COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, February 11, 2021

 

டிரம்புக்கு நடந்தது மோடிக்கு நடக்காதா?

எஸ்.குமாரசாமி

தேர்தலில் தோற்ற பின்பு டிரம்ப் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து இறங்க தயாராக இல்லை. கேபிடோல் ஹில்லில் டிரம்ப் ஆதரவாளர்கள் கூட்டம் அந்நாட்டு நாடாளுமன்ற கீழவை, மேலவை மீது தாக்குதல் நடத்தின.

பிளவுண்டிருந்த அய்க்கிய அமெரிக்க சமூகத்தின் பிளவுகளை பயன்படுத்தி கொண்டு, டிரம்ப், பிளவுகளை மேலும் தீவிரப்படுத்தினார். நாடு தழுவியதாக்கினர். ஆனால் அவர் இந்த தீய செயல்களை (மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்) அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவோம் என்ற கதையாடலை மய்யப்படுத்தியே செய்தார். அவர் சொன்ன அமெரிக்கா, வெள்ளை அமெரிக்கா, ஆண்களின் அமெரிக்கா, பொய்களின் அமெரிக்கா, வெறுப்பின் அமெரிக்கா.

கங்கை மைந்தன், பாரத மாதாவின் அருந்தவப் புதல்வன், இந்தியாவின் மேன்மைக்காக, உலக நாடுகளில் இந்தியா தனிச்சிறப்பு மிக்க இடம் பெறுவதற்காக, இந்தியாவின் புராதன பாரம்பரிய பெருமைகளை உலகம் உணரச் செய்வதற்காக, 21ஆம் நூற்றாண்டு ராமராஜ்யம், அதாவது இந்துராஷ்டிரா நிறுவப் போவதாக சொல்கிறார். ராம லட்சுமனணாக அம்பானி அதானியும், அனுமனாக மோடியும் இருப்பார்கள். மோடியின் இந்துத்துவ இதயத்துக்குள் நிச்சயம் அம்பானி அதானிக்கு மட்டுமே இடமுண்டு. சட்டப்படி இந்துக்கள் என அழைக்கப்படும் கோடான கோடி பேருக்கு இடம் கிடையாது.

அவர் இதயத்தில், நிச்சயமாக விவசாயிகளுக்கு இடம் கிடையாது. அவர்களுக்கு டெல்லியிலும் இடம் கிடையாது. நிலப்பிரபுத்துவ மன்னர் ஆட்சி காலம் போல், பேரரசர் மோடி,  டெல்லியை முற்றுகை தாங்கும் கோட்டையாக மாற்ற முயற்சிக்கிறார். தற்காலிகக் கோட்டை அல்ல, நிரந்தர கோட்டை. பேரரசர் தலைநகரை, தன் சொந்த நாட்டு மக்களிடமிருந்து, சோறு போடும் விவசாயிகளிடம் இருந்து (அன்னதாதா), கார்ப்பரேட் எஜமானர்களுக்காகப் பாதுகாக்கிறார்.

ஜனவரி 26 அன்று ஏதோ வன்முறை வெறியாட்டம் நடந்தது போல் ஒரு சித்திரம் தீட்ட பார்த்தார்கள். இரண்டு நாட்களுக்கு மேல் அந்தப் படம் ஓடவில்லை. கலவரம் செய்தவர்கள் சங்பரிவார நண்பர்கள் என அம்பலமானது. குஜராத் கலவரம், மசூதி இடிப்பு என கொலை, கொள்ளை, சூறையாடல் நடத்திய கும்பல், போராட்டக்காரர்களை  விவசாயிகளை களங்கப்படுத்துவதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

பணமதிப்பகற்றம், ஜிஎஸ்டி என மக்களை வாட்டி வதைத்த மோடி ஆட்சிக்கு, ஜனநாயக வாழ்வாதார உரிமைகள் பறிப்பு, நிறுவனங்கள் அரிப்பு என அவப்புகழ் பெற்ற மோடி ஆட்சிக்கு, கொரோனா காலத்தில் நாட்டின் 30 கோடி பேரின் மாத வருமானத்தை ரூ.3000க்குள் என முடக்கிப் போட்டுவிட்டு முகேஷ் அம்பானி மட்டும் ஒரு மணி நேரத்தில் ரூ.90 கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு தந்த மோடி ஆட்சிக்கு, முடிவு நெருங்குகிறது. எதிர்க்கட்சிகளின் பலவீனங்களை தாண்டியும் மக்கள் அவரை தோற்கடிக்க வாய்ப்பு உண்டு. அதனால்தான் ஊஈஐ பாரின் டெஸ்ட்ரக்டிவ் அய்டியாலஜி, அந்நிய அழிவு சித்தாந்தம்தான் விவசாயிகள் கிளர்ச்சியை உந்திச் செலுத்துகிறது, கிளர்ச்சியாளர்கள் என்ற புது புது மனிதர்கள் தோன்றி உள்ளனர் என்று பேரரசர் அரற்றுகிறார். மகுடம் மண்ணில் உருளும், சிம்மாசனம் தரையில் சரியும் காட்சி, பேரரசர் கண் முன் தோன்றுகிறது போலும்!

மோடியை எதிர்கொள்ள காங்கிரஸ் முன்களத்தில் இல்லை, சரிதான். சரத்பவார் கட்சிக்கு அவ்வளவு வலிமை இல்லை, சரிதான். முலாயமும் அகிலேஷ÷ம் மாயாவதியும் உத்தர பிரதேசம் தாண்டி வர முடியாது. லல்லு தேஜஸ்வி கட்சி பீகார் தாண்ட முடியாது, சரிதான். திமுக உள்ளிட்ட தென்னிந்திய கட்சி கள், எதிர் அணிக்கு தலைமை தாங்க முடியாது, சரிதான். சரியான நம்பகமான மாற்றாக இடதுசாரி அரசியல் கட்சிகள் நாடு தழுவிய கட்சிகளாகவோ, மிகப்பெரிய செல்வாக்கு கொண்டவர்களாகவோ இல்லை. இதுவும் சரிதான்.

ஆனால் அசைக்கப்பட முடியாதவர்கள், வெல்லப்பட முடியாதவர்கள் என அழைக்கப்பட்ட சர்வாதிகாரிகள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதை வரலாறு திரும்பத் திரும்ப காட்டியுள்ளது. இந்திரா காந்தி, பலவீனமான கதம்ப கூட்டணியால் தோற்கடிக்கப்படவில்லையா? ராஜீவ் காந்தியை தோற்கடித்து பிரதமரான வி.பி.சிங், அது வரை நாடறிந்த தலைவரா?  பத்தாண்டுகள் பிரதமராக இருந்த மன்மோகன், குஜராத் சங் தலைவரால், இந்தியாவில் தோற்கடிக்கப்படவில்லையா? நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அய்ந்தாண்டுகளுக்கு ஒரு முறை, ஆயிரம் சிக்கல்கள் இருந்த போதும், மக்கள் கையில் உள்ள ரகசிய வாக்கெடுப்பு என்ற ஆயுதம் மகத்தானதாகும்.

விவசாய நாடு ஏமாறாது. விவசாயிகள் ஏமாற மாட்டார்கள். தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டவர்கள். ஓரம் ஒதுக்கப்பட்டவர்கள் ஏமாற மாட்டார்கள். விவசாயிகள் வாழ்க்கையில் பிரம்மாண்டமான முன்னேற்றம் கொண்டு வரும் என்று சொல்லப்படும் விவசாய சட்டங்களை பேரரசின் அமைச்சர்கள் ஏன் ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்க சம்மதிக்கிறார்கள் என, நிச்சயம் மக்கள் சிந்திப்பார்கள். மக்களிடம் ஏன் மாமன்னருக்கு பயம், மக்களிடமிருந்து ஏன் பாதுகாப்பு என, மக்கள் சிந்திப்பார்கள். மாமன்னரை, கார்ப்பரேட் எடுபிடி இந்துத்துவ கும்பலை அப்படியே விட்டுவிட்டால்,  புரட்சியின் கதை இலக்கிய குரலான பெர்டோல்ட் ப்ரெக்ட் சொன்னதுபோல், நாளை, இந்த கும்பலே, மக்களை தேர்ந்தெடுக்கத் துவங்கிவிடுவார்கள். மக்கள் சிந்திக்கிறார்கள்.

மக்களே, வரலாற்றின், மாற்றத்தின் மகத்தான சக்திகள்.

டிரம்பை அய்க்கிய அமெரிக்க மக்கள் முறியடித்தது போல், நிச்சயம் மோடியையும் இந்திய மக்கள் முறியடிப்பார்கள்.

Search