சாதியாதிக்க வெறியும் ஆணாதிக்க வெறியும் நடைபோடும் தமிழகம்
வெற்றி நடை போடும் தமிழகம் என்று யாரோ பாட முதலமைச்சர் பழனிச்சாமி நடந்து கொண்டே இருக்கிறார். தமிழக மக்களுக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் எல்லாம் பழனிச்சாமியாக உருமாற, பழனிச்சாமி அம்மா ஜெயலலிதாவின் கண்மணிக்குள் தெரிகிறார்.....
தமிழ்நாட்டு மக்கள் இன்னும் எத்தனை காலம், என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டுமோ...? எவ்வளவு முயற்சி செய்தாலும் தடுக்க முடியாமல், தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவு பெற்ற வடிவேலு சில நொடிகளுக்கு கண்முன் வந்து செல்கிறார். (இப்படிச் சொல்வது வடிவேலுவை அவமதிப்பதாக ஆகிவிடாதா?)ஜனவரி 8 அன்று நாகை மாவட்டம் வண்டிப்பேட்டையில் 40 வயது பெண் ஒருவர் கோவிலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 6 அன்று கரூரில் இளைஞர் ஒருவரை, அவர் காதலித்த பெண்ணின் உறவினர்கள் 12 பேர் கும்பலாகச் சேர்ந்து சாதியாதிக்கப் படுகொலை செய்துள்ளனர். உடுமலை சங்கர் தாக்கப்பட்டதை அனைவரும் பார்த்ததைப் போலவே ஹரிஹரனை கத்தியால் குத்தி, தலையை சுவற்றில் அடித்துக் கொல்லப்படுவதையும் அங்கிருந்த பலரும் பார்த்துள்ளனர். ஹரிஹரன் தாக்கப்பட்ட இடத்தில் இருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில்தான் பகுதியின் காவல் நிலையம் உள்ளது.
திண்டுக்கல் அருகில் வாகரை என்ற இடத்தில் ஜனவரி 5 அன்று கூலிப் பெண் தொழிலாளி ஒருவர் சாலையோரத்தில் பிணமாகக் கிடந்தார். அந்தப் பெண் தலித் என்பதால் அவரை மணக்க மறுத்த மேல்சாதி காதலன், அவரை ஏமாற்றி அழைத்துச் சென்று நண்பர் ஒருவர் உதவியுடன் கொலை செய்தது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது.
நான்கு நாட்களில் இரண்டு சாதியாதிக்கக் கொலைகள், ஒரு பாலியல் வன்முறை தாக்குதல் நடந்துள்ள ஒரு மாநிலம் எப்படி வெற்றி நடை போடும் மாநிலமாக இருக்க முடியும்?
இந்த மிகக் கொடூரமான வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கு முன்பும் இது போன்ற சாதியாதிக்க, ஆணாதிக்க தாக்குதல் நிகழ்வுகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயினும் இந்தத் தாக்குதல்கள் தொடர்வதற்கு, தண்டனை பற்றிய அச்சமின்மை, தண்டனையில் இருந்து தப்பிவிட முடியும் என்ற சூழல்தான் காரணம். தனிநபர் உணர்ச்சி மேலீட்டால் நடக்கும் கொலைகளை தடுக்க முடியாது என்று சொன்னவர் ஜெயலலிதா. அவரது கண்ணின் மணியாக காட்டப்படும் பழனிச்சாமியின் ஆட்சி பெண்கள் மீதும் தலித் பிரிவினர் மீதும் நடக்கும் சாதியாதிக்க, ஆணாதிக்க தாக்குதல்கள் அப்படித்தான் நடக்கும் என சொல்லாமல் சொல்கிறது. நான்கு நாட்களில் மூன்று வன்முறை தாக்குதல்கள் நடந்திருக்கும் ஒரு மாநிலத்தில் குற்றச் செயல்கள் குறைந்து விட்டதாக முதலமைச்சர் பழனிச்சாமி அடிக்கடி சொல்லி வருகிறார்.
தமிழ்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் சீற்றத்துக்கும் உள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்ட கயவர்களில் ஒருவர் இப்போது திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். அந்த கொடூரமான காணொளி காட்சிகளில் காணப்பட்ட இன்னும் சிலர், அவர்களுடன் தொடர்புடையவர்கள், அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தவர்கள் என ஒரு பெரிய குற்ற கும்பல் இன்னும் சுதந்திரமான சொகுசான வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இப்போது கைது செய்யப்பட்டவரும் அந்தப் பகுதியில் ஆளும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர். கைது செய்யப்பட்ட பிறகு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது. பொள்ளாச்சி பாலியல் வன்முறை தாக்குதல் பற்றிய செய்தி வந்து இத்தனை மாதங்களாக, கைது செய்யப்படும் வரை, அவர் ஆளும் கட்சியின் கதகதப்பில்தான் இருந்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நியாயம் கிடைத்தது? தாமதிக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதிதானே? இந்த அளவில் பெரும் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் உருவாக்கிய ஒரு நிகழ்விலேயே காவல்துறையும் அரசும் மெத்தனம் காட்டியிருக்கும்போது, நம்மை என்ன செய்துவிடப் போகிறார்கள் என்ற துணிச்சல்தானே மற்றவர்களுக்கும் வருகிறது?
பெண்களின் பாதுகாப்பு முழுவதுமாக இப்படி கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாகியிருக் கம்போது ஆட்சியில் இரண்டரை ஆண்டுகள் ஆண் முதலமைச்சர், இரண்டரை ஆண்டுகள் பெண் முதலமைச்சர் என்று துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார். பெண்கள் வாக்குகளை ஒரே வலையை விரித்துப்போட்டு ஒட்டுமொத்தமாக பிடிக்கிறார்களாம்.
இரண்டரை ஆண்டுகள் என்ன, மொத்தமாக அய்ந்து ஆண்டுகளும் பெண் முதலமைச்சரை பார்த்த மாநிலம்தான் இது. அந்த பெண் முதலமைச்சர் பதவிக் காலத்தில்தான் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் பத்மினி அவரது கணவர் முன்னாலேயே காவல்துறையினரால் கூட்டாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். அவரது கணவரை அடித்தே கொலை செய்தார்கள். அதே பெண் முதலமைச்சர் ஆட்சி காலத்தில் வீரப்பனை பிடிப்பதாகச் சொல்லி வனத்துறை அதிகாரிகள், காவல்துறையினர், வருவாய் துறை அதிகாரிகள் சேர்ந்து வாச்சாத்தியை சூறையாடியபோது, அங்கிருந்த பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். விழுப்புரம் இருளர் பெண்கள் காவல்துறையினரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு புகார் எழுந்தபோது, மருத்துவ பரிசோதனையில் அதற்கான அறிகுறிகள் இல்லை என்று சட்டமன்றத்தில் அறிவித்தவர்தான் அந்த பெண் முதலமைச்சர்.
சரிகா ஷா மரணத்துக்குப் பிறகு சட்டம் போட்டாரே, நிர்பயா மரணத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த சில நடவடிக்கைகள் அறிவித்தாரே, அந்த பெண் முதலமைச்சர் இருந்த காலத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை நிகழ்வுகள் கட்டுப்படுத்தப்படவே இல்லை. அவரது வழியில் ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் பன்னீர்செல்வம் முதலில் பொள்ளாச்சி பெண்கள் நீதி பெறுவதை உறுதி செய்வாரா? பெண் முதலமைச்சர் என்பதில் மக்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், பெண்கள் பாதுகாப்பையும் தலித் மக்கள் பாதுகாப்பையும் உறுதி செய்ய தவறிய, அவர்கள் மீது தொடர்ந்து நடக்கும் வன்கொடுமை தாக்குதல்களை, பாலியல் வன்முறை தாக்குதல்களை கட்டுப்படுத்த தவறிய அஇஅதிமுகவில் இருந்து இன்னொரு பெண் முதலமைச்சர், இன்னொரு முதலமைச்சர் தமிழக மக்களுக்கு என்றும் வேண்டாம்.
தமிழ்நாடெங்கும் நடக்கும் சாதியாதிக்க கொலைகளை, ஆணாதிக்க அத்துமீறல்களை பகட்டான விளம்பரங்களால் மறைத்துவிட முடியாது. சாதியாதிக்க வெறியும் ஆணாதிக்க வெறியும் நடைபோடும் தமிழகத்தை இனி தமிழக மக்கள் அனுமதிக்கப் போவதில்லை.