வாழ்வாதாரங்களையும், சுற்றுச்சூழலையும் அழிக்கும் அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம்
"லூட் " (கொள்ளை அடித்தல்) என்கிற ஆங்கில வார்த்தை முதன் முதலில் இந்தியாவில் காலனி ஆதிக்கத்தின் கீழ் கிழக்கிந்திய கம்பெனி கொள்ளை அடித்ததின் தன்மையை வைத்தே ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டது. தற்காலத்தில் மோடி ஆட்சியின் கீழ் கார்ப்பரேட் லூட் என்பது அதன் உச்சத்தை தொட்டிருக்கிறது. இந்தியா என்பது ஏதோ அம்பானி , அதானி போன்றோருக்கு மட்டுமே சொந்தமானது என்ற நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது.
கார்ப்பரேட் வளர்ச்சிக்காகவே தங்களை அர்பணித்துக்கொண்டுள்ள காவி பாசிச பா.ஜ .க அரசு, துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில்வே நிலையங்கள் ஆகிய பொது சொத்துக்களையும், இதர தொழில்களையும் தனியார் ஆதிக்கத்தின் கீழ் மாற்றிக்கொண்டிருக்கிறது. எல்.ஐ .சி மற்றும் பொதுத்துறை வங்கிகள் கூட முழுமையாக தனியார் மயமாக்கப்பட முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
2021க்கான நிதி நிதி நிலை அறிக்கையில் கூட, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அவர்களுடைய செல்வங்களை மேலும் மேலும் பெருக்கிக்கொள்ள வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கரோனா காலத்திலும் தங்கள் செல்வாதாரங்களை பல மடங்கு பெருக்கிக்கொண்ட பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு அந்த செல்வங்களின் மீது புதிய வரி விதிப்பு ஏதும் இல்லை. மாறாக, வேலை இழந்தும், வாழ்வாதாரங்களை இழந்தும், வருமானம் இழந்தும் தவிக்கும் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு எந்தவிதமான உருப்படியான திட்டங்களும் இல்லை. மக்கள் மீது மேலும் அதிக சுமைகள் சுமத்தப்பட்டிருக்கின்றது.
அம்பானி , அதானி போன்ற கார்ப்பரேட்டுளின் நலனுக்காவவே போடப்பட்ட விவசாய சட்டங்கள் விவசாயிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது. விவசாயிகளின் விடாப்பிடியான போராட்டம் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளை ஒழித்துக்கட்டுவது போதாது என்று இப்பொழுது மீனவர்கள் வாழ்க்கையிலும் விளையாட ஆரம்பித்துள்ளது அதானி குழுமம். சாகர்மாலா திட்டத்தின் கீழ் ஏற்கனவே நாடு முழுவதுமுள்ள துறை முகங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. குஜராத்தில் முந்த்ரா, தாஹேஜ் , காண்ட்லா, ஹஸிரா ஆகிய துறை முகங்களும், ஒதிஷாவில் தம்ரா, கோவாவில் மர்மகோவா, கேரளாவில் விழிஞ்ஜியம், ஆந்திராவில் விசாகப்பட்டினம் ஆகிய 8 துறைமுகங்கள் அதானி வசமாகிவிட்டது. ஏற்கெனவே அதானி குழுமம் கேரள மாநில அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு விழிஞ்சியம் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் எண்ணூர் அருகிலுள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தின் பெரும் பங்குகளை (97%) 2018 ஆம் ஆண்டே எல் அண்ட் டி நிறுவனத்திடமிருந்து அதானி குழுமம் வாங்கி விட்டது. தங்களின் லாப வெறிக்காக, தமிழ்நாட்டின் இயற்கை வளத்தையும், பல்லாயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து , 35 லட்சம் தமிழக மக்களை வெள்ள அபாயத்தில் நிறுத்தும் வகையில், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை அறிவித்திருக்கிறது அதானி குழுமம்.
எண்ணூர் துறைமுகத்தை ஒட்டி அமைந்துள்ள, ஆழ்கடல் துறைமுகமான காட்டுப்பள்ளி துறைமுகம் இந்தியாவின் நவீன துறைமுகங்களில் ஒன்று. தமிழகம், கர்நாடகா மாநிலங்களின் ஏற்றுமதிக்கும், இம்மாநிலங்களுக்கான இறக்குமதிக்கும் இந்த துறைமுகம் 2013ஆம் ஆண்டிலிருந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. 230 ஏக்கர் பரப்பளவில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் இந்த துறை முகத்தை 6,110 ஏக்கர்களுக்கு விரிவாக்கம் செய்வதே அதானியின் திட்டம். இத்திட்டத்திற்குத் தேவையான 6110 ஏக்கர் நிலப்பரப்பில், 2291 ஏக்கர் மக்களுக்குச் சொந்தமான நிலம் , 1515 ஏக்கர் TIDCO க்கு சொந்தமான தனியார் நிலத்தைக் கையகப்படுத்தி, சுமார் 1967 ஏக்கர் கடல் பரப்பையும் கைப்பற்றிக்கொள்ளத் திட்டம் வகுத்துள்ளனர். சுற்றுச்சூழலுக்கும், பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களுக்கும் பெரும் ஆபத்து ஏற்படுத்த இருக்கும் இந்த விரிவாக்கத்தை, பல மீனவ மக்களும், சுற்றுப்புற சூழல் இயக்கங்களும், பல அரசியல் இயக்கங்களும், இதர அமைப்பினரும் கடுமையாக எதிர்த்துக்கொண்டிருக்கின்றனர்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெற்றிச் செல்வன் அவர்களின் கூற்றுப்படி,
``எண்ணூர் பகுதியின் இயற்கைச் சூழல் என்பது இயல்பாக உயிர்பன்மைச் சூழல் அதிகமாக இருக்கக்கூடிய பகுதி. ஆனால், அந்தப் பகுதியில் பெருமளவு தொழிற்சாலை மயமாகிவிட்டபடியால் அதிக அளவில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்திருக்கிறது. இந்தநிலையில், தற்போது இந்தத் துறைமுகத்தையும் விரிவாக்கம் செய்தால், சூழலியல் பாதிப்பு இன்னும் அதிகமாகும். இந்தத் திட்டத்துக்காக, நில மீட்பு என்ற பெயரில் கருங்காளி சேறு, ஆலமரம் சேறு, லாக்கு சேறு, களாஞ்சி சேறு, கோட சேறு போன்ற கரைக்கடல் சேற்றுப் பகுதிகளில் சுமார் 6 கி.மீ நீளத்த்துக்கு 2,000 ஏக்கர் பரப்பளவுக்கு மணல் கொட்டப்படும். கடல் பகுதியை மணல்கொட்டி நிரப்பி, அதை அதன் இயல்பிலிருந்து மாற்றுவது மிகப்பெரிய சூழலியல் பாதிப்புகளை உண்டாக்கும். அடுத்ததாக, மழைக் காலங்களில் பழவேற்காடு ஏரியும், கொற்றலை ஆறும், எண்ணூர் கழிமுகமும்தான் சென்னையின் வெள்ள வடிகாலாகச் செயல்பட்டுவருகின்றன. இந்தத் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் நடைபெற்றால் மீதமிருக்கும் கடற்கரையும் அரிக்கப்பட்டு, கொற்றலை ஆறு கடலோடு கலந்துவிடும் அபாயமிருக்கிறது. அதன் பிறகு, சென்னை வெள்ளத்தில் மிதப்பதை யாராலும் தடுக்க முடியாது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 35 லட்சம் மக்கள் வெள்ள அபாயத்தில் தள்ளப்படுவார்கள். தற்போதிருக்கும் காட்டுப்பள்ளி துறைமுகம் மட்டும் அறிவித்தவாறு 20 மடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டால், பல மீனவ கிராமங்கள் கடலுக்குள் போவதோடு, பழவேற்காடு பகுதியே கடல் அரிப்பால் கடுமையாக பாதிக்கப்படும்".
இந்த விரிவாக்கத்திட்டத்தினால் ஏற்படப்போகும் மோசமான விளைவுகள்:
இந்த விரிவாக்கத்தால் ஆப்பிரஹாம்புரம், களஞ்சி, கருங்காளி, காட்டூர், வயலூர், காட்டுப்பள்ளிகுப்பம் உள்ளிட்ட 82 தமிழக ஆந்திர மீனவ கிராமங்களைச் சேர்ந்த 1,00,000க்கும் மேற்பட்ட மக்களை கொண்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
இப்பகுதிகள் முழுவதும் சேற்றுத் திட்டுகளைக் கொண்ட, நீர் ஆழம் குறைவான கடல் பகுதிகள் ஆகும். இங்குதான் அதிகமான இறால், நண்டு, நவர மீன், கெழங்கான், கானாங்கெளுத்தி போன்ற கடலுணவுகள் அதிகம் கிடைக்கும். துறைமுக விரிவாக்கத்தால் இவை அனைத்தும் அழியும் அபாயம் இருக்கிறது.
ஏற்கனவே உள்ள துறைமுக விரிவாக்கத்தால் எண்ணூரில் பல கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 2012ம் ஆண்டு காட்டுப்பள்ளி துறைமுகம் வந்த பின்னர், சாத்தான்குப்பம் கிராமம் அப்புறப்படுத்தப்பட்டது. கோரைக்குப்பம், வைரவன்குப்பம் உள்ளிட்ட 13 கிராமங்கள் கடலுக்கு அருகில் வந்துவிட்டன. தற்பொழுது இருக்கும் காட்டுப்பள்ளி துறைமுகம் மட்டும் அறிவித்தவாறு 20 மடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டால் பல மீனவ கிராமங்கள் கடலுக்குள் போவதோடு பழவேற்காடு பகுதியே கடலரிப்பால் கடுமையாக பாதிக்கப்படும்.
இருளர் உள்ளிட்ட பல பழங்குடி சமூகங்களின் வாழ்விடமாக உள்ளது எண்ணூர்-பழவேற்காடு பகுதி. அவர்களுடைய இருப்பிடங்கள், மீன் பிடிப்பதன் மூலம் அவர்கள் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் வாழ்வாதாரங்கள் துறைமுக விரிவாக்கத்தால் முற்றிலுமாக அழிந்து போகும்.
காட்டுப்பள்ளிக்கு வடக்கே அமைந்திருக்கும் பழவேற்காடு ஏரி இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய உவர்நீர் ஏரியாகும். காட்டுப்பள்ளியின் தெற்கே எண்ணூர் கழிமுகம் இருக்கிறது. மேற்கே பக்கிங்காம் கால்வாயும் இருக்கிறது. ஆக சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதி, கடற்கரை பகுதியின் சூழலியலை பாதுகாக்க வேண்டிய முக்கிய அங்கமாக, கடற்கரை ஒழுங்கமைவு முதன்மை மண்டலமாக (Coastal Regulatory Zone 1) அறிவிக்கப்பட்டிருக்கிறது துறைமுக விரிவாக்கத்தால் இப்பகுதியே அழிந்துபோகும்.
வெள்ள வடிகாலாகச் செயல்பட்டு, மழைக் காலங்களில் சென்னையை காப்பது பழவேற்காடு ஏரியும், கொற்றலை ஆறும், எண்ணூர் கழிமுகமும் தான். ஏற்கனவே உள்ள எண்ணூர், காமராஜர் ஆகிய துறைமுக விரிவாக்கத்தால் கொற்றலை ஆற்றிற்கும் கடலுக்கும் இடையே இருந்த தூரம் சில கிலோ மீட்டர்களிலிருந்து சில நூறு மீட்டர்களாக சுருங்கிவிட்டது. காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கும் பழவேற்காட்டுக்கும் இடையே வெறும் 8 கிலோமீட்டர் தூரமே எஞ்சி உள்ளது. காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தால் மீதமிருக்கும் கடற்கரையும் அரிக்கப்பட்டு கொற்றலை ஆறு கடலோடு கலந்துவிடும் அபாயம் உள்ளது. அதன் பின், சென்னை வெள்ளத்தில் மிதப்பதை யாராலும் தடுக்க முடியாது.
காலநிலை மாற்றம், கடல்நீர்மட்ட உயர்வு, கடல்நீர் உட்புகுதல், அதிகரிக்கும் இயற்கை சீற்றங்கள் ஆகியவற்றால் சென்னை தொடர்ந்து ஆபத்துகளை எதிர்கொண்டிருக்கும் நிலையில் இத்திட்டத்தினை நடைமுறைப் படுத்தினால் மேலும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பழவேற்காடு பகுதிகளில் கடல் நீர் உட்புகுவது அதிகரித்து விவசாயம் முழுவதும் பாதிக்கப்படும்.
பழவேற்காடு நதிமுகத்துவாரத்தில் ஏரி நீரும் கடல் நீரும் மாறி மாறி இரண்டு பக்கமும் செல்வதால், கடல் வாழ் உயிரினங்கள் ஏரியில் இனப்பெருக்கம் செய்யும். இதனால் இப்பகுதிகளில் பல்லுயிர் பெருக்கம் அதிகரித்து 160 வகையான மீன்கள், இதர பல்வேறு கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் துறைமுக விரிவாக்கத்தால் அழியும். இயற்கை சூழலுக்கும், அதன் உயிர் பன்மயத்திற்கும் ஆபத்து இருக்கிறது. பழவேற்காடு ஏரியில் வாழும் பல்வகை பறவையினங்கள் அழிந்து போகும். இப்பகுதிகளில் உள்ள உப்பளங்கள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக் காடுகள், ஆழம் குறைவான மற்றும் ஆழமான நீர்நிலைகள் ஆகிய அனைத்துமே இதனால் அழியும். நன்னீர் பகுதிகளில் உவர்நீர் புகாமல் தடுக்கும் இந்த அமைப்புகள் அழிந்தால் பேராபத்தை விளைவிக்கும்.
அதானியின் மோசடியும் மோடியின் ஆதரவும்
சுற்றுச்சூழலியல் விதி முறைகளின்படி இந்தப்பகுதியில் துறைமுக விரிவாக்கம் என்பது சட்டத்திற்கு புறம்பானதாகும். ஆனால் உண்மைக்கு புறம்பான தகவல்களை அளித்து முக்கியமான தகவல்களை மறைத்து, அதானி குழுமம், சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றத்திற்கான ஒன்றிய அமைச்சகத்தின், மதிப்பீடு நிபுணர் குழுவை ஏமாற்றி இத்திட்ட விரிவாக்கத்திற்கு ஒப்புதல் வாங்கிவிட்டது. (அதானி மோடியின் நண்பரல்லவா?)
இந்த விரிவாக்கம் தேவையா?
தமிழகத்தில் உள்ள மூன்று பெரிய துறைமுகங்களின் சரக்குகளை கையாள்வதற்கான கூட்டுதிறன் வருடத்திற்கு 274.9 மில்லியன் டன்கள். ஆனால் 2019-20ல் மூன்று துறைமுகங்களும் கையாண்டது 122.3 மில்லியன் டன்கள் மட்டுமே. அதாவது உருவாக்கியிருக்கும் திறனில் 44% மட்டுமே. காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் 320 மில்லியன் டன் கையாளும் திறன் கொண்ட வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து துறைமுக சரக்கு கையாளும் திறனில் இது ஆறில் ஒரு பங்காகும். அப்படியெனில் அதானியின் நோக்கம் என்ன. மற்ற துறைமுகங்கள் கையாளும் சரக்குகளையும் அதானியின் துறைமுகத்திற்கு திருப்பிவிடவேண்டும். துறைமுகங்களில் பொதுத்துறையின் பங்குகளை ஒழித்துக்கட்ட வேண்டும். அதானிக்கு மோடி “இந்த உதவி” கூட செய்ய மாட்டாரா?.
அ.தி.மு.க அரசும் - ஒன்றிய பா.ஜ.க அரசும் போட்டி போட்டுக்கொண்டு தமிழகத்தின் நலன்களை அதானி குழுமத்துக்குத் தாரை வார்க்க காத்துக்கிடக்கின்றன.
இந்த திட்டத்திற்கான மக்கள் கருத்து கேட்கும் கூட்டம் ஜனவரி மாதம் 22ஆம் தேதி நடைபெறும் என தமிழ் நாடு மாசு கட்டுப்பட்டு வாரியம் அறிவித்திருந்தது. உரிய கால அவகாசம் இல்லாமல் நடத்த இருந்த இந்த கருத்துகேட்பு கூட்டத்திற்கு மக்கள் மத்தியிலிருந்தும், சூழலியல் ஆர்வலர்கள் மத்தியிலிருந்தும், எதிர்க்கட்சிகள் மத்தியிலிருந்தும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே வேறு வழியில்லாமல் கரோனாவை காரணம் காட்டி கருத்து கேட்கும் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை நடந்த எந்தக் கருத்துக்கேட்பு கூட்டத்திலும் மக்கள் தெரிவித்த கருத்துகளுக்கு உரிய மதிப்பளிக்கப்பட்டது இல்லை. கூடங்குளம் அணு உலை மூன்று மற்றும் நான்காவது உலைகளுக்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் 95 சதவிகித மக்கள் அணு உலை வேண்டாம் என்றுதான் கருத்து தெரிவித்தார்கள். ஆனால், மாவட்ட ஆட்சியர், மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று அறிக்கை கொடுத்தார். கருத்துக்கேட்புக் கூட்டங்கள் வெளிப்படையாக நடப்பதில்லை என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.
2002ம் ஆண்டு கேரளா மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தின் பிளாச்சிமடா என்ற கிராமத்தில் துவங்கப்பட்ட கோகோ கோலா கம்பனியை மாபெரும் மக்கள் போராட்டத்தினால் விரட்டி அடித்தனர். அதே போல் அனைத்து ஜனநாயக சக்திகளும் திரண்டு பறந்து பட்ட மக்களின் வாழ்க்கையை அழிக்கும் அதானியின் துறைமுக விரிவாக்கத்திட்டத்தை விரட்டி அடிப்போம். ஓடும் வரை விரட்டுவோம்.