கார்ப்பரேட் லாப வெறிக்கு தடுப்பூசி போடும் நாள் எந்நாளோ அந்நாளே சாமான்ய மக்களுக்கு பொன்னாள்
கொள்ளை நோய் வந்தால் அதற்கு தடுப்பூசி வந்து விடாதா என்றுதான் பொதுவாக மக்கள் காத்திருப்பார்கள். கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் தடுப்பூசிக்காக காத்திருந்தார்கள். அது வந்த பிறகு எழுந்துள்ள கேள்விகள் பாஜக ஆட்சி பற்றிய அவநம்பிக்கையை போதுமான அளவுக்கு வெளிப்படுத்தியுள்ளது.
விவசாயிகளுக்கு விவசாய சட்டங்கள் பற்றி படித்தவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று சொன்ன மோடி இப்போது தடுப்பூசி பற்றி இளைஞர்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிறார். தடுப்பூசி பற்றிய சந்தேகங்கள் வலுப்பெறுவதற்கு இதை விட வேறு காரணம் என்ன இருக்க முடியும்?மனித உடல் எந்த அளவுக்கு வெப்பம் தாங்கும், குளிர் தாங்கும் என்று தெரிந்து கொள்ளும் பரிசோதனைகளை, தடுப்பூசியின் திறன் பற்றிய பரிசோதனைகளை, ஹிட்லர் யூதர்கள் மீது செய்து பார்த்தான். உங்கள் வேத காலத்தில் தடுப்பூசி இருந்ததா நியாயமாரே? என்ன செய்தீர்கள்? தன்னிறைவு இந்தியா என்றெல்லாம் கூவத் துவங்கிவிட்டார்கள். (உங்கள் தன்னிறைவில் தீயை வைக்க....). குடியரசு தினத்தன்று பெருமையாக பேசிக் கொள்ள இந்திய ஒன்றிய அரசுக்கு எதுவும் இருக்கப் போவதில்லை. இந்த தடுப்பூசி ஆரவாரம் பயன்படப் போவதில்லை. முதலில் டில்லியை விவசாயிகள் முற்றுகையில் இருந்து மீட்கப் பாருங்கள் என்றுதான் நாட்டு மக்கள் சொல்வார்கள்.
நாடு கொரோனாவோடு போராடுகிறது, முகக்கவசம் அணியுங்கள், பாகுபாடு காட்டாதீர்கள்..... என்றெல்லாம் அலைபேசி அழைப்புகளில் அறிவிப்புகள் வந்ததுபோல், இப்போது தடுப்பூசி போடச் சொல்லி அறிவிப்பு வருகிறது. இந்த அறிவிப்பும் கடைசியில் தடுப்பூசி போட்டாலும் முகக்கவசம் அணிவது, தனி நபர் இடைவெளி கடைபிடிப்பது, கை கழுவுவது அவசியம் என்கிறது. (அப்புறம் எதுக்குடா அந்த ஊசி, வௌக்கெண்ண....?)
இது வரை எந்த தடுப்பூசியையும் இந்த அளவுக்கு சந்தேகங்களுக்கு சாமான்ய மக்கள் உட்படுத்தியதில்லை. அரசாங்கம் சொல்கிறதா, போட்டுக் கொள்வோம் என்றுதான் இது வரை தடுப்பூசிகள் போட்டுக் கொள்கிறார்கள். இந்த முறை அப்படி நடக்கவில்லை. காட்சிப்படுத்துதல் மூலம் எல்லாம் சாத்தியம் என்று நம்பிச் செயல்படுகிற மோடி, தடுப்பூசி போடாதது சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துகிறது. நீ முதலில் போடு, உனது அமைச்சரவைக்குப் போடு என்று மக்கள் சொல்கிறார்கள்.
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனத்துடனும் தேசிய நுண்கிருமியியல் நிறுவனத்துடனும் சேர்ந்து கோவேக்சின் தடுப்பூசி தயாரிக்கிறது. கோவிஷீல்ட் இங்கிலாந்து நாட்டு ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை கழகத்துடன் சேர்ந்து தயாரிக்கும் தடுப்பூசி. இந்தியாவில் சீரம் நிறுவனம் இதை தயாரிக்கிறது.
தற்போது 2 கோடி தடுப்பூசிகள் வைத்திருக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் 70 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்யும் என்று சொல்லப்படுகிறது. சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட் தற்போது 5 கோடி ஊசிகள் தயார். பிப்ரவரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் பத்து கோடி ஊசிகள் தயாராகும் என்று சீரம் நிறுவனம் சொல்கிறது.
முதல் கட்டத்தில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் 3 கோடி பேர் தடுப்பூசி பெறுவார்கள் என சொல்லப்பட்டுள்ளது. இதற்கு கோவிஷீல்ட் 1 கோடியே 10 லட்சம், கோவேக்சின் 55 லட்சம் ஊசிகள் பெறப்படும் என்றும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் அரசுக்கு 16.5 லட்சம் விலையின்றியும் அதற்கு மேல் ஊசி ஒன்றுக்கு ரூ.295 விலையில் தரும் என்றும் கோவிஷீல்ட் ஊசி ஒன்று ரூ.200 என்றும், இதற்கு நிதி பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து தரப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக தடுப்பூசி கோட ரூ.480 கோடியை இந்திய ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. இது வரை 20 லட்சம் பேருக்கு ஊசி போடப்பட்டுள்ளது.
பூடான், மாலத்தீவு, பங்களாதேஷ், நேபாளம், மியான்மர், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்ட் விலையின்றி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. (பட்டியலில் பாகிஸ்தான் இல்லை. பாரத் மாதா கீ ஜே).
இவ்வளவு செய்திகள் பொது மக்கள் காணக் கிடைக்கும்போது, இந்த இரண்டு தடுப்பூசிகளின் நோய் தடுக்கும் திறன் என்ன என்ற விவரம் மக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. சாமான்யர்களுக்கு மட்டுமின்றி துறை வல்லுநர்கள் கூட இது தொடர்பாக வெளிப்படைத் தன்மை இல்லை என்கின்றனர்.
முழுமையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாத, வெளிப்படைத்தன்மையின் மையால் சூழப்பட்ட தடுப்பூசிகள் பற்றி துறை வல்லுநர்களே கேள்விகள் எழுப்பியபோது, மருத்துவர்கள், விஞ்ஞானிகள் என 49 பேர் சேர்ந்து அறம் பொங்க ஒரு கடிதம் வெளியிட்டனர். தடுப்பூசிகள் பற்றி சந்தேகங்கள் வெளியிடுவது பொறுப்பற்ற செயல் என்று சாடினர். ஆனால், அந்த கடிதத்தில், மிகவும் பொறுப்பாக, தடுப்பூசிகளின் திறன் பற்றிய எந்த குறிப்பும் அவர்கள் தரவில்லை.
கட்டுப்படுத்தப்பட்ட அவசரகால பயன்பாடு என்ற அளவில் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் இந்த தடுப்பூசிகளுக்கு அனுமதி தந்துள்ளது. அனுமதி தர கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகளில், இது வரை இல்லாத, கிளினிகல் ட்ரயல் மோட், மருத்துவ பரிசோதனை முறை என்று ஒரு புதிய சொற்றொடர் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு அம்சங்களையும் துறை வல்லுநர்கள் கேள்விக்குள்ளாக்குகின்றனர்.
சீரம் இந்தியா நிறுவனம் மூன்றாவது கட்ட பரிசோதனைகளை இங்கிலாந்தில் செய்து முடித்திருக்கிறது. இந்த ஊசிகளை 60 வயதுக்கு மேல் இருப்பவர்கள் போட வேண்டாம் என்று பிரான்சும் 55 வயதுக்கு மேல் இருப்பவர்கள் போட வேண்டாம் என்று இத்தாலியும் சொல்லியுள்ளன. இந்த மருந்து இந்தியாவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமலே, பிரிட்ஜ் ஸ்டடி, அதாவது, இங்கிலாந்து மக்கள் மத்தியில் பரிசோதிக்கப்பட்டது இந்திய மக்களுக்கு ஒத்துப் போகுமா என்ற சோதனை செய்யப்படாமலேயே இந்திய மக்களுக்கு போடப்படுகிறது.
பரிசோதனை முறையில் மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டிய மருந்து என்று பாரத் பயோடெக் நிறுவனம் சொல்லியுள்ள பின்னணியில்தான் முன்களப் பணியாளர்களுக்கு போடப்படுகிறது. இந்த மருந்து இன்னும் பரிசோதனையில் இருப்பது தனக்கு தெரியும் என்று ஊசி போட்டுக் கொள்பவர் கையொப்பம் இட வேண்டும். திறன் பற்றிய தரவுகள் இல்லாதபோது, இந்தத் தடுப்பூசியை போடுவது தவறு என்று வல்லுநர்கள் சொல்கின்றனர். பிப்ரவரி இறுதிக்குள் திறன் தொடர்பான தரவுகளை தருவதாக நிறுவனம் சொல்கிறது. அதாவது இப்போது நடந்துகொண்டிருப்பது உண்மையில் மூன்றாம் கட்ட பரிசோதனை. இதன் முடிவுகளைத்தான் பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப் போகிறார்கள். இரண்டாவது கட்ட பரிசோதனை முடிந்த நிலையில் தடுப்பூசியை மக்களுக்கு போட இந்திய சட்டத்தில் இடம் இருக்கிறது என்று பாரத் பயோடெக் நிறுவனம் சொல்கிறது. தடுப்பூசிகள் போடத் துவங்கிய ஜனவரி 16க்குப் பிறகு 12 நாட்களில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள். மாரடைப்பு, மூளை செயல்பாடு தடை ஆகியவை காரணம் என்று சொல்லப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டதில் இருந்து 24 மணி நேரம் முதல் 5 நாட்கள் வரை இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்த உயிரிழப்புகளுக்கு தடுப்பூசி காரணம் அல்ல என்று அரசு தரப்பு சொல்கிறது. அப்படிச் சொன்னது எந்த வல்லுநர் என்று அரசு சொல்லவில்லை.
ரகசியமாக வைத்திருக்க இது ராணுவ நடவடிக்கை அல்ல. தடுப்பூசி போடும்போது அதன் ஆதியந்தம் அனைத்தும் மக்களுக்கு தெரிந்தாக வேண்டும். நோய் தடுப்பு திறன் பற்றிய தகவல்கள் தெரிந்தாக வேண்டும்.
உருமாற்றமடைந்துள்ள புதிய தொற்றை தடுக்கும் திறன் தற்போதைய தடுப்பூசிகள் பெற்றுள்ளனவா என்ற கேள்விக்கும் சரியான விடையில்லை. தடுப்பூசி முறையான முழுமையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது என்றால் 18 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு மட்டும் என்றும் கர்ப்பிணி பெண்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் போட வேண்டாம் என்றும் ஏன் சொல்லப்படுகிறது?
போபாலில் விஷவாயுவால் பாதிக்கப்பட்டோர் மத்தியில், ஊசி போட்டுக் கொண்டால் ரூ.750 தரப்படும் என்று சொல்லி கோவேக்சின் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு அவர்களுக்கு சொல்ல வேண்டிய விவரங்களை முழுமையாக சொல்லாமல் அவர்களை மூன்றாம் கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். பலருக்கும் உடல் நலக் குறைவு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோய்த் தொற்று பாதிப்புகள் இந்தியாவில் குறைந்து வருகிற நேரத்தில் முறையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாத, நோய் தடுப்பு திறன் பற்றிய தகவல்கள் பெறப்படாத தடுப்பூசிகளை அவசரஅவசரமாக ஏன் போட வேண்டும்? குடியரசு தின உரையில் பெருமை பேசுவதற்காக மட்டும் இந்த அளவுக்கு கொடூரமாக அரசு நடந்திருக்குமா? இல்லைதான். குடியரசு தின உரை பெருமையை விட கார்ப்பரேட் நிறுவனங்கள் லாப வெறிதான் அனைத்தையும் தீர்மானிக்கிறது.
இங்கிலாந்தின் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் தடுப்பூசி தயாரிக்க 750 மில்லியன் டாலர் நிதியும் சீரம் இந்தியா நிறுவனத்துக்கு 300 மில்லியன் டாலர் நிதியும் பில் மெலின்டா கேட்ஸ் பவுன்டேஷன் தந்துள்ளது. (ஒரு மில்லியன் டாலர் = ரூ.7,50,00,000). தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் நிறுவனம் எதிர்கொள்ளும் நட்டம் இதனால் தவிர்க்கப்படும் என்று பில் சொல்கிறார். 2021 இறுதிக்குள் 300 கோடி தடுப்பூசிகள் தயாராகிவிடும் என்றும் அனுமதி கிடைத்து விட்டால் 192 நாடுகளுக்கு தடுப்பூசிகளை குறைந்த விலையில் தர திட் டம் என்றும் பில் கேட்ஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. பெருந்தொற்று காலத்தை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மோடிக்கு தெரியும்போது, பில் கேட்ஸ் போன்றவர்களுக்கு தெரியாதா? பில் கேட்ஸ் போன்றவர்கள் விருப்பங்களை நிறைவேற்றத்தானே பிரதமர் மோடி அவதரித்துள்ளார்? பரிசோதனைகளால் திறன் உறுதிபடுத்தப்படாத மருந்துகளை இந்தியாவுக்கு விற்றாயிற்று; இந்தியாவில் மருந்துகளை பரிசோதனையும் செய்தாயிற்று. இனி அடுத்தடுத்த மருந்து வியாபாரமும் தடையின்றி தொடரும். இந்தப் போக்குவரத்து பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் பொருந்தும். இலக்கு, நோக்கம் ஒன்றே. கார்ப்பரேட் லாபம்.
இந்த தடுப்பூசிகளுக்கு காப்புரிமை தரப்படுவதில் இருந்து விலக்கு வேண்டும் என்ற இந்தியாவின், தென்னாப்பிரிக்காவின் கோரிக்கையை சர்வதேச வர்த்தக அமைப்பு நிராகரித்துள்ளது. பில் பவுண்டேஷன் நிதி உதவியில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டாலும் மக்களுக்கு விலையில்லாமலோ, மலிவான விலையிலோ அது போய்ச் சேராது. இந்தியா போன்ற நாடுகள் ரூ.35,000 கோடி அளவுக்கு ஓராண்டில் ஒதுக்கி தடுப்பூசி போடும். தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களின் லாபம் குறையின்றி வளரும். ஒரு பெருந்தொற்று பில் கேட்சுக்கு பெரும் லாபம். இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து போடுவதில், காசநோய் தடுப்பூசி போடுவதில் 50% அளவுக்கு குறைந்தாலும், 17 கோடி குழந்தைகளுக்கு போடப்படும் போலியோ சொட்டு மருந்து போடுவது காலவரை நிர்ணயிக்கப்படாமல் தள்ளிப் போடப்பட்டாலும், மோடிக்கு இன்னும் ஒரு வீரவசனத்துக்கான வாய்ப்பு.
கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பாஜக அரசு காட்டும் விசுவாசத்தில் கடுகளவாவது வாக்களித்த மக்கள் மீது காட்டினால் தடுப்பூசி போட்டுக் கொள்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க முடியும். ஆனால், அப்படி நடக்கும் என்று நம்ப என்ன முன்னுதாரணம் இருக்கிறது? கார்ப்பரேட் லாபவெறிக்கு தடுப்பூசி போடும் நாள் எந்நாளோ அந்நாளே சாமான்ய மக்கள் வாழ்க்கையில் பொன்னாள்.
2003 - 2004ல் இருந்து 2018 - 2019 வரை பாஜக 18,054 பேரிடம் இருந்து ரூ.2,722 கோடி நிதி பெற்றுள்ளது. இதில் தனிநபர்கள் முதல் பெருநிறுவனங்கள் வரை அடக்கம். உள்நாட்டு, வெளிநாட்டு நிதி அடக்கம். நிதி பெற்ற கட்சிகள் பட்டியலில் பாஜகவுக்குத்தான் முதலிடம். இது அதிகாரபூர்வ தகவல். இந்த தகவலுக்கும் பாஜக அரசாங்கத்தால் முடுக்கிவிடப்பட்டுள்ள தடுப்பூசி இயக்கத்துக்கும் இந்தக் கட்டுரைக்கும் தொடர்பில்லை.