சென்னை அம்பத்தூர் காமராஜர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியை முற்றுகையிட்ட பெண் மாணவர்கள்!
மக்களுக்கான இளைஞர்கள், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் தலையீடு!
2018ஆம் ஆண்டு படித்து முடித்த பெண் மாணவர்களுக்கு மடிக்கணினி தராத தமிழக அரசை கண்டித்தும், பொறுப்பேற்காத பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், அரசுப் பள்ளி பெண் மாணவர்கள், அம்பத்தூர் காமராஜர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்ட தகவல் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான தோழர் கூடத்திற்கு கிடைத்தது. தகவலறிந்ததும், அம்பத்தூர் பகுதி செயலாளர் தோழர் மோகன் தலைமையில் மக்களுக்கான இளைஞர்கள் தோழர்கள் சீதா, ஆன்டனி தினகரன், ஜனநாயக வழக்கறிஞர் சங்க செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் தோழர் மோகன்ராஜ் ஆகியோர் உடனடியாக போராட்டம் நடக்கும் இடத்திற்கு சென்றனர்.
தோழர்கள் அங்கு செல்லும் வரையில், மாணவர்களையும் பெற்றோர்களையும் மிரட்டி பணிய வைக்க முயற்சித்தது காவல்துறை. கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் அங்கு சென்றதும் மாணவர்கள் கூடுதல் உற்சாகத்துடனும் கொண்டாட்டத்துடனும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் ஊடே, போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் மாணவர்களின் பெற்றோரை கைது செய்து வண்டியில் ஏற்ற தர தரவென இழுத்துச் சென்றது காவல்துறை. தோழர்கள் தலையிட்டு காவல்துறையை நிர்ப்பந்தித்த பின் அவர்களை கைது செய்யாமல் விடுவித்தது. காவல்துறையினர் வழக்கம் போல் மாணவர்களையும், தோழர்களையும், கைது செய்வதாக அச்சுறுத்தியது. மாணவர்களோடு கைதாக தோழர் சீதா தயாராகவே இருந்தார்.
போராட்டத்தில் ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தோழர் சுரேஷின் தலையீடு காவல்துறையின் மூர்க்கத்தனத்தை குறைக்க உதவியது. மாணவர்களின் விடாபிடியான போராட்டத்தின் விளைவாக சட்டமன்ற உறுப்பினரை சந்திக்க காவல்துறை ஏற்பாடு செய்தது.
மடிக்கணினி வழங்க ஏற்பாடு செய்வதாக சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்ததை தொடர்ந்து சுமார் மூன்றரை மணி நேரம் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தின் துவக்கம் முதல் இறுதி வரை தோழர்கள் மோகன், சீதா உடனிருந்தனர். இறுதியில் தோழர் சீதா உரையாற்றி போராட்டத்தை முடித்து வைத்தார்.