சங்கிகளுக்கு நாட்டுப் பற்று உண்டா?
தேசம் தெரிந்து கொள்ள விரும்புகிறது
தேசம் தெரிந்து கொள்ள விரும்புகிறது என்று சொல்லி எதிரில் இருப்பவர் யாரையும் பேச விடாமல் கத்திக் கொண்டு மேசையை பேனாவால் குத்தி கொண்டிருக்கும் ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோசுவாமிக்கும் பார்க் (ப்ராட்காஸ்டிங் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில்) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தாவுக்கும் இடையில் நடந்த வாட்சப் உரையாடல்
பற்றிய 500 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மும்பை காவல்துறை சமர்ப்பித் துள்ளது. ரிபப்ளிக் டிவி ஆர்எஸ்எஸ் ஆதரவு டிவி என்பது இந்த நாட்டின் குழந்தைகளுக்கும் தெரிந்த விசயம். ஆனால், நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான மிகவும் ரகசியமான ராணுவ விவரங்கள் முன்கூட்டியே அர்னாபுக்கு தெரிவிக்கப் படுகின்றன எனும் செய்தி அதிர்ச்சி தருகிறது.தமது தொலைகாட்சி அலைவரிசையின் டிஆர்பி (டார்கெட் ரேடிங் பாயின்ட்), இலக்கு மதிப்பீட்டு புள்ளியை கூடுதலாகக் காட்ட அர்னாப் தகிடுதத்தம் செய்துள்ளார் என்று வேறு சில தொலைக்காட்சி நிறுவனங்கள் மும்பை காவல்துறையில் புகார் அளிக்க, அது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 3,600 பக்க அறிக்கையின் ஒரு பகுதியாக இந்த வாட்சப் உரையாடல்களும் இணைக்கப்பட்டுள்ளன.
குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தாஸ்குப்தாவுக்கு இரண்டு முறை 6,000 டாலரும், அது தவிர இன்னும் மூன்று சந்தர்ப்பங்களில் ரூ.40 லட்சமும் அர்னாப் தந்தார் என்று இரண்டு சாட்சியங்கள் முன்னிலையில் காவல்துறையினருக்கு அளித்த வாக்கு மூலத்தில் தாஸ்குப்தா சொல்லியுள்ளார். சங்கிகள் தங்கள் மீது சுமத்தப்படும் மோசடி புகார்களை முதலில் மறுப்பார்கள்; பின்னர் புதைத்து விடப் பார்ப்பார்கள்; முடியாதபோது மன்னிப்பு கேட்பார்கள். தாஸ்குப்தா சொல்லும் விசயங்களுக்கும் தனக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று அர்னாப் இன்று சொல்கிறார். உள்அலங்கார வேலை செய்தவருக்கு பேசிய பணத்தை தராமல் இழுத்தடித்து அவரை தற்கொலைக்கு தள்ளியது வரை செய்துவிட்டு, கைது செய்ய வந்தபோது, ஊடக சுதந்திரம் பறிபோகிறது என்று கதற, கூடவே நட்டா முதல் அமித் வரை கதற, பிறகு நேராக உச்சநீதிமன்றம் சென்று வரலாறு காணாத பிணை பெற்று திரும்பியுள்ள அர்னாப், இந்தக் குற்றசாட்டுகளை ஊதித் தள்ளிவிடலாம் என்று கருதலாம். அவருக்கு அதற்கான வாய்ப்பு இருப்பதும் இந்த உரையாடல்களில் தெரிய வருகிறது. அரசுக்கு ரூ.52 கோடி இழப்பு ஏற்படுத்திய வேறு ஒரு மோசடியில் எழுந்த புகார் தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் ரத்தோர் அதை கிடப்பில் போட்டுவிடுவதாக தனக்குச் சொல்லியிருப்பதாக அர்னாப் சொல்கிறார்.
அர்னாப் ஒரு சங்கி, சங்கிகள் மோசடிகள் செய்வார்கள், அர்னாப் மோசடி செய்துள்ளார் என்பது ஒரு பக்கம் இருக்க, இந்த மோசடிகள், தேசப்பற்று, தேசப் பாதுகாப்பு என்ற அவரது கூச்சலின் ஊடே நடந்திருக்கிறபோது, சங்கி வகை நாட்டுப் பற்று இவ்வளவுதான் என்று அர்னாப் போடும் சத்தத்தை விட சத்தமாக இன்று நாடெங்கும் கேட்கிறது.
மக்கள் கைகளில் இருந்த பணம் செல்லாது என்று அறிவித்து அவர்கள் பிழைப்பை விட்டு வரிசையில் நிற்க வைத்து, அது பற்றி கேள்வி எழுப்பியபோது, எல்லையில் வீரர்கள் நிற்கிறார்களே, நீங்கள் நிற்கக் கூடாதா என்றார்கள். அவர்களுடன் சென்று தீபாவளி கொண்டாடினார்கள். எல்லாம் போலி என்று சொன்னோம். நம்பியவர்கள் பலர் இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள். ராணுவ வரவு செலவு கணக்கு என்னவென்று கேள்வி எழுப்ப முடியாது. ஏன் என்றால் அது ரகசியம். பொதுவில் சொல்ல வேண்டியதில்லை. நாட்டின் முதல் ஊழலே ராணுவம் தொடர்பானதுதான் என்றாலும் ராணுவ ரகசியம் காப்பது என்ற மரபு பாதுகாக்கப்படுகிறது என்று கருதினோம். அரசியல் சாசனத்தில் நம்பிக்கையில்லாத ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது, ராணுவ ரகசியம் துச்சம் என்றாகிவிட்டது.
பிப்ரவரி 14 அன்று புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டார்கள். பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானுக்குள் பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. பிப்ரவரி 23 அன்றே இந்தத் தாக்குதல் பற்றி அர்னாபுக்கு தகவல் தெரிகிறது. அவரது ஊடகக் குழு இந்திய அரசின் வல்லமையை பறை சாற்ற அங்கே தயாராக இருக்கிறது. 2019 தேர்தல்களில் வெற்றி பெற இந்தத் தாக்குதலைத்தான் கூவிக்கூவி விற்றார்கள்.
பிப்ரவரி 23 அன்று இருவருக்கும் இடையில் நடந்த உரையாடலில் இந்த முறை மிகப் பெரிதாக ஒன்று நடக்கப் போகிறது என்கிறார் அர்னாப். தாவூதா என்று தாஸ்குப்தா கேட்க, அதுக்கும் மேல என்கிறார் அர்னாப். இந்தியா பாகிஸ்தானின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்துவது அதற்கும் மேல்தானே. எதிரி நாடு என்று ஒன்றிய அரசு கருதும் நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல் பற்றி சொந்தமாக, தனிப்பட்ட ஊடகம் நடத்தும் ஒருவருக்கு, அரசாங்கத்தில் ராணுவம் தொடர்பான எந்த உயர்பொறுப்பும் வகிக்காத ஒருவருக்கு, அது பற்றிய முடிவு எடுக்கும் நிலைக்கு எந்த நியாயப்படுத்தப்பட்ட விதத்திலும் தொடர்பற்ற ஒருவருக்கு தெரிகிறது என்றால், பின் என்ன தான் ரகசியம் எதில்தான் இருக்க முடியும்?
அமைச்சர்கள் எல்லாம் நம்முடன் இருக்கிறார்கள், பிரதமர் அலுவலகத்தில் பேச முடியும் என்றெல்லாம் அர்னாப் அந்த உரையாடலில் சொல்கிறார். பல முறை எஎஸ் என்ற எழுத்துகளை பயன்படுத்தி அவருடன் பேசியதாக, சந்தித்ததாக சொல்கிறார். எஎஸ் என்றால் அமித் ஷா என்றுதான் ஊகிக்க நேர்கிறது. பிரதமர் அலுவலகத்தில் ஊடக ஆலோசகர் போன்ற பதவி வாங்கித் தரும்படி அர்னாபிடம் தாஸ்குப்தா கேட்கிறார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி கேள்விகள் வந்தபோது தீவிரவாதிகளை கட்டுப்படுத்திவிட்டோம் என்று சொன்ன பிறகுதான் ராணுவ வீரர்கள் 40 பேர், மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியில், கறாரான கண்காணிப்பு நிலவும் ஒரு பகுதியில் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார்கள். நாட்டு மக்கள் அதிர்ச்சிக்கும் பெரும் சோகத்துக்கும் உள்ளாகியருந்தபோது, அர்னாப் அதை கொண்டாடியிருக்கிறார். புல்வாமா தாக்குதல் நடந்த அன்று மாலை தாஸ்குப்தாவுக்கு அனுப்பிய ஒரு செய்தியில், இந்த தாக்குதல் விசயத்தில் நாம் பெருவெற்றி பெற்றிருக்கிறோம் என்கிறார்.
ஆக, இவற்றில் இருந்தெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை:
ராணுவ ரகசியம் என்று எதுவும் இல்லை.
ராணுவத்தின் பெயரால் நாட்டு மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
சங்கிகளுக்கு நாட்டுப் பற்று என்று எதுவும் கிடையாது.
சங்கிகளுக்கு ராணுவ வீரர்கள் பற்றி எந்த கரிசனமும் கிடையாது.
தீவிரவாதத்துக்கு முடிவு கட்டுவது பற்றி சங்கிகளுக்கு எந்த அக்கறையும் கிடையாது.
தேர்தலில் வெற்றி பெற சங்கிகள் எந்த பாதகச் செயலையும் செய்வார்கள்.
அர்னாப் ஊடக நெறி பற்றி அறியாதவர்.
சங்கிகள் இந்து மக்களின் விரோதிகள்!
கடைசியாக, பிரதமர் மோடி அவர்களே, தேசம் தெரிந்து கொள்ள விரும்புகிறது. சங்கிகளுக்கு நாட்டுப் பற்று உண்டா?