சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும்
14 ஆண்டுகளாக மின்இணைப்பு தர மறுக்கும்
மின்வாரிய அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
எஸ்.ஜானகிராமன்
திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி எம்.ஜி.ஆர் நகர், மல்லையா நகர் மக்களுக்கு, அகற்றப்பட்ட குடியிருப்புகளுக்கு வருவாய் துறையினர் மாற்று இடம் வழங்கும் வரை தற்காலிக மின்சாரம் வழங்கலாம், குடியிருப்போர் மின் வசதி கேட்டு தனித்தனியாக விண்ணப்பிக்கலாம் என்ற உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 165 குடியிருப்புகளுக்கு மின் வசதி கேட்டுதனித்தனியாக விண்ணப்பிக்கப்பட்டும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. குடியிருப்பு மக்களின் அடிப்படை கோரிக்கை நிராகரிக்கப்படுவதை கண்டித்து டிசம்பர் 12 அன்று ஜனப்பன் சத்திரம் கூட்டு சாலையில் கண்டன கூட்டம் நடைபெற்றது.
இதில் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மீண்டும் 27.12.2020 அன்று மின் இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு வீடுகளில் கருப்பு கொடியேந்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதிவு தபால் மற்றும் நேரடியாக புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து மின் வாரியத்தின் சம்பந்தப்பட்ட மின் பொறியாளர், மின் இணைப்பு வழங்க வேண்டுமென்றால் வருவாய் துறையினர் (தாசில்தார்) தடையில்லா சான்று வழங்கினால், மின் இணைப்பு வழங்கப்படும் என்று குடியிருப்போர் நல சங்கத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்தார். மீண்டும் பொன்னேரி வட்டாட்சியரை சந்தித்து பேசியபோது உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி காலம் தாழ்த்தி வந்தார்.
இதனை கண்டித்து பகுதி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் குடியிருப்போர் நல சங்க தோழர்கள் இணைந்து அழிஞ்சிவாக்கம் ஊராட்சி இருளிப்பட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பிப்ரவரி 9 அன்று காலை 10 மணிக்கு மின்வாரிய துறை அலுவலகத்தில் குடியேற பெண்கள் ஆண்கள் முதியோர் குழந்தைகள் என, அடுப்பு, சமையல் பாத்திரங்கள், சமையல் கியாஸ், பாய், தலையணை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி கொடிகளுடன் தோழர் ஜானகிராமன் தலைமையில் தோழர்கள் அன்புராஜ், சீதா, தினகரன் (மக்களுக்கான இளைஞர்கள்) ஆகியோரின் விண்ணதிரும் முழக்கங்களுடன் ஊர்வலமாக சென்று மின்வாரிய அலுவலகத்தை அடைந்த போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது.
சாலை மறியலை தொடர்ந்து, வருவாய்த்துறை, மின்வாரியத் துறை, காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடப்பட்டது. அப்போது மின்வாரிய அலுவலகத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொருட்படுத்தாது மக்கள் முழக்கம் எழுப்பியபடி போராட்டத்தை தொடர்ந்தனர்.
வருவாய்த்துறையில் துணை வட்டாட்சியர், மின்வாரிய உயர் அதிகாரிகள், கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் ஜானகிராமன், அன்புராஜ், சீதா, வேணு, முனுசாமி, ராதா, மதி உட்பட 10 பேர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் 2010ன் உயர் நீதிமன்ற ஆணைப்படி அனைத்து குடியிருப்புகளுக்கும் மின் இணைப்பு வழங்க கோரப்பட்டது. மின்வாரிய தரப்பில் இருந்து பொதுவாக மூன்று வழி மின் இணைப்பு தெருவிளக்குகள் அமைக்கும் வகையில் அமைத்து பொதுவான ஒரு மீட்டர் பொருத்தி அதில் குறிப்பிடும் கட்டணத்தை பஞ்சாயத்து நிர்வாகம் அல்லது பகுதி மக்கள் கட்டும் படி அமைத்துத் தருகிறோம் என்று சொன்னார்கள். மேலும் தனித்தனியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றால் வருவாய் துறை கடிதம் தர வேண்டும் என்றனர். வருவாய்த் துறை அது எங்கள் நிலம் இல்லை பொதுப்பணித் துறையின் நிலம் அவர்கள்தான் கடிதம் தர வேண்டும் என்றனர். மூன்று துறை அதிகாரிகளும் மாறி மாறி நிபந்தனைகள் போட்டனர்.
2010 உயர்நீதிமன்ற ஆணைப்படி மின் இணைப்பு வழங்க முடியாது என எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுங்கள், ஆட்சேபணை தெரிவிக்கும் அதிகாரிகளை நீதிமன்றத்தில் சந்தித்துக் கொள்கிறோம், மக்களுக்கு சாதகமான முடிவு வரும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துவிட்டு பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறி போராட்ட களத்திற்கு தோழர்கள் வந்தனர்.
போராட்டம் தொடரும் செய்தி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மூலம் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருக்கு தெரிவிக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர் தோழர் ஜானகிராமனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் பேசி கோரிக்கையை நிறைவேற்றுவதாக தெரிவித்தார். மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 2010 உயர் நீதிமன்ற ஆணைப்படி மின்சாரம் வழங்க ஒப்புதல் தெரிவித்து மின்வாரிய துறை மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு உடனடியாக தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
போராட்டம் இரவு 9 மணி வரை நடைபெற்றதால் மக்கள் போராட்ட பந்தலில் உணவு சமைத்து வைத்தனர். போராட்டத்தின் முடிவில் மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் முடிவு தெரிவிக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்ட பகுதி மக்கள் அங்கேயே உணவருந்தி விட்டு சென்றனர். போராட்டத்தை தோழர்கள் தினகரன், சீதா வழிநடத்தினர்.