COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, January 4, 2021

 

ஆதிக்கம் வீழட்டும்!

ஜனநாயகம் வெல்லட்டும்!

கம்யூனிஸ்ட் கட்சி, 2020 டிசம்பர் 25 வெண்மணி நாளை, 'ஆதிக்கம் வீழட்டும் ஜனநாயகம் வெல்லட்டும்' என்ற முழக்கத்துடன் அனுசரிக்க முடிவு செய்தது.

டிசம்பர் 25 வெண்மணி நாள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் அனுசரிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெண்மணி நினைவேந்தல் நிகழ்ச்சி ஒரகடம் மேக்னா தொழிலாளர்களின் போராட்டப் பந்தலில் நடைபெற்றது. ஆதிக்க எதிர்ப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி பன்னாட்டு நிறுவனத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்ட பந்தலில் நடைபெற்றது பொருத்தமாக இருந்தது. நிகழ்ச்சியில் மேக்னா கிளை சங்கத்தின் கிளைச் செயலாளர் தோழர் செல்வம் தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் எஸ்.ராஜகுரு கே.ராஜேஷ் உரையாற்றினார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் தோழர் மாரியப்பன், தோழர் சரவணன் தலைமையில் தோழர் கோவிந்தராஜ் ஒருங்கிணைத்த நிகழ்ச்சிகளில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவிக்கப்பட்டது. கோவையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வெண்மணியின் சமகால பொருத்தம் பற்றி தோழர்கள் குருசாமி, ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் மணிகண்டன் உரையாற்றினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றம் பகுதியில் கட்சி அலுவலகத்தில் தோழர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டம் டெல்லியில் நடக்கும் விவசாய போராட்டத்திற்கு ஒருமைபாடு தெரிவித்து, வெண்மணி தியாகிகளை நினைவு கூர்ந்து கூட்டம் உறுதி ஏற்றது.

 கட்சித் தலைமையகமான தோழர்  கூடத்திற்கு பக்கத்திலேயே பிரதான சாலையில் ஒலிபெருக்கியுடன் ஒரு சிறு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எழுப்பப் பட்ட முழக்கங்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டது.

மறக்க மாட்டோம் மறக்க மாட்டோம்

வெண்மணியை மறக்க மாட்டோம்

கீழ் வெண்மணியை மறக்க மாட்டோம் 

கூடுதல் நெல்லாய் அரைப்படி

கூலி உயர்வு கேட்டதற்கு

ஆணும் பெண்ணும் குழந்தையாய்

ஒடுக்கப்பட்ட தலித் மக்கள்

விவசாய தொழிலாளர்கள்

நாலு பத்து நான்கு பேரை

தீயில் எரித்து கொன்றனரே

ஆதிக்க கயவர் கொன்றனரே

அடங்கிப்போ சொன்னது ஆதிக்கம்

அடங்க மறுத்தனர் எம்மக்கள்

கீழே போடு செங்கொடியை

மிரட்டிப் பார்த்தது பண்ணை கூட்டம்

விழுந்தாலும் செங்கொடியோடு

வாழ்ந்தாலும் செங்கொடியோடு

சொன்னார்கள் எம் மக்கள்

மாறவில்லை மாறவில்லை

அன்றும் இன்றும் ஏழைமக்கள்

வாழ்க்கைதான் மாறவில்லை

பொழுதும் மிரட்டும் அடக்குமுறைகள்

நாளும் தொடரும் துன்பங்கள்

இனியும் பொறுக்க மாட்டோமே

விடுதலை செய்த தீர்ப்புக்கு

கொலைகாரர்கள் தப்பிக்க

உதவி செய்த தீர்ப்புக்கு

கேட்கவேண்டும் கேட்கவேண்டும்

மன்னிப்பு கேட்க வேண்டும்

நீதித்துறை கேட்க வேண்டும்

திருத்த வேண்டும் திருத்த வேண்டும்

கொலைகாரரை விடுதலை செய்த

நீதிமன்ற தீர்ப்பையே

திருத்த வேண்டும் திருத்த வேண்டும்

உறுதியேற்போம் உறுதி ஏற்போம்

வெண்மணி நாளில் உறுதி ஏற்போம்

ஆதிக்கம் வீழட்டும்

ஜனநாயகம் வெல்லட்டும்

கூட்டத்தில் கட்சியின் அம்பத்தூர் பகுதி செயலாளர் தோழர் மோகன் தலைமை தாங்கினார். கூட்டத்தை தோழர்கள் மோகனும் பழனிவேலும் ஒருங்கிணைத்திருந்தனர். கூட்டத்தில் பேசிய எல்டியுசி மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார், தமிழ்நாட்டின் சமூக பொருளாதார அரசியல் வரலாற்றில் கம்யூனிஸ்ட்களுக்கு உள்ள தனிச்சிறப்புமிக்க பங்கை விரிவாக நினைவு கூர்ந்தார். நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் செய்த கொடுமைகளையும் அதற்கெதிராக கம்யூனிஸ்டுகளின் தலைமையில் விவசாய தொழிலாளர்கள் துணிந்து எழுந்து நின்று மோதிய நிகழ்வுகளையும் பட்டியலிட்டார். வெண்மணி நிகழ்ந்தபோது கழக ஆட்சிதான் இருந்தது என்பதையும் அப்போது கிராமப்புற வறியவர்கள் மத்தியில் ஒரு போர்க்குணமிக்க பேரெழுச்சி நிகழ காத்திருந்தது என்றும், துரதிஷ்டவசமாக அந்த எழுச்சி வழிநடத்தப்படவில்லை என்றும் மாறாக தணிந்து போகுமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது என்றும் கருத்துகளை முன்வைத்தார். வெண்மணி நினைவேந்தல் ஆதிக்க எதிர்ப்பாக அனுசரிக்கப்படும்போது, டெல்லியில் கார்ப்பரேட் ராஜ்யத்திற்கு எதிராக விவசாயிகள் கிளர்ந்து எழுந்திருப்பது நாட்டிற்கு நல்ல அறிகுறி என சுட்டிக்காட்டி தன் உரையை நிறைவு செய்தார்.

கட்சியின் ஆலோசனைக் குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி போராட்டத்தின் முன்னாலே யார் ஆட்டமும் செல்லாது என்ற கூற்றுக்கு சான்றாக டெல்லி விவசாயிகள் போராட்டம், ஒன்றிய அரசின் மீது, உச்சநீதிமன்றம் மீது தாக்கம் செலுத்தி இருப்பதை சுட்டிக்காட்டினார். குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீர் தூண்டப்படுவது, உயிர் வாழும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் பாதிப்புக்குள்ளான போது தலையிடாமலிருந்த உச்சநீதிமன்றம், வரலாற்றுச் சிறப்புமிக்க ஷாஹின்பாக் போராட்டம் தொடர்பாக பொது வெளியில் பிறர் உரிமைக்கு பாதிப்பு ஏற்படுத்தி யாரும் போராட முடியாது என்று சொன்ன உச்சநீதிமன்றம், டெல்லி விவசாயிகள் போராட்டம் நடக்கும்போது மத்திய அரசிடம் போராட்டத்திற்கு காரணமான சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா என்று கேட்கும் நிலை உருவானதை சுட்டிக் காட்டினார்.

குடிமக்களுக்கு எதிர்த்துப் போராடும் உரிமை உள்ளது. சட்டத்திற்கு உட்பட்டு அமைதியாக சொத்துக்கும், உயிருக்கும் சேதமில்லாமல் போராட குடிமக்களுக்கு உரிமை உண்டு என்றும் விவசாயிகள் போராட்டத்தில் தலையிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளதை குறிப்பிட்டு தாமதமாகவேனும் சரியாக நியாயம் பேசியதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

வெண்மணியில் அன்று காரில் வந்த நெல் உற்பத்தியாளர்களான கிராமப்புற ஆதிக்கப் பிரிவினர் விவசாயத் தொழிலாளர்களை குடிசையில் பூட்டி வைத்து தீயிட்டு கொன்றனர் என்றால், இன்று அரசுகளின் துணையுடன் இந்திய வளங்களை, இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் கொள்ளையர்கள் சூறையாட விவசாய விரோத சட்டங்கள் போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் கிழக்கிந்திய கம்பெனி என்ற கார்ப்ப ரேட் நிறுவனம் இந்த நாட்டை தனது ராணுவம் கொண்டு ஆண்டபோது, விவசாயிகளை ஓபியம், இண்டிகோ பயிரிடு எனக் கட்டாயப்படுத்தி பஞ்சமும் பட்டினியும் நாட்டை வாட்டி வதைக்க காரணமாயிருந்தது. இப்போது இருபத்தியோராம் நூற்றாண்டில் அம்பானி, அதானி, வால்மார்ட், அமேசான் ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்களுடன் சேர்ந்து கொண்டு இந்திய விவசாயத்தை, மக்களின் உணவு பாதுகாப்பை ஒழித்துக்கட்ட மோடி அரசு பச்சைக் கொடி காட்டுகிறது.

அன்று அரைப்படி கூடுதல் கூலி கேட்கும் நிலை இருந்தது என்றால், இன்று நாள் கூலி சொற்பமான ரூ.229 என்ற கொடிய நிலை உள்ளது. வெண்மணி கூலி உயர்வுப் போராட்டம் மட்டுமல்ல. அது ஆதிக்கத்திற்கு எதிராக, அதிகாரத்துக்கு எதிராக கிராமப்புற வறியவர்கள் சவால் விடுப்பதாகவும் இருந்தது. ஆகையால்தான் ஆதிக்கம் 44 பேரை தீயிட்டு கொன்றது.

25.12.2020 அன்றைய இந்து தமிழ் திசை ஏட்டில் முன்னாள் நீதிபதி சந்துரு எழுதிய கட்டுரையில் இருந்து சில பகுதிகளை சுட்டிக் காட்டி வெண்மணி கொலைகாரர்களை விடுதலை செய்த நீதித்துறை தன் தீர்ப்புக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும், தன் தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

வெண்மணியில் 44 பேர் எரிக்கப்பட்ட வழக்கில் 30.11.1970 அன்று செசன்ஸ் நீதிபதி சி.என்.குப்பண்ணன், கோபாலகிருஷ்ண நாயுடு சம்பவ இடத்தில் இல்லை என்ற வாதத்தை நிராகரித்து, அவருக்கும் இதர பண்ணையாளர் களுக்கும் 10 ஆண்டுகள் தண்டனை விதித்து அதற்கு பின்வரும் காரணம் கூறியிருக்கிறார்:

"இந்த குற்றவாளிகள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வீடுகளுக்கு திட்டமிட்டு தீ வைத்து இருக்கிறார்கள். தீயிடல் மூலம் மூன்று தெருக்களை முற்றிலுமாக அழித்து இருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டு இடது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த விவசாயிகளை கொல்ல  முயன்றிருக்கிறார்கள். மேலும் கொடுங்காயம் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. இந்த குற்றவாளிகள் தீ வைத்தது தொடர்பான சம்பவத்தில் 42 அப்பாவி மக்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சூழலில் அச்சம் தரும் தண்டனை தேவை என்பது என் கருத்தாக உள்ளது

அதே நீதிபதி அதே தேதியில், பண்ணையார் தரப்பை சேர்ந்த பக்கிரிசாமி என்பவரின் மரணத்திற்காக, விவசாய தொழிலாளர் தரப்பில்  தோழர் கோபாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கினார். மேலும் அய்ந்து பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அவர்களது மேல் முறையீடு 04.08.1972 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் பண்ணையாளர்கள் தரப்பு மேல்முறையீட்டில் 06.04.1973 அன்று பண்ணையார் தரப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பின்வருமாறு சொல்லி விடுதலை செய்தது:

"இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள அனைத்து 23 குற்றவாளிகளும் மிராசுதாரர்களாக இருப்பது திகைக்க வைக்கும் விஷயமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பெருமளவு நிலத்தை சொந்தமாக கொண்டுள்ள பணக்காரர்கள். முதலாவது குற்றவாளி கார் ஒன்றைச் சொந்தமாக வைத்திருக்கிறார் என்பது தெளிவு. இத்தகைய மிராசுதாரர்களா, இடது கம்யூனிஸ்டு விவசாயிகளை பழிவாங்கும் அளவுக்கு பல விதமான எண்ணம் கொண்டிருப்பார்கள், இவர்கள் தாங்களே சம்பவ இடத்திற்கு நடந்து வந்து பணியாளர்கள் உதவி ஏதும் இல்லாமல் வீடுகளுக்கு தீ வைத்து இருப்பார்கள் என்பதை நம்புவதற்கு சிரமமாக உள்ளது. 

இந்த தீர்ப்பு வரிகள் சாமான்ய மக்களிடம் ஏளனத்துடனும், பண்னை சீமான்களிடம் மிகுந்த மரியாதையுடனும், நீதிமன்றம் நடந்து கொண்டதை புலப்படுத்தும். நிச்சயமாக இது ஒரு பக்கச் சாய்வு தீர்ப்பு. கோபாலகிருஷ்ண நாயுடுவை பின்னர் மக்கள் மன்றம் 14.12.1980 அன்று தண்டித்து கொன்றதாக காவல்துறை வழக்காடியது வேறு விஷயம்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் எப்படி நடந்து கொண்டது? கோபால கிருஷ்ண நாயுடு விடுதலைக்கு எதிராக நாடெங்கும் குரல் எழுந்தபோதும் அன்றைய திமுக அரசு விடுதலைக்கு எதிராக மூன்று ஆண்டுகள் கழித்தே மேல்முறையீடு செய்தது. மேல்முறையீடு 14 ஆண்டுகளுக்கு பிறகு, உச்சநீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டது. வெறும் இரண்டு மணி நேர வாதங்களுக்குப் பிறகு, மூன்று பக்க தீர்ப்பில் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம், செஷன்ஸ் நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் ஒருமித்த கருத்து கொண்டுள்ளதால், உயர்நீதிமன்ற தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என, தவறாக சொன்னது. இது பார்த்த மாத்திரத்திலேயே தெரியும் தவறாகும். நீதிபதி குப்பண்ணன், கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்ட பண்ணையார்களுக்கு குடிசையில் தீ வைத்த சம்பவத்தில் பங்கு உண்டு என்று சொல்லி தண்டித்துள்ளார். அந்தத் தீர்ப்பில் இருந்து மாறுபட்டு உயர்நீதிமன்றம், பண்ணைச் சீமான்கள் குற்றம் புரிய மாட்டார்கள் என்று, முற்றிலும் புதிதான ஒரு காரணம் கண்டு பிடித்துச் சொன்னது. அப்படி இருக்கும்போது செஷன்ஸ் நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் ஒருமித்த கருத்து சொன்னதாக உச்சநீதிமன்றம் சொன்னது தவறு என்று, சட்டம் படிக்கின்ற மாணவர்களுக்கு, ஏன் சாமானிய மக்களுக்கு கூட சுலபமாக புரியும்.

அதனால் தவறான தீர்ப்புக்கு மன்னிப்பு கேட்பதோடு, அந்த தீர்ப்பை திருத்தி எழுதுவது கூட, நியாயம் வழங்குவது என்ற கோணத்தில் அவசியமாக இருக்கும். வெண்மணி நினைவேந்தலின்போது, வெண்மணி வழக்கில் நீதித்துறை தவறான தீர்ப்புக்கு மன்னிப்பு கேட்டு அதனை திருத்த வேண்டும் என்ற கருத்து அழுத்தமாக பதிவானது.

Search