COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, March 2, 2021

 

ஆர்.வித்யாசாகர்

பெண் விடுதலை எப்போது?

 

நாம் 21ம் நூற்றாண்டுக்குள் நுழைந்து இரண்டு பத்தாண்டுகளை கடந்து விட்டோம். விஞ்ஞானத்திலும் தகவல் தொடர்பிலும் பிரம்மாண்டமான வளர்ச்சிகள். ஆனால் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் ஆணாதிக்க சமூக அமைப்பில் பெண்களின் நிலையில் மாற்றம் என்பது நத்தையைவிட மெதுவாக நகர்கிறது.

பெண்களுக்கு  விடுதலை கிடைத்துவிடக்கூடாது என்பதில் சமூக, பொருளாதார, அரசியல் அமைப்புகள் அனைத்தும் எதிர்திசையில் வேகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறன்றன.  பெண் விடுதலைக்கான முன்னெடுப்புகளையெல்லாம் ஏதோ ஒரு விதத்தில் உள்வாங்கிக்கொள்கிறது ஆணாதிக்க சமூகம். வெளி அலங்காரத்திற்காக சில சலுகைகளை மட்டுமே அறிவிக்கும் இச்சமூகம்  நடப்பு நிலைமைகளை தக்கவைத்துக்கொள்கிறது.

1913ல் துவங்கி, 1977ல் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்ததிலிருந்து, சர்வதேச பெண்கள் தினம், உலகில் பல்வேறு நாடுகளில், வருடா வருடம் அனுசரிக்கப்படுகிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற மாமேதை மார்க்ஸின் கூற்றிற்கு இணங்க பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. ஆனால் அவை பெண் முழுவதுமாக விடுதலை அடைய ஏற்றதாக இருக்கிறதா என்பதுதான் கேள்வி. அங்கும் இங்குமாக, பல போராட்டங்களுக்குப்பிறகு, சாதனை பட்டியலில் இடம்பெற்ற பெண்கள் சிலர் உண்டு. ஆனால் பெண்களை பொதுவாக அடிமைப்படுத்தும் ஆணாதிக்க சிந்தனைகள் சமூகத்தில் இறுகிப்போயிருப்பதால் பெண் விடுதலைக்கான போராட்டங்கள் உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

இந்தியாவில், பதிவு செய்யப்பட வரலாற்று காலம் தொட்டு, பெண்களுக்கு ஆண்கள் மீதான சார்பு நிலையும் , அடிபணிந்து செல்லவேண்டிய நிலையும்  ஏதோ ஒரு வடிவில் ஆழமாக தக்கவைக்கப்பட்டிருக்கிறது.  தற்காலத்தில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கும், பெண் சிசு/கருக்  கொலைகள்,  வரதட்சிணை, பெண் குழந்தைகள் திருமணம், விதவைகள் மறுமணம் செய்வதற்கான சமூகத்தடைகள், சொத்துரிமை மறுப்பு, பெண்கள் சுதந்திரமாக செயல் பட உள்ள தடைகள், பெண்களையும் ஆண்களின் உடமைகளாக கருதுவதால் ஏற்படும் சாதி ஆணவக்கொலைகள் போன்றவையே பெண் விடுதலைக்கு நாம் பயணம் செய்யவேண்டிய தூரம் எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பதை நமக்கு உணாத்துகிறது. உயர் சாதி ஹிந்து மதத்தில் கடைப்பிடிக்கப்பட்ட மேற்கூறிய கொடுமைகள், அனைத்து சாதிகளிலும், வர்க்கங்களிலும், ஏன் அனைத்து மதங்களிலும் கூட பல்கிப் பெருகியுள்ளது. சமூகத்தில் ஆணாதிக்க சிந்தனை என்பது மிக ஆழமாக வேரூன்றி இருப்பதன் விளைவாக உருவாவதுதான் இந்த சூழல். இதற்கு எதிர்வினை ஆற்றுவதற்கு பதிலாக, சமூக நடைமுறைகளும், நாட்டில் உள்ள கல்வி முறையும், இதர அனைத்து நடைமுறைகளும், சிறுவயது முதலே ஆணாதிக்க சிந்தனைகளை உரம் போட்டு வளர்க்கின்றன.

இதுபோன்ற பிற்போக்கு சூழலை மேலும் மோசமாக்குகிறது ஒன்றியதிதிலும் பல மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் வகுப்புவாத பாசிச பா.ஜ.க. அரசு. பெண்களை கேவலமாகவும், அடிமைகளாகவும் சித்தரிக்கும் மனுதர்ம உள்ளடக்கங்களை  மீண்டும் சமூகத்தில் நிறுவ முயற்சிக்கிறது. பெண்கள் ஆண்களுக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற பொருள்படும்படி பல பா.ஜ.க. அமைச்சர்களும் சங்கிகளும் வெளிப்படையாகக் கூறிக்கொண்டிருக்கின்றனர். இவை பெண்களின் சமூக பொருளாதார அரசியல் நிலைமைகளை மேலும் பின்னுக்கிழுக்கக் கூடிய ஆபத்தானவை. தாய் கருவிலிருக்கும் பொழுதிலிருந்து இந்த உலகில் பிறந்து (பிறக்க விட்டால்) அவர்களுடைய இறுதி நாட்கள் வரை  பெண்கள் சந்திக்கும்  பாகுபாடுகளும், கொடுமைகளும் ஏராளம்.

இந்தியாவில் பெண்களுடைய இன்றைய நிலை என்ன?

பெண்ணாகப் பிறப்பதே பாவம்

தர்மபுரியில் என்னுடைய நண்பர் ஒருவருக்கு திருமணமாகி முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இரண்டாவதாக இரட்டை குழந்தைகள். இரண்டும் பெண் குழந்தைகள். குழங்தையை பார்க்க வரும் உறவினர்கள் அனைவருக்கும் வருத்தம். ஒரு வயதான பெண்மணி  என் நண்பரை பார்த்து கூறினார்,

"நீ ஒரு ஈ எறும்புக்குக்கூட கெடுதல் செய்ய மாட்டியே, உனக்குப்போய் இப்படி ஆயிடுச்சே, இப்பத்தான் முதல்லயே பாத்து வேண்டான்னா கலைக்கறதுக்கு பல வழி இருக்கே, இது ஏதும் உனக்கு தெரியலயாட்டிருக்கு"  என்றார். என்னுடைய நண்பர் ஆணாதிக்க சிந்தனையை எதிர்த்து போராடிக்கொண்டிருப்பவர் என்பதால் மிக மகிழ்ச்சியுடன் அந்த பெண் குழந்தைகளை நன்றாக வளர்த்துக்கொண்டிருக்கிறார். ஆனால் பொதுவாக சமூகத்தில் பெண்குழந்தைகள் வரவேற்கப்படுவதில்லை. ஆண் குழந்தைகள்தான் உண்மையான வாரிசு என்ற எண்ணம் ஆணாதிக்க கலாச்சார ஆதிக்கத்தால் புரையோடிப்போயிருக்கிறது. சமீபத்தில் கூட உசிலம்பட்டியில் பிறந்து 31நாட்களே ஆன ஒரு பெண் குழந்தையை கொலை செய்ததாக அக்குழந்தையின் பெற்றோர்களும் தாத்தவும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

21ம் நூற்றாண்டில் மாற்றம் எப்படி வந்திருக்கிறது என்றால் பெண் குழந்தைகள் பிறந்த பிறகு கொல்வதற்கு பதிலாக கருவிலேயே கொல்வது என்பது அதிகரித்திருக்கிறது. ஐ.நா .சபையின் பெண்கள்  அமைப்பின் சார்பில், 2020ல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், இந்தியாவில் பிறக்கவேண்டிய பெண்குழந்தைகளில் மூன்றில் ஒரு பெண் குழந்தை காணாமல் போகிறது. 2013 முதல் 2017 வரை மொத்தம் 4,60,000 பெண் குழந்தைகள் இந்தியாவில் கருக்கொலை மூலமாகவோ, சிசுக்கொலை மூலமாகவோ காணாமல் அடிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே மிக அதிகமாக இந்தியாவில்தான் இது நடக்கிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது. ஒவ்வொரு நிமிஷமும் இந்தியாவில் ஒரு பெண் குழந்தை கருவிலேயே கலைக்கப்படுவதாக வேறு ஒரு அறிக்கை கூறுகிறது.

1994ல் இந்தியாவில் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அது கருவில் உள்ள சிசு ஆணா பெண்ணா என்று அறிந்து கொள்ள ஊடுருவல் படம் (ஸ்கேனிங்) செய்வதை தடை செய்யும் சட்டம். இதற்கு 2002ல் மேலும் கடுமையான தண்டனையளிக்கும் சட்ட திருத்தமும் கொண்டுவரப்பட்டது. ஆனால் தொடர்ந்து பெண்குழந்தைகள் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து கொண்டே இருக்கிறது. 1991ம் ஆண்டில் 0 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளில் 1000 ஆண்  குழந்தைகளுக்கு 945 பெண்குழந்தைகள் இருந்தனர். இது 2001ல் 927 ஆகவும், 2011ல் 918 ஆகவும் குறைந்து கொண்டிருக்கிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 850ற்கும் குறைவான பெண் குழந்தைகளே உள்ளனர். டெல்லியில் 871, உ.பி.(902)  குஜராத் (890) மற்றும் பல மாநிலங்களில் 900ற்கும் குறைவாகவே இருக்கிறது. இயற்கையாக பெண் குழந்தைகள் பிறந்தால் 1000 ஆண் குழந்தைகளுக்கு 952 பெண் குழந்தைகள் இருக்க வேண்டும் என்பது விஞ்ஞான ரீதியான ஆய்வு கூறுவது. பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவதற்கு  முக்கிய காரணம் பெண் கருக்கொலைகளும், ஆண் குழந்தைகளே வேண்டும் என்ற அருவருப்பான கலாச்சார பின்னணியே. ஆணாதிக்க சமூகத்தில் இத்தகைய சட்டங்கள் எந்த லட்சணத்தில்  அமல் படுத்தப்படுகின்றன என்பதற்கு குறைந்து வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையே சாட்சி..

பெண்களுக்கு இவ்வுலகில் பிறப்பதற்குக்கூட முழு உரிமை  இல்லாத ஒரு அருவருப்பான கலாச்சாரம் உள்ள சமூகமாக இருக்கிறது இந்தியா.

பெண்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்ததால் இந்தியாவின் பல பகுதிகளில் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைப்பதில்லை. இதனால் இளம் பெண்கள் கடத்தப்படுவதும், விலைக்கு வாங்கப்படுவதும், கட்டாய திருமணங்களும் அதிகரித்திருக்கின்றன.

தப்பி உயிர் பிழைத்து  வந்தாலும் பெண்களை சுமையாகவே நினைக்கிறது இந்த சமூகம் முடிந்தவரை சீக்கிரமே, 18 வயது நிறைவதற்கு முன்பே பெண்குழந்தைகளுக்கு  திருமணம் செய்து தங்களது "பாரத்தை" குறைக்க நினைக்கின்றனர் பெற்றோர்கள். பல்வேறு காரணங்களுக்காக பெரும்பாலும் கிராமப்புறங்களிலும் பெரு நகரங்களின் குடிசை பகுதிகளிலும் பெண்களை இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். பதின்ம வயதில் பெண்குழந்தைகள் கர்ப்பம் தரிப்பது இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. போதிய சத்துணவு இன்றி, கருவை சுமக்க தயாராகாத நிலையில் பல பெண்கள் பேறு  காலத்தில் இறந்து விடுகின்றனர். (இந்தியாவில் 50 % திற்கும் மேற்பட்ட பெண்கள் ரத்த சோகை நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதாக என்.எப்.எச் எஸ் (National Family Health Survey) 2019-20 கூறுகிறது). போதிய வளர்ச்சி இல்லாமல் பிறந்த குழந்தைகளும் இறந்து விடுகின்றன. 2019ல் இந்தியாவில் தன்னுடைய முதல் பிறந்தநாளை கூட தாண்டமுடியாமல் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 721000 (நாள் ஒன்றுக்கு சராசரியாக 1975 மரணங்கள்). இது நமது அண்டை நாடுகளான, இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், ஆகிய நாடுகளை விட அதிகம். இவை அனைத்திற்கும் காரணம் பெண்கள் அடிமைப்படுத்தப்படுவதுதான். 

பெண்களுக்கு இளம் வயது திருமணம் நடப்பதற்கு, ஆணாதிக்கத்தோடு சாதி ஆதிக்கமும் கலந்து கோலோச்சுவது ஒரு முக்கிய காரணம். உயர் நிலை பள்ளியிலும், மேல்நிலை பள்ளியிலும் பயிலும் பதின் பருவ பெண்கள் காதல் வயப்படுவதால் சாதி ஆதிக்கம் மீறப்படுகிறது. காதல் என்ற சொல் காதில் விழுந்தாலே பெண்களை பள்ளியிலிருந்து நிறுத்தி திருமணம் செய்வது அதிகமாக நடக்கிறது. சாதியை மீறி திருமணம் செய்தால் ஆணவக்கொலை. 1098 என்ற குழந்தைகள் உதவி தொலைபேசிக்கு இளம் வயது திருமணத்தை நிறுத்தக்கேட்டு வரும் அழைப்புகளில் பெரும்பாலும் திருமணத்திற்கு ஆட்படுத்தப்படும் பெண்கடமிருந்தோ  அல்லது அவர்களுடைய வேற்று சாதி காதலர்களிடமிருந்தோ தான்  வருகின்றன. சாதி இழவிற்குள் பெண்களை சிறை வைப்பதற்காகவும் இளம் வயது திருமணங்கள் நிறைவேற்றப்படுகிறன்றன.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 150,000 பெண் குழந்தைகள் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். இது உலக அளவில் குழந்தை திருமணங்களில் மூன்றில் ஒரு பங்காகும் என்று யூனிசெப் பின் ஒரு அறிக்கை கூறுகிறது.   இந்தியாவில் 15 வயதிலிருந்து 19 வயது வரை உள்ள பெண்களில் 16% சதவிகிதம் பேர் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள். பெரும்பாலும் இவர்களுடைய வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, கல்வி வாய்ப்புகளை இழந்து, குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

 

பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

சிறுவயது பெண்குழந்தைகளுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை நம் அன்றாடம் செய்தித் தாள்களில் படிக்கிறோம். இங்கே, வெளியில்  நடக்கும் பாலியல் வன்முறைகளைவிட வீடுகளுக்குள் நடக்கும் வன்முறைகள் மிக அதிகம். வீட்டுக்குள் ஒரு பெண்ணை எப்படி அடித்தாலும் துன்புறுத்தி னாலும், அது பிறர் தலையிட முடியாத அவளின் குடும்ப விஷயமாகிவிடுகிறது. வீடுகளில்தான் ஆண்கள் மிக மோசமான ஆதிக்க உணர்வோடு நடந்துகொள்கின்றனர். தன் மனைவியிடம், மகளிடம், தாயிடம் கட்டற்ற அதிகாரத்தைச் செலுத்துகின்றனர். கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை அறியத் துடிப்பதில் தொடங்குகிறது, பெண் இருப்புக்கு எதிரான வன்மம்.

இந்தியாவில் 15 முதல் 49 வயதுள்ள பெண்களில் மூன்றில் ஒருவர் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதில் உடல் ரீதியான துன்புறுத்தல் மட்டுமின்றி பாலியல் துன்புறுத்தலும் அடங்கும். இந்த கொரானா ஊரடங்கு  காலத்தில் குடும்ப வன்முறை மிகவும் அதிகரித்துள்ளதாக பல அறிக்கைகள் கூறுகின்றன. வெளியிலும் சொல்ல முடியாமல், தீர்வும் இல்லாமல் லட்சக்கணக்கான உழைக்கும் பெண்கள் வேலை செய்யும் இடங்களில் பல விதமான வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். தமிழகத்தில் காவல் துறையில் உயர் பதவி வகிக்கும் பெண் அதிகாரிக்கே  சமீபத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தலை பற்றி நாம் அனைவரும் அறிவோம்.  "நானும் கூட" ("Me too”) என்ற இயக்கம் வேகமாக பரவியதற்கு அவர்கள் அனுபவிக்கும், அனுபவித்த வன்முறைகள்தான்  காரணம். வீடுகளில் பெண் உழைப்பு சுரண்டப்படும்விதம் மற்றும் சமையலறைகள் எப்படி பெண்களைச் சிறைப்படுத்துகின்றன என்பதை எளிமையான மொழியில் எடுத்துரைக்கும் சிறுகதை அம்பை எழுதிய "வீட்டின் மூலையில் ஒரு சமையல்  அறை ". இதில் கூறியுள்ளவை  பெரும்பாலான பெண்களுக்கு, குறிப்பாக நாள் முழுவதும் குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களுக்கு பொருந்தும். 

விவசாயத்தில் பெண்களின் நிலை

ஜனவரி 17, 2021 அன்று, இந்து தமிழ் நாளேட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய ஒரு கட்டுரையில், விவசாய அறிவியலாளர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களை மேற்கோள் கட்டி கூறியிருப்பது,

"பெண்கள்தான் முதன் முதலில் பயிர்களை வளர்த்து அதன் மூலம் கலையும் அறிவியலும் இணைந்த உழவை தொடங்கி வைத்ததாக சில வரலாற்று ஆசிரியர்கள் நம்புகிறார்கள், ஆண்கள் உணவைத்தேடி வேட்டையாட வெளியே சென்றபோது பெண்கள் தான் அவர்கள் வசித்த பகுதிகளில் வளர்ந்த செடிகளின் விதைகளை சேகரித்து உணவு, வீட்டு விலங்குகளுக்கான இறை, தீவனம், நார்கள், எரிபொருள் ஆகியவற்றை பெறும் நோக்கில் அவற்றை பயிரிடத்தொடங்கினர்".

இவ்வாறு விவசாயமே உருவாக முக்கிய காரணமாக இருந்த பெண்களின் நிலை இப்பொழுது எப்படி இருக்கிறது. ஏகப்பெரும்பான்மையான நிலங்களுக்கு ஆண்களே உடமையாளர்கள்.  கிராமப்புறங்களில் சுமார் 73% பெண்கள் விவசாய வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் வெறும் 12% பெண்கள்தான் நில உடமையாளர்களாக கணக்கிடப்பட்டிருக்கின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்புகளில், விவசாயிகள் என்பதில் உயிரற்ற எண்களாகக்கூட பெண்கள் பதிவு செய்யப்படுவதில்லை. விவசாயிகள் பெரும்பாலும் ஆண்கள்தான். 83%ற்கும் மேலாக ஆண்களுக்கே நிலத்தில் வாரிசு உரிமை அளிக்கப்படுகிறது. கிராமப்புறங்களிலும், ஏன் நகர்ப்புறங்களிலும்  கூட சொத்துரிமை அதிகமாக இருப்பது ஆண்களுக்கே. வீடுகள், இதர அசையா சொத்துக்கள் பெரும்பாலும் ஆண்களின் பெயர்களிலேயே பதிவு செய்யப்படுகிறது.  பெண்களுக்கு நிலஉடமையும் சரி வேறு எந்த சொத்துரிமையும் சென்றுவிடாமல் இருக்க இந்த ஆணாதிக்க சமூகம் மிகவும் அக்கறையுடன் இருக்கிறது.

அரசியலில் பெண்கள்

2008ல் இயற்றப்பட்ட 108வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மக்கள் அவையிலும், அணைத்து மாநிலங்களவை சட்ட மன்றங்களிலும் பெண்களுக்கு 33% இடங்கள் ஒதுக்கப்படடவேண்டும் என்பதாகும். ஆனால் இதுவரை இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்படவில்லை. விவசாய சட்டங்களை  விவாதமே இன்றி கொண்டுவந்த மோடி அரசு இந்த சட்டத்தை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 2019 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் வெறும் 14% மட்டுமே பெண்கள் (544 உறுப்பினர்களில் 78 பேர் மட்டுமே)  78 பெண்களில் 41 பேர் பா .ஜ .க வை சார்ந்தவர்கள். மொத்தத்தில் ஒரு சிலரைத்தவிர மற்ற பெண்கள் எல்லாம் ஆணாதிக்கத்துக்கு கட்டுப்பட்டவர்கள். இவர்கள் சுயமாக முடிவெடுப்பதில் பல தடைகள் உள்ளன. 73வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பினும், இங்கும் கூட ஆண்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது. சுதந்திரமாக செயல் படக்கூடிய பெண்கள் மிகச்சிலரே.

மொத்தத்தில் எந்த அரசியல் கட்சியும், இடதுசாரிகள் தவிர, இந்த கோரிக்கையை எழுப்புவதில்லை. அவர்களுடைய ஆணாதிக்கத்திற்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

மொத்தத்தில் ஒரு குண மாற்றத்தை கொண்டுவரும் அளவிற்கு பெண்களுக்கு எந்த துறையிலும் பிரதிநிதித்துவம் இல்லை. ஆணாதிக்க சுமையும் சாதிஆதிக்க சுமையும் பெண்களை எழ விடாமல் அமுக்குகிறது.

"பெண் அடிமைத்தனத்தை, ஆண் - பெண்களுக்கு இடையிலான பாலினப் பிரச்னையாக நாம் கருதுகிறோம். உண்மையில், அது ஒரு சமூகப் பிரச்னை. ஆண் ஆதிக்கக் கருத்தியலின் வேர், மதங்களில் இருந்து கிளம்பி சாதியில் கிளை பரப்பி நிற்கிறது"  என்பதை மிக அழகாகவும் ஆழமாகவும் "பெண் ஏன் அடிமையானாள்" என்ற புத்தகத்தில் பெரியார் விவரிக்கிறார்.

உழைப்பால் சுரண்டப்படும் மக்களும், சாதி ஆதிக்கத்தால் ஒடுக்கப்படும் மக்களும், இந்த பிரிவுகளிலுள்ள ஆண்கள் தங்களிடமுள்ள ஆணாதிக்க மனப்போக்குகளை உடைத்தெறிய முன்வரவேண்டும். பெண்களோடு கரம் கோர்த்து அவர்களின் விடுதலையை நோக்கி நகர வேண்டும். தற்சமயம் நடந்துகொண்டிருக்கும் விவசாய சட்ட எதிர்ப்பு போராட்டத்திலும், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களிலும் பெண்கள் வீரம் செறிந்த பங்காற்றியிருக்கின்றனர். அனைத்து துறைகளிலும் நிலைமையை மாற்றும் அளவிற்கு பெண்கள் சுதந்திரமாக செயல் படுவதற்கேற்ப நிலைமைகளில் மாற்றம் கொண்டுவரவேண்டும். அம்பேத்கர் கூறியது போல, "இழந்து போன உரிமைகளை மீட்டெடுக்க அந்த உரிமைகளை பறித்தவர்களின் மனசாட்சிக்கே  முறையீடு செய்வதைவிட விடாப்பிடியான போராட்டங்களின் மூலம் தான் நிறைவேற்ற முடியும். 

விண்ணில் பாதி மண்ணில் பாதி பெண்களுக்கு என அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முழு உரிமை கிடைக்கும்போதுதான்  உண்மையான பெண் விடுதலை என்பது சாத்தியமாகும்.

Search