COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, March 2, 2021

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் சட்டத்தின் கீழ்
காவல்துறையில் கறாரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்


ஆகஸ்ட் 2018ல் காவல்துறை பெண் கண்காணிப்பாளர் லஞ்ச ஒழிப்பு துறை இணை இயக்குநர் முருகன் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்தார்.

சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை தெலுங்கானா காவல்துறைக்கு மாற்றியது. 2019ல் இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. லஞ்ச ஒழிப்பு துறை இணை இயக்குநர் முருகன் இப்போது தென் மண்டல அய்ஜியாக பணியாற்றி வருகிறார். அவர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார் எங்குள்ளது, எப்படியுள்ளது என்பவை பற்றி எந்தத் தகவலும் இல்லை. அந்த நேரத்திலேயே பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் சட்டத்தின் கீழ் காவல்துறையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இப்போது, தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு சிறப்பு தலைவர் ராஜேஷ் தாஸ் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். முதலமைச்சர் கூட்டம் ஒன்றுக்கு பாதுகாப்புப் பணிக்குப் போனவர் திரும்பும் வழியில் மரியாதை நிமித்தம் தம்மை வரவேற்க காத்திருந்த பெண் அதிகாரி ஒருவரை தனது காரில் ஏறச் சொல்லி, காருக்குள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார் என்று புகார் தரப்பட்டுள்ளது. தேர்தல் நேரம் என்பதால் புகாரை விசாரிக்க தமிழ்நாடு அரசு ஆறு பேர் கொண்ட குழு அமைத்துள்ளது. அய்ஜி முருகன் மீதான புகாரை விசாரித்த காவல்துறை அதிகாரி சீமா அகர்வால், இந்தக் குழுவிலும் இருக்கிறார். ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்படாமல் கட்டாய காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் சிங்கிள் சோர்ஸ் புகழ் பீலா ராஜேஷ் கணவர்.
கொடுமை இங்கு முடிந்துவிடவில்லை. விசாரணை குழுவிடம் புகார் தர சென்னைக்கு தனது அலுவலக காரில் வந்த பாதிக்கப்பட்ட காவல்துறை பெண் அய்பிஎஸ் அதிகாரியை செங்கல்பட்டு காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் இன்னும் காவல்துறையினர் சிலர் சேர்ந்து கொண்டு பரனூர் சுங்கச் சாவடியில் வழிமறித்து அய்யாவிடம் பேசுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். மின்னணு உலகில் பிரச்சனை சட்டென் பரவிவிட, எனது மேலதிகாரி எனக்கு இட்ட உத்தரவுபடி நான் செய்தேன் என்று கண்ணன் சொல்லியிருக்கிறார். யாரந்த மேலதிகாரி? ராஜேஷ் தாசா?
குற்றச்சாட்டப்பட்ட ஒருவருக்கு பிணை மறுக்க, குற்றம் சாட்டப்பட்டவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள், சாட்சிகளை கலைத்து விடுவார்கள், தப்பித்து விடுவார்கள் என்றெல்லாம் காவல்துறையினர் கதை எழுதுவது வழக்கம். காவல்துறை சிறப்பு தலைவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக புகார் தருவதையே அவர்களே முன்னின்று தடுக்கிறார்கள். இதில் பெண்கள் பாதுகாப்பாக வாழும் மாநிலம் என்று மக்கள் பணத்தில் விளம்பரம் விரயம் வேறு.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் காவல்துறையில் அமைக்கப்பட்ட பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் குழு கறாராக செயல்பட்டிருந்தால், அய்ஜி முருகன் மீதான புகாரில் கறாரான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், ராஜேஷ் தாசுக்கு, தனக்கு கீழே பணியாற்றும் பெண் அதிகாரி மீது கை வைக்கும் துணிவு வந்திருக்காது.
இப்போதாவது, அய்ஜி முருகன் மீது நடத்தப்பட்ட விசாரணை என்ன ஆனது, அவர் மீது துறையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்ற விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். ராஜேஷ் தாஸ் மீதான விசாரணை சிபிசிஅய்டிக்கு மாற்றப்பட்டுள்ளது. எங்காவது மாற்றட்டும். நீதி வேண்டும்.
பின்குறிப்பு: தற்போதைய புகாரைச் சுற்றி வேலி, பயிர் என்ற தேய்வழக்கு மேலும் தேயத் தேய ஒலிக்கிறது. யாருக்கு வேலி? பெண்ணுக்கா? எதற்கு வேலி போடுகிறீர்கள் கனவான்களே? உங்களிடமிருந்து பாதுகாக்கத்தானே? நீங்கள் ஏன் மேய்கிறீர்கள்? நீங்கள் மேய்வதை நிறுத்திவிட்டால் வேலி என்ற ஒன்று அவசியம் இல்லை என்ற மிக சாதாரணமான உண்மையை நீங்கள் எப்போதுதான் புரிந்துகொள்வீர்கள்?

Search