கூண்டுக்கிளியாகி, ஏவலாளியாகி, களவாளியாகி
குற்றவாளியாகப் போகும் மத்திய புலனாய்வு துறை
காவல்துறை விசாரணையில் நம்பிக்கையில்லை, சிபிசிஅய்டி விசாரணையில் நம்பிக்கையில்லை, வழக்கை மத்திய புலனாய்வு துறைக்கு (சிபிஅய்) மாற்றுங்கள் என்று குரல்கள் எழுப்பப்பட்டது ஒரு காலம். சிபிஅய் விசாரணையில் நம்பிக்கையில்லை என்று சொல்லப்படுவது மோடியின் காலம்.
காட்சி 1: ஜுன் 2020ல் முடிந்த நிதியாண்டில் ரூ.1.85 லட்சம் கோடிக்கு வங்கி மோசடிகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, பொதுத் துறை வங்கிகளில் 234%மும் தனியார் துறை வங்கிகளில் 500%மும் வங்கி மோசடிகள் அதிகரித்துள்ளன.
காட்சி 2: ஃப்ராஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் 14 பேர் மீது ரூ.3,600 கோடி வங்கி மோசடி தொடர்பாக 2020 ஜனவரியில் சிபிஅய் புகார் பதிவு செய்தது.
காட்சி 3: வங்கி மோசடிகளில் ஈடுபடும் நிறுவனங்களிடம் தொடர்ச்சியாக கையூட்டு பெற்றுக் கொண்டு அதற்கேற்றவாறு அந்த நிறுவனங்கள் மீதான புகார்களை கையாண்ட புகாரில் சிபிஅய் தனது அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. டில்லி மற்றும் டில்லியைச் சுற்றி அய்ந்து இடங்களில் 14 கட்டிடங்களில் சோதனைகள் நடந்துள்ளன.
காட்சி 4: சுரானா கார்ப்பரேசன் என்ற நிறுவனம் ஸ்டேட் பேங்க ஆஃப் இந்தியாவுக்கு தர வேண்டிய கடன் தொடர்பாக எழுந்த புகாரில் 2012ல் நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டு சிபிஅய் பாதுகாப்பில் இருந்த 400 கிலோ தங்கத்தில் 104 கிலோ தங்கம் காணவில்லை. இது தொடர்பான விசாரணையை சிபிசிஅய்டி நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 2020 டிசம்பரில் உத்தரவிட்டது. இதனால் தனது மானம் போகும் என்று சிபிஅய் சொன்ன பிறகும் இந்த உத்தரவு போடப்பட்டது. (சுரானா நிறுவனம் குற்றம் செய்யவில்லை என்று சிபிஅய் வழக்கு முடிந்தது).
இவை திரையில் வெளியிடப்பட்ட காட்சிகள். திரைக்குப் பின்னால் என்ன நடந்தது என்று நமக்குத் தெரியாது; இனி என்ன நடக்கும் என்றும் நமக்கு தெரிய வராது.
ஒரு பக்கம் பெருநிறுவனங்கள் வாங்கிய வங்கிக் கடன்கள் கோடிகோடிகோடியாய் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இதனால் வங்கிகள் நெருக்கடியில் தள்ளப்படும்போது மக்கள் பணத்தில் அந்த வங்கிகள் மீட்கப்படுகின்றன. மீண்டும் கடன், மீண்டும் தள்ளுபடி, மீண்டும் நெருக்கடி என்ற சங்கிலி முடிவதே இல்லை. மறுபக்கம் வங்கிகளை மோசடி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து வங்கிகளிடம் இருக்கும் மக்கள் பணத்தை மீட்பதற்குப் பதிலாக, அதைச் செய்ய வேண்டிய அரசு நிறுவனம், அம்மணமாக நிற்கிறது. எல்லா வழிகளிலும் மக்கள் பணம் கொள்ளை போவதை உறுதி செய்வது மட்டுமே தனது கடமை என்பதில் பாஜக அரசு உறுதியாக இருக்கிறது.
சிபிஅய்க்குதான் என்ன மரியாதை. அதன் அதிகாரிகளுக்குத்தான் எவ்வளவு அதிகாரம், மக்கள் பணத்தில் சலுகைகள், வசதிகள்.... என்ன மிரட்டல், என்ன உருட்டல்.... எல்லாம் வெறும் காற்றடைத்தப் பை.
காங்கிரசின் கூண்டுக்கிளி என்று பாஜக விவரித்த சிபிஅய், பாஜகவின் கைகளில் அரசியல் எதிரிகளை பழிவாங்கும் ஏவலாளியாக மாற்றப்பட்டது. சிபிஅய்யின் பெரிய இடங்களில் கோடிகளில் கைமாறுவதை, புரள்வதை பார்ப்பவர்களுக்கு, சிறிய இடங்கள் லட்சங்களில் புரளக் கூடாதா என்று ஆசை வருகிறது. தங்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட தங்கத்தின் எடையை சற்று குறைக்கிறார்கள். குற்றவாளிகளாக காட்சி தருகிறார்கள்.
அரசு நிறுவனங்கள் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை, மரியாதை அனைத்தையும் குறைத்து, குலைத்து அவை ஒடுக்குமுறை அரசின் கருவிகளே என்று தொடர்ந்து அம்பலப்படுத்தும் பாஜகவுக்கு நன்றி சொல்லாம்.