சர்வதேச உழைக்கும் பெண்கள் தின சிறப்பிதழ்
2021, மார்ச் 8, சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தன்று
ஆண்கள் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி
நான்
- உடல்ரீதியான வேறுபாடு தவிர ஆண், பெண் சமம் என்று நான் கருதுகிறேன்.
- வரதட்சணை வாங்க மாட்டேன்.
- குடும்பத்திலும் பொதுவிலும் ஆண் பெண் சமத்துவத்தை கடைபிடிப்பேன்.
- ஆண் என்ற அதிகாரத்தின் அடிப்படையில், எனது குடும்பத்திலோ, வெளியிலோ, பணியிடத்திலோ எந்தப் பெண்ணையும் அவமதிக்கும் வகையில், துன்புறுத்தும் வகையில், அவர்களது ஊதியமில்லா உழைப்பை உறிஞ்சும் வகையில் பேசவோ, செயல்படவோ மாட்டேன்.
- என்னுடன் ஏதோ ஒரு வகையில் ஊடாட நேரும் பெண்களை சிறுமைப்படுத்தும் வகையில், புண்படுத்தும் வகையில், எனது பேச்சோ, செயலோ, அறிந்தோ, அறியாமலோ இருந்தால் உடனடியாக மன்னிப்பு கேட்பேன்.
- வீட்டில் பெண்கள் செய்யும் ஊதியமில்லா வேலைகளை மதித்து நடப்பேன். நான் சாப்பிட்ட தட்டு, டம்ளர் ஆகியவற்றை, எனது வீட்டில் உள்ள பெண்கள் சுத்தம் செய்யும் தரத்தில் நானே சுத்தம் செய்வேன். எனது உள்ளாடைகளை நானே துவைத்துக் கொள்வேன். இணையர் வேலைக்குச் செல்பவர் என்றால், வீட்டு வேலைகளில் சம பங்காற்றுவேன். இணையர் வெளியில் வேலைக்குச் செல்லாதவர் என்றால், எனது சமூக உழைப்பு, சமூக மாற்றத்துக்கான உழைப்பு ஆகியவற்றுக்கான நேரம் போக, வீட்டில் இருக்கும் நேரங்களில் வீட்டு வேலைகளில் சம பங்காற்றுவேன்.
- வீட்டு வேலைகள், குழந்தைகள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு என அனைத்து வேலைகளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவை என்பதை சொல்லிலும் செயலிலும் கடைபிடிப்பேன்.
- ஆண் என்கிற அதிகாரத்தின் அடிப்படையில் பெண்களை அடிக்க மாட்டேன். பாலியல் சீண்டல், பாலியல் துன்புறுத்தல், பாலியன் வன்முறை, குடும்ப வன்முறை போன்றவற்றை அனுமதிக்க மாட்டேன். பெண்கள் மீதான இது போன்ற வன்முறை நிகழ்வுகள் எனது கவனத்துக்கு வந்தால் சட்டரீதியாக, ஜனநாயகரீதியாக, அதற்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்வேன்.
- காதல் கொண்ட பெண் நிராகரித்தால், பிரிய நேர்ந்தால், பிரிய விரும்பினால், அதை ஏற்றுக்கொள்வேன். அதன் பிறகு அவருக்கு நேரடியாகவோ அலைபேசி மூலமோ சமூக ஊடகம் மூலமோ தொல்லை தர மாட்டேன்.
- மனைவியாக இருந்தாலும் காதலியாக இருந்தாலும் வேறு எந்த பெண்ணாக இருந்தாலும் அவரது வெளிப்படையான சம்மதம் இல்லாமல் அவரை உடலாலோ, சொற்களாலோ தீண்ட மாட்டேன். வேண்டாம் என்றால் வேண்டாம்தான்.
- ஆண், பெண் குழந்தை பாகுபாடு இல்லாமல் கல்வி, சொத்து ஆகியவற்றில் சம பங்கு இருப்பதை உறுதி செய்வேன்.
- நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்கள் சமமாக இடம் பெற அனைத்து விதங்களிலும் பாடுபடுவேன்.
- பணியிடங்களில் பெண்கள் உரிய இடைவெளியில் வேலை நேரத்தில் அமர்ந்துகொள்ள, மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் மாதம் இரண்டு நாட்கள் விடுப்பு பெற, வீட்டு வேலை சமுதாய வேலையாக மதிக்கப்பட்டு அரசு அதற்கு அங்கீகாரம் வழங்க, பெண்கள் சம வேலைக்கு சம ஊதியம் பெற, எங்கும் எதிலும் பெண்ணுக்கு சமத்துவம் இருக்க என்னால் ஆன அனைத்து வகைகளிலும் முயற்சிகள் எடுப்பேன். போராடுவேன்.
- ஆண் பெண் சமத்துவம் என்ற பொருளில், எனக்கு பொருந்துபவற்றை நான் செய்வதோடு, செய்யாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், நான் அறிந்த, நானும் வளர்க்கிற, நானும் பொறுப்பாக புதிய தலைமுறை ஆண்களுக்கு பிள்ளைப் பிராயத்தில் இருந்தே பெண் சமத்துவம் தொடர்பான விழுமியங்களை தவறாமல் கற்றுத் தருவேன்.
- ஆண் பெண் உறவில், திருமண உறவில் காலகாலமாக சமத்துவமின்மை நிலவும் பின்னணியில், உணர்வுரீதியாகவோ, வாழ்க்கைக்காகவோ, பெண் ஆணை சார்ந்து இருக்கும் நிலை மாற தனி வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் பாடுபடுவேன்.
- பெண்ணின் நிலையை வைத்துதான் சமுதாயத்தின் நிலை தீர்மானிக்கப்படும், பெண்ணின் விடுதலையில்தான் மானுட விடுதலை உள்ளது என்ற உணர்வோடு எனது நடவடிக்கைகளை, சிந்தனை முறைகளை முறைப்படுத்திக் கொள்வேன்.