உச்சநீதிமன்றத் தடை விவசாயிகளுக்கு உதவாது
மோடி அரசுக்குத்தான் உதவும்
13 ஜனவரி 2021
எஸ்.குமாரசாமி
மோடியின் கார்ப்பரேட் ஆதரவு விவசாய சட்டங்களுக்கு 12.01.2021 அன்று உச்சநீதிமன்றம் தடை வழங்கியபோது, விவசாயிகள் அந்த தடையை கொண்டாடவில்லை. மாறாக போராட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசின் சட்டங்களை திணிப்பதற்குமே, மத்திய அரசு - உச்சநீதிமன்ற ஊடாடல் மூலம் தடை வழங்கப்பட்டதாகவே, கருதுகின்றனர்.
உச்சநீதிமன்றத் தடை தற்காலிகமானது; நிபந்தனைகள் அடிப்படையிலானது. கேட்காத நிபுணர் குழுவை, போராடும் விவசாயிகள் தாக்கல் செய்யாத வழக்கில், உச்சநீதிமன்றம் அவர்கள் மீது திணித்துள்ளது. நிபுணர் குழுவின் முன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈடுபடாத 'அனைத்து' விவசாயிகள் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றாக வேண்டும். அதன் பின் அவர்கள் 'அனைவரின்' கருத்து கேட்டு, அரசு கருத்து கேட்டு, நிபுணர் குழு தன் பரிந்துரையை அரசிற்கு தரும் என்று, உச்சநீதிமன்ற தீர்ப்பின் பத்தி 14 சொல்கிறது.
நிபுணர் குழுவினர், அரசின் கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களை, ரகசியமாக அல்லாமல், பகிரங்கமாகவே ஆதரித்தவர்கள். அவர்கள், கிட்டத்தட்ட அரசு தரப்பினர் போன்றவர்கள். அப்பட்டமாக, அரசின் கார்ப்பரேட் ஆதரவு விவசாய சட்டங்கள் பக்கம் சாய்பவர்கள் என நன்கு அறியப்பட்டவர்களை, விவசாயிகள் கேட்காமலேயே, விவசாயிகள் மேல் திணிக்க இந்த இடைக்கால தடை உத்தரவு உதவுகிறது. நிபுணர் குழு, அரசு தரப்பினர் ஏற்பாடு செய்யும் அனைத்து விவசாய அமைப்புகளின் கருத்துகளையும் கேட்டறிந்து, சட்டங்கள் பிரமாதமானவை என பரிந்துரைக்க, இந்த ஏற்பாடு வாய்ப்பு அளிக்கிறது. நிபுணர் குழு விசாரணை நாடகம் இரண்டு மாதங்களில் முடிந்தால், அதன் பரிந்துரையோடு, தடையின் கதை முடிந்துவிடும்.
சட்டங்கள் முழுமையாக வேண்டாம் என போராடி வரும் விவசாயிகளிடம், கட்டாயமாய் உன்னை சமரச பேச்சுவார்த்தைக்கு தள்ளுகிறேன் பார் என்கிறது, உச்சநீதிமன்ற தீர்ப்பு. காயம் பட்ட விவசாயிகள் உணர்வுகளுக்கு ஒத்தடம் தர, இடைக்கால உத்தரவு என உச்சநீதிமன்றம் சொல்கிறது. விவசாயம் என்ற உடலில், கார்ப்பரேட் ஆதரவு சட்டம் புற்றுநோயாய்ப் பரவினால், உயிர் போய்விடும், புண்ணை அகற்ற வேண்டும் என்பதே எமது கோரிக்கை என்கிறார்கள் விவசாயிகள். ஒத்தடம் தருகிறேன், களிம்பு பூசுகிறேன் என, உச்சநீதிமன்றம் சொன்னவுடன் வெற்றி வெற்றி, நோய் குணமாகிவிட்டது என ஏமாந்து போக, விவசாயிகள் முட்டாள்கள் அல்ல.
70 பேர் வரை உயிரிழந்த போராட்டத்தை, அமைதியான போராட்டம் என, உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சரியாகவே குறிப்பிட்டுவிட்டு, பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் போராட்டத்தில் ஊடுருவிவிட்டார்கள் என்ற அரசின் வாடிக்கையான மோசடி குற்றச்சாட்டை, தன் தடை உத்தரவு நிபுணர் குழு தீர்ப்பில், குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?
விவசாயத்தில் பெண்கள் கணிசமாக ஈடுபடும்போது, போராட்டத்திலிருந்து பெண்கள் விலக்கப்பட வேண்டும் என்று சொல்வது ஆணாதிக்கம் ஆகாதா? ஆண் விவசாயி போல் பெண் விவசாயி போராடக் கூடாதா?
அரசு விவசாயிகளை கலந்தாலோசிக்காமல், விவசாய சட்டங்களை போட்டதாக குறை சொன்ன உச்சநீதிமன்றம், விவசாயிகளை கலந்து ஆலோசிக்காமல், விவசாயம் தொடர்பான சட்டங்களை விவாதிக்க நிபுணர் குழுவை போட்டது மட்டும், எப்படி நியாயமாகும்? ஊருக்குதான் உபதேசமா?
உச்சநீதிமன்றத்திலும், ஒன்றிய அரசு கூசாமல் பொய் சொல்கிறது. கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு இல்லையாம்! இது ஆதாரமற்ற பொய். கேரள சட்டமன்றம், பாஜக உறுப்பினர் உட்பட ஏகமனதாக ஆதரவு தந்து, ஒன்றிய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஊடகங்கள், கட்சிகள் பலரும், இந்தத் தடை விவசாயிகளுக்கு உதவாது, மோடி அரசுக்கு உதவும் என்று நிலை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.
'தடை' போராட்டத்திற்கு அல்ல. இந்திய ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு, எவரும் தடை போட முடியாது. நிபுணர் குழு முன் போய், கையேந்தி தலைகுனிந்து போராடும் விவசாயிகள் நிற்க மறுப்பார்கள். நேரடியான அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் மன வலிமை மட்டும் இல்லாமல், சாணக்கிய சதிகளை மேற்கொள்ளும் அறிவாளிகளின் தந்திரத்தைக் கண்டறிந்து, புறந்தள்ளும் அறிவாற்றலும் விவசாயிகளுக்கு உண்டு.
குடியுரிமை திருத்தச் சட்டம், காதல் போர் எதிர்ப்பு அவசர சட்டம் போன்றவை பார்த்த மாத்திரத்திலேயே, அரசியல் சாசனத்துக்கு விரோதமானவை என பலரும் வழக்கு தொடர்ந்து தடை கேட்டபோது, அந்த வழக்குகளில் தடையேதும் வழங்காமல், அந்த வழக்குகளை கிடப்பில் போட்ட உச்சநீதிமன்றம், இப்போது எவரும் கேட்காமலேயே, இந்த வழக்கில் தானாக முன்வந்து, விவசாய சட்டங்கள் அமலாக்கத்திற்கு ஏன் தடை விதித்தது?
சட்டங்களுக்கு தடை என்று சொல்லாமல் சட்டங்களின் அமலாக்கத்திற்கு தடை என்று சொல்வதன் மூலம், சட்டங்களை கொண்டு வந்த அரசுக்கு ஆறுதல் தரப்படுகிறதா? அட்டார்னி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல் என்ற இந்திய ஒன்றியத்தின் முதன்மை நிலை வழக்கறிஞர்கள் தடை கேட்காதபோது, விவசாய சட்டங்களின் அரசியல் சாசன விரோதத் தன்மை பற்றி ஒரு வார்த்தை கூட வாதாடப்படாதபோது, உச்சநீதிமன்றம் எதற்காக தடை வழங்கியது? அரசுக்கு இருந்த அழுத்தத்தின் தீவிரத்தை தணிக்க தடை என்றால், இந்த தடை வழங்கிய தீர்ப்பு, ஓர் அரசியல் தீர்ப்பாகாதா? நிபுணர் குழு, சட்டங்கள் அவசியமானவை என பரிந்துரைத்தால், சட்டங்கள் அரசியலமைப்புச் சாசனத்திற்கு புறம்பானவை என்ற வாதத்தை கேட்காமலேயே, உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசின் சட்டங்களின் சரித்தன்மையை ஏற்றுக்கொண்டதாகாதா? தடை விவசாயிகளுக்கு சாதகமானது என்ற தோற்ற மாயைக்குள், காட்சிப் பிழைக்குள் சிக்காமல், உண்மையை தேடினால், உச்சநீதிமன்றத்தின் நோக்கங்கள், எண்ணங்கள் தாண்டி, அதன் மனதில் என்ன இருந்தது என்பதைத் தாண்டி, அதன் நிபுணர் குழு நியமனத்தோடு இணைந்து தடை வழங்கிய தீர்ப்பு, அரசுக்கு அது சிக்கி தடுமாறுகிற நெருக்கடியிலிருந்து மீள உதவியதாகவே அமைந்துள்ளது.
உணவுப் பாதுகாப்பிற்கு, பொது விநியோகத்திற்கு, விவசாயிகளுக்கு, விவசாயத்திற்கு வேலை வாய்ப்பிற்கு விரோதமான, கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே ஆதரவான, இந்திய நாட்டிற்கும் மக்களுக்கும் விரோதமான, சட்டங்களையும் அவற்றின் ஆதரவாளர்களையும், விவசாயிகள் முறியடிப்பார்கள். காலத்தையும் கடல் அலைகளையும் உத்தரவு போட்டு தடுக்க முடியாது. விவசாயிகள் நியாயம் வெல்வதையும் எவரும் தடுக்க முடியாது.