COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, March 2, 2021

நிமிர்ந்த நன்னடையுடன் பெண்கள் முன்செல்கிறார்கள்
ஆனால், ரமணி தோற்றுப் போயிருந்தால்.....?


ஷோபா டே
பிப்ரவரி 20, 2021, டெக்கான் கிரானிக்கிள்


இந்த கணத்தில் துள்ளிக் குதிக்கும் உந்துதல் ஆட்கொள்கிறது.

முன்னாள் மத்திய அமைச்சர், பத்திரிகையாளர், எழுத்தாளர் எம்.ஜே.அக்பர் தொடுத்த அவதூறு வழக்கில் பிரியா ரமணி குற்றமற்றவர் என்று டில்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதை இந்தியா முழுவதும் இருக்கிற (உலகம் முழுவதும் கூட) கோடிக்கணக்கான பெண்கள் தங்களது தனிப்பட்ட வெற்றியாகவே பார்க்கிறார்கள். சமூகத்தில் 'பெரிய மனிதர்' என்று கருதப்படும் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவராக இருக்க முடியும், சில பத்தாண்டுகள் கழித்த பிறகு அது பற்றிய புகார் எழுப்பும் பெண்களை அப்படி புகார் எழுப்பியதற்காக தண்டிக்க முடியாது என்பதை, அனைவருக்குமே எப்போதும் நன்கு தெரிந்திருக்க வேண்டிய இந்த விசயத்தை, டில்லி நீதிமன்றத்தில் நீதிபதி ரவீந்திர துபே சொன்ன அந்த நிமிடங்கள்,  மெய் சிலிர்க்க வைக்கிற, வரலாற்றுச் சிறப்புமிக்க நிமிடங்கள்தான். இந்த வழக்கில் பிரியா ரமணிதான் குற்றம் சாட்டப்பட்டிருந்தார், தனது தரப்பு உண்மை நிறுவப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் அவர் துணிச்சலுடன் போராட வேண்டியிருந்தது... இது போன்ற பல வழக்குகளில் இருப்பதுபோல, சமூகத்தில் 'பெரிய மனிதர்களாக' கருதப்படும் ஆண்கள்தான் (எப்போதாவது பெண்கள்), அந்த சமூக அந்தஸ்த்தையே தவறாக பயன்படுத்தும் குற்றம் செய்தவர்களாக இருக்கிறார்கள்; அந்த 'சமூக அந்தஸ்தால்', எதுவும், யாரும் தம்மை தொட்டு விட முடியாது என்ற நம்பிக்கையில் பாதுகாப்பாக, திருப்தியாக இருக்கிறார்கள்.
பிரியா ரமணியும் அவரது வழக்கறிஞர் ரெபெக்கா ஜானும் அந்த தன்னம்பிக்கையை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்தனர். அந்தத் தீர்ப்பு சொல்லப்படும்போது, அவர்கள் ஆர்ப்பரிக்கவில்லை. அமைதியாக, கட்டுப்பாட்டுடன் இருந்தார்கள். (எம்.ஜே.அக்பரைச் சுற்றி காவல்துறையினர் பலர் இருந்தனர். பிரியாவின் பின் பெண்கள் அனைவரும் இருந்தனர்). பிரியா ரமணியின் இடத்தில் நான் இருந்திருந்தால், அலங்கோலமாக, முதிர்ச்சியில்லாமல், கட்டுப்படுத்தப்பட முடியாமல் நடந்து கொண்டிருப்பேன். ஒரு வெற்றி நடனம் ஆடியிருப்பேன். அல்லது அற்பமாக ஏதாவது செய்திருப்பேன். விடுதலை விசும்பல்களுக்கிடையில் ஊடகங்கள் மத்தியில் பேசியிருந்திருப்பேன். பெண்களுக்கு இந்த வெற்றி எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பிரியாவும் ரெபெக்காவும் தெரிந்து கொள்ள வேண்டும். இது வரையில் நடந்ததில் இதுதான் மிகவும் மதிப்புமிக்கது. பெண்கள் கணக்கில் கொள்ளப்பட வேண்டியவர்கள், அவர்களது குரல் கணக்கில் கொள்ளப்பட வேண்டும், அவர்களது வலி, வேதனை, அவமானம், அடிமைத்தனம் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று இந்தத் தீர்ப்பு சந்தேகத்துக்கிடமின்றி சொல்கிறது. இந்த எந்த விசயத்தையும் புறக்கணிக்கவோ, அவமதிக்கவோ முடியாது. காலம்காலமாக ஒரு பெண்ணின் 'நற்பண்பு' அவளது 'மதிப்பாக' பார்க்கப்படுகிறது. ஒரு பெண்ணின் 'தூய்மை' கெட்டுப் போனால், அவளது சந்தை மதிப்பு சரிகிறது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்ணாக இருந்தாலும் அது அப்படித்தான் நடக்கிறது. அந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர்தான் பொதுவாக வெற்றி பெறுகிறார். ஏனென்றால், ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பிறகு, அவள் சித்திரவதை செய்யப்பட்ட பிறகு, அவள் காட்டுமிராண்டித்தனத்துக்கு உட்படுத்தப்பட்ட பிறகு.... 'பெண்கள் எப்போதும் இதை விரும்புகிறார்கள்' என்று இந்த சமூகம் முடிவு செய்கிறது.
இந்த முக்கியமான தீர்ப்பால், திடீரென்று பெண்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கை பிறந்துள்ளது. நிமிர்ந்த நன்னடையுடன் அவர்கள் முன் செல்கிறார்கள். அவர்களுக்கு எப்போதும் இருக்கும் துணிவுடன் அவர்கள் முன்செல்கிறார்கள். அவர்கள் தரப்பு நியாயம் என்னவென்று இனி கேட்கப்படும் என்ற எண்ணமே இப்போதைக்கு போதும். பாதிக்கப்பட்டவர்களின் மவுனம், பலவீனம் என்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அவர்களது மவுனம், ஒப்புதல் என, உடந்தை என மோசமாக சொல்லப்பட்டது. தீர்ப்பில் வெளிப்பட்ட உணர்வுகளைக் கொண்டிருந்தாலும் தங்கள் பெண்கள் ஆதரவு கருத்துகளை பொது வெளியில் சொல்லத் தயங்கும் பல ஆண்களின் சார்பாக ரவீந்திர துபே பேசினார். மற்ற ஆண்களின் சீற்றத்துக்கு ஆளாக நேரும் என்ற அச்சத்தால், எந்த கேள்வியும் இன்றி பெண்களை இழிவுபடுத்தும், அடக்கி வைக்கும் உரிமையை ஆண்களுக்கு தந்திருக்கும் அதீத ஆண்தனமான, அதீத ஆணாதிக்க கட்டமைப்பு அவர்களை கேலி செய்யும் என்ற அச்சத்தால் அவர்கள் அப்படி தயங்குகிறார்கள்.
அதிகாரத்தில் (சக்திவாய்ந்த இடத்தில்) இருக்கும் ஆண்களின் (அதிகாரமிக்க (சக்திமிக்க) ஆண்கள் என்று நான் அவர்களை சொல்ல மாட்டேன்... ஏனென்றால் அவர்கள் அதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்கிறார்கள்) கலப்படமற்ற இறுமாப்பு அவர்கள் வீழ்த்தப்பட முடியாதவர்கள் என்று அவர்களை நம்ப வைக்கிறது. எம்.ஜே.அக்பர்  தனது ஆட்டத்தை அதீதமாக ஆடிவிட்டார்; அத்துடன் வல்லமை வாய்ந்த அவரது சட்டக் குழு அவருக்கு தவறான ஆலோசனை வழங்கிவிட்டது. பண பலம், அரசியல் பலம் கொண்டு பிரியா ரமணிக்கு எதிராக அனைத்தையும் திருப்பி அவரை நசுக்கிவிடலாம் என்று அவர் நினைத் திருக்கக் கூடும். யாரந்த பிரியா ரமணி...? ஒரு அரை வேக்காட்டு மூளை அப்படித்தான் இயங்கும். எம்.ஜே.அக்பர் திறமையான ஒரு தந்திரக்காரர் என்று ஒருவர் எதிர்ப்பார்த்திருக்கலாம். அவரது சமகால நண்பர்கள் சிலர் போலவே, தேடல் வட்டத்தில் இருந்து தப்பிக்க ஒளிந்திருந்து, மீ டூ இயக்கம் வடிந்துவிட காத்திருந்திருந்தார். இன்று அவர்கள் யார் என்றே யாரும் நினைவில் வைத்திருக்கவில்லை. யாருக்கும் அது பற்றி அக்கறையில்லை. அந்த வேகம் குறைந்துவிட்டது. மக்கள் அடுத்தடுத்த விசயங்களுக்கு சென்றுவிட்டார்கள். எதுவுமே நடக்காததுபோல் அந்த ஆண்களும் அடுத்தடுத்து தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் மீது குற்றம் சுமத்தியவர்கள் மறந்திருப்பார்கள், மன்னித்து கூட விடுவார்கள் என்று எதிர்ப்பார்த்து, சிலர் இன்னும் கூட பதுங்கியிருக்கிறார்கள். நீங்கள் கனவுதான் காண முடியும் கனவான்களே. பெண்கள் மறப்பதில்லை. மறப்பதே இல்லை. சிலருக்கு எதிர்த்துப் போராட முடியாமல் போகி றது. சிலர் போராட முடியாத அளவுக்கு வேதனையில் தள்ளப்படுகிறார்கள். ஆனால் எந்தப் பெண்ணும் தனது இறுதி மூச்சு உள்ள வரை, தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியவனின் முகத்தையோ, அவன் தொடுத்த வன்முறையையோ மறந்துவிடுவதில்லை.
ஆகச்சிறப்பான இந்தத் தீர்ப்பில், புகார் எழுப்புவதற்கு காலவரை இல்லை என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் விரும்பினால் சில பத்தாண்டுகள் கழித்துக் கூட புகார் எழுப்பலாம். அது எந்த வகையிலும் அந்த உண்மையை மட்டுப்படுத்திவிடாது.
'ஒரு பெண் குரல் எழுப்பினார் என்பதற்காக அவரை தண்டிக்க முடியாது' என்று நீதிமன்றம் சொன்னது. ஆனால், அவள் தண்டிக்கப்படுகிறாள். அதுவும் பாலியல் வன்முறை, படுகொலை என அதீத தண்டனை. அதன் பிறகு அவளது 'உரிமைகள்' பற்றி பேச்சு வருகிறது. என்ன உரிமைகள்....? நமது அரசியல்சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள உரிமைகள். ஆனால், பெண்கள் மிகவும் கொடூரமான துன்பத்துக்கு உள்ளாக்கப்படும்போது, இந்த உரிமைகள் பற்றி யாராவது அக்கறை கொள்கிறார்களா? 1990ல் தனது முதலாளியான எம்.ஜே. அக்பருடன் வெளியே சென்றிருந்தபோது, பிரியா ரமணி எங்கும் இருக்கிற உழைக்கும் பெண்களுக்காக பேசினார். அந்த நேரத்தில் இந்தப் பிரச்சனை பற்றி நான் நான்கு கட்டுரைகள் எழுதினேன். 'அமைதியாக இருக்கும்படி' என்னை அறிவுறுத்தினார்கள். அறிவுறுத்திய ஆண்கள் அனைவரும் எம்.ஜே.அக்பர் தலைமுறையினர். அவர்களில் சிலர் ஊடகங்களில் அதே போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, அதை மறுத்தவர்கள். மீ டூ இயக்கம் உச்சத்தில் இருந்தபோது, குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பல பாலிவுட் ஆண்கள் மீண்டும் படபிடிப்புகளுக்கு வந்துவிட்டனர். தற்போதைக்கு அவர்கள் பணிந்ததுபோல் இருக்கிறார்களே தவிர, அவர்கள் நிச்சயம் கூருணர்வு பெறவில்லை. பாலியல் துன்புறுத்தல் தவறு என்று அவர்கள் கருதவில்லை. மாறாக, தவறு செய்யும்போது, பிடிபட்டுவிடக் கூடாது என்று விரும்புகிறார்கள். பிரியா ரமணியின் வாயை அடக்க, அவர் மீது அவதூறு வழக்கு முயற்சி செய்தபோது, தன்னைப் பாதுகாக்கும் என்று எம்.ஜே.அக்பர் நம்பிய அதே அதிகாரப் பயணம்தான். ஒரு பெண் தன்னை களங்கப்படுத்துகிறார் என்று அந்தப் பெண் மீது வழக்கு தொடுக்கும் அளவுக்கு அந்த ஆணின் பெயர் களங்கமற்றதாக இருக்க வேண்டும். அதுதான் உண்மையிலேயே மதிப்புமிக்கது. எம்.ஜே.அக்பரின் பெயரும் புகழும் 'வானுயர்ந்தது' அல்ல என்று வழக்கறிஞர் ரெபெக்கா ஜான் முன் வைத்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது என்பதில் இருந்து இது தெரிகிறது.
'ஒரு பெண்ணின் வாழ்க்கையை, கவுரவத்தை விலையாக்கி பெயரும் புகழும் காக்கும் உரிமையை பாதுகாக்க முடியாது...' ஆம். எனவே, இந்தத் தீர்ப்பின் விளைவதிர்வுகளை நினைத்து அச்சத்தில் பதுங்கியிருக்கும் 'அதிகாரம் மிக்க' ஆண்களே, பதுங்கியிருங்கள். அடுத்தது நீங்கள்தான்!
'....ஆனால், பிரியா ரமணி தோற்றுப் போயிருந்தால்?

 

(பிரியா ரமணிக்கு எதிராக எம்.ஜே. அக்பர் 2018ல் தொடுத்த அவதூறு வழக்கில், பிரியா ரமணி குற்றம் செய்யவில்லை என்று பிப்ரவரி 18 அன்று டில்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. புகார் எழுப்பப்பட்டபோது, எம்.ஜே.அக்பர் மோடி அரசின் வெளியுறவு துறைக்கு மத்திய இணைஅமைச்சராக இருந்தார். மீ டூ இயக்கம் பற்றியெரிந்து கொண்டிருந்தது. பத்திரிகையாளராக இருந்தபோது, அவர் கீழ் பணியாற்றிய பெண்கள் பலரை அவரது அதிகாரத்தை பயன்படுத்தி பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக பிரியா ரமணி, தனக்கும் அது நேர்ந்ததாக 2018ல் ஒரு சுட்டுரை செய்தி வெளியிட, இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விசயத்தில் தனது பெயருக்கு பிரியா ரமணி களங்கம் கற்பித்துவிட்டார் என்று எம்.ஜே.அக்பர் நீதிமன்றம் போனார். இதனால் பிரியா ரமணி கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ள, பல பெண்கள் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு முன்வைத்தனர். எம்.ஜே.அக்பர் பதவி விலக நேர்ந்தது).

Search