தி கிரேட் இண்டியன் கிச்சன்
ஒளிர்ந்து மின்னும் உன் முகம்
என்றென்றும் இப்பூமியை ஆளட்டும்
எஸ்.குமாரசாமி
தி கிரேட் இன்டியன் கிச்சன் படத்துக்கு விமர்சனம் எழுதத் துவங்கினேன். அப்போது, ஜீன்ஸ், டி சர்ட், ஷூ, கூலிங்கிளாஸ் போட்டு, தலித் இளைஞர்கள் 'நாடகக் காதல்' செய்து உயர்சாதிப் பெண்களை கடத்தி சீரழிக்கிறார்கள் என்று பேசி வரும் பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் காய் நகர்த்துதல்கள் மீது தாக்கம் செலுத்தும் கட்சியாகி உள்ளது என்ற செய்தி, தீயாய்ச் சுட்டது.
இந்துத்துவம் என்றால் சாதியாதிக்கம். அது பெண்ணடிமை முறை. சாதி ஆட்டிப்படைக்கும் யதார்த்தமாக உள்ளது. ஆதிக்கக் கொலைகள் நின்றபாடில்லை. இந்துத்துவ சாதிய சக்திகள் திருமாவளவனை குறிவைத்துத் தாக்கும்போது, தலித் எதிர்ப்பு வன்மம் வெளிப்படுகிறது. 'பெண் வெறுப்பு' தமிழ்நாட்டில் மானுடத்தின் சரிபாதியை கீழ்மைப்படுத்துகிறது.
சாதியின் புனிதம் பெண்ணுடலால் முடிவு செய்யப்படுகிறது. பெண்ணுடலுக்கு இரட்டை தீட்டு. தெய்வ சன்னதி எனப் போற்றப்படும் பெண்ணின் உடலை, சாக்கடையாக்கி இழிவுபடுத்த, மாதவிடாய் உதிரப் போக்கு தீட்டு காரணமாகிறது. மறுபக்கம் உயர்சாதி பெண் உடல். கீழ்சாதி ஆண்கள் 'தீண்டி', அதன் புனிதம் கெட்டு 'தீட்டாகி'விடக் கூடாது.
மேற்கு மாவட்ட மேல்சாதி கவுண்டர், தென்மாவட்ட மேல்சாதி முக்குலத்தோர் கட்சியான அஇஅதிமுக, சாதியாதிக்க பாமகவின், இந்துத்துவ பாஜகவின் துணை கொண்டு 2011, 2016 வெற்றியை 2021லும் சாதிக்க விழைகிறது.
காவல் தலைவர் நிலையில் உள்ள ராஜேஷ் தாஸ், பெண் காவல் கண்காணிப்பாளரை, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகிறார். அந்த பெண் அய்பிஎஸ் அதிகாரியை, ஒரு காவல் கண்காணிப்பாளர், ஒரு துணை கண்காணிப்பாளர், ஒரு காவல் ஆய்வாளர், ஆயுதம் ஏந்திய ஒரு காவலர் சேர்ந்து, வாகனத்தை நிறுத்தி, சாவியைப் பிடுங்கி, ராஜேஷ் தாசுடன் பேச வைக்கிறார்கள். தமிழ்நாட்டுப் பெண்கள் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்ட வேறு என்ன வேண்டும்?
பெண் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும் என்று பெரியார் கருத்துப் போர் தொடுத்த தமிழ்நாட்டில், பெண்ணின் நிலை அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளது.
பெண்களை அடிமையாக்குவதே திருமணம் என்றார் பெரியார். பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் இருப்பதே, பெண்ணின் உடல் நலத்துக்கும் மன வளர்ச்சிக்கும் நல்லது என்றார். பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால், 'உலகம் விருத்தியாகாது, மானுடம் விருத்தியாகாது' எனக் கூப்பாடு எழுந்தபோது, மானுடம் விருத்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து என்று கேள்வி எழுப்பினார்.
இன்று தமிழ்நாட்டில் திருமணமும் குடும்பமும்தான் மகிழ்ச்சி, பொறுப்பான குடும்பப் பெண்களே சமூக நிம்மதிக்கு அவசியம் என்ற கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது. இன்றைய திராவிட அரசியலில் சாதியும் ஆணாதிக்கமும் கோலோச்சுவது வரலாற்று சோகம்.
இந்தப் பின்னணியில் மலையாள படமான தி கிரேட் இன்டியன் கிச்சன், பண்பாட்டுரீதியான அதிரடி தாக்குதலே ஆகும். குடும்பம் மற்றும் திருமணத்தின் அடிப்படையான ஆண்மய்ய அதிகார உறவை படம் கேள்விக்குள்ளாக்குகிறது. தனிச்சொத்து உருவாகி, ஆண் வழியில் சொத்து கைமாறும் ஆண்மய்யக் குடும்பம் உருவாகி, தனிச்சொத்தையும் குடும்பத்தை யும் காக்கும் அரசும் ஒழுக்க நெறிகளும் உருவானபோது, ஆதி பாவம் தோன்றியது. அன்றே பெண்ணின் ஆதி தோல்வியும் நடந்தது.
பெண் விடுதலை பெற அரசியல், சமூக, பொருளாதார முனைகளில் தீவிரமான போராட்டங்கள் தேவை. புதிய சமூகம் கருக்கொள்ளும்போது, புதிய மனிதர்களும் உருவாகிறார்கள். புதிய மனிதர்கள், புதிய கருத்துகளால் செலுத்தப்படுகிறார்கள். புதிய கருத்துகள் உருவாக ஒரு மகத்தான பண்பாட்டு மாற்றம் வேண்டும். இங்குதான் கலை இலக்கியத்தின் பங்கு முன்வருகிறது. திரைப்படங்களை மதிப்பிட என்ன அளவுகோல்களை முன்வைப்பது? அவை பெறும் விருதுகளா? அவை குவிக்கும் வசூலா? இல்லை. அவை, பார்க்கும் மனிதர் சிந்தனையை, பண்படுத்துகின்றனவா? ஒரு படி உயர்த்துகின்றனவா? சமூகம், மானுடம், ஜனநாயகம் பற்றிய மேலான புரிதல் தருகின்றனவா? பழைய, காலாவதியாகியிருக்க வேண்டிய நிறுவனங்களை, நடைமுறைகளை பளிச்சென, பளீரென கேள்விக்குள்ளாக்குகின்றனவா?
தி கிரேட் இன்டியன் கிச்சன், ஆணாதிக்கத்துக்கு, காலாவதியாகியிருக்க வேண்டிய கருத்துகளுக்கு சவால் விடுகிற படம். அதே நேரம் மக்கள் திரள் ஊடகங்களிலும், சிறந்த விமர்சனங்களை பெற்றுள்ளது. திரும்பத்திரும்ப சமையலறை வந்தாலும், பார்வையாளர்களின் கவனத்தை இழக்காமல் படம் செல்கிறது. காத்திரமான (சீரியஸ்) திரைப்படத்தில் அன்பையும் காதலையும் ரசனையோடு சொல்லும் பாடல் வருகிறது. ஆண், பெண் நேசம், பரஸ்பர அன்பு, அதில் ரசனை, ஈர்ப்பு எல்லாமே சாத்தியம் என ஒரு பாட்டு சொல்கிறது.
ஒரு கட்டு ரகசியங்கள், நெருங்கி நில்
நான் உனக்கு சொல்கிறேன்
ஒரு கண் நிறைய குறும்புடன்
மறு கண் நிறைய வருத்தத்துடன்
அந்தக் கண்களின் வித்தைகளால்
நான் உன்னை திருடிவிட்டேன்
என்ன திருடினாய்
அழகைத் திருடினேன்
யாருடைய அழகை
பாட்டின் அழகை
எந்த பாட்டை
உனது பாட்டை
யாருடைய உனது
என்னுடைய நீ.
காட்டு எறும்பின் முணுமுணுப்பு... கருமர இசை
அவள் இதயத்தில் சலசலக்கிறது.
கடலின் மீது பெய்யும் மழை
அவள் மனதிலும் பெய்கிறது.
அவள் நனைகிறாள்.... பூமி குளிர்கிறது
அவள் படர்கிறாள்... மண் நனைகிறது
பாடல் பெருகுகிறது நடனம் வேகமாகிறது
எக்காள முழக்கம் எங்கும் ஒலிக்கிறது
அவள் அவிழ்ந்த கூந்தலுடன் நடனமாடுகிறாள்
அவள் வித்தைகளால் இதயத்தை திருடுகிறாள்
என்ன திருடினாய்
அழகைத் திருடினேன்
யாருடைய அழகை
பாட்டின் அழகை
எந்த பாட்டை
உனது பாட்டை
யாருடைய உனது
என்னுடைய நீ.
மலையாளத்தில் கொஞ்சும் அழகுடன் கட்டிப்போட்டு, வசப்படுத்தி திரும்பத்திரும்ப கேட்கவும் முணுமுணுக்கவும் வைக்கிறது.
கண்களில் கற்பனை மின்ன, வரதட்சணை தாண்டியும் தம்பதிகளாவது படத்தில் நடக்கிறது. ஒரு சைட் டிஷ்ஷா, இரண்டு சைட் டிஷ்ஷா விவாதம் இயல்பாக நடந்தாலும், பெண்ணுக்குக் காத்திருக்கும் பணிச்சுமைக்கு கட்டியம் கூறிவிடுகிறது. பெண்கள். உழைப்பு. வேலை. பெண்கள். சமையலறை. அது ஒரு குறியீடு. மோசமான பிரதமர் மோடி மகத்தான தலைவர் என்று அழைக்கப்படுவதுபோல், தனிமைச் சிறை போன்ற சமையலறையை மகத்தானது என்று சொல்லி வஞ்சப்புகழ்ச்சி செய்கிறார் இயக்குநர் ஜியோ பேபி.
வாழ்வா, சாவா என சாகசமான ஆபத்தான நிலை எதுவும் இல்லாமல், குடும்பமும் திருமண உறவும் பெண்ணின் தனித்தன்மையை, சுதந்திரத்தை, மகிழ்ச்சியை, இயல்பூக்கத்தை அணு அணுவாய் உறிஞ்சிவிடும் கொடூரம் என்பது நெஞ்சில் முள்ளாய் தைத்து நிற்கிறது. குறைவெளிச்ச அழுக்கு சமையலறை, அலுப்பூட்டும் இடுப்பொடிக்கும் ஓய்வே இல்லாமல் நாளும் தொடரும் அடுப்படி பணிகள், பெண்ணின் முழுமையாகும் ஆற்றலை அரித்துத் தின்று குறைவளர்ச்சிக்கு ஆளாவதை படம் காட்சிப்படுத்துகிறது. ஆண் அதிகாரம், ஆண் எதிர்ப்பார்ப்பு, ஆணின் ஒருதலைபட்ச நடவடிக்கைகள் இயல்பானவை போல், இயற்கையானது போல் காட்டப்பட்டாலும், காண்போரை முகம் சுளிக்க வைக்கிறது. தீட்டு பார்க்கும் ஆண்களும், மேலான, சொன்னபடி செய்யும் மனித மெஷினான பெண் இருக்கும்போது, வேறு மெஷின் எதற்கு என நினைத்து செயல்படும் ஆண்களும், நெளிய வைக்கிறார்கள்.
சபரிமலை அய்யப்பன், தீட்டான பெண்களை விலக்கக் கோரும் அய்யப்பன் என்ற பெண் வெறுப்பு ஒழுக்க நெறியை எதிர்கொள்ள முடியாமல் உச்சநீதிமன்றம் பின்வாங்கியபோது, கேரளத்தின் இரண்டு முதன்மை கட்சிகளும் சமரசம் செய்துகொண்ட பின்னர், தி கிரேட் இன்டியன் கிச்சன், எந்தத் தயக்கமும் ஊசலாட்டமும் இல்லாமல், பெண்கள் பக்கம், நீதியின் பக்கம் நிற்கிறது. அய்யப்ப சாமிகளுக்கு அழுக்கு நீரே தேநீராக, மாலையை கழற்றிவிட்டு அடிக்க வரும் கணவனுக்கு, அழுக்கு நீர் அபிஷேகம் செய்வதன் மூலம், ஆணாதிக்க ஒழுக்க நெறிகளுக்கு சம்மட்டி அடி தரப்படுகிறது.
படத்தின் மய்யப் பாத்திரமான பெண், வீட்டுச் சிறை கதவுகளை தகர்த்து, குடும்பம், திருமணத்தை வீசியெறிந்து போகும் வழியெங்கிலும், வேறுவேறு வித உழைப்பில் வேறுவேறு பெண்கள். பெண்ணும் உழைப்பும், மதிக்காதவர்களை மிதிக்கப் புறப்பட்டால், என்ன நடக்கும் என, படம் நம்மை சிந்திக்க வைக்கிறது. கதைநாயகரான பெண்ணின் தம்பி, தங்கையை தண்ணீர் கொண்டு வரச் சொல்லும்போது, பிரச்சனை, பெண்ணுக்கு சொல்லித் தருவது தொடர்பானது அல்ல, ஆணை அறிவுறுத்தி, பெண்களை சகமனிதராக மதிக்க வைப்பதே என யோசிக்க வைப்பதாகும் என படம் பளிச்சென உணர்த்துகிறது.
படத்தின் இறுதிப் பாடலையும் அழகிய நடனத்தையும் காணவும் கேட்கவும் நமக்கு நல்வாய்ப்பு கிடைக்க வேண்டும். கலையழகும் பொலிவும் சற்றும் குறையாமல், ஆளுமையோடும் கம்பீரத்தோடும் வரும் அந்தப் பாட்டு சிந்தனையை தூண்டுகிறது.
நீயே பூமியின் இசை
வீரம் உன்னில் வெளிப்படும்போது
நீயே பூமியின் வடிவமாகிறாய்.
அணைய மறுக்கும் ஒரு தீச்சுடராக...
நீ உலகுக்கு ஒளியூட்டுகிறாய்
உலக பந்தங்கள் அனைத்தில் இருந்தும்
நீ விடுதலை அடைவாய்.
பெண்ணே உன்னிலிருந்தே உயிர்கள் தோன்றுகின்றன
சொல்ல இன்னும் பல கதைகள் உண்டு
நேரம்தான் இல்லை
பெண்ணே முன்செல்
போதும் உன் துயரம்.
உன் பேரறிவுடன்
உன்னுள் உறையும் நீ விழித்துக்கொண்டால்
நீ பூமியெங்கும் பரந்துபாயும்
தடையற்ற நீரோடை ஆவாய்.
நீ ஒரு பெண்.
நீயே வலியவள்.
உன் காலடி மண்ணின் முன்னால்
சொர்க்கமும் மங்கி வெளிறி நிற்கும்
மகத்தான சூரியனைப் போல்
மின்னுகிற நட்சத்திரங்களைப் போல்
ஒளிர்ந்து மின்னும் உன் முகம்
என்றென்றும் இப்பூமியை ஆளட்டும்.
தி கிரேட் இன்டியன் கிச்சன், காணப்பட வேண்டிய, விரிவாக எடுத்துச் செல்லப்பட வேண்டிய படம். விரைவில் தமிழில் வர வேண்டும். ஆணாதிக்கத்தின் மீது, ஆண்மய்ய ஆதிக்க, அதிகார உறவுகள் மீது மேலும் மேலும் பலத்த அடிகள் விழ, இந்தப் படமும் பங்களிக்கிறது.
உச்சநீதிமன்ற கட்டப் பஞ்சாயத்து ஆணாதிக்க வன்முறையை
ஊட்டி வளர்க்காதா?
பாலியல் வன்முறை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். பாலியல் வன்முறை செய்தார், ஆசிட் ஊற்றுவதாக மிரட்டினார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை, அந்தப் பெண்ணை மணந்து கொள்கிறாரா என தலைமை நீதிபதி போப்டே கேட்டாராம். பாலியல் வன்முறை குற்றத்துக்கு தண்டனை, வாழ்நாள் முழுவதும் பாலியல் வன்முறையில் ஈடுபட அதிகாரபூர்வ உரிமம் வழங்குவதா?