COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, January 4, 2021

 

தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு

நம்பிக்கை செய்தி சொல்லியுள்ள

மேக்னா தொழிலாளர்களின் போராட்டம்

எஸ்.ராஜகுரு

மேக்னா தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 82 நாட்களைக் கடந்த நிலையில், தொழிலாளர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், போராட்டம் வெற்றி பெற சிறை செல்லவும் தயார் என்றும் சங்கத்திற்கு கடிதம் வழங்கினார்கள்.

சங்கம், சிறை செல்லத் தயாரான தொழிலாளர்களுக்கு, சிறையில் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் (துண்டு, லுங்கி, பேஸ்ட், பிரஷ், ஷாம்பு, குளியல் மற்றும் துணி சோப்) அடங்கிய பையை, திருபெரும்புதூர் மண்டல தொழிலாளர்கள் சார்பாக வழங்கும் நிகழ்ச்சி, உழைப்போர் உரிமை இயக்கம் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் தோழர் எஸ்.ராஜகுரு தலைமையில் 07.12.2020 அன்று திருபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற் றது. கொரோனா நோய் தடுப்பு ஊரடங்கு காலத்திற்கு பின் காவல்துறையின் கட்டுப்பாடுகளுக்கிடையில், ஒரு மணி நேரம் மட்டும், காவல்துறை அனுமதியுடன் நடத்தப்பட்ட முதல் நிகழ்ச்சி இது.

மேக்னா தொழிலாளர்களை சிறையில் இருந்து பிணையில் விடுவிக்க, பல்வேறு ஆலை களில் பணிபுரியும் பகுதி தொழிலாளர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு, சொத்து ஆவணம், ஆதார் அட்டை, குடும்ப அட்டையுடன் (அசல் மற்றும் நகல்) பிணை வழங்க முன்வரும் தோழர்கள் எங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என பல சங்கங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு அறிவிப்பு செய்தன.  

11.12.2020 அன்று மேக்னா தொழிலாளர்களின் 86ஆவது நாள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்த நிலையில் காலை 11.00 மணி அளவில் பணிநீக்கம் செய்யப்பட்ட சான்மினா தொழிலாளியும், காஞ்சி மாவட்ட எல்டியுசி முன்னணியுமான தோழர் சோலையப்பன் தலைமையில், 85 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் வேலைநிறுத்தத்தில் தமிழக அரசும், தொழிலாளர் துறையும் தலையிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நியாயம் கேட்டு தனிமனித இடைவெளியை கடைபிடித்து முகக் கவசம் அணிந்து கொண்டு பேரணியாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்றனர்.

போகும் வழியிலேயே காவல்துறை தொழிலாளர்களை வழிமறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் காவல் துறையினரிடம் தங்களின் நியாயமான கோரிக்கைகளை கூறிய பின் தொழிலாளர் முன்னணிகள் நான்கு பேரை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்க அனுப்பியது. முன்னணி தோழர்கள் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து பிரச்சனைகளை எடுத்துக் கூறினர். மாவட்ட ஆட்சி தலைவரை சந்திக்க வேண்டும் என தொழிலாளர்கள் உறுதியாக இருந்தனர். அவர் கூட்டத்தில் இருப்பதாகவும் தாமதமாகும் என்று சொன்னதால் தொழிலாளர்கள் அங்கேயே காத்திருந்து மாவட்ட  ஆட்சியரை சந்தித்து தமிழக அரசு, மேக்னா தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தில் தலையிட்டு தொழில் தகராறுகள் சட்டம் 1947ன் 10(1), 10 பி பிரிவுகளின் கீழ் ஆணை பிறப்பிக்க கோரி மனு வழங்கினார்கள்.

மாவட்ட ஆட்சியர், கோரிக்கைகளையும் போராட்டங்களையும் பற்றி தங்களுக்கு தெரியும் என்றும் ஒவ்வொரு வாரமும் அது பற்றி பரிசீலனை செய்வதாகவும் இது தொடர்பாக தொழிலாளர் துறைக்கும் அழுத்தம் தருவதாகவும் கூறினார்.

12.12.2020 அன்று மே 17 இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் தலைமையில் மே 17 இயக்க தோழர்கள் சந்தித்து தொழிலாளர்களின்  கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

14.12.2020 அன்று ஒரு பெரிய நிகழ்ச்சி உள்ளது என்று தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இடம் அறிவிக்கப்படவில்லை. 13.12.2020 அன்று இரவே தொழிலாளர்கள் அனைவரும் காட்டாங்கொளத்தூரில் தங்கினர். 14.12.2020 அன்று காலை 05.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் புறப்பட்டனர். வாகனம் போராட்டப் பந்தலை வந்தடைந்து, மேக்னா தொழிற்சாலை நோக்கி சென்றதும் தொழிலாளர்கள் முழக்கங்கள் எழுப்பினர். மேக்னா ஆலை வாயிலில் காலை 6:00 மணிக்கே நியாயம் கேட்டு கூடியதால், காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அந்தப் பகுதியில் உள்ள தொழிற்சாலை தொழிலாளர்களின் கவனத்தை இந்த நிகழ்ச்சி ஈர்த்தது. தொழிலாளர்கள் அமைதியாக எந்த சேதமும் உருவாக்காமல் திரண்டு நியாயம் கேட்டதால் காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை சுமார் மூன்று மணி நேரம் நிர்வாகத்தால் உற்பத்தி தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

அந்த இடத்திலேயே நிர்வாகத்துடன் காவல்துறை உயரதிகாரி ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தொழிலாளர்களை மகாராஷ்டிராவின் புனேவிற்கு பணியிடமாற்றம் செய்த உத்தரவை கொரோனா காலம் முடியும் வரை பிப்ரவரி மாதம் வரை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. நிர்வாகத்தின் இந்த முடிவை மறுநாள் (15.12.2020) தொழிலாளர் துறை இணை ஆணையர் முன்பாக நடைபெறும் பேச்சுவார்த்தையில் எழுத்துபூர்வமாக தருவதாக நிர்வாகம் ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் தற்காலிகமாக போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தப் போராட்டத்திற்கு முன்பு வரை தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்பதில்லை எனவும் எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் சொல்லி வந்த நிர்வாகம், தொழிலாளர்களின் துணிச்சலான போராட்டத்தால் தன் நிலையை மாற்றிக் கொள்ளும் நிலை உருவானது. திருபெரும்புதூர் பகுதியில் மேக்னா தொழிலாளர் போராட்டத்தில் பல்வேறு தொழிற்சாலை தொழிலாளர்கள் கலந்து கொண்டு வெளிப்படுத்திய ஒற்றுமைக்கு கிடைத்த ஒரு பகுதி வெற்றியாகும் இது.

 15.12.2020 அன்று தொழிலாளர் இணை ஆணையர் முன்பாக நடைபெற வேண்டிய பேச்சுவார்த்தை திட்டமிட்டோ அல்லது சூழ்நிலை காரணமாகவோ நடைபெறாமல் தள்ளிப்போனது.

 மேக்னா தொழிலாளர்களின் 93வது நாள் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி தொழிலாளர்களின் குடும்பத்தினரும் பங்கு பெறும் பொதுப் பேரவை 18.12.2020 அன்று மாலை 04.00 மணிக்கு கிளைத் தலைவர் தோழர் பாலாஜி தலைமையில் போராட்டப் பந்தலில் நடைபெற்றது.

21.12.2020 அன்று தொழிலாளர்கள் குடும்பங்களுடன் கலந்துகொண்டு தோழர் கே.பாரதி தலைமையில் நடைபெற்ற  தொழிலாளர்கள் உரிமை பேரணியில், கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் எஸ்.குமாரசாமி, எ.எஸ்.குமார், ஜானகிராமன், பழனிவேல், எல்டியுசி தலைவர் கள் ராஜகுரு, ஜேம்ஸ் மற்றும் பெண்கள் குழந்தைகள் உட்பட ஜிம்கானா கிளப், மெட்ராஸ் போர்ட் கிளப், திநகர் சோசியல் கிளப் மற்றும் ஒரகடம் மேக்னா தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ராயபுரம் பரூக் மஹாலில் அடைக்கப்பட்டனர்.

காவல்துறையினரின் ஏற்பாட்டில் தொழிலாளர் துறை அமைச்சர் நிலோஃபர் கஃபிலை சந்தித்து ஜிம்கானா கிளப், மெட்ராஸ் போர்ட் கிளப், தி.நகர் சோசியல் கிளப் மற்றும் ஒரகடம் மேக்னா தொழிலாளர்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தோழர்கள் எஸ்.குமாரசாமி, எ.எஸ்.குமார், கே.பாரதி, ஜேம்ஸ், எஸ்.ராஜகுரு ஆகியோர் கொடுத்தனர். விரைந்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட தொழிலாளர் மத்தி யில் சமத்துவ வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் பார்வேந்தன் பேசினார்.

22.12.2020 அன்று தொழிலாளர் இணை ஆணையர் முன்பாக நடைபெற வேண்டிய பேச்சுவார்த்தையும், நிர்வாகத் தரப்பு வராததால் நடைபெறாமல் தள்ளிப்போனது.

24.12.2020 அன்றும் தொழிலாளர் இணை ஆணையர்  முன்பாக நடைபெற வேண்டிய பேச்சு வார்த்தை தொழிலாளர் இணை ஆணையர் வராததால் தள்ளிப்போனது.

தோழர்கள் எஸ்கே, கே.சுரேஷின் விடாப்பிடியான நிலைப்பாட்டால் வீடியோ கான்பரன்சிங் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு நடந்தது. 

வேலை நிறுத்த போராட்டத்தின் 100ஆவது நாளில் 25.12.2020 அன்று,

ஆதிக்கத்தை எதிர்த்து கூலி உயர்வு கேட்டு போராடிய விவசாயத் தொழிலாளர்கள் தீக்கிரையாக்கப்பட்ட வெண்மணி நாளில் ஆதிக்கத்தை வீழ்த்த, ஜனநாயகம் காக்க உறுதியேற்போம்!

விவசாய விரோத, சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக துணை நிற்போம்!!

கார்ப்பரேட் சூறையாடலுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும்!!

காவி கார்ப்பரேட் பாசிச சக்திகளை வீழ்த்த டிசம்பர் 25 வெண்மனி நாளில் உறுதி ஏற்போம்!!

என  மேக்னா, நிப்கோ, தொழிலாளர்கள் போராட்ட பந்தலில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உறுதி ஏற்றுக் கொண்டனர்.

திருபெரும்புதூரில் உள்ள, கனடாவைச் சேர்ந்த மேக்னா நிறுவனத்தில் எல்டியுசி சங்கம் ஆரம்பித்ததற்காக 12 தொழிலாளர்கள், இந்தி யாவிலேயே கொரோனா தொற்று அதிகமாக உள்ள மகாராஷ்ட்ராவின் புனேவிற்கு பணியிட மாற்றம், 18 பேர் தற்காலிக பணிநீக்கம், 104 நாட்களுக்கு மேல் வேலைநிறுத்த போராட்டம் நீடித்தும், தொழிலாளர் துறை, தமிழக அரசு, நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்காததாலும், பிரச்சனை தீர்க்க முன்வராததாலும், மேக்னா தொழிலாளி மணிகண்டன் , 28.12.2020 அன்று, வீடியோ ஒன்றை வெளியிட்டு, தன் உயிரை மாய்த்துக்கொள்வதாக தெரிவித்து காணாமல் போய்விட்டார். அவருக்கு ஏதாவது நடந்தால் மேக்னா நிர்வாகமும், தொழிலாளர் துறையுமே காரணம் என்று சொல்லி இருந்தார். தான் தன்னை மாய்த்துக் கொண்டாலாவது மேக்னா நிர்வாகமும் தொழிலாளர் துறையும் இந்த சாதாரண பிரச்சனையை பேசித் தீர்க்கும் எனவும் கூறியிருந்தார்.

கிளைத் தலைவர் தோழர் பாலாஜி மற்றும் சில தோழர்கள் மணிகண்டனின் குடும்பத்தினரை சந்தித்து, அவர் எங்கு சென்றிருப்பார், உறவினர்கள் நண்பர்கள் யார் என்று விவரங்கள் கேட்டு, அனைத்து இடங்களிலும் தேடி பின்பு, ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவரது குடும்பத்தினர் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவரை தேட சங்கத் தோழர்கள் பல்வேறு வழிகளில் முயற்சி எடுத்தனர். மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார், தோழர் கே.சுரேஷ் தொழிலாளர் துறை ஆணையரை சந்தித்து மனு கொடுத்தனர்.

29.12.2020 அன்று சமரச அதிகாரிகள் முன்பு நடந்த மேக்னா பேச்சுவார்த்தை காலை 11.30 மணியளவில் தொடங்கி மாலை 6.30 மணி வரை இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை ஜேசிஎல், காஞ்சிபுரம் டிசிஎல், மேலும் ஒரு டிசிஎல் முன்பு நடைபெற்றது.

அன்றைய பேச்சுவார்த்தையில் முதன் முறையாக தொழிலாளர்கள் மீதான பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கை, தற்காலிக பணி இடைநீக்கம் போன்ற விஷயங்களில் சிறு மாற்றம் ஏற்பட்டது. அடுத்த பேச்சுவார்த்தை 31.12.2020 அன்று நண்பகல் 12 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் போது 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் டிஎம்எஸ் வளாகத்தின் முன்பு தோழர் மணிகண்டன் பற்றிய கவலையுடன் கூடியிருந்தனர்.

மேக்னா தொழிலாளி மணிகண்டனை கண்டுபிடி, காப்பாற்று, நியாயம் வேண்டும் என பல்வேறு தொழிற்சாலை தொழிலாளர்கள், மேக்னா ஆலை வாயிலில் சென்று, மேக்னா நிர்வாகத்தை நோக்கி கேள்வி எழுப்பினர். நிர்வாகம் காவல்துறையை வரவழைத்தது. நிர்வா கமும் காவல்துறையும் தோழர் மணிகண்டனை தேடுவது சம்பந்தமாக விளக்கம் கூறிய பின் தோழர்கள் கலைந்து சென்றனர்.

31.12.2020 அன்று டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற வேண்டிய பேச்சு வார்த்தை, இருங்காட்டுக்கோட்டை துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. முதல் சுற்று பேச்சுவார்த்தைக்கு பின்பு உணவு இடைவேளையின் போது, மேக்னா நிறுவனத்தின் மனிதவளத்துறை அதிகாரி மதர்சன் நிறுவன மனித வளத்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக, பார்த்த தொழிலாளர்கள் கூறினார்கள்.

இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தையில் சமரச அதிகாரி முன்பு உடன்பாடு ஏற்பட்டது. தொழிலாளர் துறை அலுவலக வளாகத்திலேயே பொதுப் பேரவை கூட்டப்பட்டு தொழிறலாளர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை அம்சங்களை விளக்கிக் கூறி ஒப்புதல் பெறப்பட்டு சமரச அதிகாரி முன்னிலையில் இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவுரையில் கையொப்பமிட்டு, வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. பணியிட மாற்றம் பற்றி மேற்கொண்டு பேசவோ, 18 தொழிலாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையில் வேலை நீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பும் உருவாக்கப்பட்டது.

பெங்களூர் டொயோட்டா கிர்லோஸ்கர் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து, ஒரகடம் மேக்னா தொழிலாளர்களின் 106 நாட்கள் வேலை நிறுத்தத் திற்கு பிறகு கிடைத்த வெற்றியை கொண்டாட, வெற்றியை பிரகடனம் செய்ய தோளோடு தோள் நின்ற தோழர்களுக்கு நன்றி பாராட்ட 02.01.2021 அன்று போராட்ட பந்தலில் கூட்டம் நடைபெற்றது.

ரெனால்ட் நிசான், ÷ண்டாய், சென்னை போர்ட், நிஃப்கோ, மதர்சன், ஏசியன் பெயின்ட்ஸ், பின்ஸ்டார், டென்னகோ ஆகிய ஆட்டோமொபைல் தொழிற்சாலை நிறுவன சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள், தமிழ்நாடு டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்தின் தொழிலாளர்கள் கலந்து கொண்டு, பெங்களூர் டொயோட்டா கிர்லோஸ்கர் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஹ÷ண்டாய் தொழிலாளர்களின் யுயுஎச் தொழிற்சங்கம் சார்பாக பொது செயலாளர் சின்னத்தம்பி, தற்போது தேர்தலில் வெற்றிபெற்ற தலைவர் தோழர் விநாயகம், ÷ண்டாய் தொழிலாளர்களின் எச்எம்அய்இயு சங்கம் சார்பாக இணை செயலாளர் தோழர் சிதம்பரம், ரெனால்டு நிசான் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் சார்பாக தலைவர் பாலாஜி, சென்னை ஃபோர்ட் தொழிலாளர்களின் சங்கத்தின் சார்பாக  துணைத் தலைவர் தோழர் மகாத்மா, இணைச் செயலாளர் தோழர் அருண், செயற்குழு உறுப்பினர் தோழர் லட்சுமிநாராயணன், தமிழ்நாடு டாஸ்மார்க் விற்பனையாளர்கள் சங்கம் சார்பாக தோழர் குமார், எல்டியுசி மதர்சன் கிளை சங்கத்தின் சார்பாகவும், பின்ஸ்டார் பணியாளர் பணிக் குழு உறுப்பினர்கள், தொழிலாளர்கள் சார் பாகவும், ஏசியன் பெயின்ட்ஸ் தொழிலாளர்கள் சார்பாகவும், டென்னகோ தொழிலாளர்கள் சார்பாகவும் முன்னணி தோழர்களும் எல்டியுசி மாநிலச் செயலாளர் தோழர் பழனிவேல், எல்டியுசி தோழர் சோலையப்பன், உழைப்போர் உரிமை இயக்க மாநிலச் செயலாளர் தோழர் எ.கோபால், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் மாநில துணைத் தலைவர் தோழர் சுரேஷ், எல்டியுசி மாநிலத் தலைவர் தோழர்எ.எஸ்.குமார் உரையாற்றினர். உழைப்போர் உரிமை இயக்க மாநிலத் தலைவரும், ஜன நாயக வழக்கறிஞர் சங்க மாநில தலைவருமான தோழர் கே.பாரதி தொழிலாளர்களிடையே சிறப்புரையாற்றினார்.

கூட்டம் முடியும் தருவாயில் வீடியோ பதிவிட்டு காணாமல் சென்ற தோழர் மணிகண்டன் கூட்டத்திற்கு வந்தார். கூட்டத்தில் தான் எங்கெல்லாம் சென்றேன் என்பதையும் எதனால் திரும்பினேன் என்பதையும் விளக்கிக் கூறினார். அவரை தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக அவருடைய குடும்பத்தினரிடம்  ஒப்படைத்தனர். உள்ளூரில் உள்ள சிலர்  கூடி வாய் தகராறில் ஈடுபட்டதால் அங்கு வந்த காவல் துறையினர் வழக்கறிஞர்கள், தொழிலாளர்களை ஒருமையில் பேசி அவமரியாதை செய்தனர். பின்னர் தோழர் மணிகண்டனையும் தொழிலாளர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தோழர் மணிகண்டனை விசாரித்துவிட்டு, அவரையும் தொழிலாளர்களையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தோழர்கள் மேக்னா தொழிலாளர்களின் இந்த வெற்றி இந்த பகுதியில் உள்ள அனைத்து தொழிலாளர்களின் வெற்றி. இது தொழிலாளர் வர்க்கத்திற்கான வெற்றி என்று தெரிவித்தனர்.

கொரோனாவை காரணம் காட்டி தொழிலாளர் உரிமையை பறித்துக் கொண்டிருக்கும் போதும் பல்வேறு சங்கங்கள் போராட தயங்கிக் கொண்டிருக்கும் போதும், மூலதனத்தை எதிர்த்து போராட முடியும் போராடி வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை செய்தியை இந்த இந்தப் பகுதி தொழிலாளர்களுக்கு மேக்னா தொழிலாளர்கள் சொல்லியுள்ளனர்.

Search