COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, February 11, 2021

 சென்னை மனமகிழ் மன்ற தொழிலாளர்கள் போராட்டம்

வெற்றி வெற்றி என கொட்டு முரசே!

சென்னையில் மிகப்பெரிய பணக்கார கூட்டத்தால் துச்சமாக மதிக்கப்பட்டு, கொரோனா காலம் வேலையில்லை ஓடிப் போ என வீசி எறியப்பட்ட ஏழை எளியவர்கள், துணிந்து நின்று போராடி வென்றார்கள்.

அவர்களது வேலை வாய்ப்பை பாதுகாக்க வேண்டும், அவர்களது வாழ்வாதாரம் பறிபோக ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என, கம்யூனிஸ்ட் கட்சியின், இடதுதொழிற்சங்க மய்யத்தின் தலைவர்களில் ஒருவரான, ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரான தோழர் கே.பாரதி 27.01.2021 அன்று காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கினார்.

இந்த போராட்டத்தின் 13வது நாள், ஜிம்கானா கிளப்பின் 56 தொழிலாளர்கள், போட் கிளப்பின் 39 தொழிலாளர்கள் ஆட் குறைப்பு செய்தது தொடர்பாக சங்கம் கோரிய இரண்டு அரசாணைகளை போடுவது தொடர்பாக அரசு பரிவோடு பரிசீலிக்கும் என்ற வெற்றிச் செய்தி கிடைத்தது.

ஆட்குறைப்பு என்ற பெயரால் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களில்  பெரும்பான்மையானவர்கள், கணவனை இழந்த பெண்கள், தந்தையை இழந்த மகன்கள் என்ற அடிப்படையில் வேலைக்கு சேர்ந்தவர்கள். 

வருவாய் குறைந்து விட்டது என காரணம் காட்டப்பட்டாலும் துணிச்சலும் தன்மானமும் உள்ள சங்கத்தை அடக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்பதே உண்மையான நோக்கமாக இருந்தது.

21.12.2020 அன்று குளரகம் வளாகம் முன்பு நடந்த எழுச்சிமிகு போராட்டத்திற்கு பிறகு, தொழிலாளர் அமைச்சர் சங்கத்தை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் தொழிலாளர் துறை எடுத்த முயற்சிகளில் ஆட்குறைப்பு செய்த அனைவரையும் வேலைக்கு எடுக்க வேண்டும் என 12.01.2021ல் அறிவுரை வழங்கப்பட்டது.

அரசு வழங்கிய அறிவுரையை நிர்வாகம் மதிக்கவில்லை. அறிவுரையை தொழில் தகராறுகள் சட்டம் 1947ல் 10(1), 10பி, பிரிவுகளின் கீழ் ஆணையாக்க வேண்டும் என்ற அடிப்படையில் போராட்டம் துவங்கியது.

துவங்கிய நாள் முதல் முடியும் நாள் வரை உற்சாகத்துடனும் உணர்வுடனும் போராட்டம் நடந்தது.  எல்டியுசி மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார், மாநிலச் செயலாளர்கள் தோழர்கள் கே.பழனிவேல், மோகன், கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன் ஆகியோர் முன்னிலையில் போராட்டம் துவங்கும்போது வாழ்த்துரை வழங்கினார்.

ஜெயலலிதா நினைவிடம் துவக்க நாளில் போக்குவரத்து நெரிசல் தாண்டி சில நூறுபேர் காலை முதல் இரவு வரை இருந்தனர். தோழர் கள் தினகரன், சீதா இருவரும் இறுதி வரை உடன் இருந்தனர். தோழர் எஸ்.குமாரசாமி பக்கத்திலேயே தங்கி பார்த்துக் கொண்டார். தோழர் ஜேம்ஸ் எல்லா ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்தார்.

இரண்டாம் நாள் இரவு 28.01.2021 தொழிலாளர்களும் குடும்பத்தினரும் அண்ணா சாலையில் காமராஜர் சிலை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். 29.01.2021 மூன்றாம் நாள் தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. முரட்டுத்தனத்தில் முன்கை எடுக்க பார்த்த காவல்துறையினர் தொழிலாளர் சீற்றத்தால் பின்வாங்கி ஒளிந்து கொள்ள நேர்ந்தது. நான்காம் நாளான 30.01.2021 அன்று அமைச்சரை சந்திக்க தொழிலாளர்கள் அம்பேத்கர் மணிமண்டபத்தில் இருந்து மனுக்களோடு புறப்பட்டனர். தடுக்கப்பட்டனர். ஆனாலும் அமைச்சரோடு சந்திப்பு நடந்தது.

போராட்டத்தின் அய்ந்தாவது, ஆறாவது, ஏழாவது நாட்களில் அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயாரிப்பு வேலைகள் முடுக்கிவிடப்பட்டன. காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் என்று மட்டும் நின்றுவிட முடியாது என்பதில் தோழர்கள் உறுதியாக இருந்தனர்.

போராட்டத்தின் எட்டாம் நாளான 03.02.2021, அண்ணாசாலையில் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் இருந்த தோழர் கே.பாரதியோடு சில நூறு பேர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

போராட்டம் நடைபெறும் இடத்திலிருந்து குறைந்த தூரத்தில் இருந்த கலைவாணர் அரங்கில் சட்டமன்றம் கூடியது. ஒவ்வொரு நாளும் காவல்துறையினர் இன்று என்ன போராட்டமோ என்று பரபரப்பாக இருந்தபோது, போராட்டத்தின் ஒன்பதாவது நாளான 04.02.2021 பொழுது விடிந்தது. முதலமைச்சரை சந்திக்கும் போராட்டக்காரர்களின் முயற்சியை தடுக்க ஏராளமான காவல்துறை வாகனங்களுடன் காவல்துறையினர் பெரும் எண்ணிக்கையில் போராட்டம் நடக்கும் இடத்தில் தடுப்பு அரண்களால் முற்றுகையிட்டார்கள். போராட்டம் நடக்கும் இடத்திற்கு செல்ல முடியாமல் கெடுபிடி செய்தார்கள்.

எது நடந்தாலும் சரி, முதல்வரை சந்திக்க செல்வோம் என சில நூறு பேர் தோழர் எஸ்.குமாரசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமத்துவ வழக்கறிஞர் சங்க செயலாளர் தோழர் பார்வேந்தன், ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாநிலச் செயலாளர் தோழர் கே.சுரேஷ் தலைமையில் முன்னேறி சென்றார்கள். அடக்கப்பட்டவர்கள், தடை அரண்களை தாண்டி செல்ல முயன்றனர். காவல் உதவி ஆணையர் சரவணன், காவல் ஆய்வாளர் சூரியலிங்கம், காவல் உதவி ஆய்வாளர் மருது ஆகியோர் கேவலமாகவும் முரட்டுத்தனமாகவும் தொழி லாளர்களை நடத்தினார்கள். சரவணன், காலி பண்ணி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார். ரவுடி போல் பேசக்கூடாது என உறுதியான குரலில் அறிவுறுத்திய தோழர் சுரேஷிடம், மோதலுக்கு வந்தார். சீருடை இல்லாமல் வந்து மோதத் தயாரா என்று தொழிலாளர் தரப்பில்  கேட்கும் நிலை உருவானது.

இந்த நேரத்தில் சில தொழிலாளர்கள் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொள்ள முயன்றார்கள். சூழலில் தீப்பிடிக்க, காவல்துறை தடுமாறி குழம்பி நிதானம் இழந்து தாக்கத் துவங்கியது. மயங்கி விழுந்த ஒரு பெண், தாக்கப்பட்ட ஒரு பெண் உள்ளிட்ட நான்கு தோழர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் 220 பேர் கைது செய்து திருவல்லிக்கேணியில் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். காவல்துறை அராஜகத்தை கண்டித்து தோழர்கள் காவல்துறை வழங்கிய உணவை புறக்கணித்தார்கள். காவல் துறை உயர் அதிகாரிகள் வந்து பதட்டத்தை தணிக்கும் விதம் பேசி மறுநாளே தொழிலாளர் ஆணையரை சந்திக்க ஏற்பாடு செய்தார்கள். அன்று மாலை விடுவிக்கப்பட்ட  அனைவருக்கும் சங்கமே உணவு ஏற்பாடு செய்தது. தோழர் பாரதி உண்ணாநிலை போராட்டத்தில் இருந்த எல்லா நாட்களிலும் (ஒருநாள்  அடையாள உண்ணாநிலை போராட்டம் நடந்த நாள் தவிர) அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.

பத்தாவது நாளான 05.02.2021 வெள்ளியன்று தோழர்கள் குமாரசாமி, சுரேஷ் ஆகியோர் தொழிலாளர் ஆணையரை சந்தித்து தொழில் தகராறுகள் சட்டம் 1947 10(1) பிரிவின் கீழ் ஆட்குறைப்பு தொடர்பான தொழில் தகராறை நீதிமன்ற விசாரணைக்கு அனுப்புமாறும், தொழிற்தகராறு நிலுவையில் உள்ள வரை, 10பி பிரிவின் கீழ் ஆட்குறைப்பை நிறுத்தி ஆணையிடுமாறும் கேட்டுக் கொண்டார்கள்.

இதற்கு முன்பு 2007, 2009, 2019 ஆகிய ஆண்டுகளில், தமிழக அரசு பிறப்பித்த ஆணைகள், ரஅ 777/2007 வழக்கில் 2007ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆகியவற்றிலிருந்து உரிய பகுதிகளை ஆணையரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.  அவரும் திங்கட்கிழமை அன்று இறுதியாக ஒரு பேச்சுவார்த்தை நடத்தி விட்டு முடிவு எடுப்பதாகச் சொன்னார்.

சனிக்கிழமை, போராட்டத்தின் பதினோராம் நாளான 06.02.2021 அன்று மாலை தொழிலாளர்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் தரும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான தோழர் டாக்டர் தொல்.திருமாவளவன் தோழர் பாரதியிடம் நேரில் போராட்ட வாழ்த்து தெரிவித்தார். எளிமையாக வந்திருந்து எளிமையாக உரையாடி நம்பிக்கையூட்டும் உரையாற்றினார். விண்ணதிரும் முழக்கங்களுடன் வரவேற்கப்பட்டு வழி அனுப்பப்பட்டது.

பிப்ரவரி முதல் வாரத்தில் போராட்ட இடத்தில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேற்றும் முயற்சியாக, போராட்டக்காரர்களை வெளியேற்ற காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி ஒரு ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிர்வாகம் தாக்கல் செய்தது. போராட்டத்தின் பன்னிரண்டாம் நாளான 07.02.2021 அன்று ரிட் மனுவை எதிர்கொள்ளும் தயாரிப்புகள் நடந்தன.

போராட்டத்தின் 13ஆம் நாள் மாலை தொழிலாளர் துறையினரை சந்தித்த பிறகு அரசு சங்கம் கோரியவாறு ஆணையிடும் என தோழர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்ததன் அடிப்படையில் தொழிலாளர் அமைச்சர், தொழிலாளர் ஆணையர், ஜிம்கானா கிளப் நிர்வாகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் ஆகியோர் வேண்டுகோள் மற்றும் ஆலோசனைப் படியும் தோழர் எ.எஸ் குமார் பழச்சாறு வழங்க தோழர் பார்வேந்தன் பூங்கொத்து கொடுக்க தோழர் ராஜகுரு துண்டு அணிவிக்க உண்ணாநிலை போராட்டம் 13ஆம் நாள் பின்மாலை முடித்து வைக்கப்பட்டது.

தோழர் எஸ்.குமாரசாமி, கம்யூனிஸ்ட் கட்சி இடது தொழிற்சங்க மய்யம் தொடங்கப்பட்ட பிறகு நடந்தவற்றில் இதுவே பெரிய போராட்டம் என்பதையும் போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். தோழர் பார்வேந்தன், களங்களில் நேற்றும் இன்றும் நாளையும் போராட்ட ஒற்றுமை காண்போம் என்றார்.

இறுதியாக பேசிய தோழர் பாரதி தொழிலாளர்களுடைய உறுதி, குறிப்பாக பெண்களின் பங்கு, தோழர் தொல்.திருமாவளவனின் வருகை, சமத்துவ வழக்கறிஞர் சங்கம் துவங்கி வேறு வேறு அரசியல் அமைப்புகள் ஆதரவு, போராட்டத்துக்கு வலிமை தந்துள்ளதாகவும், சுரண்டலும் ஒடுக்குமுறையும் ஆதிக்கமும் இல்லாத சமூகம் உருவாகும் வரை தொழிலாளர்களோடும் மக்களோடும் போராட்ட களங்களில் தோளோடு தோள் நிற்க தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

போராட்டத்தில் அகர்வால் பவன், மெட்ராஸ் கிளப், பிரசிடென்சி கிளப், காஸ்மோபாலிட்டன் கிளப், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச் சங்கம், கோஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம், சட்டக்கல்லூரி மாணவர்கள் சங்கம், அரசு அச்சக ஊழியர்கள்,  எம்ஆர்எப்,  கார்பரன்டம், டைமன் செயின், மறைமலை நகர் கார்பரன்டம், ஃபோர்டு, ÷ண்டாய், நிப்கோ, அசோக் லேலண்ட், மதர்சன், சான் மினா, பின்ஸ்டார், டென்னகோ, போக்குவரத்து கழக தொழிலாளர்கள், சாய்மீரா தோழர்கள், காஞ்சி காமகோடி மருத்துவமனை தோழர்கள், கோவை பிரிக்கால், எல்ஜிபி தோழர்கள், ஓஎல்ஜி, வெல்மேக், மேக்னா, ஏசியன் பெயிண்ட், தோழர்கள் எச்எம்எஸ், எல்பிஎஃப், டபில்யுபிடியுசி தலைவர்கள், தோழர் சுஜாதா மோடி தலைமையிலான பெண் தொழிலாளர் அமைப்பிலிருந்து தோழர்கள், பல்வேறு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள், சிபிஅய் கட்சியினர், திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட தோழர்கள், ஜனநாயக வழக்கறிஞர் சங்க தோழர்கள், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.ரவீந்திரன், விஜயகுமார், ராஜாராம் போன்றோர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் மற்றும் அவருடன் வந்த வழக்கறிஞர்கள், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க உமாபதி, விஜய், கார்த்திக், சங்கர், நிவேதா உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மற்றும் எப்போதும் நம்முடன் இருந்த தோழர் பார்வேந்தன், சமத்துவ வழக்கறிஞர் சங்கத் தோழர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆதரவு தந்தனர். தோழர் பாரதியின் நண்பர்கள் வந்திருந்தனர். பல அமைப்புகளும் தனி தோழர்களும் நிதி வழங்கினர்.

அடங்க மறுத்து போர்க் குணத்தோடு, அறச்சீற்றத்ததோடு எழுந்த போராட்டத்தில், பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். எதற்கும் தயாராய் இருந்த இந்த பெண்கள் மத்தியில்தான், பெண்கள் அதிகாரம் அமைப் பின் தோற்றம் அறிவிக்கப்பட்டது.

ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இந்தப் போராட்டத்தில் ஒரு விதத்தில் சேரிக்கும் ஊருக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவு இல்லாதவர்களுக்கு இடையிலான வர்க்கப் போராட்டத்தில் தொழிலாளர்களையும் இடது தொழிற்சங்க மய்யத்தையும் வழிநடத்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் போராடுகிற எதிர்க்கட்சி எப்படி இருக்க வேண்டும் என, செய்து காட்டினார்கள். கோரிக்கைகளை அரசு ஏற்கும் நிலையை உருவாக்கிய இந்த போராட்டம் சென்னையில் தலைநகர் மண்டலத்தில் தொழிலாளர் அரங்கில் நம்பிக்கை தந்து, ஆற்றலை உணர்த்தி, எழுச்சியூட்டுவதாக அமைந்தது.

ஓஎல்ஜி தொழிலாளி ஒருவர் சுட்டிக்காட்டியபடி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எல்டியுசி உருவான பிறகு, நமது போராட்டங்கள் பெரும் எண்ணிக்கையோடும் மிகுந்த வீச்சோடும் நடைபெறுகின்றன.

அடுத்தடுத்து நமது போராட்ட பயணத்தில், தடைகள் தகர்த்து முன்னேறுவோம்.

Search