கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு சவால் விடும் விவசாயிகளின் பேரெழுச்சி
ஆர்.வித்யா சாகர்
1857- இந்தியாவின் முதல் சுதந்திரப்போர்.
டெல்லி முற்றுகை இடப்பட்டது. டெல்லி குலுங்கியது.
வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் பெரும் பகுதியை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. லண்டன் நகரில், வெறும் 35 நபர்கள் வேலை செய்து கொண்டிருந்த, கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஒட்டச்சுரண்டியது. கிழக்கிந்திய கம்பெனியின் கொடுமைகளையும், சுரண்டலையும் எதிர்த்து கம்பெனியின் இந்திய சிப்பாய்கள், வெளியே வந்து பெரும் கலகம் செய்தனர். இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் விவசாயிகள் உட்பட பலபிரிவினரின் ஆதரவுடன் கிளர்ச்சி செய்தனர். டெல்லியை முற்றுகை இட்டனர். இந்து முஸ்லீம் என பாகுபாடு இல்லாமல் அனைத்து சிப்பாய்களும் ஒன்றிணைத்தனர். 1858ல் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை அகற்றி, பிரிட்டிஷ் ராணியின் நேரடி ஆட்சி இங்கு நிறுவப்பட்டது. ஆனால் காலனி ஆட்சியர்களை நாட்டைவிட்டு ஓட்ட கால் கோள் அமைத்தது இந்த போராட்டம்தான்.
வரலாறு திரும்புகிறது!!!
2020 டெல்லி முற்றுகை இடப்பட்டிருக்கிறது. இந்த முறையும் கார்ப்பரேட் சூறையாடலுக்கு எதிராகவே டெல்லி முற்றுகை இடப்பட்டுள்ளது.
மோடி அரசு பதுக்கல்கார அம்பானிகளுக்கு, அதானிகளுக்கு கட்டுப்பட்டது. விவசாயத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை அனுமதியோம் என, இந்தியத் தலைநகர் டெல்லியின் சிங்கு, திக்ரி, பல்வால் மற்றும் காசிபூர் எல்லைகளில், கடுங்குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல், லட்சக்கணக்கான விவசாயிகள் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக போராடிக்கொண்டிருக்கின்றனர். இது சுதந்திர இந்தியாவில் இதுவரை கண்டிராத ஒரு வீரமிக்க போராட்டமாகும். கடந்த 30 ஆண்டு காலமாக இந்திய விவசாயிகளையும், விவசாயத்தையும் நசுக்கி வரும் நவ தாராளவாத கொள்கைகளால் பெரும் துன்பங்களையும் தற்கொலைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கும் விவசாயிகள் இதுவரை திரண்ட தங்கள் கோபத்தை வெளிப்படுத்த வந்திருக்கின்றனர். நவம்பர் 26 முதல் டிசம்பர் 20 வரை கடுங்குளிரால் நோய்வாய்ப்பட்டும், விபத்துக்களிலும் இதுவரை 33 விவசாயிகள் தங்கள் உயிரை போராட்ட களத்தில் தியாகம் செய்திருக்கின்றனர். இதையும் மீறி விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
காசிப்பூர் எல்லையில் முற்றுகை இட்டிருக்கும் விவசாயிகளை நிர்வாகம் 144 தடை உத்தரவை காட்டி மிரட்டியது. நீ என்ன எங்களுக்கு 144 தடை உத்தரவு போடுவது நங்கள் போடுகிறோம் உங்கள் காவல் துறைக்கு தடை உத்தரவுக்கு என "இங்கு 288 பிரிவு போடப்பட்டிருக்கிறது" என 144ஐ இரட்டிப்பாகி 288 என போட்டனர். போராடும் விவசாயி ஒருவர் உணவை கூகிளில் பதிவிறக்கம் செய்ய முடியுமா என்று கேட்கிறார்.
கடந்த காலங்களில் விவசாயிகள் கடனிலிருந்து விடுதலை பெற, கட்டுப்படியாகும் விலை போன்ற கோரிக்கைகளுக்காக போராடிக்கொண்டிருந்தனர். லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் இந்த முறை விவசாயிகளின் போராட்டம் ஒரு அடிப்படை மாற்றம் கொண்டது. விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமான, மோடி அரசு கொண்டுவந்திருக்கும் மூன்று அப்பட்டமான கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களை ஒழித்துக்கட்டி, விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக, போராட்டத்தின் முன்னால் யாராட்டமும் செல்லாது என போராடிக்கொண்டிருக்கின்றனர்.
அருகாமை மாநிலங்களிலிருந்து டெல்லியை அடையக்கூடிய ஐந்து வழிகளையும் அடைக்கும் வண்ணம் போராட்டம் தொடரும் என்று அறைகூவல் விட்டிருக்கின்றனர். ஆறு மாத காலத்திற்கு தேவையான உணவுப்பொருட்களுடன், போராட்டத்தை தொடர்ந்து நடத்த அனைத்து தயாரிப்புகளுடனும் வந்திருக்கின்றனர். கடந்த மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட (திணிக்கப்பட்ட) விவசாயிகளின் வாழ்வாதாரங்களை பறிக்கும் மூன்று விவசாய சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விடாப்பிடியான போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். கொரோனா நெருக்கடியை காரணம் காட்டி, எந்த விவாதமுமின்றி, எதிர்கட்சிகளை ஓரம் கட்டி, ஜனநாயக மரபுகளை குழி தோண்டி புதைத்து, அவசர அவசரமாககொண்டு வரப்பட்ட இந்த மூன்று கார்ப்பரேட் ஆதரவு விவசாய சட்டங்களும், இந்த நாட்டு விவசாயிகளையும், விவசாயத்தையும் கார்ப்பரேட்டுகளின் கைகளில் முழுமையாக ஒப்படைக்க நிறைவேற்றப்பட்டவையாகும்.
டெல்லியில் திரண்டிருக்கும், பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மட்டும் அல்லாது நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளும் தொழிலாளர்களும் மற்ற பல பிரிவினரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து போராட்டங்களை கட்டமைத்திருக்கின்றனர். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் டிசம்பர் 8, அன்று பல்வேறு மைய தொழிற்சங்கங்களும், இதர தொழிலாளர்கள் அமைப்புகளும் பங்களித்த நாடு தழுவிய வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டனர். இந்தியாவில் மட்டுமின்றி, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா மற்றும் இதர பல நாடுகளிலும் வெவ்வேறு பிரிவினர்கள் மத்தியில் இப்போராட்டம் எதிரொலித்திருக்கிறது.
உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், "மன் கீ பாத் " மூலமும், விவசாயிகளின் நலன்களுக்காகவே புதிய சட்டங்களை கொண்டுவந்திருக்கிறோம், இதனால் விவசாயிகள் பெரும் நன்மை அடைவார்கள் என்று பொய்யுரைகள் கூறிவரும் மோடி இது வரை போராடும் விவசாயிகளை சந்தித்து விளக்கம் கூற முன் வரவில்லை. குருத்வாராவிற்கும் கோவில்களுக்கும் செல்லும், "மக்கள் மீது மிகவும் அன்பு கொண்ட" மோடி கடுங்குளிரையும் பொருட்படுத்தாது போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளை இதுவரை சந்திக்காதது ஏன்? விவசாயிகளை எதிர் கட்சிகள் மூளை சலவை செய்திருக்கிறார்கள். திசை திருப்புகிறார்கள் என்றெல்லாம் “ஜூம்லா” விற்கு பெயர் போன மோடி சொல்வதை யாரும் நம்ப தயாரில்லை.
இந்த எழுச்சியானது, ஒரு தனிப்பட்ட தலைவர் என்பதில்லாமல் பல அமைப்புகளின் கூட்டுத் தலைமையின் கீழ் செயல் படுகிறது. இது 40 விவசாயிகள் அமைப்புகள் ஒருங்கிணைத்த "சம்யுக்த கிசான் மோர்ச்சா" (ஒருங்கிணைந்த விவசாய போராட்ட அமைப்பு) என்பதாகும். அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்யும்பிரித்தாளும் சூழ்ச்சி போன்றவற்றிற்கு இரையாகாமல், ஆட்சியில் உள்ளவர்களை ஆட்டம் காண வைத்திருக்கிறது. மேலும், இது பெண்களும் பங்கேற்றிருக்கக்கூடிய ஓரு போராட்டமாகும்.
விவசாயிகளின் அணி திரட்டலை தடி அடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தடுக்க மோடி அரசால் முடியவில்லை. பல கிலோ மீட்டர் தொலைவுக்கு ட்ராக்டரிலும் இதர வாகனங்களிலும் சாரை சாரையாக வந்த லட்சக்கணக்கான விவசாயிகளை பார்த்து அரண்டு போனது மோடி அரசு. விவசாயிகள் போராட்டத்தை பற்றி கூறும் போது ப.ஜ . க. மத்திய அமைச்சர் ஒருவர், அதீத ஜனநாயகம் என்பது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்றார். ஆனால் சரியான ஜனநாயகம் தான் உண்மையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை போராடும் விவசாயிகள் அரசுக்கு சுட்டிக்காட்டி உள்ளனர்.
செல்லுபடியாகாத வழக்கமான பாசிச அரசின் முயற்சிகள்.
பஞ்சாபிலிருந்தும், ஹரியானாவிலிருந்தும் விவசாயிகள் டெல்லி செல்வதை தடுக்கும் வண்ணம், ஹரியானாவில் ஆளும் கட்சியான பா.ஜ.க., வழி நெடுகிலும் பல இடங்களில் பெருங்குழிகளை வெட்டி, டிராக்டர் போன்ற வாகனங்கள் செல்ல தடையை ஏற்படுத்தியது. போராடும் விவசாயிகள் அந்த குழிகளையெல்லாம் மூடிவிட்டு மேலே பயணித்தனர்.
விவசாயிகள் டெல்லியை அடைந்து விடுவார்கள் என்ற நிலையில் எல்லையிலேயே அவர்களை தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலைக்க முயன்றனர். டெல்லியை நோக்கி போவதை நிறுத்தினால் தான் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றது அரசு. டெல்லிக்கு வெளியே உள்ள புராரி என்ற இடத்தில் அவர்களை தங்குமாறு கேட்டது. புராரி மைதானம் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை போல் உள்ளது என்று கூறி விவசாயிகள் அதை புறக்கணித்தனர். இவற்றை விவசாயிகள் புறக்கணித்ததால் டெல்லிக்கு உள்ளே செல்லும் நுழைவு பாதைகள் அடைக்கப்பட்டன.
கடந்த ஐந்து ஆண்டுகளில், காவி பாசிச ஆட்சியாளர்கள், அரசுக்கு எதிராக ஜனநாயகக் குரல் எழுப்புவோர்களை, போராடுபவர்களை எல்லாம் "தேசத் துரோகிகள்" என்றும், நகர்ப்புற நக்சலைட்கள் என்றும், தீவிரவாதிகள் என்றும் குற்றம் சாட்டி அடக்குமுறையை ஏவி விடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
போராடும் பஞ்சாப் விவசாயிகளை, காலிஸ்தானிகள் என்றும் (1980 களில், பஞ்சாப் மாநிலத்தை காலிஸ்தான் என்ற தனி நாடாக மாற்ற கோரி நடந்த போராட்டம்), இடது தீவிரவாத சக்திகள் போராட்டத்தில் ஊடுருவி இருக்கின்றனர் என்றும், உளவுத்துறை தரவுகள் இருக்கின்றன என்றும் வழக்கம்போல் போராடுபவர்களை சிறுமை படுத்த ஜோடனைகளை புனைந்தது மோடி அரசு. தேச விரோதிகள் என அவர்கள் மீது குற்றம் சாட்ட முனைந்தது மோடி அரசு. பா.ஜ.க. ஆதரவு சங்கிகளும், ஒன்றிய அரசு, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசாங்கங்கள் இது போன்ற கதையாடல்களை அங்கங்கே பரப்பினர். பல ஊடகத் துறைகளும் இவற்றை அப்படியே ஒளிபரப்பு செய்தன. போராடும் விவசாயிகள் இதற்கு மிகைத்திறமையான வகையில் எதிர் கதையாடல்களை உருவாக்கினர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மக்களின் தேசப்பற்று வரலாறு குறித்தும், இந்திய ராணுவத்தில் காலங்காலமாக அவர்கள் ஆற்றிய சாதனைகள் குறித்தும், விவசாய உற்பத்தியிலும் நாட்டின் பாதுகாப்பிலும் அவர்களுடைய சேவை குறித்தும் விவசாயிகள் பேசத் தொடங்கியவுடன், மோடி அரசின் பொய் பிரச்சாரம் பின்வாங்கி ஓடியது.
இந்த போராட்டம் உலக அளவில் பலர் கவனத்தை கவர்ந்திருப்பதாலும், லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டிருப்பதாலும் மோடி அரசால் கடும் அடக்குமுறையை கட்டவிழ்த்தது விடமுடியாத நிலை. அப்படி செய்தால் அது பெரும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது சங்கிகள் அறிந்ததே. பஞ்சாப், ஹரியானா மேற்கு உத்திரபிரதேசம் போன்றவை தலை நகருக்கு அருகில் இருப்பதாலும், போராட்ட களம் என்பது நாட்டின் கேந்திரமான தலை நகர் என்பதாலும் விவசாயிகளின் போராட்டம் பெரும் வலிமை வாய்ந்த போராட்டமாக இருக்கிறது. இந்த சாதகமான சூழல் காரணமாக, ஒன்றிய அரசின் மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து, கடுங்குளிரையும், அக்கறையற்ற அரசாங்கத்தையும், மிகவும் பகைமை பாராட்டக்கூடிய பொது வெளியில் உள்ள ஊடகங்களையும், ஆயுதம் தாங்கிய வலிமையான காவல் படையையும் பொருட்படுத்தாமல் முழு வீச்சுடன் விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கின்றனர்
ஒன்றியஅரசின் எதிர்வினைகள் புஸ்வாணமாகிப்போனதால்தான் வேறு வழியின்றி அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்கவேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது.
நீதிமன்றத்தின் போக்கை மாற்றிய போராட்டம்
ஷாகின்பாகில் இந்த ஆண்டு துவக்கத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஒரு மிகப்பெரிய போராட்டம் நடந்தது. அது சம்பந்தமான உச்ச நீதி மன்ற தீர்ப்பில் பொது இடத்தில் போராட்டம் நடத்த யாருக்கும் உரிமையில்லை என்று சொன்னார்கள். தற்போது சட்டம் படிக்கும் சில மாணவர்கள், டெல்லி முற்றுகையால் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கிறது எனவே இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதி மன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடுத்தனர். இந்திய நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் போராட உரிமை உண்டு. எனவே விவசாயிகளுக்கும் வன்முறையின்றி, உயிருக்கும் உடமைக்கும் சேதமின்றி சட்டத்திற்கு உட்பட்டு போராட உரிமை உண்டு. அவர்களின் போராட்டத்தை தடை செய்ய முடியாது என்றார் தலைமை நீதிபதி. தலைமை வழக்குரைஞரிடம் இந்த சட்டங்களை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்கமுடியுமா என கேட்கிறார். உச்ச நீதி மன்றத்தின் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் போராடும் விவசாயிகள் ஏற்படுத்தியிருக்கும் நிர்பந்தம்தான்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசியது உட்பட சுமார் 20 மணி நேரம், ஆறு சுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகும் அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. விவசாயிகள் தங்கள் கோரிக்கையான மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என்பதிலிருந்து இறங்கி வர தயாரில்லை. மின்சார மானியங்களை குறைக்கும் மின்சார சட்டத்தையும் மாற்றக் கோரிக்கை வைத்திருக்கின்றனர். குறைந்தபட்ச ஆதார விலையை கைவிடமாட்டோம் என்று எழுத்து பூர்வமாக தருகின்றோம், விவசாயிகளின் அச்சத்தை போக்க சட்டங்களில் பல திருத்தங்களை கொண்டு வருகிறோம் என்று ஒன்றிய அரசு கூறியதை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
புதிய விவசாய சட்டங்களின் நோக்கம் - கார்ப்பரேட்டுகளின் வரவேற்பு
இந்திய பெருமுதலாளிகளின் அமைப்பான "பெடெரேஷன் ஆஃப் இந்தியன் சேம்பர்ஸ் ஆப் கமெரஸ் அண்ட் இண்டஸ்ட்ரிஸ் (FICCI)" உடன், டிசம்பர் மாதம் 12ம் தேதி மோடி நடத்திய ஒரு மெய்நிகர் கூட்டத்தில் புதிய விவசாய சட்டங்கள், விவசாயத்துறைக்கும், இதர துறைகளுக்கும் உள்ள தடைகளை உடைத்தெறியும் என்றார். முதலாளிகள் அமைப்பும் இதை வரவேற்று புதிய மூன்று சட்டங்கள் விவசாயத்தில் கார்ப்பரேட் துறை மூலதனம் தங்கு தடையின்றி செயல்பட வழிவகுக்கும், என்று கூறியிருக்கிறது.
புதிய சட்டங்களின் நோக்கம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள விவாதங்கள் முக்கியமாக விலை நிர்ணய வழிமுறைகள், கொள்முதல் மற்றும் விவசாய விளைபொருட்களின் விற்பனை ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. இவை முக்கியமாக புதிய வணிக வாய்ப்புகளைத் தேடும் பெரும் மூலதனத்தின் நலன்களை நடைமுறைப்படுத்தவே கொண்டுவரப்பட்டுள்ளன. புத்தாயிரமாண்டு துவக்கத்திலிருந்தே கடுமையான நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்திய விவசாயத்தை உயிர் பெற வைப்பது எப்படி என்பதற்கு பதிலாக, சந்தையை எப்படி பெரு முதலாளிகளான அம்பானி அதானி ஆகியோருக்கு ஆதரவாக மாற்றுவது என்பதையே இந்த சட்டங்கள் மய்யப்படுத்துகின்றன. எனவே, மூன்று புதிய விவசாய சட்டங்கள் மூலம் இந்திய விவசாயத்தின் மீதும் விவசாயிகள் மீதும் துல்லிய தாக்குதல் தொடுத்திருக்கிறார் மோடி.
குறைந்த பட்ச ஆதரவு விலை
குறைந்த பட்ச ஆதரவு விலை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? குறைந்த பட்ச ஆதரவு விலையை மோடி அரசு படிப்படியாக அழித்துவிடும் என்று ஏன் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்? குறைந்த பட்ச ஆதரவு விலைக்கும் விவசாயத்தை கார்ப்பரேட் கைகளில் ஒப்படைப்பதற்கும் என்ன சம்பந்தம்? இந்த கேள்விகளுக்கான விளக்கத்தை நாம் புரிந்துகொண்டால் இந்த நாட்டின் விவசாயத்திற்கும் , விவசாயிகளுக்கும், ஒட்டு மொத்த உணவு பாதுகாப்பிற்கும் வரவிருக்கிற பேராபத்துகளை நாம் புரிந்து கொள்ள முடியும்.
விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய உணவு தானியங்கள் மற்றும் இதர பயிர்கள், சந்தைக்கு வரும்பொழுது, தனியார் ஆதிக்கத்தால் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு மிகக் குறைத்த விலை கிடைத்தால் விவசாயிகளால் உற்பத்தி செய்ய முடியாது. எனவே விலைகள் மிகக் குறைந்து விடாமல் இருக்க 23 விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை அரசு கொண்டுவந்தது.
1960களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்பட்டபொழுது, கிராமப்புறத்திலிருந்த ஏற்ற தாழ்வுகளை களைந்து முழுமையான நிலச்சீர்திருத்தம் மூலம், ஒரு சமநிலையை உருவாக்கி அதன் மூலம் உற்பத்தியை பெருக்குவதற்கு அரசு முன்வரவில்லை. மாறாக தொழில்நுட்ப மாற்றங்களை நாடியது. பசுமை புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் வீரிய ரக விதைகள், இரசாயன உரம், பூச்சி மருந்து, டிராக்டர், நிலத்தடி நீர் இறைக்க இரவை இயந்திரங்கள் போன்றவை மூலம் உற்பத்தியை பெருக்கப் பார்த்தது. விவசாயிகளின் உற்பத்தியை ஊக்குவிக்க, உணவுப்பாதுகாப்பை உறுதி செய்ய 1966-67ம்ஆண்டு முதன் முதலில் கோதுமைக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டு படிப்படியாக 23 விவசாய விளை பொருட்களுக்கு ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இது தவிர பல மாநில அரசாங்கங்கள் ஊக்கத்தொகை கிடைக்கும்படி நிர்ணயம் செய்தன.
விவசாய உற்பத்தியை விவசாயிகள் ஆதரவு விலையில் சந்தைப்படுத்துவதை உத்திரவாதம் செய்யும் வகையில் அரசு சார்பில் கொள்முதல் நிலையங்கள் மாநில அளவிலும், ஒன்றிய அளவிலும் (உணவு தானிய கார்ப்பரேஷன்) அமைக்கப்பட்டன. இவை APMC (விவசாய உற்பத்தி பொருட்களின் சந்தை கமிட்டி) எனப்படும் மண்டிகளாகும். இது தவிர மாநிலங்கள் அளவிலும் பிரத்யேகமான கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. உதாரணமாக தமிழகத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகம் நிறுவப்பட்டது.
குறைந்த பட்ச ஆதரவு விலையும் மண்டிகளும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஒன்றில்லாமல் மற்றது இல்லை. இதன் மூன்றாவது முக்கியமான அம்சம் பொது விநியோக திட்டம். அரசு கொள்முதல் செய்யும் உணவு பொருட்களை பொது விநியோகம் மூலம் மக்களுக்கு அளிப்பது. மோடி அறிவித்திருக்கும் விவசாய சட்டங்கள், விவசாயத்துறை (ஆதரவு விலை, மண்டிகள், அரசு கொள்முதல் போன்றவை), மாநில அரசுகளின் அதிகாரங்கள், பொது விநியோக முறை ஆகிய மூன்றையும் படுகொலை செய்கின்றன.
ஆதரவு விலை ஒழிக்கப்படும் என்றும் மண்டிகள் மூடப்பட்டுவிடும் எனவும் எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கின்ற என மோடி கூறுகிறார். விவசாய உற்பத்தி வர்த்தகம் தொடர்பாக நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய சட்டம் பெரும் விவசாய வர்த்தக நிறுவனங்கள், கார்ப்பரேட் துறை, உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், மொத்த வியாபாரிகள், பெரிய சில்லறை வியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள் போன்றோருக்கு, விவசாய வர்த்தகத்தை தாராளமாகத் திறந்து விட்டிருக்கிறது. இதனால் மண்டிகள் மூடப்படவில்லையென்றாலும் குறுகிய காலத்திலேயே அவை தானாகவே இறந்து போய்விடும்.
குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயித்தாலும், அது குறித்து இதுவரை எந்த சட்டமுமில்லை. ஆதரவு விலை கிடைக்கவில்லை என்றால் விவசாயிகள் வழக்கு தொடர முடியாது. இதற்கு சட்டரீதியான உத்திரவாதம் அளிக்க அரசு முன் வரவில்லை. மேலும் தனியார் நிறுவனங்கள் குறைத்த பட்ச விலையை விட குறைவாக விவசாயிகளிடமிருந்து பொருட்களை வாங்கக் கூடாது என்பதற்கும் சட்டமில்லை. அரசாங்கத்திற்கு கொள்முதலை குறைப்பதற்கும், பொது விநியோக முறையை ஒழித்துக்கட்டுவதற்கும் எந்த தடையுமில்லை. ஏற்கனவே உணவு தானியங்களுக்கு பதிலாக, மக்களின் வாங்கி கணக்கிற்கு பணம் கொடுக்கும் திட்டத்தை பற்றியும் முன்வைப்புகளை மோடி அரசு வைத்திருக்கிறது. இது மோசமாக உணவு பாதுகாப்பை பாதித்து பழைய காலம் போல பெரும் பஞ்சங்களை ஏற்படுத்தும்.
குறைந்த பட்ச ஆதரவு விலை என்பது தற்சமயம் எல்லா இடங்களிலும் 23 உற்பத்தி பொருட்களுக்கும் கிடைக்கிறது என்று சொல்ல முடியாது. ஆதரவு விலை இருப்பதால் விவசாயிகள் லாபகரமாக விவசாயம் செய்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குவோம் என்ற மோடியின் வாய் வீச்சு நடைமுறைக்கு வர ஒருபோதும் முயற்சிகள் ஏதும் எடுக்கப்படவில்லை வில்லை. பல ஆய்வுகளின் படி பெரும்பாலான விவசாயிகள் நஷ்டத்தில்தான் உழன்று கொண்டிருக்கின்றனர். கடனிலிருந்தும் மீள முடியவில்லை. தேசிய மாதிரி ஆய்வு 70வது சுற்றின் படி 52% விவசாயிகளுக்கு தலா சராசரி ரூ.47000 கடன் இருக்கிறது. ஏனெனில் குறைத்த பட்ச ஆதரவு விலை விவசாயத்தில் ஏற்படும் செலவுகளை மட்டும்தான் அரைகுறையாக கணக்கில் எடுத்துக்கொள்கிறது. விவசாயிகளின் இதர வாழ்வாதார செலவுகள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.
அரசாங்கத்தின் விவசாய உற்பத்தி பொருள் வர்த்தக புள்ளி விவரங்களின்படி நெல், சோளம், உளுந்து, சோயாபென் போன்ற தானியங்கள் ஆதரவு விலையைவிட மிகக்குறைவாகத்தான் விவசாயிகளிடம் வாங்கப்பட்டது. டிசம்பர் 8 நிலவரப்படி சோளம் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1200 முதல் 1600க்கு வாங்கப்பட்டது. ஆனால் அரசு நிர்ணயித்த ஆதரவு விலை ரூ.2150 ஆகும். கடந்த மூன்று ஆண்டுகளாக கரும்பின் ஆதரவு விலையில் எந்த மாற்றமும் இல்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு கிலோவிற்கு ரூ. 10ற்கு மேல் கிடைப்பதில்லை. நெல் விலையில் பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் ஆதரவு விலை கிடைப்பதில்லை. இதற்கெல்லாம் காரணம் அரசு கொள்முதல் என்பது எல்லா மாநிலங்களிலும் சமமாக இல்லை. பெரும்பாலும் விவசாயிகள் வெளிச்சந்தையில் விற்க வேண்டிய நிலை இருக்கிறது.
ஆதரவு விலை என்பது அவ்வப்பொழுது உயர்த்தப்பட்டாலும், யூரியா போன்ற இடுபொருட்களின் விலையேற்றத்திற்கேற்ப ஆதரவு விலை உயர்வதில்லை. பல ஆய்வுவளின் படி விவசாயிகளின் வருமானம் குறைந்துகொண்டேதான் இருக்கிறது. இருப்பினும் ஆதரவு விலை என்பது ஒரு குறைந்த பட்ச விலைக்காவது உத்திரவாதம் அளிக்கிறது.
அரசு கொள்முதல்
தற்போதும் கூட அரசு கொள்முதல் என்பது முழுமையாக இல்லை. ஏற்கனவே உணவு தானிய தாங்கிருப்பு (buffer stock) தேவையை விட இரு மடங்கு அரசு வசம் இருப்பதால், அரசு கொள்முதலில் அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை. உதாரணமாக 2018-19ல் நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் 38% தான் அரசு கொள்முதல் செய்தது. மாநிலங்களுக்கு மத்தியிலும் இதில் பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. இதில் பெரும் பகுதி பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. அதே ஆண்டில் மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் விளைந்த நெல்லில் 20% தான் அரசால் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டும் கூட டிசம்பர் 7ஆம் தேதி படி நாட்டின் மொத்த நெல் கொள்முதலில் 75% பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களிலிருந்து மட்டும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கோதுமை கொள்முதலிலும் இதே நிலைதான்.
இதன் பொருள் என்னவென்றால் இன்னும்கூட விவசாயிகள் பெரும்பாலும் தங்கள் உற்பத்தியை வெளி சந்தைகளில் தனியார்களிடம் விற்கிறார்கள் என்பதே. எனவே இதற்கு உதவும் வகையில் அரசு கொள்முதல் மண்டிகளை இன்னும் அதிக இடங்களில், விவசாயி எளிமையாக அவர்கள் விளை பொருட்களை விற்கும் வண்ணம் அருகாமை இடங்களில் அமைக்க வேண்டும். மாறாக இருக்கக்கூடிய மண்டிகளையும் மூடுவதற்கு சட்டம் இயற்ற பட்டிருக்கிறது..
தற்போது ஆயிரக்கணக்கான சிறு, குறு வியாபாரிகள் கொள்முதலில் ஈடுபட்டுள்ளனர். புதிய சட்டங்கள் மூலமாக ஒரு சில பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கைகளில் கொள்முதல் முழுவதும் போய்விடும். விவசாயிகளுக்கு கொடுக்கும் விலை மிகவும் குறையும். ஏழை மக்கள் வாங்கி சாப்பிடும் உணவுப் பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயரும்.
மிகப்பெரும் பண பலம் படைத்த கார்ப்பரேட் துறை, மிகத்திறமையாக விவசாய உற்பத்தி பொருட்களின் விலைகளை கையாள முடியும். மண்டிகளை ஒழிக்கும் வரை, நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என ஆதரவு விலையைவிட அதிகமாக ஓரிரு வருடங்களுக்கு கொடுத்து விளை பொருட்களை வாங்கலாம். இந்த போட்டியின் மூலம் மண்டிகள் ஒழியும் போது உற்பத்தி பொருட்களின் விலையை கடுமையாக குறைக்கலாம். ஒப்பந்த விவசாயத்தில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் நாடு முழுவதும் ஏற்கனவே இருக்கிறது.
மண்டிகளை பொறுத்தவரை அவை உற்பத்தி பொருட்களை விற்கும் விவசாயிகளுக்கும் வாங்கும் வர்த்தகர்களுக்கும் இடையே, நிர்ணயிக்கப்பட்ட விலையில் கைமாற்றும் ஒரு தளமாகும். அதனால் மண்டிகளுக்கு விலையை ஏற்றி இறக்கத் தேவையில்லை. மண்டிகளுக்கு கிடைப்பது வெறும் கமிஷன் மட்டும்தான். லாபம் இல்லை. ஆனால் கார்ப்பரேட் கம்பனிகளும் பெரும் மொத்த வியாபாரிகளும், பெரும் லாபத்திற்காகவே தொழில் நடத்துபவர்கள். எளிய விவசாயிகளுக்கும் வலிய தொழில் முதலைகளுக்கும் சமற்ற போட்டி உருவாகும். தனியார் முதலாளிகளும் ஆதரவு விலைக்குத்தான் வாங்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவர மோடி தயாரில்லை. விவசாயிகளின் சொந்த மண்டிகளை கார்ப்பரேட் ஓநாய்களுக்கு தாரை வர்க்கப்பார்கிறார். (அதானி குழுமத்தின் அக்ரோ லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் எனும் நிறுவனம் ஏற்கனவே பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து கோதுமையை வாங்க ஆரம்பித்துவிட்டது. இது நாட்டின் 14 இடங்களில் (தமிழ் நாடு உட்பட) தங்களுடைய சேமிப்பு கிடங்குகளை நிறுவியிருக்கிறது. இதன் மொத்த கொள்ளளவு 8,75,000 மெட்ரிக் டன்களாகும்). அதானி குழுமத்திற்கு ஹரியானாவில் பானிபட் நகரத்தில் விவசாய விளை பொருட்களுக்கு சேமிப்பு கிடங்கு அமைக்க 90,015.23 சதுர மீட்டர் இடம் அளிக்கப்பட்டதுடன், நிலப்பயன்பாட்டை விவசாயத்திலிருந்து மாற்றிக்கொள்ள ஆதரவாக பா .ஜ .க. ஆளும் மாநில அரசாங்கம், நாடே கொரோனா ஊரடங்கில் இருந்தபொழுது அவசர அவசரமாக சட்டம் இயற்றியது. மோடியின் இந்த சட்டங்களால் வேறு சில ஆபத்தான பிரச்சனைகளும் இருக்கிறது. 1955 அத்தியாவசிய பொருட்கள் சட்டப்படி மொத்த வியாபாரிகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அத்தியாவசிய பொருட்களை கையிருப்பு வைக்கமுடியாது. ஆனால் திருத்தப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 2020ன் படி, கையிருப்பு வைத்துக்கொள்வதற்கு எல்லை இல்லை. அத்தியாவசிய பொருட்களை வேண்டுமளவிற்கு பதுக்கி வைத்து செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்தி விலையை விஷம் போல் ஏற்றி விற்கலாம். இதனால் விவசாயிகள் மட்டுமல்லாது கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவார்கள். இதற்கு மோடி பச்சைக் கொடி காட்டி இருக்கிறார்.
ஒப்பந்த விவசாயம் யாருக்காக?
ஏற்கனவே கார்ப்பரேட் கம்பனிகளுடன் ஒப்பந்த விவசாயம் என்பது பல மாநிலங்களில் இருக்கிறது. இருப்பினும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நினைத்த அளவிற்கு பொருட்களை வாங்குவதில் தடைகள் இருப்பதால் அவற்றை களையவே இந்த புதிய சட்டங்கள். ஆனால் புதியதாக வந்திருக்கக்கூடிய ஒப்பந்த விவசாயம் குறித்த சட்டம், விவசாயிகளுக்கு, ஆதரவு விலை அடிப்படையில் விலை கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதம் அளிக்கவில்லை. 1990லிருந்து பெப்சிகோ பஞ்சாப் மாநிலத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற விளைபொருட்களுக்காக விவசாயிகளுடன் ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபட்டது. விவசாயிகள் இதனால் பெரு நஷ்டம் அடைந்தனர். புதிய சட்டத்தில் ஒப்பந்த விவாயிகளை பாதுகாக்க, கார்ப்பரேட் கம்பனிகள் மீது அந்தந்த மாநில அரசுகள் மேலாளுமை செய்ய எந்த அம்சங்களும் சட்டத்தில் இல்லை. விவசாயிகள் ஒப்பந்த மீறலுக்காக நீதி மன்றங்களை நாடலாம் என்று கூறப்படுகிறது. நீதி மன்றங்களின் நீண்ட நெடிய செயல் பாடுகள் நாம் அறிந்ததே. விவசாயிகளுக்கு இதற்கான வாய்ப்புகளே இல்லை. அவ்வளவு பண விரயமும் செய்ய முடியாது. நலிந்தவர்களுக்கு நியாயம் கிடைக்குமா என்பது வேறு விஷயம்.
ஒப்பந்த விவசாயத்தின் முக்கிய நோக்கம், சில்லறை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்த போட்டியுமின்றி விவசாயிகளிடமிருந்து ஏற்கனவே நிர்ணயித்த விலையின் படி உற்பத்தியை வாங்கி தங்களுடைய சில்லறை வர்த்தக முதலீடுகள் மூலம் விற்று அதிக லாபம் அடைவதற்கே.
இந்தியாவின் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களான அம்பானியின் ஜியோ மார்ட், ரிலையன்ஸ் ரீடைல்ஸ், அதானியின், அதானி-வில்மர், டாடாவின் பிக் பாஸ்கெட், மிட்டலின் பாரி டெல்மோன்டே, பெப்சிகோ,கார்கில் இந்தியா, ஹிந்துஸ்தான் லீவர் , ஐ.டி சி., நெஸ்லே, இ ஐ டி பர்ரி, ஆர்.பி.ஜி. குழுமம், பேண்டலூன், ரஹேஜா, போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் பெரு மூலதனம் இட்டிருக்கின்றனர். 2007ல் மொத்த சில்லறை வர்த்தகத்தில் (நாட்டில் மொத்தம் 150,000 சில்லறை வர்த்தக நிறுவனங்கள்) வெறும் 2% பங்கு கொண்டிருந்த அமைக்காப்பட்ட பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் 2020ல் 19% சில்லறை வர்த்தக சந்தையை கைப்பற்றியிருக்கிறது. இது ஏற்கனவே பல சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அழித்திருக்கிறது. இவர்களுடைய லாபம் பெருக, விவசாயிகளிடமிருந்து, ஆதார விலை, மண்டி போன்ற பிரச்சனைகள் இல்லாமல் நேரடி கொள்முதல் செய்வதற்கு வசதி செய்து கொடுக்கவே புதிய ஒப்பந்த விவசாய சட்டம்.
இன்னொரு முக்கியமான ஆபத்து, விற்பனைக்கு ஏற்ற, ஏற்றுமதிக்கு ஏற்ற அதிக லாபம் தரும் பயிர்களை உற்பத்திசெய்ய விவசாயிகள் நிர்பந்திக்கப்படுவர். அதிக உற்பத்தி என்ற பெயரில் அதிக ரசாயன உரம், பூச்சி மருந்து ஆகியவற்றை பயன்படுத்த நிர்பந்திக்கப்படுவர். இதனால் நில வளம் மேலும் நாசமடையும். விவசாயிகளின் வாழ்க்கை நாசமாக்கப்படும். உணவு தானிய பயிர்களுக்கு பதிலாக பணப்பயிர்கள் என இந்திய விவசாயம் மாற்றம் அடையும். எனவே உணவில் தன்னிறைவு என்பது போய் உணவு பாதுகாப்பிற்கே ஆபத்து ஏற்படும். இது அனைத்து ஏழை மக்கள் பிரிவினரையும் கடுமையாக பாதிக்கும்.
இந்த கட்டுரையின் துவக்கத்தில் கூறிய படி , கிழக்கிந்திய கம்பெனி பீகார் உத்தர பிரதேசம் வங்காளம் ஆகிய மாநிலங்களில் தங்கள் லாபத்திற்காக உணவுப் பயிர்களுக்கு பதிலாக அதிக லாபம் தரும் அபின் பயிர் செய்ய நிர்பந்திக்கப்பட்டனர். ஜமீன்தார்கள் தங்களுடைய குத்தகை விவசாயிகளை அபின் உற்பத்தி செய்ய நிர்பந்தத்தினர். இது முழுவதும் ஒப்பந்த விவசாயம் மூலம் நடந்தது. ஒப்பந்த மீறலுக்காக விவசாயிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். சிறையில் கூட அடைக்கப்பட்டனர். இதனால் பீகார், உத்தர பிரதேசத்தில் மட்டும் மிகுந்த நஷ்டமடைந்த சுமார் ஒரு கோடி விவசாயிகளின் வாழ்க்கை நாசமாக்கப்பட்டது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதே போல் பிரிட்டனின் ஜவுளித் தொழில் தேவைக்காக இண்டிகோ பயிரிடவும் விவசாயிகள் நிர்பந்திக்கப்பட்டனர். இதில் நகை முரண் என்னவென்றால், பிரிட்டனில் அபின் தடை செய்யப்பட பொருள். ஆனால் கிழக்கிந்திய கம்பெனி அபின் வர்த்தகத்தால் வந்த லாபத்தை வைத்தே இந்தியாவை மேலும் சுரண்டியது. மோடியின் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் இதே போல் வரலாறு மீண்டும் திரும்பலாம். அதனால்தான் விவசாயிகள் இந்த சட்டங்களை கடுமையாக எதிர்க்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக விவசாயம் அடி வாங்கினால், வார குத்தகை சாகுபடியாளரிலிருந்து, ஏழை, சிறு, குறு நடுத்தர விவசாயிகளிலிருந்து, நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் வரை பாதிக்கப்படுவார்கள். கிராமப்புற சமூகத்தின் இந்த பெரும் பிரிவுகளில், நமது தனித்த கோரிக்கைகளை முன்னெடுத்து போராட இப்பொழுது நடைபெறும் விவசாயிகள் போராட்டம் உற்சாகமும் நம்பிக்கையும் தரும். இந்து ராஷ்ட்ரம், கார்ப்பரேட் ராஜியமாகவே, அம்பானி அதானி ராஜியமாகவே இருக்கும் என பறைசாற்றும் மோடியின் விவசாய விரோத, தேச விரோத சட்டங்களை மக்களின் துணையுடன் விவசாயிகள் முறியடிப்பார்கள், மோடி ஆட்சியின் முடிவின் வரலாற்றை எழுதுவார்கள்.