தோழர் பாலன் உள்ளிட்டோரை உடனே விடுதலை செய்!
வருகிற சட்டமன்றத் தேர்தலில் பாசிச பாஜகவை முறியடிப்போம் என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டின் முற்போக்கு இயக்கங்களுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகிற தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் பாலன் உள்ளிட்ட மூன்று பேரை சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், பிணையில் வெளியில் வர முடியாதபடி, தமிழக அரசின் காவல்துறை பிப்ரவரி 7 அன்று அதிகாலையில் சேலத்தில் கைது செய்துள்ளது.
27 மாதங்களுக்கு முன்பு மாவோயிஸ்ட் ஒருவரின் சாவுக்குச் சென்றிருந்தார்கள் என்பதுதான் அவர்கள் செய்த சட்ட விரோத நடவடிக்கை என்று காவல்துறை சொல்கிறது.
பீமா கொரேகான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள், மார்க்ஸ், எங்கல்ஸ் புத்தகங்கள் வைத்திருந்தார்கள் என்று மொக்கை காரணங்கள் காட்டி சமூக ஆர்வலர்கள் பலர் மகாராஷ்டிர சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சமூக செயல்பாட்டாளர்களை அரசியல் காரணங்களுக்காக கருப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்வது ஒப்பீட்டுரீதியில் மேலான ஜனநாயக செயல்பாடுகளை பாதுகாக்கிற தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இவ்வளவு காலமாக சாத்தியப்படவில்லை. இன்று தோழர் பாலன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருப்பது அடிமை பழனிச்சாமி அரசு, தேர்தல் நேரத்தில், தனது பாசிச பாஜக எசமானர்களை மனம் குளிர்விக்க, தமிழ்நாட்டில் மீதமுள்ள ஜனநாயக மாண்புகளையும் அடகு வைக்க தயாராகிவிட்டதை காட்டுகிறது.
இந்த ஒடுக்குமுறை போக்கை, ஜனநாயக உரிமைகளை மறுக்கும் போக்கை அனுமதிக்கக் கூடாது. தோழர் பாலன் உள்ளிட்டோர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற குரல் வலுக்க வேண்டும். பாஜக, அஇஅதிமுக கூட்டணி வரும் தேர்தலில் முறியடிக்கப்பட வேண்டும். திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.