டாக்டர் அம்பேத்கர் பக்கம்
மதமும் புரோகிதரும்
முறையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்
பம்பாய் கிரானிகிள்
நவம்பர் 8, 1929
பக்கம் 3 - 5, தொகுதி 36
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர்
நூல் தொகுப்பு
ஓர் அமைப்பைத் தோற்றுவிப்பதற்காக பம்பாயிலுள்ள சில பார்சிகள் ஓர் இயக்கத்தைத் தொடங்கியருப்பதாக, பெல்காமிலிருக்கும்போது நான் கேள்விப்பட்டேன்
சக்கரத்தில் ஒரு முட்டுக்கட்டை
பரம்பரையான இந்து புரோகிதர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எண்ணற்றவை, மற்றும் அவை திகைப்பூட்டுவதாயிருக்கின்றன. நமது நாகரிகத்தின் சக்கரத்தில் அவர் (புரோகிதர்) ஒரு முட்டுக்கட்டையாகும். மனிதன் பிறக்கிறான், அவன் திருமணம் செய்து கொள்கிறான், ஒரு குடும்பத்தின் தந்தையாகிறான், பின்னர் காலப்போக்கில் மரணமடைகிறான். இந்த வாழ்க்கை நெடுகிலும் புரோகிதர் ஒரு தீய நுண்ணறிவாளன் போன்று மனிதனை நிழல்போல் தொடர்கிறார். சாஸ்திரங்கள் மற்றும் ஸ்மிருதிகளுக்கு ஏற்ப அவர் கூறும் கொடூரமான விதியிலிருந்து விலகி செல்வதானது பயங்கர தண்டனைக்குள்ளாக்கப்படுகிறது. 99 சதவீத மக்கள் இதை தாக்குபிடிக்க முடியாதவர்களாக உள்ளனர். மனிதனை சமுதாயத்தில் இருந்து விலக்கி வைப்பது அல்லது வெளியேற்றுவது புரோகிதரே சாத்தானாக இருந்து உருவாக்கிய ஆயுதமாகும். இதை புரோகிதர் ஈவிரக்கமின்றி, இடைவிடாது, மூர்க்கமான உறுதியுடன் கையாள்கிறார். உத்தியோக தோரணையில் செயல்படும் பிராமணர் ஒருவழியாக மனித சமுதாயத்தின் ஒரு பரிதாபமான தனிநபராக காட்சி அளிக்கிறார் என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். நாம் அறிவதே போலவே அவருக்கும் இது தெரியும். காணப்பட முடியாத சக்திகளுக்கும் திக்கற்ற மனிதனுக்கும் இடையில் ஒரு தரகனாக இருக்கும் அவமானத்தை அவர் கடைபிடித்து அதன் மூலம் வாழ்க்கையை ஓட்டுகிறார். இது மனதில் வர்க்க நெறிகெட்ட தன்மையல்லவா என்று தத்துவஞானிகள் கேட்கக் கூடும். ஆனால் இந்த கேள்விக்கு விடை எதுவாக இருந்தபோதிலும், சமுதாயத்தின் ஜீவாதாரங்களைத் தனது சுய நலத்திற்குப் பயன்படுத்திக் கொண்டு, அவற்றை அரித்து வரும் புல்லுருவிகளை எவ்வித தடையும் கட்டுப்பாடும் இன்றி செயல்படுவதற்கு இந்த புல்லருவியை இனி ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இந்தியாவில் உள்ள நாம் ஆங்கிலேயே மறுமலர்ச்சி யில் இருந்து ஒரு படிப்பினையைக் கற்றுக்கொண்டு மதத்தையும் புரோகிதத்தையும் முறையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதனுடைய பிற்போக்கான மற்றும் கட்டற்ற வளர்ச்சியைத் தடுக்க வேண்டும்.
ஒரு வீரம் செறிந்த கடமை
வெகு ஜனங்களிடையில் இருந்து வரும் மூடநம்பிக்கையான நடைமுறைகளுக்கு எதிரான பயனுறுதியான சட்டம் இயற்றுவதற்கு ஒரு பெரும் தேவை இருக்கிறது. புரோகிதர் மூட நம்பிக்கைகளுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். கடவுள்களுக்கும் பெண் தெய்வங்களுக்கும் வீண் விரயமான படையல்கள், மரணத்தின்போது நீண்ட காலத்துக்கு துக்க சடங்குகள் அனுசரிப்பது, பிறப்பு மற்றும் திருமணங்களின்போதும் மிகுதியான சடங்குகள், அறிவற்ற சாதிரீதியான விருந்துகள் போன்ற சில நடைமுறைகள் புரோகிதர் மகிழ்ச்சியுடன் கடைபிடிக்கும் உணர்வற்ற, சில அர்த்தமற்ற நடைமுறைகளாகும். திருமணத்தை போன்ற மகிழ்ச்சிகரமான சந்தர்ப்பமாகட்டும், அல்லது மரணம் போன்ற துயரகரமான நிகழ்ச்சி ஆகட்டும் புரோகிதர்கள் அவற்றை சம நோக்கில் எதிர்கொள்கிறார்கள். அவர்களில் பலர், பார்சி நிருபர்களில் ஒருவர் சிறந்த முறையில் எடுத்துக்காட்டியபோல், தங்களுக்கு இரையாகின்ற வர்களை பயன்படுத்திக் கொள்வதற்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள். புரோகிதத்துவத்தின் தீமைகளின் பட்டியல் மெய்யாகவே திகைக்க வைக்கிறது. இறுதியாக அதனை ஒழித்துக் கட்டுவதை ஒரு லட்சியமாகத்தான் நமது பார் வையில் வைத்துக்கொள்ள முடியும். ஆனால் நமது நேர்மையான (தூய) இயக்கத்தைத் தொடங்குவதை நாம் ஒத்திப் போட முடியாது. சில முன்னணி பார்சிகள் ஒன்றுபட்டு தொடங்கியுள்ள நடவடிக்கைகளை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். பார்சி சமூகத்தில் எந்த அளவுக்குப் புரோகிதர்களின் தாக்கம் ஏற்பட்டு இருக்கிறது என்பது மெய்யாகவே வியப்பூட்டுவதாக இருக்கிறது. ஒரு பார்சி மரணமடைந்ததற்க்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்கு, அந்த ஏழைக் குடும்பத்திற்கு, அவர் உயிருடன் இருந்த பொழுதைக் காட்டிலும் பொருளாதாரரீதியில் கூடுதல் சுமையாகிறார் என்று சில பார்சி நண்பர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஒரு பார்சி பத்திரிகை அண்மையில், உயிருடன் வாழ்ந்து கொண்டிருந்தபொழுது ஓர் அலுமினிய டம்ளர் வாங்க முடியாத அளவுக்கு ஏழையாக இருந்த ஒரு நபரை உதாரணமாகக் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் அந்த நபர் இறந்து போன போது அவருடைய இறுதி சடங்குகளில் ஒரு வெள்ளிக் கிண்ணம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று புரோகிதர் வற்புறுத்தினாராம். தங்களுடைய கூர்மையான நடைமுறை விவேகத்தின் பயனாக, பார்சிகள் இந்தியாவில் புரோகிதத்துவம் என்னும் தீமையை ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு மிகவும் பொருத்தமாகவே முன்முயற்சி மேற்கொண்டிருப்பதை காட்டுதவற்காகவே இதை நான் மேற்கோள் காட்டுகிறேன். மேலும், புரோகிதத்துவத்தை துடைத்தெறியும் இந்த வீரமான மற்றும் உன்னதமான பணியில் அனைத்து அறிவொளி படைத்த இந்துக்களும் முகமதியர்களும் கிறிஸ்துவர்களும் சேர்ந்து நிற்பார்கள் என்பதில் எனக்கு அய்யமில்லை. ஏனெனில், புரோகிதத்துவத்தின் சுமையை தாங்குவதற்கு தனது பார்சி சகோதரர்களைக் காட்டிலும் அவர்கள் நிச்சயமாக மிகமிக இயலாத நிலையில் இருக்கின்றனர்.