மோடி அரசு கொண்டு வந்த விவசாய விரோத சட்டங்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த அக்டோபர் 2020ல் பஞ்சாப் அரசாங்கம் நிறைவேற்றிய சட்டத்தின்படி, குறைந்தபட்ச ஆதார விலைக்குக் குறைவாக நெல்லோ, கோதுமையோ வாங்குபவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் உண்டு.
2020 நவம்பரில் ராஜஸ்தான் அரசாங்கம் நிறைவேற்றிய சட்டத்தின்படி, குறைந்தபட்ச ஆதார விலைக்குக் குறைவாக போடப்படும் ஒப்பந்த விவசாய உடன்பாடுகள் செல்லாது. குறைந்தபட்ச ஆதார விலைக்குக் குறைவாக விற்க விவசாயியை நிர்ப்பந்திக்கும் தனிநபர் அல்லது நிறுவனத்துக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை, அல்லது குறைந்த பட்சம் ரூ.5 லட்சம் அபராதம், அல்லது இரண்டும் உண்டு.
அக்டோபர் 2020ல் சட்டிஸ்கரில் நிறைவேற்றப்பட்ட, அந்த மாநில விவசாய உற்பத்தி பொருள் விற்பனை குழுக்கள் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி, மாநில அரசு, கிட்டங்கிகள், குளிர்சாதன கிட்டங்கிகள் என இருப்பு வைக்கப்படும் எந்த இடத்தையும், இணைய விற்பனை தளங்களைக் கூட, சட்டத்தின் கீழான நிகர்நிலை சந்தை என அறிவிக்க முடியும். உற்பத்தி பொருளை வாங்குபவர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் நிறைவேற்றிய இந்த சட்டங்களுக்கு அந்தந்த மாநில ஆளுநர்கள் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.