COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, January 4, 2021

 

டாக்டர் அம்பேத்கர் பக்கம்

பம்பாய் பல்கலைக்கழகச் சட்ட திருத்த மசோதா பற்றி: 4

நியமன செனட் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 40ல் இருந்து 50ஆக உயர்த்துவதற்கு

திரு.நூர்முகமது கொண்டு வந்த திருத்தத்தை ஆதரித்து ஆற்றப்பட்ட உரை

அக்டோபர் 5, 1927

பக்கம் 95 - 98, தொகுதி 3 பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு

இந்தத் திருத்தத்தை நான் ஆதரிக்கிறேன். பல்கலைக்கழகச் சீர்திருத்தங்கள், மற்றும் பல்கலைக் கழகத்தின் பணிகள் குறித்து எனது மதிப்பிற்குரிய நண்பர் திரு.முன்ஷியின் கருத்துகளை நான் ஒப்புக்கொண்டிருந்தால், நிச்சயமாக, இந்த திருத்தத்தினை  ஆதரிப்பதற்காக நான் முன்வந்திருக்க மாட்டேன். ஆனால், பல்கலைக்கழகச் சீர்திருத்தத்தில் ஈடுபாடு கொண்டவன் என்ற அளவிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன் என்ற அளவிலும், நான் எனது மதிப்பிற்குரிய நண்பர் திரு.முன்ஷியின் கருத்துக்களிலிருந்து அடிப்படையில் உடன்பாடு கொள்ளவில்லை. பல்கலைக்கழகம் என்பது சட்டங்களையும், ஒழுங்கு நியதிகளையும் உருவாக்குவதற்காக ஏற்பட்டதொரு அமைப்பே என்றும், தேர்வுகளை நடத்துவது சம்பந்தமானதொரு அமைப்பே என்றும், இந்த மசோதாவின்படி,  துவக்கப்படவிருக்கும் பட்ட மேற்படிப்புக் கல்வியினைப் பல்கலைக் கழகக் கல்வித் துறைகளில் நடத்துவதற்காக ஏற்பட்ட அமைப்பே என்றும், எனது மதிப்பிற்குரிய நண்பர் திரு.முன்ஷி கருதுவதாகத் தோன்றுகிறது. இது பல்கலைக்கழகம் பற்றிய மிகக் குறுகிய கண்ணோட்டமாகும். நான் புரிந்து கொண்ட அளவில், பல்கலைக்கழகத் தின் அடிப்படையான பணிகளுள் ஒன்று, உயர் கல்வியானது தேவைப்படுவோருக்கும் ஏழைகளுக்கும் தங்கு தடையின்றிக் கிட்டுவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதேயாகும். தேர்வுகள் குறித்த பிரச்சினைகளிலும், பட்டங்கள் வழங்குவதிலும் மட்டுமே ஈடுபட்டுக் கொண்டிருந்தால், எந்த ஒரு நாகரீக நாட்டிலும் உள்ள எந்தப் பல்கலைக்கழகமும்,  தான் இருப்பதை நியாயப்படுத்த முடியாது. பிற்படுத்தப்பட்ட இனத்தவர்களுக்கு உயர்கல்வி வசதிகளை அளிப்பது ஒரு நவீன பல்கலைக் கழகத்தின் கடமையெனில், பல்கலைக்கழக விவகாரங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒருவிதக் கட்டுப்பாடு இருப்பது அவசியம் என்பதையும் ஒப்புக் கொண்டாக வேண்டும். கல்விக்கான வசதிகளை தங்களுக்கு மிகவும் சாதகமான முறையில் பயன்படுத்திக் கொள்ளும் அறிவு திறன் கொண்டோருக்கு அந்த வாய்ப்பு வசதிகளை வழங்கும் ஒரு சாதனமாகவே பல்கலைக்கழகத்தை நான் முக்கியமாக காண்கிறேன்; ஆனால் பணப் பற்றாக் குறையினாலோ, வாழ்க்கையில் எதிர்ப்படும் பல்வேறு இடையூறுகளினாலோ பலர் இந்த வசதிகளைக் பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை. பல்கலைக்கழகம் என்பது முக்கியமாக  அறிவுத் துறையினரோடும், கல்வி கற்ற வகுப்பினரோடும் சம்பந்தப்பட்டது என்றும், பல்கலைக்கழகம் சரிவர இயங்க வேண்டுமெனில், அது கல்வி கற்ற வகுப்பினர் என்றழைக்கப்படுவார்களால் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்தைக் கட்டுப் படுத்தப் போகிற, கற்ற வகுப்பாறே சமுதாய மதிப்புகள் என்று நாம் கூறும் தன்மைகளைப்  பெற்றிருப்பார்களேயானால், நான் இந்த கோட்பாட்டினை ஏற்றுக்கொள்வேன். உதாரணமாக, அவர்கள் கீழ்நிலை வகுப்பினரின் ஆர்வ விருப்பங்களின்பால்  பரிவு காட்டினால், கீழ்நிலை வகுப்பினரின் உரிமைகளை அவர்கள் அங்கீகரித்தால், அந்த உரிமைகளுக்கு மதிப்ப ளிக்க வேண்டும் என்று அவர்கள் கருதினால், பிற்படுத்தப்பட்ட இனங்களை சேர்ந்த நாங்கள், எங்களது எதிர்காலத்தை முன்னேறிய இனத்தவர் என்றழைக்கப்படுவோரிடம் ஒப்படைக்கக் கூடும். ஆனால் கல்வி கற்ற உயர் வகுப்பார் என்றழைக்கப்படுவோரது ஆட்சியின் கசப்பான அனுபவத்தை நாங்கள் பல நூற்றாண்டு காலமாகப் பெற்று வருகிறோம். மக்கள் தொகையினரில் ஒரு பெரும் பகுதியி னர், குற்றப் பரம்பரையினர் என்றழைக்கப்படுவோர், இந்த நாட்டில் இருப்பது, முன்னேறிய வர்க்கத்தினருக்கும் பெருமை தரும் விஷயமல்ல. அதேபோன்று, தீண்டாதார் என்று கருதப்படும் மக்களினம் இந்த நாட்டில் இருப்பதும் நிச்சயமாக, அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம் அல்ல, அவர்களுக்கு விருப்பம் மட்டும் இருந்திருந்தால், தாழ்த்தப்பட்ட இனத்தவர்களின் நிலையை அவர்கள் உயர்த்தியிருக்கலாம்; குற்றப்பரம்பரையினரது  நிலை யினை அவர்கள் மேம்படுத்தியிருக்கலாம்; அவர்கள், தங்களது கலாச்சாரத்தை எங்க ளுக்குக் கொணர்ந்து, எங்களையும் தங்களுக்குச் சரிநிகர் சமமானவர்களாக ஆக்கியிருக்கலாம். ஆனால், கடந்த காலத்தில் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை; வருங்காலத்திலும், அத்திசைவழியில் எதையும் செய்யும் எண்ணமும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் எங்களை அப்பட்டமாகப் புறக்கணித்ததன் மூலமும், எங்களது முன்னேற்றத்தை அவர்கள் தீவிரமாக எதிர்த்ததன் மூலமும், அவர்கள்தான் எங்களது உண்மையான விரோதிகள் என்று எங்களை நம்ப வைத்துள்ளனர். எங்களை இப்போதுள்ள அதே அவல நிலையில் வைத்திருப்பதே அவர்களது விருப்பம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் விவாதத்தைப் பற்றிக் குறிப்பிட நான் விரும்பவில்லை. ஆனால், அரசாங்கத்தைத் தங்களது எதிரியாகக் கருதி வந்த எதிர்த்தரப்பினர், இப்போது அதற்கு ஆதரவளிப்பதானது,  இந்த அடிப்படை பிரச்சினையில் எங்களை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தால் தான் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை. நியமனம் மூலம், பிரதிநிதித்துவம் பெறுவதற்குப் பிற்படுத்தப்பட்ட இனங்களின் உரிமையை முறியடிக்க விரும்புவதைத் தவிர, அவர்களது நடத்தைக்கு வேறு எவ்வித காரண மும் கிடையாது. அல்லும் பகலும் அரசாங்கத்தை எதிர்த்து வந்தவர்கள். இந்தக் காரணத்திற்காகவே, இப்போது அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டனர். இவ்வளவு குறுகிய, பிற்போக்குத்தனமான கருத்துக்களைக் கொண்ட அறிவுத்துறையினரிடம், எங்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்பட முடியும்?

பொருளாதார பயன்களைப் பிரித்துக் கொள்ளும் பிரச்சினையாயிருப்பின், செனட் சபையின் வகுப்புவாத பிரதிநிதித்துவத்தைப் புகுத்தப்படுவதற்கு ஒரு கால் நான் சம்மதித்து இருக்கக்கூடும் என்று எனது மதிப்பிற்குரிய நண்பர் திரு.முன்ஷி  கூறினார். ஆனால் அவருக்கு ஒன்றை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்; பார்க்கப்போனால், கல்விதான் பொருளாதாரரீதியில் மிகப் பெரும் பயன் என்பதை பிற்படுத்தப்பட்ட இனத்தினர் உணரத் தலைப்பட்டு விட்டனர்; அதற்காக அவர்கள் போராடவும் தயாராக உள்ளனர். நாங்கள் பொருளாதாரப் பயன்களை விட்டுக் கொடுப்போம்; நாகரீகத்தின் பொருளாதார பயன்களை விட்டுக் கொடுப்போம்; ஆனால், உயர்கல்வியின் பயன்களை முழுமையான அளவுக்கு பெரும் எங்களது உரிமையையும், வாய்ப்பையும் மட்டும் நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். கல்வியின்றி தாங்கள் வாழும் முடியாது என்று இப்போது உணரத் தலைப்பட்டுவிட்ட பின்தங்கிய வகுப்பினரது கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவமே இதுதான் இந்த காரணத்திற்காகத்தான், இடங்களை அதிகரிப்பதற்கான போராட்டம் நடத்தப்படுகிறது.

மற்றோர் அம்சத்தையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்களுக்கு, தனித்தனிப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், நியமன இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை; ஏனெனில், பல்கலைக்கழகத்தில் முதல்வர்களுக்கு நேரடி பிரதிநிதித்துவம்  அளிக்கப்படவில்லையெனில், அவர்களுக்கென்று குறைந்தபட்சம் 10 இடங்களையாவது பயன்படுத்துவதற்கு அரசாங்கம்  கட்டப்பட்டுள்ளது என்று பல முறை கூறப்படுகிறது. இப்போது அவர்களுக்கென்று தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதால், மொத்தமுள்ள 40 இடங்களும் பின்தங்கிய வகுப்பினருக்கே செல்லும். இந்தக் காரணத்திற்காகவே, பின்தங்கிய வகுப்பினருக்குப் போதிய அளவு பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக, நியமன  இடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். மதிப்பிற்குரிய உறுப்பினர் திரு.ஹமீலின் திருத்தத்தின் விளைவாக, நேரடிப் பிரதிநிதித்துவம் பெறும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த முதல்வர்கள், பின்தங்கிய வகுப்பினரது நண்பர்களாகத் தானிருப்பர் என்பதற்கு எவரும் எங்களுக்கு உத்திரவாதம் தரமுடியாது. எனக்கு இந்த முதல்வர்களுடன் போதுமான அனுபவம் உண்டு; செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மேட்டுக்குடியினராகத்தான் இருப்பார் என்பது உறுதி; அவர்கள் கல்விக்காகப் போராடிக் கொண்டிருக்கும் பின்தங்கிய வகுப்பினரின் உதவிக்கு வரமாட்டார்கள். மாண்புமிகு அமைச்சர், செனட் சபையில் மேல்நிலை வர்க்கத்தினருக்கு 10 இடங்கள் கூடுதலாகத் தரும்போது, அவர் பின்தங்கிய வகுப்பினரது உதவிக்கு வந்து, மீதமுள்ளதைச் சமன் செய்ய வேண்டும். மசோதாவில் ஏற்கனவே வகை செய்யப்பட்டுள்ள இடங்களில் 10 இடங்களை மேலும் கூட்டுவதன் மூலமாகவே இதனைச் செய்ய முடியும். ஆக நாங்கள் எங்களது அச்சத்தையும், அய்யப்பாடுகளையும் வெளிப்படுத்திவிட்டோம். இத்தகையதொரு விஷயத்தில், பின்தங்கிய வகுப்பினரது உணர்ச்சிகள் உச்சத்திலிருக்கும் போது, செனட் சபையில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைத்தாலொழிய, அவர்களது நலன்கள் பாதுகாக்கப்படாது என்று அவர்கள் எண்ணும்போது, பின்தங்கிய இனத்தவரை மேல்நிலை வர்க்கத்தினரின் தயவில் வைப்பதற்கு அரசாங்கம் தனது அதிகாரப் பலத்தைப் பிரயோகிப்பது சரியானதுதானா என்பதை அரசாங்கம் ஆலோசிக்க வேண்டும் என்று நான் கூறுவது நியாயமானதேயாகும். இந்தப் பிரச்சினையை இந்த அவையின் சுதந்திரமான வாக்கெடுப்புக்கு விட்டுவிடுவது விவேகமானது என்று கருதுகிறேன்; அவைத் தலைவருக்கு அதையே நான் விண்ணப்பிக்கிறேன். தனக்கு மிகச்  சரியென தோன்றுவதை, இந்த அவை தீர்மானிக்கட்டும். இந்த விளக்கங்களுடன் நான் திருத்தத்தை ஆதரிக்கிறேன்.

Search