COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, February 11, 2021

 

டாக்டர் அம்பேத்கர் பக்கம்

இல்லையெனில் சமத்துவ உரிமை மறுக்கப்பட்டவர்கள், இந்த சபை  கடுமையாக உழைத்து உருவாக்கிய அரசியல் ஜனநாயக கட்டமைப்பையே உடைத்தெறியலாம்.......

 (அரசியல் நிர்ணய சபையில் அரசியல் சாசனத்தின் மீது நடந்த விவாதங்களின் இறுதியில் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரை. நவம்பர் 25, 1949. பக்கம் 280 - 284, தொகுதி 30 பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு)

.........1950ஆம் ஆண்டு ஜனவரி 26ல் இந்தியா ஒரு குடியரசு நாடாக ஆகிவிடும். அதாவது அந்நாளிலிருந்து இந்திய அரசு மக்களுடைய, மக்களால் ஆன, மக்களுக்கான அரசாக இருக்கும்.

திரும்பவும் முன்பு தோன்றிய அதே எண்ணம் என் மனதை வருத்துகிறது. அதனுடைய ஜனநாயக அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு என்ன நேரப்போகிறது? அதைக் காப்பாற்றிக் கொள்ளுமா அல்லது மீண்டும் இழந்துவிடுமா? இதுதான் என் மனதில் முன்னதைப் போன்று இரண்டாவதாக என்னை கவலையுறுத்தும் சிந்தனை.                   

ஜனநாயகம் என்பது இந்தியா அறியாத ஒரு கோட்பாடல்ல. ஒரு காலத்தில் இந்தியாவில் பல ஜனநாயகக் குடியரசுகள் இருந்தன. மன்னர் ஆட்சிகள் இருந்த இடங்களில் கூட அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவோ அல்லது சில வரையறைகளுக்கு உட்பட்டவர்களாகவோ இருந்தனர். அவர்கள் எல்லையற்ற அதிகாரத்தைப் பெற்றிருக்கவில்லை. நாடாளுமன்றத்தையோ அல்லது நாடாளுமன்ற நடவடிக்கைகளையோ இந்தியா அறிந்திருக்கவில்லை என்று கூற முடியாது. பௌத்தர்களின் பிக்ஷ÷ சங்கங்களைப் பற்றிப் படிக்கும்போது நாடாளுமன்றங்கள் இருந்ததை அறிகிறோம். சங்கங்கள் நாடாளுமன்றங்களைப் போன்றதே. நவீன கால நாடாளுமன்ற நடைமுறைகளை சங்கங்கள் அறிந்திருந்ததுடன் அதை செயல்படுத்தியும் வந்திருக்கின்றன. சங்கங்களில் உறுப்பினர்களின் அமர்வு முறை பற்றியும், தீர்மானங்கள், பிரேரணைகள், கோரம், கொறடா, வாக்கு எண்ணிக்கை, இரகசிய வாக்களிப்பு, தீர்மானம், ஒழுங்குமுறை, கண்டனத் தீர்மானம், முன் தீர்ப்புத் தடை ஆகியவைகள் குறித்த விதிகள் இயற்றியிருந்தனர். சங்கங்களின் அமர்வுகளை நடத்த இந்த நாடாளுமன்ற விதி முறைகள் புத்தரால் செயல்படுத்தப்பட்டாலும், அந்தக் காலத்தில் நாட்டில் நடைமுறையில் இருந்த அரசியல் சட்டமன்றங்களின் விதிகளில் இருந்து இவர்கள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

  இந்த ஜனநாயக முறையை இந்தியா இழந்தது. இரண்டாவது தடவையாக அதை அது இழந்துவிடுமா? அது எனக்கு தெரியாது. இந்தியா போன்ற ஒரு நாட்டில் அது சாத்தியமே. ஜனநாயகம் நெடுங்காலமாக பழக்கத்தில் இல்லாமல் இருந்ததால் அது ஒரு புதுமையாகவே இருக்கிறது. ஜனநாயகம், சர்வாதிகாரத்துக்குப் பணிந்து விடக்கூடிய அபாயம் உள்ளது. புதிதாகப் பிறந்துள்ள இந்தக் குடியரசுத் தனது ஜனநாயகத் தோற்றத்தை வைத்துக் கொண்டு யதார்த்த செயல்பாட்டில் ஒரு சர்வாதிகார அமைப்பாக மாறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. ஜனநாயகம் பற்றி மக்களின் சிந்தனையில் தீவிர மாற்றம் ஏற்பட்டால் இரண்டாவதாகக் கூறப்பட்டது நடைபெறக்கூடிய வாய்ப்பின் அபாயம் அதிகமாக உள்ளது.

தோற்றத்தில் மட்டுமல்லாது உண்மையிலேயே ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? முதலாவது, நமது சமூக மற்றும் பொருளாதார நோக்கங்களை அடைவதற்கு, அரசியல் சட்ட முறையை நாம் உறுதியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய முடிவாக உள்ளது. அதன் பொருள் ரத்தக்களரியான புரட்சி முறையைக் கைவிட வேண்டும்.  சட்டமறுப்பு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், சத்தியாகிரகம் ஆகிய முறைகளைக் கைவிட வேண்டும். பொருளாதார மற்றும் சமூக லட்சியங்களை அரசியல்  சட்ட முறையில் அடைவதற்கு வாய்ப்பில்லாத போது தான் அரசியல் சட்ட சம்பந்தமற்ற முறையைக் கையாளுவது நியாயமாக இருக்க முடியும். ஆனால் அரசியல் சட்ட ரீதியாக வாய்ப்புகள் இருக்கும்போது இம்மாதிரியான அரசியல் சட்டத்திற்கு புறம்பான வழிமுறைகள் நியாயமற்றதாகும். முறைகள் எல்லாம் கட்டுப்பாடு இழந்த அரசியல் குழப்ப நிலையின் இலக்கணமே. எவ்வளவு விரைவில் இதை உதறித் தள்ளுகிறோமோ அந்த அளவுக்கு நமக்கு நல்லது.

 இரண்டாவதாக, ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டுள்ளவர்களுக்கு  ஜான் ஸ்டூவர்ட் மில் விடுத்துள்ள எச்சரிக்கையை நாம் கடைபிடிக்க வேண்டும். அதாவது "தங்களுடைய சுதந்திரத்தை பெரிய மனிதரின் கால்களில் அர்ப்பணித்து விடக் கூடாது அல்லது ஜனநாயக அமைப்புகளை குலைப்பதற்கு அவருக்கு அதிகாரம் அளிக்கும் அளவுக்கு அவரிடம் நம்பிக்கை வைத்து விடக்கூடாது "நாட்டுக்காக வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த பெரிய மனிதர்களிடம் நன்றியுடன் இருப்பது எந்த விதத்திலும் தவறாகாது. ஆனால் இதற்கு ஒரு வரம்பு உள்ளது. அய்ரிஸ் தேச பக்தரான டேனியல் ஓ கன்னல் குறிப்பிட்டது போல் தன்னுடைய சுயமரியாதையை இழக்கும் அளவுக்கு எந்த மனிதனும் நன்றியுடையவனாக இருக்க முடியாது. தன் கற்பை இழக்கும் அளவுக்கு எந்தப் பெண்ணும் நன்றியுடையவளாக இருக்க முடியாது. தன்னுடைய சுதந்திரத்தை இழக்கும் அளவுக்கு எந்த நாடும் நன்றியுடையதாக இருக்க முடியாது. மற்ற நாடுகளைவிட இந்தியா போன்ற நாட்டிற்குத்தான் இந்த எச்சரிக்கை அவசியமாகிறது. இந்தியாவில்தான் இறைவழிபாடு என்றழைக்கப்படும் பக்தி அல்லது தனிநபர் வழிபாடு, இந்த உலகின் வேறு எந்த நாட்டின் அரசியலிலுள்ளதையும் விட அரசியலில் பெரும் பங்கு வகிக்கிறது. மத சம்பிரதாயங்களில் ஆத்மாவின் விடுதலைக்கு பக்தி ஒரு மார்க்கமாக இருக்கலாம். ஆனால் அரசியலில், பக்தி அல்லது தனிநபர் வழிபாடு, சீரழிவுக்கு ஒரு நிச்சயமான பாதை ஆகும். அத்துடன் அது இறுதியில் சர்வாதிகாரத்துக்கே இட்டுச் செல்லும்.

மூன்றாவது விசயம் என்னவென்றால், அரசியல் ஜனநாயகத்துடன் மனநிறைவு அடைந்துவிடக் கூடாது. நமது அரசியல் ஜனநாயகத்தை ஒரு சமூக ஜனநாயகமாகவும் மாற்ற வேண்டும். சமூக ஜனநாயக அடிப்படையின்றி அரசியல் ஜனநாயகம் நீண்டு நிலைத்திருக்க முடியாது. சமூக ஜனநாயகம் என்றால் என்ன? சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவைகளை வாழ்க்கையின் கோட்பாடுகளாக அங்கீகரிக்கும் ஒரு வாழ்க்கை முறை அது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவைகளைக் கொண்ட இந்த மும்மையின் தனி பகுதிகளாக அவைகளைப் பிரிக்க முடியாது. இந்த மூன்றும் ஒன்றாக இணைந்துள்ளன. அதாவது ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிப்பது ஜனநாயகத்தின் அடிப்படையையே தகர்ப்பதாகும். சுதந்திரத்தை சமத்துவத்திலிருந்து பிரிக்க முடியாது. அதே போன்று சமத்துவத்தில் இருந்து சுதந்திரத்தைப் பிரிக்க முடியாது. சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றிலிருந்து சகோதரத்துவத்தைப் பிரிக்க முடியாது. சமத்துவம் இல்லாத சுதந்திரம் சிலரின் மீது பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தைத் தோற்றுவிக்கும். சுதந்திரம் இல்லாத சமத்துவம் தனிப்பட்டவரின் முன் முயற்சியை அழித்துவிடும். சகோதரத்துவம் இல்லாத சுதந்திரமும் சமத்துவமும் செயல்களின் இயற்கையான போக்காக இருக்க முடியாது. அதைச் செயல்படுத்த ஒரு காவல் அதிகாரி தேவைப்படுவார். இந்திய சமுதாயத்தில் இரண்டு விஷயங்கள் இல்லாதிருக்கும் உண்மையை ஏற்றுக் கொள்வதிலிருந்து நாம் ஆரம்பிக்க வேண்டும். அதில் ஒன்றுதான் சமத்துவம். சமுதாய நிலையில் சமத்துவமற்ற, தரவாரியான கோட்பாட்டைக் கொண்ட ஒரு சமுதாயமே இந்தியாவில் உள்ளது. சிலருக்கு உயர்ந்த அந்தஸ்தும் சிலருக்குத் தாழ்ந்த நிலையுமே அதன் பொருள். பொருளாதார நிலையில் சிலருக்கு அளவிடற்கரிய செல்வமும் சிலருக்கு தாங்க முடியாத வறுமையில் வாழ வேண்டிய நிலையும் கொண்டது நமது சமுதாயம். 1950ஆம் ஆண்டு 26 ஜனவரி அன்று ஒரு முரண்பாடான வாழ்க்கை முறையில் நுழையப் போகிறோம். அரசியலில் சமத்துவமும், சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில் சமத்துவமற்ற நிலையிலும் இருப்போம். அரசியலில் ஒருவனுக்கு ஒரு வாக்கு என்ற கோட்பாட்டை அங்கீகரிப்போம். ஒரு வாக்கு ஒரே வித மதிப்பு என்று இருக்கும். நமது சமுதாய மற்றும் பொருளாதார வாழ்க்கையில் நமது  பொருளாதார சமூக கட்டமைப்பின் காரணமாக எல்லோரும் ஓர் விலை, ஓர் நிறை என்ற கோட்பாட்டை தொடர்ந்து மறுத்து வருவோம். எவ்வளவு காலம் இந்த முரண்பாடான வாழ்க்கையைத் தொடர்வோம்? நமது சமுதாய மற்றும் பொருளாதார வாழ்வில் சமத்துவத்தை எவ்வளவு காலம் மறுக்கப் போகிறோம்? நீண்ட காலம் அதைத் தொடர்ந்து மறுத்தால், நமது அரசியல் ஜனநாயகத்துக்கு ஆபத்தை விளைவிப்பதிலிருந்து தப்ப முடியாது. நாம் விரைவில் இந்த முரண்பாடுகளை நீக்க வேண்டும். இல்லையெனில் சமத்துவ உரிமை மறுக்கப்பட்டவர்கள், இந்த சபை  கடுமையாக உழைத்து உருவாக்கிய அரசியல் ஜனநாயக கட்டமைப்பையே உடைத்தெறியலாம்.......

Search