COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, March 2, 2021

 ஒரு பொம்மையின் வீடு


ஹென்ரிக் இப்சன், நார்விஜிய மொழியில் 1879ல் 'ஒரு பொம்மையின் வீடு' (எ டால்ஸ் ஹவுஸ்) என்ற நாடகம் எழுதினார். நாடகம் அய்ரோப்பா எங்கும் அதிர்வலைகளை உருவாக்கியது. சரிபாதி மானுடமான பெண்ணின் நிலை, திருமணம், குடும்பம் என்ற ஆண்மய்ய அதிகார உறவுகள் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டிய நாடகம், பெண் விடுதலைக்கும் மானுட சாரத்தின் மீட்புக்கும் உள்ள உறவைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டியது.


மார்ச் 8, சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தை ஒட்டி இந்த நாடகத்தின் இறுதிக் காட்சிகள் மொழி பெயர்ப்பை 'கம்யூனிஸ்ட்' வெளியிடுகிறது. 

  
இறுதிக் காட்சிக்கு முந்தைய நாடகம் பற்றி....
நோராவும் டோர்வால்ட் ஹெல்மரும் எட்டு வருடங்களாக தம்பதிகள். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். எல்லன் என்ற பெண், சம்பளம் பெற்று குழந்தைகளை கவனித்துக் கொள்கிறார். ஹெல்மர் வங்கி அதிகாரி.
நோராவை, அவரது கணவர் ஹெல்மர் வானம்பாடியே, அணிலே என்று அழைப்பார். ஊதாரி செலவு பெண்ணே என கொஞ்சுவார். அந்த குடும்பம் வசதி இல்லாத, வன்முறை இல்லாத கணவன் ஒருவரை தலைவராக கொண்டு செயல்படுகிறது.
நோராவின் நண்பர் கிறிஸ்டியானா பல வருடங்கள் கழித்து அவரை சந்திக்கிறார். நோரா இது வரை தான் யாரிடம் சொல்லாத ஒரு ரகசியத்தை அவரிடம் சொல்கிறார்.
குரோக்ஸ்டாட் என்பவர் வருகை, அந்த குடும்பத்தில் புயல் வீச வைக்கிறது. தனது கணவரை ஒரு நோயிலிருந்து சாகாமல் காக்க, அவரை இத்தாலிக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறார் நோரா. அவர் பிழைத்துக் கொள்கிறார். அதற்காக நோரா, குரோக்ஸ்டாடிடம்  பெரும்தொகை ஒன்றை கடன் பத்திரம் எழுதித் தந்து வாங்கியுள்ளார். தன் கணவரிடம், அந்தப் பணம் தன் தந்தை இறந்தபோது வந்த பணம் என்று சொல்கிறார். நோரா தந்தை இறக்கும் தறுவாயில், அவரது கையெழுத்து போட்டு குரோக்ஸ்டாடிடம் வாங்கிய கடனுக்கு உத்தரவாதம் தந்திருப்பார்.
இப்போது முறைகேடுகள் செய்ததற்காக ஹெல்மர் குரோக்ஸ்டாடை வங்கிப் பணியில் இருந்து பணி நீக்கம் செய்ய உள்ளார். பணி நீக்கம் செய்யாமலிருக்க, உன் கணவரிடம் பேசி சரிக்கட்டு, இல்லாவிட்டால் நீ தர வேண்டிய கடன் பற்றியும் உனது பொய்க் கையெழுத்து குற்றம் பற்றியும், அம்பலப்படுத்துவேன் என நோராவை குரோக்ஸ்டாட் மிரட்டுகிறார்.
ஹெல்மருக்கு விஷயம் தெரிந்துவிடுகிறது.
நாடகத்தின் இறுதி பகுதி
ஹெல்மர்: அவன் எழுதியது உண்மையா? பயங்கரமானது. இல்லை. இல்லை. அது சாத்தியமே இல்லை. அது உண்மையாக இருக்க முடியாது.
நோரா: அது உண்மையே. உலகில் எல்லாவற்றுக்கும் மேலாக நான் உங்களை நேசித்தேன்.
ஹெல்மர்: அற்பமான சாக்குகள் சொல்லாதே.
நோரா: (அவரை ஓரடி நெருங்கி) டோர்வால்ட்!
ஹெல்மர்: பரிதாபப் பிறவியே. நீ என்ன செய்துவிட்டாய்?
நோரா:  என்னைப் போக விடுங்கள். நீங்கள் இதற்காக துன்பப்படக்கூடாது. நீங்கள் இதனை உங்கள் மீது சுமத்திக் கொள்ள வேண்டாம்.
ஹெல்மர்: நடிகைகளின் தந்திரங்களை முயற்சிக்காதே (கூடத்தின் கதவைச் சாத்துகிறார்). நீ இங்கேயே இருப்பாய். என் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நடந்தாக வேண்டும். நீ என்ன செய்துள்ளாய் என்று முழுமையாய் உணர முடிகிறதா? பதில் சொல். உனக்குப் புரிகிறதா?.
நோரா: (அவர் மீது நிலைத்த பார்வையுடன் குரல் உயர்த்திச் சொல்கிறார்) ஆமாம். இப்போது எனக்கு நன்றாகப் புரிகிறது.
ஹெல்மர்: (அங்கும் இங்கும் நடந்து கொண்டு) அட எவ்வளவு மோசமான விழிப்பு பெறுதல்? இந்த 8 வருடங்கள் நெடுக நீயே என் பெருமிதமாய், மகிழ்ச்சியாய் இருந்தாய். நீ போலியானவள். நீ பொய்க்காரி. அதைவிட மிக மிக மோசம். நீ ஒரு குற்றவாளி. விரும்பத் தகாதவற்றை மோசமான அதலபாதாளத்தை அல்லவா அர்த்தப்படுத்துகிறாய். சே சே (நோரா மவுனமாய் இருக்கிறார். தொடர்ந்து நிலைத்துப் பார்க்கிறார். ஹெல்மர் அவள் முன் தொடர்ந்து நிற்கிறார்). இதுபோன்று ஏதோ ஒன்று, நிச்சயம் நடக்கும் என நான் ஊகித்திருக்க வேண்டும். அதை நான் எதிர்பார்த்திருக்க வேண்டும். உன் தந்தையின் கீழ்த்தரமான கொள்கைகள் 'பேசாமல் இரு' நீ அவரது ஒவ்வொரு கீழ்த்தரமான கொள்கையையும் சுவீகரித்துள்ளாய். மதம் கிடையாது, அறஉணர்வு கிடையாது, கவுரவம் கிடையாது. ஓ, அவரது நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் போனதற்கு நான் எப்படி தண்டிக்கப்பட்டுள்ளேன். நான் உனக்காகவே செய்தேன். நீயோ, இப்படித்தான் எனக்கு வெகுமதி தந்துள்ளாய்.
நோரா: ஆம், அப்படியேதான்.
ஹெல்மர்: நீ என் மகிழ்ச்சியை முற்றிலுமாக அழித்துவிட்டாய். நீ என் எதிர்காலத்தையே அழித்தொழித்துவிட்டாய். நினைக்கும் போதே அச்சமாக உள்ளது. மனசாட்சியே இல்லாத ஒரு மனிதன் அதிகாரத்தில் நான் சிக்கி உள்ளேன். அவன் நினைத்ததை எல்லாம் என்னிடம் செய்ய முடியும். அந்த ஆள் எதைச் சொன்னாலும் நான் செய்தாக வேண்டும். அந்த ஆளுக்கு தோன்றியதை எல்லாம் அந்த ஆள் எனக்கு ஆணையிட முடியும். உத்தரவிட முடியும். அதை நான் மௌனமாக அனுபவித்தாக வேண்டும். இந்தப் பரிதாபகரமான வழியில், கொள்கையற்ற ஒரு பெண்ணுக்காக, நான் மூழ்கி நாசமாக வேண்டும்.
நோரா: நான் இல்லாமல் போய் விட்டால் நீங்கள் சுதந்திரமாகி விடுவீர்கள்.
ஹெல்மர்: பிரமாதமான வார்த்தைகள் பேச வேண்டாம். உன் தந்தை எப்போதும் தயாராக அப்படித்தான் பேசுவார். நீ சொல்வதுபோல், 'நீ இல்லாமல் போய்விட்டால்' அது எனக்கு என்னவித நன்மை தரும்? இந்த உலகத்தில் அதனால் எனக்கு எந்தவித நன்மையும் இல்லை. இதற்கும் மேலே, அந்த ஆள் இந்த மொத்தக் கதையையும் பிரசுரிக்க முடியும். அது அப்படி பிரசுரமானால், உன் குற்ற நடவடிக்கையில் எனக்கும் பங்குண்டு என்ற சந்தேகம் எழும். அனைவரும் நான்தான் இதை  துவக்கினேன், உன்னை தூண்டினேன் என நம்புவார்கள். இதற்கெல்லாம், நம் மணவாழ்க்கை நெடுக நான் கொண்டாடி சீராட்டிய உனக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். உனக்கு இப்போது நீ என்ன செய்துள்ளாய் என்று புரிந்ததா?
நோரா: (இறுகிய நிதானத்துடன்) ஆமாம்.
ஹெல்மர்: இது நம்ப முடியாதது. என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை. ஆனால் நான் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். அந்த மேல் அங்கியை எடுத்துவிடு. நான் சொல்கிறேன் எடுத்துவிடு; அந்த ஆளை நான் ஒரு வழியில் இல்லாவிட்டால் மறுவழியில் சமாதானப்படுத்த வேண்டும். என்ன செலவானாலும், இந்தக் கதை ரகசியமாக வைக்கப்பட வேண்டும். நீயும் நானும் என்பதைப் பொறுத்த வரை, எப்போதும்போல் எல்லாம் நடப்பதாக காட்டிக் கொள்வோம். ஆனால் அது உலகின் கண்களுக்கு மட்டுமே. நிச்சயம் நீ இந்த வீட்டில் தொடர்ந்து வாழலாம். அது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் குழந்தைகளுக்கு நீ கல்வி தர நான் அனுமதிக்க முடியாது. அதற்கு நான் உன்னை நம்ப முடியாது. நான் மிகவும் மென்மையாக நேசித்த இப்போதும் நேசிக்கிற உன்னிடம் போய் இதை சொல்ல நேர்ந்துள்ளது. ஆனால், இது கடந்தகால விஷயம். இதற்குப் பிறகு மகிழ்ச்சி என்ற கேள்விக்கு இடமில்லை. இடிபாடுகளை சிதறியவற்றை அவற்றின் தோற்றத்தை காப்பது மட்டுமே மிச்சமாய் உள்ளது. (அழைப்பு மணி ஒலிக்கிறது ஹெல்மர் சுதாரித்துக் கொள்கிறார்). என்ன அது? நேரம் கெட்ட நேரத்தில். அது அந்த மிகவும் மோசமான விஷயமாக இருக்க முடியுமா? அந்த ஆள் அதைச் செய்வாரா? நோரா நீ உன்னை மறைத்துக்கொள். உனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்.
எல்லன்:  (கூடத்தில் இரவு உடையில் உள்ள பணிப்பெண்) அம்மாவுக்கு இந்தக் கடிதம் வந்துள்ளது.
ஹெல்மர்: என்னிடம் தரவும். (கடிதத்தை பறித்துக்கொண்டு கதவை மூடுகிறார்) ஆமாம். அந்த ஆளிடம் இருந்துதான். அதை உன்னிடம் தர மாட்டேன். நான் படித்தாக வேண்டும்.
நோரா: அதைப் படியுங்கள்.
ஹெல்மர்: (விளக்கு வெளிச்சத்தில்) எனக்கு தைரியமே இல்லை. நீ நான் இருவருமே நாசமாகி இருப்போம். எனக்கு தெரிந்தாக வேண்டும். (அவசரமாக கிழிக்கிறார் உள்ளே இருப்பதைப் பார்க்கிறார். மகிழ்ச்சிக் கூப்பாடு போடுகிறார்).
நோரா: (அவரை கேள்விக்குறியுடன் பார்க்கிறார்).
ஹெல்மர்: நோரா! நான் அதைத் திரும்ப படித்தாக வேண்டும். ஆமாம் ஆமாம். அப்படித்தான். நான் பிழைத்துவிட்டேன்! நோரா நான் பிழைத்துவிட்டேன்!
நோரா: நான் என்ன ஆனேன்?
ஹெல்மர்: நீயும் கூடத்தான். நீ நாம் என நாம் இருவருமே காப்பாற்றப்பட்டுள்ளோம். இங்கே பார். அந்த ஆள் நீ தந்த கடன் பத்திரத்தை திரும்ப அனுப்பிவிட்டார். அந்த ஆள் வருத்தப்படுகிறாராம். கஷ்டப்பட்டாராம். அவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியான திருப்பமாம். அவர் என்ன எழுதுகிறார் என்பது நமக்கு ஒரு பொருட்டே அல்ல. நாம் காப்பாற்றப்பட்டு விட்டோம். நோரா உன் மீது எவருக்கும் எந்தப் பிடியும் கிடையாது. நோரா நோரா! முதலில் இந்த வெறுக்கத்தக்க பத்திரங்களை அழிப்போம். எதற்கும் நான் பார்க்கிறேன் (கடன் பத்தி ரத்தைப் பார்க்கிறார்) இல்லை, நான் அதைப் பார்க்க மாட்டேன். இந்த மொத்த விஷயமும் எனக்கு ஒரு கெட்ட கனவுக்கு மேல் எதுவுமாக இருக்காது. (கடன் பத்திரத்தையும் கடி தங்களையும் கிழித்து தீயில் எறிகிறார். அவை தீயில் எரிவதைக் கவனிக்கிறார்) அதோ, இனி அவை இருக்காது. அந்த ஆள் அதை எழுதி உள்ளார். கிறிஸ்துமஸ் நாளில் இருந்து நோரா, உனக்கு எவ்வளவு மோசமான நாட்கள்.
நோரா: நான் இந்த 3 நாட்களில் ஒரு கடுமையான போராட்டம் நடத்தியுள்ளேன்.
ஹெல்மர்: ......தவிர வேறு வழியில்லாமல், என்ன சித்ரவதை அனுபவித்திருப்பாய்? ஆனால், இனி நாம் அந்த அசிங்கம் பிடித்த விஷயங்கள் பற்றி நினைக்க வேண்டாம். நாம் சந்தோசப்படுவோம். திரும்பத் திரும்ப எல்லாம் முடிந்துவிட்டது எனச் சொல்வோம். உனக்கு கேட்கவில்லையா? எப்படியோ உனக்கு இன்னமும் விஷயம் புரியவில்லை போல் உள்ளதே. ஆமாம், அது முடிந்துவிட்டது. அப்படியானால், இப்போது இறுகி இருக்கும் உன் முகத்திற்கு என்ன பொருள்? அய்யோ பாவம், அன்பு நோரா, எனக்கு நன்கு புரிகிறது. நான் உன்னை மன்னித்துவிட்டேன் என்பதை உன்னால் நம்ப முடியவில்லை. நான் ஆணையிட்டுச் சொல்கிறேன். உன்னை நான் எல்லாவற்றுக்கும் மன்னித்து விட்டேன். நீ என்மீது உள்ள அன்பால் ôன் எல்லாவற்றையும் செய்தாய் என்பது எனக்குத் தெரியும்.
நோரா:  அது உண்மைதான்.
ஹெல்மர்: நீ ஒரு மனைவி. கணவனை எப்படி நேசிக்க வேண்டுமோ அப்படி நேசித்தாய். என்ன, எப்படி செய்வது என்பது மட்டும் உன்னால் சரியாக தீர்மானிக்க முடியவில்லை. தனியாக எப்படிச் செய்வது என உனக்கு தெரியாமல் போனதாலேயே, உன் மீதான என் அன்பு குறைந்து விடுமா? நிச்சயம் இல்லை. நோரா நீ என்னை சார்ந்து இருக்க வேண்டும். நான் உனக்கு ஆலோசனை தந்து வழிகாட்டுவேன். எதுவும் செய்ய முடியவில்லை என்ற இந்தப் பெண்ணின் இயலாமையால், உன் மீது எனக்கு இரட்டிப்பு ஈர்ப்பு வரவில்லை என்றால், நான் உண்மையான ஆண்மகனாக இருக்க முடியாது. நான் அந்த பயங்கரமான முதல் தருணத்தில் பேசிய கடுமையான சொற்களைப்பற்றி நீ யோசிக்காதே. இனி எல்லாம் வேறுவிதமாக இருக்கும். விளையாட்டுக்கான நேரம் முடிந்துவிட்டது. இப்போது கற்பதற்கான நேரம் வந்துவிட்டது.
நோரா: யாருடைய கல்வி. என்னுடையதா குழந்தைகளுடையதா?
ஹெல்மர்: அன்பு நோரா, உன்னுடையதும் குழந்தைகளுடையதுமான கல்விக்கான நேரம்தான் வந்துவிட்டது.
நோரா: டோர்வால்ட், உங்களுக்கு நல்ல மனைவியாக நான் இருப்பது பற்றி கற்றுக் கொடுக்க, நீங்கள் பொருத்தமான ஆள் இல்லை.
ஹெல்மர் : நீ அதைச் சொல்கிறாயா.
நோரா: நான் குழந்தைகளுக்கு கல்வி தர எப்படி தயாரிக்கப்பட்டுள்ளேன்,?
ஹெல்மர்: நோரா?
நோரா: நீங்கள் சற்றுமுன்தானே அந்தக் கடமையை என்னிடம் ஒப்படைக்க முடியாது என்று சொன்னீர்கள்.
ஹெல்மர்: அது ஓர் ஆர்வமிகுதி நிலையில் சொன்னதாகும். நீ எப்படி அதன்மீது அழுத்தம் வைக்கலாம்?
நோரா: இல்லை, நீங்கள் மிக சரியாகவே சொன்னீர்கள். அந்தக் கடமைக்கு நான் தயாரில்லை. நான் முதலில் எனக்கு கல்வியூட்ட முயற்சித்தாக வேண்டும். அந்த விஷயத்தில், நீங்கள் எனக்கு உதவுவதற்கான மனிதர் அல்ல. நான் தனியாகவே அந்த வேலையை செய்ய வேண்டும். அதனால்தான் நான் இப்போது உங்களை விட்டுப்போகிறேன்.
ஹெல்மர்: (எம்பிக் குதிக்கிறார்) என்ன? நீ என்ன சொல்கிறாய்?
நோரா: என்னையே என்மீது நான் முழுமையாக வீசி எறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் எனக்கு என்னைப் பற்றிய என்னைச் சுற்றியுள்ள விஷயங்கள் பற்றிய புரிதல் வரும். நான் இனியும் உங்களோடு இருக்க முடியாது.
ஹெல்மர்: நோரா நோரா!
நோரா:  நான் உடனே, உங்கள் வீட்டை விட்டுப் போகிறேன். கிறிஸ்டியானா இன்று இரவு அவர் வீட்டில் தங்க இடம் தருவார்.
ஹெல்மர்: உனக்கு பைத்தியம் பிடித்துள்ளது. நான் அதனை அனுமதிக்க மாட்டேன். நான் அதனை தடை செய்கிறேன்.
நோரா: இந்தத் தருணத்தில் இருந்து நீங்கள் எனக்கு எந்தத் தடை விதிப்பதும் வீண் வேலை. எனக்கு எது சொந்தமோ அதை நான் என்னோடு எடுத்துச் செல்கிறேன். நான் உங்களிடம் இருந்து இப்போதோ பிறகோ எதுவும் பெற்றுக் கொள்ளப்போவது இல்லை.
ஹெல்மர்: இது என்ன அப்பட்டமான பைத்தியகாரத்தனம்!
நோரா: நாளை நான் என் வீட்டிற்கு போகிறேன். நான் பிறந்த இடத்திறகு, அங்கே எனக்கு ஒன்று அல்லது வேறொன்று என்று செய்ய எதாவது இருக்கும்.
ஹெல்மர்: கண் தெரியாத அனுபவம் இல்லாத ஜென்மமே!
நோரா: டோர்வால்ட், நான் அனுபவம் பெற முயற்சித்தாக வேண்டும்.
ஹெல்மர்: உன் வீட்டை கணவனை குடும்பத்தை விட்டுவிட்டு போகிறாயா, அது பற்றி மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என யோசித்தாயா?
நோரா: நான் அதனை கணக்கில் கொள்ள முடியாது. எனக்கு, நான் போவது அவசியம் என்பது மட்டுமே தெரியும்.
ஹெல்மர்: நீ சொல்வது எனக்கு நிதானம் போக வைக்கிறது. அவை உன் கணவருக்கும் குழந்தைகளுக்குமான கடமையல்லவா?
நோரா:  எனக்கு, அதே அளவு புனிதமான கடமைகள் உள்ளன.
ஹெல்மர்: இல்லை. உனக்கு கிடையாது. உனக்கு என்ன கடமைகள் உள்ளன?.
நோரா: எனக்கு என் விஷயத்திலான கடமைகள் உள்ளன.
ஹெல்மர்: எல்லாவற்றிற்கும் முன்பும் நீ ஒரு மனைவி தாய்.
நோரா: நான் இப்போது அப்படி நினைக்கவில்லை. நான் எல்லாவற்றுக்கும் முன்பாக உங்களைப் போலவே ஒரு மனிதப் பிறவி என நினைக்கிறேன். குறைந்தபட்சம் அப்படி ஆக முயல்வேன். டோர்வால்டு, நீங்கள் சொல்வதை பலர் ஏற்பார்கள் என்றும், புத்தகங்களில் அப்படியே எழுதப்பட்டுள்ளது என்றும், நான் அறிவேன். ஆனால் இனியும் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் புத்தகங்களில் என்ன எழுதப்பட்டுள்ளன என்பதில் திருப்தி அடைய முடியாது. நான் இவைபற்றியெல்லாம் எனக்காக யோசித்து தெளிவாக வேண்டியுள்ளது.
ஹெல்மர் :  உன் குடும்பத்தில் உன் இடம் என்ன என்பதில் நீ தெளிவில்லாமல் இருக்கும் சாத்தியம் உள்ளதுதானே? இந்தப் பிரச்சனையில் தவறு செய்யாமல் வழிகாட்ட ஒன்று வேண்டாமா? உனக்கு மதம் கிடையாதா?
நோரா: டோர்வால்ட், எனக்கு மதம் என்றால் என்னவென்றே தெரியாது
ஹெல்மர்: நீ என்ன சொல்கிறாய்
நோரா: நான் மதத்தில் ஏற்கப்பட்டபோது, பாதிரிமார்கள் சொன்னது தவிர வேறு ஏதும் அறியமாட்டேன். அவர் மதம் என்றால் இதுதான் அதுதான் என விளக்கினார். நான் இங்கிருந்து வெகு தூரம் சென்ற பிறகு, நான் நானாக இருக்கும்போது, இந்த விஷயத்தையும் பரிசீலிக்கிறேன். நமது பாதிரிமார்கள் சொன்னது சரியா? அல்லது அது எதுவரை சரி என பார்க்கிறேன்.
ஹெல்மர்: இப்படிப்பட்ட விஷயங்கள் ஓர் இளம் மனைவியின் உதடுகளில் இருந்து வெளிவருவதை எந்த ஒரு கணவரும் கேட்டிருப்பாரா? ஆனால் மதம் உன்னை சரியான பாதையில் செலுத்தாது என்றால், உனது மனசாட்சிக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன். உனக்கு ஏதாவது அறவுணர்வு இருக்கும் என நம்புகிறேன். அல்லது எனக்கு பதில் சொல். அப்படி எதுவும் உனக்கு கிடையாதா?
நோரா: டோர்வால்ட், நான் பதில் சொல்லாமல் இருப்பதே சரியாகும். எனக்கு உண்மையிலேயே தெரியாது. எனக்கு இந்த விஷயங்கள் பற்றி எந்த தெளிவும் கிடையாது. உங்கள் கருத்தும் என் கருத்தும் வேறு வேறு என்பது மட்டும் தெரியும். நான் நினைத்தது போல் சட்டங்கள் கிடையாது என்பது எனக்கு தெரியும். ஆனால் அவை சரிதான் என என்னால் ஏற்க முடியாது. ஒரு பெண்ணுக்கு தனது தந்தையின் முதுமையில் அவர் இறக்கும் நிலையில் கூட அவர்களுக்கு தொல்லை வராமல் பார்த்துக் கொள்ள அல்லது அவள் கணவன் உயிரை காக்க அவளுக்கு உரிமை இல்லை என தோன்றுகிறது. எனக்கு இதில் நம்பிக்கை இல்லை.
ஹெல்மர்: நீ ஒரு குழந்தை போல் பேசுகிறாய், நீ வாழும் சமூகம் பற்றி நீ அறியவில்லை.
நோரா: இல்லை, நிச்சயம் இல்லை. இப்போது நான்  கடினப்பட்டு அதை கற்பேன். சமூகம் சரியா நான் சரியா என என் மனதளவில் தெளிவாவேன்.
ஹெல்மர்: நோரா உனக்கு உடல் நலம் சரியில்லை. உனக்கு காய்ச்சல் உள்ளது. உனக்கு யோசிக்கும் திறன் இல்லை.
நோரா: இன்று இரவு எல்லா விஷயங்களையும் பற்றி நான் உணர்வது போன்று தெளிவு, எனக்கு எப்போதும் இருந்ததில்லை.
ஹெல்மர்: நீ தெளிவாகவும் உறுதியாகவும் உணர்வதால், கணவரையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு செல்கிறாயா?
நோரா:  ஆமாம் அப்படித்தான்.
ஹெல்மர்: அப்படியானால், ஒரே ஒரு சாத்தியமான விளக்கம்தான் உள்ளது.
நோரா: அது என்ன?
ஹெல்மர்: நீ இப்போது என்னை நேசிக்கவில்லை.
நோரா: இல்லை. அது ஒரு விஷயம்தான்.
ஹெல்மர்: உன்னால்  அப்படிச் சொல்லத் துணிய முடிகிறதா?
நோரா: டோர்வால்ட், நான் மிகவும் வருந்துகிறேன். நீங்கள் எப்போதும் என்னிடம் கருணையோடு நடந்து கொண்டுள்ளீர்கள். ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என்னால் உங்களை இப்போது நேசிக்க முடியவில்லையே.
ஹெல்மர்: (மிகவும் கஷ்டப்பட்டு நிதானம் காட்டுகிறார்). நீ மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ள விசயங்களில் இதுவும் ஒன்றா?
நோரா: ஆம் நிச்சயமாக அதனால்தான் நான் இனியும் இங்கு தங்க முடியாது.
ஹெல்மர்: நான் எப்படி உன் காதலை இழந்தேன் என விளக்க முடியுமா?
நோரா: ஆமாம், முடியும். இன்று மாலை தான் பேரதிசயம் நிகழவில்லை என புரிந்தது. அப்போதுதான் நீங்கள் நான் ஏற்கனவே நினைத்தவரை போன்றவரல்ல எனப் புரிந்தது.
ஹெல்மர்: எனக்கு புரியவில்லை, மேலும் விளக்கமாக சொல்.
நோரா: நான் இந்த எட்டு வருடங்களில் மிகவும் பொறுமையாக காத்திருந்தேன். ஏனெனில் எனக்கு அன்றாடம் பேரதிசயங்கள் நிகழ்வதில்லை என தெரியும். பிறகு என் தலைமேல் அந்தப் பிரச்சனை வெடித்தது. அப்போது பேரதிசயம் நிகழும் என உறுதியாய் நம்பினேன். வெளியே பெட்டியில் கிரோக்ஸ்டாடின் கடிதம் கிடந்தபோது, அத்தகைய மனிதனின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவீர்கள் என என்னால் ஒருபோதும் நினைக்க முடியவில்லை. நான் நீங்கள் அந்த மனிதரிடம் 'விவாகரத்தை முழு உலகிற்கும் சொல்' என தெரிவிப்பீர்கள் என நம்பினேன். அது முடிந்த பிறகு...
ஹெல்மர்:  நல்லது! என் மனைவியின் நற்பெயருக்கு நானே இகழ்ச்சியும் அவமானமும் தேடி தர வேண்டும்.
நோரா: அப்படி செய்த பிறகு மொத்த உலகின் முன் நின்று எல்லாவற்றிற்கும் நீங்களே பொறுப்பேற்று 'நானே குற்றவாளி' என சொல்வீர்கள் என, நான் உறுதியாக நம்பினேன்.
ஹெல்மர்: நோரா...
நோரா: அதாவது நான் எந்த தியாகத்தையும் உங்களிடம் எதிர்பார்த்திருக்கக் கூடாது என்கிறீர்கள்.  இல்லை நிச்சயம் இல்லை. ஆனால் நான் சொல்வது நீங்கள் சொல்வதற்கு ஈடாகுமா? இந்த பேரதிசயம் நிகழுமென்றுதான் நான் நம்பினேன். அஞ்சினேன். அதைத் தடுக்கவே என் வாழ்வை முடித்துக்கொள்ள  விரும்பினேன்.
ஹெல்மர்: நோரா நான் உனக்காக இரவும் பகலும் வேலை செய்வேன். உனக்காக தொல்லைகளையும் துன்பங்களையும் தாங்குவேன். ஆனால் எந்த மனிதனும் தான் நேசிப்பவருக்காக தன் கவுரவத்தை தியாகம் செய்ய மாட்டான்.
நோரா: லட்சோபலட்சம் பெண்கள் அப்படி செய்துள்ளனரே.
ஹெல்மர்: நீ சில்லறைத்தனமாகவும் குழந்தைத்தனமாகவும் யோசிக்கிறாய், பேசுகிறாய்.
நோரா: நிச்சயம் அப்படி இருக்கலாம். ஆனால் நிச்சயமாக நீங்கள் நான் கூட இருக்கக்கூடிய மனிதர் அல்ல. உங்கள் பேரச்சம் நீங்கிய பின் என்னை அச்சுறுத்தியதற்காக அல்ல, உங்களை அது இழுத்து விட்டதால், அஞ்சுவதற்கு எதுவும் இல்லை என ஆன பிறகு, உங்கள் கண்களில் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்ற தோற்றம் வந்துவிட்டது. நான் மீண்டும்  உங்கள் வானம்படியாக, உங்கள் பொம்மையாக இருக்க முடியும். மிகவும் பலவீனமானவள் மென்மையானவள் என்பதால், வருங்காலத்தில் நீங்கள் எனக்கு இரட்டிப்பு கவனம் செலுத்த தயார் எனவும் தெரிந்தது. (நிற்கிறார்) டோர்வால்ட், அந்தக் கணத்தில் நான் இவ்வளவு ஆண்டுகள் ஓர் அந்நிய மனிதனோடு வாழ்ந்து அவருக்கு மூன்று பிள்ளைகள் பெற்றேன் என்பது எனக்கு நன்கு தெளிவானது. அது பற்றி என்னால் நினைக்கக் கூட முடியவில்லை. நான் என்னை துண்டுதுண்டாய் பிய்த்துக் கொள்ள வேண்டும்.
ஹெல்மர்: (துயரத்துடன்) எனக்கு இப்போது தெரிகிறது. எனக்கு இப்போது தெரிகிறது. நமக்கு இடையில் பெரிய இடைவெளி உள்ளது. ஆனால் நோரா அதனை எப்போதும் இட்டு நிரப்ப முடியாது.
நோரா: இப்போது நான் உங்களுக்கான மனைவியல்ல.
ஹெல்மர்: நான் இன்னொரு மனிதராக வலிமை பெற்றுள்ளேன்.
நோரா: ஒருவேளை உங்கள் பொம்மையை உங்களிடமிருந்து எடுத்துக் கொண்டால் அது நடக்கும்.
ஹெல்மர்: பிரிவது, உன்னை பிரிவதில்லை. நோரா. இல்லை, அதனை என்னால் நினைக்கவே முடியாது.
நோரா: (வலதுபுறம் உள்ள அறைக்கு சென்று கொண்டே) இந்த விசயமே, அப்படி நடப்பதற்கு கூடுதல் காரணமாகும். (தனது சிறிய பயணப் பையுடன் தன் பொருட்களுடன் உள்ளே வந்து அவற்றை மேசை பக்கம் உள்ள நாற்காலியில் வைக்கிறார்).
ஹெல்மர்: நோரா, நோரா இப்போது வேண்டாம். நாளை வரை காத்திரு.
நோரா: (மேலங்கி அணிந்து கொண்டே) எனக்கு அந்நியமாய் இருக்கிற ஒரு மனிதனின் வீட்டில் என்னால் இரவை கழிக்க முடியாது.
ஹெல்மர்: நாம் இங்கு அண்ணன் தங்கை போல் வாழ முடியாதா?
நோரா: (தன் தலைப்பட்டையை இறுக்கிக்கொண்டு) உங்களுக்கு தெரியும். அது வெகு நாட்கள் நீடிக்காது. (ஷாலை அணிந்து  கொள்கிறாள்) நான் போய் வருகிறேன். நான் போகுமுன் குழந்தைகளை பார்க்கப் போவதில்லை. எனக்கு என்னை விட மேலான கைகளில் குழந்தைகள் உள்ளன எனத் தெரியும். என் அளவில் நான் அவர்களுக்கு ஒன்றுமில்லை
ஹெல்மர்: ஆனால், பிறகு, நோரா, பிறகு பார்க்கலாமே?
நோரா: நான் எப்படி சொல்ல முடியும்? நான் எப்படி ஆவேன் என எனக்கே தெரியாது.
ஹெல்மர்: நீ என் மனைவி. இப்போதும் சரி. பிறகும் சரி.
நோரா: டோர்வால்ட், கேளுங்கள். ஒரு மனைவி கணவன் வீட்டை விட்டு போகும் போது நான் இப்போது செய்வதுபோல் செய்யும்போது நான் கேள்விப்பட்டவரை, அவர் சட்டத்தின் கண்களில் மனைவி தொடர்பான எல்லா கடமைகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார். எப்படியும் நான் உங்களை எல்லா கடமைகளில் இருந்தும் விடுவிக்கிறேன்.  நான் என்ன உணர்கிறேன் என்பது பற்றி யோசிக்க இனியும் நீங்கள் கடமைப்பட்டவரல்ல. இரு தரப்பிலும் இனி முழு சுதந்திரம் வந்துவிட்டது. இதோ உங்கள் மோதிரம். என் மோதிரத்தை தாருங்கள்.
ஹெல்மர்: அதுவுமா?
நோரா: அதுவும் கூடத்தான்.
ஹெல்மர்: இதோ உன் மோதிரம்.
நோரா: நல்லது. எல்லாம் முடிந்த பழைய கதையானது. நான் சாவிகளை கீழே வைக்கிறேன். இந்த வீட்டில் பணிப்பெண்கள் எல்லாவற்றையும் மேலாக பார்த்துக் கொள்வார்கள். நாளை நான் என் பயணத்தைத் துவங்கிய பின், கிறிஸ்டியானா வந்து எனது பொருட்கள் சிலவற்றை எடுத்துக் கட்டி வைப்பார். அவற்றை எனக்கு அனுப்பி வையுங்கள்.
ஹெல்மர்: பழையது. முடிந்து போனது! நீ இனி என்னைப் பற்றி நினைக்கவே மாட்டாயா?
நோரா: நிச்சயம், நான் உங்களைப் பற்றி குழந்தைகளைப் பற்றி இந்த வீட்டைப் பற்றி நினைப்பேன்.
ஹெல்மர்: நான் உனக்கு எழுதலாமா நோரா?
நோரா: கூடாது,  நிச்சயம் கூடாது.
ஹெல்மர்: நான் உனக்கு ஏதாவது அனுப்பலாமா?
நோரா: எதுவும் வேண்டாம். எதுவும் வேண்டாம்.
ஹெல்மர்: உனக்கு தேவை இருக்கும் போது உதவலாமா?
நோரா:  நான் சொல்கிறேன் வேண்டாம். நான் அந்நியர்களிடம் இருந்து எதுவும் பெற்றுக் கொள்ள முடியாது.
ஹெல்மர்: நான் உனக்கு எப்போதாவது அந்நியரில்லை என்றாக முடியாதா?
நோரா: (வேகமாக தன் பயணபையை எடுத்துக்கொண்டே) டோர்வால்ட், அதற்கு, எல்லாவற்றிற்கும் மேலாக பேரதிசயம் நடக்க வேண்டும்.
ஹெல்மர்: அது என்ன பேரதிசயம் என்று சொல்லேன்.
நோரா: அதற்கு நானும் நீங்களும், நாம் இருவரும் மாறவேண்டும் டோர்வால்ட். இனிமேல் பேரதிசயம் எதுவும் நடக்குமென நான் நம்பவில்லை.
ஹெல்மர்: ஆனால், நான் அதனை நம்புகிறேன். நாம் மிகவும் மாற வேண்டும். அதனால்
நோரா: நாம் சேர்ந்து வாழ்வது ஒரு திருமணமாக இருக்க வேண்டும். போய் வருகிறேன் (அவள் கூடத்தை விட்டு வெளியே செல்கிறாள்)
ஹெல்மர்: (கைகளை முகத்தின் முன் கொண்டு வந்து கதவு பக்கம் உள்ள நாற்காலியில் சாய்கிறார்) நோரா நோரா (அவர் எங்கும் பார்க்கிறார் நிற்கிறார்) வெறுமை. அவள் இங்கு இல்லை. (ஒரு நம்பிக்கை அவரை உற்சாகப் படுத்துகிறது) மகத்தான பேரதிசயம்!
(படிக்கட்டுகளுக்கு கீழே, ஏதோ நிகழும் என்பதை குறிப்பது போல் ஒரு கதவு சாத்தப்படும் ஓசை கேட்கிறது).

Search