தி கிரேட் இந்தியன் கிச்சன்
குணசேகரன்
கதையின் தலைப்பை கேட்டதும் நம் கண் முன் நிழலாடுவது பெண்கள் நம் கண்கள் என போற்றப்படும் இந்தியப் பெண்களின் இன்னொரு உலகமாக உருவாக்கி வைக்கப்பட்ட சமையல் அறைதான். அங்கு பெண்கள் கவுரவிக்கப்படவில்லை.
ரசித்து நடனமாடிக் கொண்டிருக்கிறார் கதை நாயகி நிமிஷா சஜயன். அதைத் தொடர்ந்து நாயகிக்கு பெற்றோர்கள் பார்த்து ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் நடைபெறுகிறது. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாதபோது, இரு மனங்கள் இணைந்து இருக்க வாய்ப்பில்லை.
அறிமுகம் இல்லாத ஆண் பெண் திருமண உறவில் பெரும்பாலும் ஆணின் கை உயர்ந்து இருக்கும் என்பதை இந்த சமூக எதார்த்தத்தில் காலம் காலமாக நாம் பார்த்து வருகிறோம். கதையின் நாயகனும் (சுராஜ் வெஞ்சரமூட்), நாயகியும் அந்த எதார்த்தத்தை பிரதிபலிக்கிறார்கள். ஆரம்பம் முதலே கனத்த இதயம் திரைப்படம் முடிந்தும் கூட இலகுவாக மறுக்கிறது.
தன் கணவர், கையில் அரைத்த சட்னியை தான் சாப்பிடுவார் என கதை நாயகனின் எம்ஏ படித்த அம்மா சொல்வது, காலையில் எழுந்ததும் கணவருக்கு பற்பசை, தேய்க்க பிரஷ் கொண்டு போய் தருவது, கணவர் வெளியே போகும் போது காலணியை எடுத்து வந்து அவரின் காலடியில் வைப்பது என ஆண்கள் உயர்ந்தவர்கள் பெண்கள் அவர்களுக்கு அடிமைகள் எனும் ஆணாதிக்கத்தின் பாரம்பரியத்தை தூக்கி சுமப்பவர்களாக பெண்கள் வாழ்ந்து வருவது வேதனைக்குரியது.
கணவரும் மாமனாரும் காலை உணவு சாப்பிட்டு முடித்த பின் நாயகியும் அவரது மாமியாரும், சாப்பிட அமரும்போது அந்த மேசையில் எச்சில் உணவு சிதறிக் கிடப்பது நாயகியின் முகத்தை மட்டுமன்றி, பார்ப்போர் எல்லோரின் முகத்தையும் சுளிக்க வைக்கிறது.
வீட்டு வேலைகளை ஆண் பெண் இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். பெண்ணை அடிமையாக நடத்துவதை அன்பு என்ற ஒற்றை வார்த்தைக்குள் ஒளித்து வைத்துவிடுகிறது நாகரீக சமூகம். இங்கு இன்னும் (பெண்கள்) விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. அரிசி சாதத்தை குக்கரில் சமையல் எரிவாயு அடுப்பில் அல்லாமல் விறகு அடுப்பில் வெறும் பாத்திரத்தில் சமைக்க வேண்டும் என மாமனார் நாயகியிடம் சொல்வது, துணி துவைக்கும் எந்திரம் இருந்தாலும், தனது துணிகளை கையில்தான் துவைக்க வேண்டும் என்று மாமனார் சொல்வது போன்றவை தொழில்நுட்பம் வளர்ந்தாலும் தங்கள் சிந்தனையை வளர்த்துக் கொள்ளாத ஆண்களிடம் சிக்கிக் கொள்ளும் பெண்கள் அதை தங்கள் தலைவிதி என்று கருதி அதற்கு பழகிக்கொள்கிறார்கள். சமகாலத்திலும் இதை நியாயப்படுத்தவும் ஒரு கூட்டம் தயாராகத்தான் இருக்கிறது.
காலை, மதியம், இரவு உணவு தயார் செய்வது, வேலைக்கு சென்ற கணவனுக்கு மதிய உணவு தயார் செய்து அனுப்புவது, அதற்கிடையில் துணி துவைப்பது, இரவில் தூங்குவதற்கு முன்பு பாத்திரங்களை சுத்தம் செய்து வைப்பது என உழைத்துக்கொண்டே இருக்கும் நாயகி, பல நாட்களாக சமையலறையில் அழுக்கு நீர் செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு நாற்றம் அடிப்பதை தன் கணவரிடம் பலமுறை சொல்லியும் அது தன் வேலை இல்லை என்பதுபோல் கணவர் அலட்சியமாக இருக்கிறார். பெண்கள் படும் அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆண்கள் தாமாக முன் வருவதில்லை. இது போன்ற வேலைகள் பெண்களுடையவை என்று சொல்லித் தரப்பட்டு வளர்க்கப்படுவதுதான் காரணம்.
மாதவிலக்கின்போது நாயகி தன் கணவனிடம் சானிட்டரி நாப்கின் வாங்கி வரச் சொல்லும்போது அவள் கணவன் தயங்குவது அது ஆணின் வேலை இல்லை என்று அவன் சொல்வது போல் உள்ளது. நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை, ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லை என்று கவிஞர் கந்தர்வன் தனது கவிதையில் அழகாக கூறி இருப்பார். ஆலைகளில் இயந்திரத்திற்கு கூட ஆயுத பூஜை அன்று ஓய்வு அளிப்பார்கள். ஆனால், உழைக்கும் பெண்களுக்கு மாதவிலக்கின் போது கூட ஓய்வு கிடையாது. அதையும் மீறி ஓய்வு எடுத்தால் குழந்தைகள் பட்டினி கிடக்கும். வீட்டு வேலைகள் எதுவும் நடக்காது.
ஆணாதிக்கமும் மதமும் சேர்ந்து பெண் மீது தீண்டாமையை ஏவி தனி அறைக்குள் அடைக்கப்படுகிறபோது, அவர்கள் தொட்டதெல்லாம் தீட்டு என்று சொல்லப்படும்போது பெண்கள் மேலும் பலவீனமாக உணர்கிறார்கள். சமையலறை வேலை தொடங்கி கழிவறை சுத்தம் செய்யும் வேலைகளை முடித்துவிட்டு படுக்கையறை சென்றாலும் அங்கும் பெண்களின் ஓய்வு காணாமல் போகிறது.
பல சமயங்களில் விருப்பமின்றி தீண்டல், தனது விருப்பங்களை கூட சொல்ல முடியாத நிலைதான் பெண்களுக்கு நீடிக்கிறது. தாம்பத்தியத்தை கட்டாயமாக பெண்ணின் மீது திணிப்பது வன்முறையே. ஆண்களுடைய தேவையின் நீட்சி மட்டுமே பெண் என்பது போல் சமூகம் கட்டமைக்கப்பட்டு இருப்பது ஆணாதிக்கத்தின் உச்சம். பாலியல் விருப்பம் பற்றி யார் பேச வேண்டும், யார் கேட்க வேண்டும், என்று ஆண்தான் தீர்மானிக்கிறான். ஆண் தனது தேவையையும் விருப்பத்தையும் பேச இடம் உண்டு. ஆனால் அதையே ஒரு பெண் பேசினால் அது தவறாகிவிடுகிறது. பெண்களின் நாட்கள் இப்படித்தான் கடந்து போகின்றன.
சபரிமலை கடவுள் மாதவிடாயை தீட்டாக பார்க்கிறது. பெண்களை சபரிமலை கோவி லுக்குள் அனுமதிக்க வேண்டும் என்கிற பெண்களின் உரிமைக்கான போராட்டத்தை ஆதரித்து போடும் ஒரு முகநூல் பதிவு கூட அந்த பெண்ணின் கணவரின் விருப்பத்தோடு மட்டும்தான் என்ற நிலை உள்ளது.
சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை தெரிவிக்கும் அடிப்படை உரிமையை முடக்குவது முதல், தான் கற்ற நடனக் கலையை பிறருக்கு கற்றுத் தர விருப்பம் இருந்தும் அதைச் செய்ய முடியாமல், கணவன் வீட்டாரின் கவுரவம் என்ற பெயரில் பெண்கள் மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகள் வரை சகித்துக் கொள்ள முடியாமல் கணவன் வீட்டைவிட்டு நாயகி வெளியேறுகிறார். மொழி எல்லைகளை கடந்து ஒட்டுமொத்த பெண்களின் மனசாட்சியாக, ஒட்டுமொத்த பெண்களின் குரலாக இயக்குனர் ஜியோ பேபி இந்தப் படத்தை தந்துள்ளார்.
பெண்ணை கடவுளாக பார்க்கும் இந்த சமூகம்தான் அவளை தீண்டத்தகாதவர்களாக பார்க்கிறது. ஒதுக்கியும் வைக்கிறது. நாமும் கடவுள் என்று கூறி பெண்களை ஏமாற்ற வேண்டாம். ஆணாதிக்கமும், மதமும் பெண்கள் மீது சுமத்தும் தீண்டாமையை ஒழித்து அவர்கள் அச்சமற்ற சுதந்திரத்துடன் வாழ வேண்டும். அவர்கள் உரிமைக்கான போராட்டங்கள், வாழ்க்கை நெடுக நாம் துணை நிற்க வேண்டும்.
நீ எரியாமல்
நான் எரியாமல்
நாம் எரியாமல்
ஒளி எப்படி இருளை வெல்லும்?