பெரியார் சொல் கேளீர்.....
....தாங்களாகவே தொழுவில்
மாட்டிக் கொள்வதுபோல்.....
...இதில் செலவழிக்கும் பணமானது வீண் தேக்கமான பணம்...
பெரியார் களஞ்சியம்,
தொகுதி 6, பக்கம் 15 - 17
30.06.1940 தேதிய குடி அரசு
16.06.1940 தேதிய சொற்பொழிவில் இருந்து ஒரு பகுதி, காஞ்சிபுரம்
.....கலியாணம் செய்துகொண்டவர்கள் அவசரமாகப் பிள்ளை பெற வேண்டுமென்று ஆசைப்படக்கூடாது. 10 வருடமாவது சுதந்திரமாய் கவலையற்று வாழ்க்கை இன்பம் அனுபவிக்க வேண்டும்.
தாய் தகப்பனுமார்கள் மகளுக்குத் துணி மணி வாங்கி கொடுப்பதிலும், நகை போடுவதிலும், ஆடம்பரச் செலவு செய்வதிலும் செலவிடும் பணத்தை ரொக்கமாகச் சேர்த்து வைக்கும்படி பெண்ணின் பெயரால் பாங்கியில் போட்டு பெருக்கி வைக்க வேண்டும். குழந்தை பிறந்த உடன் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் தாதிக்கு (ஆயம்மாளுக்கு)ச் சம்பளம் கொடுக்க வும் அந்தப் பணம் உதவும்படி இருக்க வேண்டும். தாய் - தகப்பன் பெண்களுக்குச் செய்ய வேண்டிய முக்கிய உதவி இதுவேயாகும். அதாவது கல்வி அறிவு கொடுப்பதும், பிள்ளை வளர்க்கப் பணம் சவுகரியம் செய்து கொடுப்பதுமே ஆகும்.
நகையும் விலை உயர்ந்த துணியும் தேசிய செல்வத்தை வீண் செய்வதாகும். விலை உயர்ந்த துணி 100க்கு 99 வீணாய்ப் பெட்டியிலிருந்து இரையாவதல்லாமல் வேறு என்ன பயன் தருகிறது? அதேபோலவே விலை உயர்ந்த நகைகள் புதைத்து வைத்த செல்வம் போலும் அதை விட மோசமான தன்மை கொண்டு உறங்கிக் கிடந்து சாகும் மனிதன் போலும் வீணாய்க் கிடக்கின்றன. நம் நாடு தொழில் செய்ய வேண்டிய நாடாகும். எவ்வளவோ தொழில் செய்ய வேண்டியிருக்கிறது. அவற்றிற்குச் செல்வம் இல்லை என்று சொல்கிறோம். ஆனால், நகைகளின் பெறுமானம் எத்தனை எத்தனை கோடி ரூபாயாக இருக்கலாம். இந்த நாட்டை விட வேறு எங்காவது நகையில் இவ்வளவு ரூபாயை வீணாக்கிக் கொண்டிருக்கும் மக்களோ, கடவுளோ, மடங்களோ, பிரபுக்களோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இவையெல்லாம் கிரிமினல் குற்றங்களாகும்.
ஆதியில் பெண்களுக்கு நகைகள் உண்டாக்கப்பட்டதன் கருத்தே, பெண்களை அடிமை யாக்கவும், அடக்கிப் பயன்படுத்தி வைக்கவும் செய்த தந்திரமேயாகும். காது, மூக்கு முதலிய நுட்பமான இடங்களில் ஓட்டைகளைப் போட்டு அவைகளில் உலோகங்களை மாட்டி வைத்ததானது, மாடுகளுக்கு மூக்கணாங் கயிறு போட்டதால், அது எப்படி இழுத்துக் கொண்டு ஓடாமல் எதிர்க்காமல் இருக்க பயன்படுகிறதோ அதுபோலப் பெண்கள் காதில் மூக்கில் ஓட்டைகளைப் போட்டு ஆணிகள் திருகி இருப்பதால் ஆண்கள், பெண்களைப் பார்த்து கை ஓங்கினால் எதிர்த்து அடிக்க வராமல், எங்குக் காது போய் விடுமோ என்று தலை குனிந்து, முதுகை இடிக்கக் காட்ட தயாராயிருப்பதற்காகவே அது உதவுகிறது. அன்றியும் நிறைய நகைகளை மாட்டிவிட்டால், மாடுகளுக்குத் தொழுக்கட்டை கட்டிய மாதிரி வீட்டை விட்டு எங்கும் தனித்து போகமாட்டார்கள். நகை போய் விடும் என்று வீட்டோடு காத்து கிடப்பார்கள்.
அதுபோலவே கைகளிலும் பூட்டிவிட்டால் விலங்கு போட்டதுபோல் அடங்கிக் கிடப்பார்கள். விரைவாக நடக்க மாட்டார்கள். அதிலும் 16, 18 முழச் சேலையைச் சுற்றிவிட்டால், இன்னமும் தொல்லையாய் நடக்க முடியாமல் 'அன்ன நடை' நடந்துகொண்டு அடங்கி கிடப்பார்கள் என்கிற எண்ணமேயாகும். இந்த காரியம் இப்போது பெண்களுக்கே ஆசையாகித் தங்களாகவே தொழுவில் மாட்டிக் கொள்வது போல மாட்டிக் கொண்டு இந்த காரியத்திற்காக புருஷனுக்கு நன்றியும் காட்டுகிறார்கள். இது எப்படி இருந்தாலும் இதில் செலவழிக்கும் பணமானது வீண் தேக்கமான பணம் என்றே வருத்தத்தோடு தெரிவிக்கிறேன்.
பெண்கள் தங்களைச் சிங்காரித்துக் கொள்வதில் நேரத்தையும் கவலையும் செலுத்துவதோடு பணச் செலவும் செய்கிறார்கள். எதற்காக இப்படிச் செய்து கொள்ள வேண்டும். இது ஒரு அடிமை மனப்பான்மையல்லவா? இயற்கைக்கு மாறாக வேஷம் போட்டதுபோல் அலங்காரம் செய்துகொண்டு மக்கள் கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவதில் இலாபம் என்ன என்பது எனக்கு தெரியவில்லை. விகாரமில்லாமல் இருக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அதிகமாக அலங்காரம் செய்து கொள்வது விகாரமாக காணப்படுவதில்லையா என்பதோடு, பிறருடைய நினைப்பில் இவர்களைப் பற்றி என்ன மதிப்பு ஏற்படும் என்பதையும் யோசிக்க வேண்டும்.
இந்த அலங்கரித்துக் கொள்ளுவது என்பது பெண்களுக்கு ஓர் ஒட்டுவாரொட்டி நோய் என்பதே எனது கருத்து. சில ஆண்களுக்கு இந்தப் பைத்தியம் பிடிப்பதுண்டு. ஆனால், பெண்கள் போல அவ்வளவு ஏற்படுவதில்லை. ஆதலால், பெண்கள் சரீரத்தில் அதிகமாக ஓட்டை போட்டுக் கொள்ளாமலும், அதிக நகை போட்டுக் கொள்ளாமலும் ஏதாவது அவசரத்திற்கு மாத்திரம் பயன்படும்படி சிறு தொகையை மாத்திரம் அதில் செலவழித்து விட்டு பணம் சேர்த்துப் பாங்கியில் அல்லது நல்ல தொழிற்சாலைப் பங்குகளிலும் போட்டு, அதில் ஆதாயமெடுத்துக் குழந்தை வளர்ப்பு, குழந்தைப் படிப்பு ஆகியவைகளுக்கு உதவும்படி செய்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பெண்ணும் தான் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிக்குத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்க திறமை இருந்தால், எந்த கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான். வாழ்விலும் சம இன்பமிருக்க முடியும். பெற்றோர்களும் பெண்களுக்கு ஆண்களைப் போலவேச் சொத்துரிமை கொடுக்க வேண்டும். இதில் யாருக்கும் நஷ்டமில்லை. நமது பெண்களுக்கு நாம் சொத்து பங்கு போட்டுக் கொடுத்தால், நமது வீட்டுக்கு வரும் பெண்ணும் சொத்துடன் வரும். அப்போது செலவுக்கும் வரவுக்கும் சரியாய்ப் போய் விடும்...........