாலும் வெற்றி பெற்ற பிற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கும் புதிய வகை அரசியலை கண்டுபிடித்தவர்கள். பாஜகவில் இருந்து அஇஅதிமுகவுக்கு வந்த மாஃபா பாண்டியராஜன், மோடியுடன் நெருக்கமாக இருப்பதாகச் சொல்லப்படும் பன்னீர்செல்வம், மோடிதான் டாடி என்று சொல்லும் ராஜேந்திர பாலாஜி, இன்னும் இவர்களைப் போன்றவர்கள் என்ன செய்வார்கள் என்று எளிதில் அனுமானிக்க முடியும். அஇஅதிமுக மட்டுமின்றி பிற கழக கட்சிகளில் இது போன்றவர்கள் இருப்பார்கள் என்றும் அனுமானிக்க முடியும்.

இன்று அஇஅதிமுகவை பின்னுக்குத் தள்ளி, பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையில்தான் தேர்தல் போட்டி என்பது யதார்த்த நிலைமைகளுக்கு புறம்பானது என்று தெரியும்போதும், அதுபோன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட பாஜகவினர் விடாமுயற்சி எடுக்கிறார்கள்.

நடந்து முடிந்த பீகார் தேர்தல்களில் இடதுசாரி கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கப் பட்டதாக கருதிய கூட்டணி கட்சியினர் அது பற்றி கேள்வி எழுப்பியபோது, அவர்கள் வெற்றி பெற்றால் பணத்துக்காக கட்சி மாறி பாஜகவுக்குச் செல்ல மாட்டார்கள் என்று தேஜஸ்வி சொன்னதாக செய்திகள் வந்தன.

பீகார் போல் இடதுசாரி கட்சிகள் வெற்றி பெறும் வாய்ப்பு தமிழ்நாட்டில் இல்லை என்றாலும், இடதுசாரி கட்சிகள் அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவது, இந்துத்துவ சக்திகளை பின்னோக்கித் தள்ளுவதில் அவசியமானதாகும். தமிழக மக்கள் கழக ஆட்சிகளை கண்டு சலிக்காதவர்கள். தேசிய கட்சிகள் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை, அஇஅதிமுக, திமுக தவிர மூன்றாவது ஒரு கட்சி உள்ளே வந்துவிடக் கூடாது போன்ற கருத்துகள் இங்கு வலுவானவை. அதே நேரம் இன்று நாடு எதிர் கொள்ளும் இந்துத்துவ ஆபத்தை கட்டுக்குள் வைக்க, அவர்களைப் போலவே கருத்தியல்ரீதியாக வலுவான இடதுசாரி கட்சிகள் அவசியம்.

அம்பத்தூர் தொகுதியில் போட்டியிடவுள்ள கம்யூனிஸ்ட் கட்சியையும் பிற இடதுசாரி கட்சிகளையும், அந்த கட்சிகள் இடம் பெறும் கூட்டணியையும் வெற்றி பெற வைப்பது வருகிற தேர்தல்களில் தமிழ்நாட்டு மக்களின் முக்கிய கடமையாக இருக்கும்.

Search