COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, April 13, 2021

வுட்ராதீங்க யப்போவ்! வுட்ராதீங்க யம்மோவ்!
வுட்ராதீங்க யண்ணோவ்! வுட்றாதீங்க யக்கோவ்!
வுட்ராதீங்க! வுட்ராதீங்க! வுட்ராதீங்க!


எஸ்.குமாரசாமி


கர்ணன் படம் எடுத்துள்ள மாரி செல்வராஜ் 2018 இறுதியில் தென் தமிழ்நாட்டு தலித் வாழ்க்கையை, அது சந்திக்கும் ஒடுக்குமுறையை, அதன் வலியை, தவிப்பை, அதன் வேட்கையை 'பரியேறும் பெருமாளின்' பரியன் மூலம் உயிர்ப்போடு காட்சிப்படுத்தினார்.

பரியன் தாங்கொணாத வன்முறையை, அவமானத்தை, பதிலடி கொடுக்க முடியும் என்று தெரிந்த பிறகும், கல்வி கற்க வேண்டும் என்ற பேராவாவால் சகித்துக் கொண்டான். பேரன்பு கொண்டவனால் பெரும் கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் சாதி இந்து குடிமை சமூகத்திடம், சாதி ஆதிக்கம் பற்றிய ஓர் உரையாடலில் ஈடுபட்டான். அதற்கு நிச்சயமாக தாக்கம் இருந்தது.
இப்போது, மாரி செல்வராஜ் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், அவரது நம்பிக்கை பெற்று, தனுஷுக்கும் உரிய இடம் தந்து, 'தன் படமொன்றை' கர்ணனில் எடுத்துள்ளார். மாரி செல்வராஜ், உங்கள் கர்ணன் ஜனநாயகத்திற்கு, மக்கள் சார்பு அரசியலுக்கு வலு சேர்த்துள்ளான். மக்களை நேசிப்பவர்கள் தமிழ் நாடு நெடுக உள்ள கர்ணன்களை, உருவாகிற, உருவாக வேண்டிய கர்ணன்களை, 'கண்டா வரச் சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க, அவன கண்டா வரச்சொல்லுங்க, கர்ணன கையோட கூட்டி வாருங்க' எனப் பாடி அழைத்து வரவேற்போம்.


மகாபாரத கர்ணன், இதிகாச கர்ணன், அது மேலோருக்காக மேலோர் எழுதிய இதிகாசம். அவனுக்கு அவன் தந்தை சூரியன் தந்த கவசமும், குண்டலமும் இருந்தன. அவன் தேரோட்டி மகன் என்ற சூத்திர இழிவைச் சுமந்த போதும், அரச வம்ச பெண்ணின், கடவுள் ஒருவனின் மகன் என்ற பாரம்பரிய பெருமை அவனுக்கு இருந்தது. இரண்டு மன்னர் குல போட்டியாளர்கள் மத்தியில் அவன் ஒரு பிரிவை தேர்வு செய்தான்.


மாரி செல்வராஜும், சந்தோஷ் நாராயணனும், தேனி ஈஸ்வரும் நம் முன் நிறுத்திய கர்ணனை, 'சூரியனும் பெக்கவில்ல, சந்திரனும் சாட்சியில்ல', அவன் 'கவசத்தையும் கண்டதில்ல, எந்த குண்டலமும் கூட இல்ல'. உயர் சாதிகாரர்களுக்கு பிறந்தவன் என்ற கவசமும், குண்டலமும் அவனிடம் இல்லை.


கர்ணனின் உற்றார் உறவினர், சொந்தங்கள், தொப்புள் கொடி சனம், ஏன் எனக்கு பேருந்து நிறுத்தம் இல்லை எனக் கேட்டால், என் பெண்களை ஏன் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கினாய் என்று நாலு தட்டு தட்டி கேட்டால், கர்ப்பிணி பெண்ணுக்காக பேருந்து நிற்கவில்லை என்ற ஆத்திரத்தில் பேருந்தை அடித்து உடைத்து நொறுக்கினால், குடிமை சமூகம், இந்த சாதி சார்பு சமூகம், சின்ன சாதி சனங்களுக்கு இது அடுக்குமா என, வன்மத் துடன் காக்கி சட்டையை ஏவி, வன்முறை வெறியாட்டம் போட்டு, கொடூரமாய் கொலை செய்வார்கள். வரலாறு நெடுக அரச வன்முறையை ஏவுபவர்கள்தான், பலியானவர்களை பாதிப்புக்குள்ளானவர்களை, வன்முறையாளர்கள் என குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்தப் பின்னணியில் நம் கர்ணன் முன்பு ஒரு தேர்வு இருந்தது. அது இதிகாச தேர்வுக்கு நேரெதிரானது. வாழ வழிதேடி அரசப்படையில் சேர்வதா அல்லது ஆதிக்க அதிகார மமதை கொண்டோருக்கு எதிராக ஒரு போரை வழி நடத்த மக்களோடு சேர்ந்து நிற்பதா என்ற தேர்வுதான் இருந்தது. இந்த கர்ணன், சிறை வாசமும் சாவும் காத்திருக்கிறது என தெரிந்தும், காக்கிச் சட்டைகளுடன் போர் புரிய திரும்பி விடுகிறான். இதிகாச கர்ணன் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, மன்னனாக்கியவனுக்கு நன்றி சொல்ல என்ற காரணங்கள் சொல்லி, ஆதிக்கக் கும்பல் ஒன்றின் பக்கம் சென்றான். இந்த கர்ணன் மக்கள் பக்கம் நின்று போராடுகிறான்.


புல், பூச்சி பூண்டு, பூனை, நாய், கோழி, ஆடு, மாடு, குதிரை, யானை, குளம், குட்டை, பறவைகள், நிலம், ஆகாயம் மத்தியில் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்கள், இயற்கைக்கு விரோதமான, சாதி ஆதிக்கத்திற்கு எதிராக துணிந்து நின்றார்கள்.


இயற்கையோடு இயைந்த இந்த ஆதிகுடிகள், செயற்கையான சாதி ஆதிக்கத்தால் துன்புறுவது வரலாற்றுச் சோகமே.


இந்தியாவில், தமிழ்நாட்டில் கார்ப்பரேட் ராஜ்ஜிய, இந்து ராஷ்டிர எதிர்ப்பாளர்கள், நகர்ப்புற நக்சல்கள் என வேட்டையாடப்படும் போது, இறுதிச் சடங்குக்கு சென்றவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பாயும் போது, வெறுப்பு அரசியல் வேண் டாம் என்பவர்கள் மீது தேச விரோத சட்டப் பிரிவு பாயும்போது, தலித்துகள் பானை சின் னத்திற்கு வாக்களித்ததற்காக சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்படும்போது, காவிக் கூட்டம் நீலத்தை, கருப்பை, சிவப்பை வேரறுக்க எல்லா அரங்குகளிலும், களங்களிலும், தாக்குதல் தொடுக்கும்போது, மக்கள் விரோதிகளிடம், சாதி ஆதிக்கத்திடம், அரச வன்முறையிடம், நீதான் குற்றவாளி, குற்றம் செய்ய முயன்றால் உன்னை தடுப்பேன், நீ குற்றம் செய்தால் உன்னை தண்டிப்பேன், அது என் மக்களது உரிமை, கடமை என மாரி செல்வராஜ், கர்ணன் படத்தில் சொல்லியுள்ள செய்தி, தமிழ் கூறு நல்லுலகம் தெரிந்து கொண்டாக வேண்டிய, பின்பற்றியாக வேண்டிய செய்தியாகும்.


தாக்கும் காவல்துறையை, தொப்பி போட்ட பேய் என்று பாடகர் தீ பாடுவது சரியானது என்பதற்கு, தமிழ்நாட்டில்தான் எத்தனை எத்தனை இரத்த சாட்சிகள்!
கண்டவன அடிக்க வாரான்!
கனவை எல்லாம் பொசுக்க வாரான்!
தங்க மவனே பயப்படாதே!
செல்ல மவளே பயப்படாதே!
ஆதி கொடியே பயப்படாதே!...
என்ற பாடல் வரிகள் மக்கள் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.


கர்ணன் படத்தில் வருகிற 'வுட்ராதீங்க' பாடலின் அறைகூவல் தவிர்க்க முடியாமல் நமக்கு இன்குலாபின் கவிதை வரிகளை நினைவுபடுத்துகின்றன.
கொடிய பண்ணையாரின் வீட்டுக்கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மக்கள் படையின் வீரர்கள் பண்ணையார் தலைசீவி பந்தாடிய பின், மக்களிடம் பண்ணையில் குவிந்திருந்த நெல்லை எடுத்துச் செல்ல சொல்வார்கள். பக்கத்தில் போலீஸ் முகாம் இருப்பதால் தயங்குவதாக பதில் வரும். இன்குலாப்பின் கவிதை வீரன், மக்களிடம் முழங்குகிறான்.
'அடிக்க உயரும் கை அறுந்து விழும் படிக்கு
திருப்பி அடிக்கின்ற துணிவு நமக்குண்டு
கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் அக்கூட்டம்
கொள்கைக்கு மார் பிளக்கும் கூட்டம் நம்கூட்டம்.
அடிபடுவதால் நம் அங்கம் கிழிபடலாம்.
கொடுமைக்கு எதிரான கொள்கை சாய்ந்திடுமோ?
வலியோருக்கு ஏவல் நாயாய் வளர்ந்திட்ட
அரசாங்க ரவுடிகள் முன் அஞ்சி  ஒடுங்காதீர்'


பொடியன்குளம் மக்கள் கர்ணனை வேலைக்கு அனுப்பிவிட்டு போலீஸோடு போரிடுகிறார்கள். யானை ஏறிய, வாளேந்திய, குதிரை ஏறும் கர்ணனை, மாவீரனாக அவர்கள் கொண்டாடினாலும், 'நீ போ' என அனுப்பி விட்டு அறச்சீற்றம் வெள்ளமென பாய்ந்த போரில் வீழ்ந்தார்கள், வீழ்த்தினார்கள். போர் முடியும் நேரமே கர்ணன் வந்தான். சூது வாது நிறைந்த கண்ணபிரானின் கழுத்தில் வாளை வைக்கிறான். கதறி மறு வாய்ப்பு தரும் விதத்தில் 'அப்படி பேசாதயா' என கேட்கிறான். கேட்காதவன் கழுத்து அறுபடுகிறது. வீழ்த்தப்பட்ட மக்கள் வெல்கிறார்கள்.


பொடியன்குளம் மக்களும், கர்ணனும், வனப்பேச்சிகளும் அநீதிக்கு எதிராக விடாபிடியாய், விட்டுக்கொடுக்காமல் போரிடுங்கள் என தமிழ்நாட்டு மக்களை அறைகூவி அழைக்கிறார்கள். பறை அதிர்கிறது. மக்கள் துள்ளி ஆடுகிறார்கள்.
ஹே
வுட்ராதீங்க யப்போவ்!
வுட்ராதீங்க யம்மோவ்!
வுட்ராதீங்க யண்ணோவ்!
வுட்ராதீங்க யக்கோவ்!
வுட்ராதீங்க! வுட்ராதீங்க! வுட்ராதீங்க!
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
வுட்ராதீங்க, வுட்ராதீங்க.......
வுட்ராதீங்க!
வுட்ராதீங்க!

Search