தமிழக தொழிலாளர் வர்க்கத்திற்கு மேலும் ஒரு வெற்றி
10பி என்ற சட்டப் பிரிவு தமிழ்நாடு சட்டமன்றத்தால் 15.08.1982 முதல் மத்திய தொழில் தகராறு சட்டம், 1947ல் கொண்டு வரப்பட்டது.
2007, 2009ல் மிகப் பெரிய போராட்டங்கள் மூலமும், 2019ல் நீதிமன்ற உத்தரவின் மூலமும் பிரிக்காலில் 10பி ஆணைகள் பெற்றுள்ளோம். பிரிக்கால் நிர்வாகத்தின் அடாவடி நடவடிக்கைகளை அரசு ஆணையிட்டு தடுத்தது.
இப்போது 4ஆவது, 5ஆவது முறையாக மெட்ராஸ் ஜிம்கானா கிளப், மெட்ராஸ் போட் கிளப் நிர்வாகங்கள் செய்த 94 (56+38) பேர் ஆட்குறைப்பு நியாயம்தானா என்ற எழுவினாவை முடிவு செய்யும் வரை ஆட்குறைப்பு நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்ற 10பி ஆணையை 07.04.2021 அன்று பெற்றுள்ளோம்.
மெட்ராஸ் ஜிம்கானா கிளப், மெட்ராஸ் போட் கிளப் தொழிலாளர்களின் உறுதி, போராட்டத்திற்கு கிடைத்த பேராதரவு, காவல்துறை ஒடுக்குமுறை, குற்றவியல் வழக்குகள் ஆகியவற்றை துணிச்சலோடு எதிர்கொண்டு எல்டியுசி நடத்திய போர்க்குணமிக்க போராட்டங்கள், தோழர் கு.பாரதியின் 13 நாட்கள் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் ஆகியவை இந்த வெற்றியைத் தேடித் தந்தன.
கொரானா காலத்து ஆட்குறைப்பை, 07.04.2021 தேதியிட்ட அரசாணைகள் 139 மற்றும் 141 மூலம் தடுத்து நிறுத்தியுள்ள தொழிலாளர் போராட்டங்கள், சாத்தியமானவற்றை மட்டுமில்லாமல், அவசியமானவற்றையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை தருகின்றன.
- எல்டியுசி தலைமையகம், தோழர் கூடம்