COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, April 13, 2021

 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021
அம்பத்தூர் 008 தொகுதி


தயாரிப்புகள், நடந்த வேலைகள், காத்திருக்கும் கடமைகள்


எஸ்.குமாரசாமி


11.10.2019 அன்று கம்யூனிஸ்ட் கட்சியை நாம் நிறுவினோம். அதற்கு பிறகு விறுவிறுப் பாகவும் தொடர்ச்சியாகவும் வேலைகள் நடந்து வந்தன.

பாஜக, அஇஅதிமுக பிணச்சுமை அரசுகள், நமக்கு தொடர்ந்து வேலை இருப்பதை உறுதி செய்தன. கொரோனா காலத்திலும் மக் கள் நலனே கட்சியின் நலன் என துணிச்சலுடன் களப்பணி ஆற்றினோம். அரசுக்கும் முதலாளிகளுக்கும் எதிரான போராட்டங்களை கட்டமைத்தோம். கெடுவாய்ப்பாக நமது முன்னணி தோழர் தேவகி கொரோனாவிற்கு பலியானார். அஞ்சலி கூட்டம், பெருந்திரள் பங்கேற்புடன், மக்கள் சார்பு அரசியலை முன்வைக்கிற கூட்டமாக அமைந்தது.
நவம்பர் 2020ல் தோழர்கூடம் திறக்கப்பட் டது. கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்க மய்யம், மக்களுக்கான இளைஞர்கள், மக்களுக்கான மாணவர்கள், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம், பெண்கள் அதிகாரம் என்ற பதாகைகளுடன், போராட்ட பாசறையாக தோழர் கூடம் செயல்பட்டு வருகிறது.


எழுவர் விடுதலைக்கான காலவரையற்ற பட்டினிப் போராட்டம், கைது, எதிர்ப்புப் பேரணி என்ற நிகழ்ச்சிகள் விடாப்பிடியாகவும், அனைத்தும் தழுவிய விதத்திலும் (Consistent and Compreensive) ஜனநாயகத்திற்காக நாம் போராடுகிறோம் என்பதை மறு உறுதி செய்தன. வருடத்தின் கடைசி நாளில் முடிந்த மேக்னா போராட்டம் மூலதன ஆதிக்கத்திற்கு எதிராக நமது போராட்ட மரபை பறைசாற்றியதோடு, திருபெரும்புதூர் மண்டலத்தில் பரந்த தொழிலாளர் ஒற்றுமை காண ஒரு நல்ல முன்னுதாரணமாக அமைந்தது. தொழிலாளர் ஒருமைப்பாடு மன்றம் அல்லது தொழிலாளர் ஒற்றுமை மய்யம் என்ற ஓர் அமைப்பை நிறுவ, நடவடிக்கைகளை துவங்கினோம். ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பிரகாசுடன் நடந்த பேச்சுவார்த்தையின்  அடிப்ப டையிலும், தேர்தல் அறிவிப்பை கணக்கில் கொண்டும், மே 2க்கு பிறகு இந்த முயற்சிகள் தொடர உள்ளோம். கனவு காண துணியுங்கள் (Dare to Dream) என்ற அடிப்படையில் தொழிலாளர் ஒற்றுமை மய்யம் என்ற பெயரில் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய அரசிடம் தொழிலாளர் வர்க்க சாசனத்தை முன் வைக்க சில ஆயிரம் பேரை திரட்டியாக வேண்டும்.


இந்த காலகட்டத்தில்தான் தோழர் பழனிவேல் நீண்ட பல வருடங்களுக்கு பிறகு டைமன்ட் செயின் தொழிற்சாலையில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எம்ஆர்எஃப் தொழிற்சாலையில் தோழர் கள் பாரதி மற்றும் பழனிவேல் சங்க தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தனர்.


கொரோனாவை காரணம் காட்டி பணக்கார பெரிய மனிதர்கள் மெட்ராஸ் ஜிம்கானா கிளப்பில் 56 பேரையும் மெட்ராஸ் போட் கிளப்பில் 38 பேரையும் ஆட்குறைப்பு செய்தார்கள். சென்னை மாநகரத்தின் இதயப்பகுதியில் இடது தொழிற்சங்க மய்யத்தின் போராட்ட பதாகை உயர்ந்து எழுந்தது. நமது தோழர்கள் பாரிமுனையிலும் அண்ணாசாலையிலும் அரசிடம் நியாயம் கேட்டபோது காவல்துறையின் கடுமையான அணுகுமுறையை எதிர்கொண்டனர். அடக்குமுறைக்கு அஞ்சாமல் ஆர்த்தெழுந்து தோழர்கள் காவல்துறையை நேருக்கு நேர் சந்தித்தது, நமது தோழர்களுக்கு மட்டுமில்லாமல் பரந்த தொழிலாளர் வர்க்கத்திற்கும் நம்பிக்கையும், உற்சாகமும் தருவதாக இருந்தது. சமூகத்தின் அடித்தட்டு மக்களான இந்தத் தொழிலாளர்களுக்காக, தோழர் பாரதி 13 நாட்கள் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் இருந்தது, மிகப்பெரிய அளவுக்கு பலரின் கவனத்தையும் ஈர்த்தது. சென்னை நெடுக மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலும் அம்பத்தூரிலும் அளவிலும் எண்ணிக்கையிலும் இதுவரை இல்லாத அளவில் பிரம்மாண்டமாகவும் வண்ணமயமாகவும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. தொமுச, உழைக்கும் மக்கள் தொழிலாளர்கள் மாமன்றம், லேலன்ட்  சங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆதரித்தனர். தோழர் பார்வேந்தனோடு விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்கள், தோழமையோடு துணை நின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் போராட்டத்தை ஆதரித்து நேரில் வந்து வாழ்த்தி, பேசியது நம் அமைப்பிற்கு மிகுந்த மகிழ்ச்சி தந்தது.
தோழர் பாரதியின் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் முடிந்தவுடன் சற்றும் தாமதம் இன்றி 11.02.20211 அன்று சிங்காரவேலர் நினைவு நாளில் அம்பத்தூர் சட்டமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. அதற்கு முன்பாக கட்சி ஜனவரி 4 முதல் ஏப்ரல் 14 வரை நூறு நாட்கள் மக்கள் கோரிக்கை பரப்புரை இயக்கத்தை துவக்கி இருந்தது. அம்பத்தூரில் மக்கள் கோரிக்கை மாநாடு நடத்த திட்டமிட்டிருந்தது. களப்போராட்டம் முழு கவனம் கோரியதால் இந்த மாநாடு தள்ளி வைக்கப்பட்டது.


பிப்ரவரி 11 வேட்பாளர் அறிமுக கூட்டம், நம்மாலும் ஓரளவிற்கு நிதி திரட்ட முடியும் என்ற செய்தியை சொல்ல நிச்சயம் உதவியது.  போராட்டத்தில் அரசாணைக்குக் காத்திருந்த போது, நாம் சற்றும் எதிர்பாராதவிதத்தில் பிப்ரவரி 26 அன்று தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வந்தது.
26.01.2021 அன்று கன்னியாகுமரியில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கத்தின் மாநில ஊழியர் கூட்டம் நடத்தப்பட்டது. மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்திற்கு அதன் சிறப்பு தலைவர் தோழர் பாரதி தலைமை தாங்கினார். செய்தியாளர்களை சந்தித்தார்.


உடனடியாக தேர்தல் தயாரிப்புப் பணிகளை முடுக்கிவிட நேர்ந்தது. தோழர் கூடத்தில் 28.02.2021 அன்று தலைநகர் மண்டலத்திலிருந்து 35 தோழர்கள் கூடினார்கள். பரப்புரையை எங்கே, எப்படி, யார் மேற்கொள்வது, தோழர்களை நிதியை எப்படி திரட்டிக்கொள்வது, அம்பத்தூர் தொகுதியில் அதிமுக பாஜக ஆட்சியை முறியடிப்பதற்கான நம்பகமான போராடும் எதிர்க்கட்சி நாமே என மக்களை கருத வைப்பதற்கான வழிமுறைகள் ஆகியவை பற்றி, கூட்டம்  விவாதித்தது. மார்ச் 2, 3, 9, 12, 18, 21, 22, 23 தேதிகளில் சிறிய மற்றும் பெரிய தயாரிப்பு கூட்டங்கள் நடத்தப்பட் டன. திட்டமிடுதல், திட்டத்தை முழுமை செய்தல், குறைகளை களைதல், அமலாக்கத்தை கண்காணித்தல் போன்றவற்றிற்கு இந்த கூட்டங்கள் உதவின.


தோழர் கூட கட்டிட மாடியில் போடப்பட்ட கூரை கொட்டகை தேர்தல் பரப்புரைக்கு பெரிதும் உதவியது. கொட்டகையில் மார்ச் 8, 17, 23, 31 தேதிகளில் நடந்த கூட்டங்களில், தேர்தல் பரப்புரை கூட்டங்களும் நிகழ்ச்சிகளும் மார்ச் 28 ஏப்ரல் 2 பேரணிகளும் எப்படி நடத்துவது என்று  விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.


தோழர் குமாரசாமியோடு பரப்புரையை திட்டமிட்டு வழிநடத்துவதில் தோழர்கள் எ.எஸ்.குமார், பாரதி, பழனிவேல், மோகன், சுரேஷ் ஆகியோருடன் தோழர் நிவேதாவும் இணைந்து அன்றாடம் செயல்பட வேண்டும் என்று முடிவானது.
மார்ச் 8அய் ஒட்டி நடந்த தயாரிப்புகளில்  ஆண்களுக்கான உறுதிமொழி தயாரானது. பெண்ணுரிமை தொடர்பான தோழர்களின் புரிதலை மேம்படுத்த தி கிரேட் இந்தியன் கிட்சென் திரைப்படம் பற்றிய அறிமுகக் கட்டுரையும், ஹென்ரிக் இப்சனின் உலகப் புகழ்பெற்ற த டால்ஸ் ஹவுஸ் நாடகத்தின் இறுதிப் பகுதியும், மொழிபெயர்த்து கம்யூனிஸ்ட் இதழில் வெளியிடப்பட்டது.
கட்சியின் ஆலோசனைக் குழுத் தலைவர் மற்றும் வேட்பாளருடன் நடந்த நேர்காணலும் தேர்தல் சிறப்பு வெளியீடாக கொண்டு வரப்பட்டது.


கட்சியும் எல்டியுசியும் நடத்திய போராட்டங்களோடு தொடர்புபடுத்தி சில பகுதிகளுக்கான சிறப்பு பிரசுரங்கள், தலைநகர் மண்டல தொழிலாளர்களுக்கான மடிப்புப் பிரசுரம், வேட்பாளரின் போராட்ட பதிவுகள்  கொண்ட பிரசுரம், வாடிக்கையான தேர்தல் பரப்புரை பிரசுரங்கள் என ஒரு லட்சத்திற்கும் மேல் அச்சடிக்கப்பட்டன. உள்ளூர் பத்திரிகைகளில் ஒரு லட்சம் பிரதிகள் வரை செய்தி வந்தது. அவற்றோடு ஏற்கனவே எஞ்சியிருந்த பல ஆயிரம் பிரசுரங்களை விநியோகித்து முடித்து விட்டோம்.


சிறப்பு கவனத்துடன் படிவம் 2பி வேட்பு மனு, படிவம் 26 பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தல், குற்றப் பின்னணி விளம்பரம் செய்தல், குறிப்பிட்ட மூன்று நாட்கள் கணக்கு தாக்கல் செய்வது ஆகிய வேலைகளுக்கு பொறுப்பேற்ற தோழர்கள் மிகுந்த கவனத்துடன் செய்தனர்.  


தேர்தல் பணி நடந்து கொண்டிருந்த போதே மெட்ராஸ் ஜிம்கானா கிளப், மெட்ராஸ் போட் கிளப், இரண்டிலும் ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்கள் வேலைக்கு எடுக்கப்படுவது உறுதியானது. தி நகர் சோசியல் கிளப்பில்,  பணிநிரந்தரம் ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிக்கப்பட்டது. பிரிக்கால், மேக்னா, மதர்சன் வழக்குகள்  நடத்தப்பட்டன. அழிஞ்சிவாக்கத்தில் மின் இணைப்புக்கான போராட்டம் தீவிரமடைந்து வெற்றி பெற்றது.


இந்தத் தேர்தலில் சிறப்பம்சமாக தொழிற்சங்கங்களின் ஆதரவை நாடினோம். அதோடு மட்டுமில்லாமல் குடியிருப்பு நல சங்கங்களை, குடியிருப்பு பகுதிகளில் நேரில் சென்று ஆதரவு கேட்டதும் நடந்தது.


மார்ச் 23க்குப் பிறகு அன்றாடம் இரவு கூட்டங்கள் நடந்தன. 05.04.2021 அன்று மட்டும் கூட்டம் நடத்தப்படவில்லை.


வாக்காளர்கள் எண்ணிக்கை, வார்டுகள், வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அம்பத்தூர் நகராட்சியாக இருந்தபோது எத்தனை வார்டுகள், மாநகராட்சியான பின்பு எத்தனை வார்டுகள் என ஒப்பிடப்பட்டது. கவனம் செலுத்தி வேலைகள் செய்வதற்காக 79, 81, 82 வார்டுகள் ஒரு தொகுப்பும், 85, 86 வார்டுகள் ஒரு தொகுப்பும், தேர்வு செய்யப்பட்டன. இந்த அய்ந்து வார்டுகள் தொடர்பான பகுதிகள் குறித்த விவரங்கள் எடுக்கப்பட்டு தட்டச்சு செய்யப்பட்டு பொறுப்பாளர்களுக்கும், பரப்புரை செய்பவர்களுக்கும் தரப்பட்டது.


முன் எப்போதும் நடந்திராத விதத்தில் இந்த முறை வேட்பாளருடன் பரப்புரையும், வீடு வீடாகசென்று வாக்குகள் கேட்பதும்  ஒன்றிலிருந்து ஒன்று சுதந்திரமாகவும் ஒரே நேரத்திலும்  நடைபெற்றன.


பரப்புரையில் 11.02.2021 முதல் கலந்து கொண்டவர்கள், இரண்டு மருத்துவமனைகள் ஊழியர்கள், அரசு அச்சக ஊழியர்கள், கேளிக்கை விடுதி ஊழியர்கள்,  உள்சென்னை தோழர்கள் என 250 பேர் வரை இருப்பார்கள். காஞ்சி மாவட்டத்தில் இருந்து ஹுண்டாய், நிப்கோ, மேக்னா, மதர்சன், சான்மினா, ஃபோர்ட், நிசான், டென்னகோ, ஏசியன் பெயின்ட்ஸ், நிப்பான்  உள்ளிட்ட ஆலைகளின் தோழர்கள் 75 பேர் வரை  பரப்புரையில் கலந்துகொண்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து கட்சித் தோழர்கள், சாலையோர வியாபாரிகள், பாரத் ஃபுட் தோழர்கள் என 180 பேர் வரை பரப்புரையில் கலந்துகொண்டனர். நாமக்கல், சேலம், கோவை தோழர்கள் 20 பேரும் செங்கல்பட்டு தோழர்கள் 10 பேர் வரையிலும் அம்பத்தூர் தோழர்கள் 200 பேர் வரையிலும் பரப்புரையில் கலந்துகொண்டனர். திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை டாஸ்மாக் தோழர்களும் 20 பேர் வரை பரப்புரையில் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டத்திலிருந்து இரண்டு தோழர்கள் இரண்டு நாட்களும், இரண்டு தோழர்கள் நான்கு நாட்களும், ஒரு தோழர் எட்டு நாட்களும் இரண்டு தோழர்கள் 13 நாட்களும், பரப்புரையில் கலந்து கொண்டனர். கோவையில் இருந்து ஏழு தோழர்கள் இரண்டு நாட்களும் ஒரு தோழர் மூன்று நாட்களும், ஒரு தோழர் நான்கு நாட்களும், ஒரு தோழர் ஐந்து நாட்களும், ஒரு தோழர் ஏழு நாட்களும் ஒரு தோழர் எட்டு நாட்களும் பரப்புரையில் கலந்து கொண்டனர். 


புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தோழர் புவனேஸ்வரி, சில தினங்களுக்கு முன்பு வழக்கறிஞராக பதிவு செய்தவர், 18 நாட்கள் பரப்புரையில் கலந்து கொண்டார். பரப்புரையில் 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஈடுபட்டது  குறிப்பிடத்தக்கதாகும்.


தோழர்கள் சங்கர், பாரத், பிரசாந்த், தினகர், சீதா, பூங்குழலி என்ற இளைஞர் குழாம், ஒன்றிணைந்து பரப்புரையில் ஈடுபட்டனர். வேட்பாளர் வாகன பரப்புரையில் தோழர்கள் சீதா, தினகர் பங்கேற்பு கவனத்தைப் பெற்ற தாக அமைந்தது.


காலை, தூய்மைப் பணியாளர்கள் வேலைக்கு வரும் நேரத்தில், 15 வார்டுகளில் அவர்களை நேரில் சந்தித்து பிரசுரம் வழங்கப்பட்டது.
காலை வேளையில் வேட்பாளர் வாகனம், பெரும்பாலான நாட்கள் வேட்பாளருடனும் சில நாட்கள் வேட்பாளர் இல்லாமலும் பரப்புரையில் ஈடுபட்டது. ஆட்டோவில் உரையாற்றுவதும், ஒலிப்பதிவு செய்ததைப் போடுவதும் நடந்தது. 


மாதிரி வாக்குச்சீட்டுகள் 2,000 தயாரிக் கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட குறிப்பான மக்கள் பகுதியில் விநியோகிக் கப்பட்டது. நம்பகமான வாக்காளர்களை அடையாளம் காணும் விதத்தில் வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்கும் முயற்சி எடுக்கப்பட்டது.


பரப்புரை நடந்து கொண்டிருந்தபோது சென்னை பெருநகர மாநகராட்சி 7ஆவது மண்டல தூய்மைப் பணியாளர்கள் ஒரு போராட்டம் நடந்து கொண்டிருந்தபோதே வந்தனர். அவர்களது போராட்டம் வேலை மறுப்புக்கு எதிராகவும், மாநகராட்சி ஊழியர்களான அவர்களை ஒப்பந்ததாரர்களின் ஊழியர்களாக மாற்றும் முயற்சிக்கு எதிராகவும் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட  பல நூற்றுக்கணக்கான பெண்களை வேட்பாளர் நேரில் சந்தித்து, அவர்களது துணிச்சலும் நம்பிக்கையும் வலுப்பெற உதவி னார். தொழிற்சங்க தலைவர், வழக்கறிஞர், பல போராட்டங்களை முன்னின்று வழி நடத்தியவர் என்ற விதத்திலான வேட்பாளர்  பற்றிய எண்ணம், அவர்களை வேட்பாளர் நோக்கி ஈர்த்தது. கட்சி தரப்பில் விரைந்து செயல்பட்டு அவர்களுக்கான ஒரு பொதுக் கூட்டம் மார்ச் 17 அன்று நடத்தப்பட்டது. அந்தப் பொதுக்கூட்டம் தேர்தல் பரப்புரையில் மிக முக்கியமான ஒரு கூட்டமாக அமைந்தது. அம்பத்தூரில் அடித்தட்டு மக்களைப் பாதுகாப் பதை முதன்மையான கடமையாக எடுத்துச் செய்பவர்கள் நாமே என கூட்டம் உணர்த்தியது. வேட்பாளரின் உணர்ச்சிமயமான, அதே நேரம் மக்கள் சார்பு போராட்ட அரசியலை மய்யப்படுத்திய உரை, தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் மக்கள் மத்தியில், தோழர்கள் மத்தியில், மிகுந்த உற்சாகம் தருவதாக அமைந்தது.


பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாளான மார்ச் 23 அன்று அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் தூய்மை பணியாளர்களுக்கான கூட்டம் நடந்தது. 600 பேருக்கு மேல் கலந்து கொண்டார்கள். எல்டியுசி இணைப்பு சங்கமான உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவரான வேட்பாளர், தூய்மை பணியாளர்களுக்காக உயர்நீதிமன்றத்தில் சமவேலைக்கு சமஊதியம் கோரி தாக்கல் செய்த வழக்கு பற்றி கூட்டத்தில் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களை வேலை நீக்கம் செய்ய கூடாது அவர்கள் வேலையை அவுட்சோர்ஸ் செய்யக் கூடாது என்று இடைக்கால தடை கோரியதும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்த அறிவிப்பை ஆரவாரமாக வரவேற்றனர்.
மார்ச் 31 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. கொரோனா போராளிகளான அவர்களை, கொரோனா திரும்பவும் வருவதாக அரசே தகவல் சொல்லும் நேரத்தில், மூன்று மாதங்கள் வரை வேலை நீக்கம் செய்யக்கூடாது, அவர்கள் வேலை அந்தஸ்தை மாற்றக்கூடாது என, உத்தரவிட்ட நீதிமன்றம் பணி நிரந்தரம் கோரி வழக்கு போடும் உரிமையும் அவர்களுக்கு உண்டு என்றது.


நீதிமன்ற உத்தரவு பற்றி 01.04.2021 அன்று பின்மதியம் நூற்றுக்கணக்கான தொழிலாளர் கள் மத்தியில் தெரிவிக்கப்பட்டது. வெடிவெடித்து மலர் தூவி ஆட்டம் பாட்டத்துடன் அந்த தீர்ப்பை கொண்டாடிய தொழிலாளர்கள், புரண்டோடிய மகிழ்ச்சி வெள்ளத்தில், வேட்பாளரை அம்பேத்கர் சிலைக்கு மாலையிட அழைத்துச் சென்றனர். மக்கள் மனங்களில் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு போட்டியாளர் என்ற எண்ணத்தை கொண்டு வர இந்த  நிகழ்வுகளும், கட்சி நடத்திய பேரணிகளும், அன்றாடம் பகுதிகளில் நடந்த நமது பரப்புரைகளும் உதவின.


திட்டமிட்டபடி கட்டமைக்கப்பட்ட, 28.03.2021 தேதிய இருசக்கர வாகன பேரணி, தேர்தல் களத்தில் ஒரு குறிப்பிடத்தக்க ஆட்டக்காரராக கட்சியை, மக்கள் கவனத்தில் வைக்க, கட்சி எடுத்த முக்கிய முயற்சி ஆகும். அனைத்து வார்டுகள் வழியாகவும் சென்ற இந்த பேரணியில் 200க்கும் சற்று கூடுதலான இருசக்கர வாகனங்கள் கலந்துகொண்டன. வேட்பாளர் வாகனம், 2 ஆட்டோக்கள், 3 மகிழுந்துகள் பேரணியில் கலந்துகொண்டன.  ஏப்ரல் 3க்குப் பிறகு வாகனங்கள் கூடுதல் எண்ணிக்கையில் செல்ல தடை என்பதால் அவசர அவசரமாக ஏப்ரல் 2 அன்றே மீண்டும் ஒரு வாகன பேரணி நடத்த திட்டமிடப்பட் டது. அமைப்பின் உள்ளுறை ஆற்றல் இந்தப் பேரணியில் வெளிப்பட்டது. காலையில் 60 இருசக்கர வாகனங்கள், 5 மகிழுந்துகள் கலந்து கொண்ட பேரணியில் மாலையில் ஆன்லோட் கியர்ஸ் ஆலையில் இருந்து மட்டும் 67 இரு சக்கர வாகனங்கள், காஞ்சி மாவட்டத்தில்  இருந்து 10 இருசக்கர வாகனங்கள், திருவள்ளூர் 7, சென்னை 6 புதிதாக என சேர்ந்து கொண்டனர். இந்தப் பேரணி கட்சி பரப்புரையின் இறுதி பெரிய நிகழ்ச்சியாகும்.


வழக்கம்போல் இந்த பரப்புரையிலும் சில தோழர்களின் அயராத உழைப்பு  கவனிக்கத் தக்கதாக இருந்தது. தொழிலாளி வர்க்க தோழர்களின் அர்ப்பணிப்பும் ஆற்றலும் நிறைந்ததாக கட்சியின் தேர்தல் பரப்புரை இருந்தது. மற்ற கட்சியினரை காட்டிலும், நமது   பொதுக்கூட்டங்களில் பேரணிகளில் கூடுதல் தோழர்கள் கலந்து கொண்டனர்.
வரவுகள், செலவுகள்: 


கணிசமான வரவும் அதற்கேற்ற செலவும் போக, தோழர்கூட குத்தகைக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை திருப்பித்தர, அடுத்து சில மாதங்கள் தோழர் கூடத்தை நடத்த சேமிப்பு வைத்துள்ளோம். வரவு செலவு விவரங்கள் கூட்டத்தில் விரிவாக படித்துக் காட்டப்பட்டு விளக்கப்பட்டன.
காத்திருக்கும் கடமைகள்


ஒவ்வொரு தேர்தலையும், வெறுப்பு அரசியலை பரப்ப ஒரு வாய்ப்பாக பயன்படுத்தும் பாஜக, தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் பெரிதாக வளர முடியவில்லை. வங்கத்தை பிடிக்க  கடுமையான முயற்சிகளில் மோடியும் அமித் ஷாவும் நேரடியாக இறங்கியுள்ளனர். கார்ப்பரேட் ராஜ்ஜியம், இந்து ராஷ்ட்ரா அச்சுறுத்தும் போது, உதவாதினி ஒரு தாமதம் என, பாஜக  எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. நிச்சயமாக ஆகச் சிறந்த விஷமுறிவு மருந்து மக்கள் சார்பு அரசியல் பலப்படுவதாக மட்டுமே இருக்க முடியும். அயராத முயற்சிகளை தளராமல் தொடர்வோம்.


தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமையவே நிறைய வாய்ப்பு உண்டு. நிச்சயமாக மக்களின்  வாழ்வுரிமைக்காக ஜனநாயகத்திற்காக போராட வேண்டிய நிலை தொடரும். தமிழ்நாடு அளவில் நாம் தமிழ்நாட்டு மக்களின் விடாப்பிடியான போராடும் எதிர்க்கட்சியாக  மக்கள் சார்பு அரசியலை முன்நிறுத்துபவர்களாக செயல்பட்டாக வேண்டும்.


கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இடது தொழிற் சங்க மய்யம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு இந்த தேர்தல் பணி, நிறைய கதவுகளைத் திறக்கும். வாய்ப்புகளை கைப்பற்ற தயாராவோம். தேர்தல் வேலையில் களைப்பு இருக்க வாய்ப்புண்டு. வெயிலும் வாட்டி வதைக்கிறது.


கட்டுக்கோப்பாக தோழர்கள் செயல்பட, இடைவெளிகள் களையப்பட வேண்டும். அதற்கு பொறுப்பான திறமையான முதிர்ச்சி யான அணுகுமுறையை அனைவரும் எடுத்தாக வேண்டும்.


தோழர்கள் எஸ்.கே, எ.எஸ்.கே, பாரதி ஆகிய மூவரும் வாக்கு எண்ணிக்கைக்கு, முன்னும் பின்னும் முடிந்தவரை எல்லா  ஊழியர்களிடமும் உறவாடிய பிறகு, அடுத்தகட்ட வேலைக்கான முன்வைப்புகள், விவாதத்திற்கு  தரப்படும்.
ஆகச்சிறந்த ஒரு தேர்தல் பரப்புரையில் அர்ப்பணிப்போடு கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
தோழமையுடன்

    எஸ் குமாரசாமி
06.04.2021

06.04.2021 தேதிய இந்த அறிக்கையின் மீது தோழர்களின் கருத்துகள் பெற்ற பிறகு தோழர் குமாரசாமி பேசிய விசயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.


அரசியல் கட்சி என்ற விதத்தில் நாம், எமக்கு தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல் என்ற பாரதியின் வரிகளில் முதல் வரியை மட்டும் எமக்குத் தொழில் புரட்சி, எமக்கு தொழில் அரசியல் என, மாற்றிக் கொள்ள வேண்டும்.


நமது அரசியல், ஜனநாயகத்தின் அரசியலாகும். ஜனநாயகத்திற்கான அரசியலாகும். அது விடாப்பிடியாக அனைத்தும் தழுவிய விதத்தில் ஜனநாயகத்தை உயர்த்தி பிடிப்பதே ஆகும். எல்லா விசயங்களிலும் ஜனநாயகத்தின் அடிப்படையில்  நிலைப்பாடு எடுப்பதே, நமது அரசியலாகும்.
உள்ளூர் வேலை கூடாது என்று ஒரு போதும் நாம் சொல்வதில்லை. தெரு பிரச்சனை முதல் தேச பிரச்சினை வரை நாம் கவனித்தாக வேண்டும். ஆனால் உள்ளூர் பிரச்சனைகளை முன்னெடுப்பதன் மூலம்தான், நாம் செல்வாக்கு பெறுவோம் என நினைப்பது சரிதானா என தோழர்கள் சிந்தித்தால் நல்லது. அஇஅதிமுக, திமுக உள்ளூர் பிரச்சனைகளை முன்னெடுப்பதன் மூலம் வாக்குகளைப் பெறுவதில்லை. நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் நிச்சயம் சில ஆயிரம் வாக்குகள் பெறுவார்கள். அவர்கள் உள்ளூர் பிரச்சனைகளை மிகுந்த அக்கறையோடு தொடர்ந்து முன்னெடுக்கிறார்கள் என்று எவரும் சொல்ல முடியாது. அவர்களுடைய அரசியல் என, மக்கள் கருதுகிற விஷயத்திற்காக, அதற்கு ஒப்புதல் அளிக்கும் விதத்தில், மக்கள் வாக்களிக்கிறார்கள். அதுபோல் நமது அரசியலுக்கு, அதாவது ஜனநாயகத்திற்கான அரசியலுக்கு, மக்கள் போராட்ட அரசியலுக்கு, நாம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவதோடு அந்த செ

ல்வாக்கை அமைப்பாகவும் மாற்றிக் கொள்ள, முயற்சிக்க வேண்டும்.
வண்ணமயமான வானவில் கூட்டணி, அய்க்கிய முன்னணி என கம்யூனிஸ்ட் இதழ் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளதாக, தோழர் எ.எஸ்.குமார்  கவனப்படுத்தினார். அது நிச்சயம் சரிதான். அதேநேரம் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியாக அய்க்கிய முன்னணியாக மாறிவிட முடியாது. சிவப்பு தன் அர்ப்பணிப்பால், தன் விடாப்பிடியான போராட்டங்களால், தன் செல்வாக்கால், தன் நெளிவுசுளிவான அணுகு முறையால், தன் பெருந்தன்மையால் கருப்போடும், நீலத்தோடும், பச்சையோடும் போராட்ட அய்க்கிய முன்னணி கட்ட வேண்டும் என்பதையே, நாம் வலியுறுத்துகிறோம்.


நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் சாராம் சத்தில் முதலாளித்துவ அரசியலாகும். ஆடுகளம் சமமற்றதாக இருந்தாலும் ஆட்ட விதிகள் நமக்கு எதிராக இருந்தாலும் தேர்தல் உள்ளிட்ட விசயங்களில் மக்கள் சார்பு அரசியல் முதலாளித்துவ அரசியலோடு போட்டி போட்டுத்தான் ஆகவேண்டும். முதலாளித்துவ அரசியலோடு போட்டி போட புறப்படுபவர்கள், முதலாளித்துவ அரசியலில் கரைந்து காணாமல் போய்விடக்கூடாது, என்பதைத்தான், நாம் கவனப்படுத்துகிறோம். தோழர்களுக்கு நாம் ஒரு விசயத்தை கவனப்படுத்துகிறோம் முழுமையும் பகுதியும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. 


நிறைய பழைய வேலைகள், நிறைய பழைய தோழர்கள், குறைவான புதிய வேலைகள், புதிய தோழர்கள் என்பது நம்முன் உள்ள எதார்த்தமாக இருக்கலாம். இரண்டையும் திறம்பட இணைப்பதும் புதியவற்றை பெருக்கிக் கொண்டே போவதும்தான் நம்முன் நிற்கின்ற கடமையாகும் நம்மில் எவரும் மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் ஏதாவது ஒன்றுக்கு மட்டும் நாம் பொறுப்பானவர்கள் என்று இருந்துவிட முடியாது.


நிகழ்கால வேலையில் எதிர்கால கடமைகளை நுழைப்பதும், இயக்கம்தான் எல்லாம் இறுதி இலட்சியம் ஏதுமில்லை என்ற அணுகுமுறையில் சிக்காமல் இருப்பதும் மிகவும் அவசியமானவையாகும். அர்ப்பணிப்பான கடுமையான வேலைகள் பார்த்துள்ள தோழர்கள் மத்தியில் சின்ன சின்ன வருத்தங்களும் கூட இருக்கவே செய்துள்ளன. வருங்காலம் பற்றிய கவலை சில நேரம் மேலோங்கும்போது நானும் கூட தோழர்களிடம் சில நேரங்களில் நிதானமிழந்துள்ளேன் அது சரியல்ல. அது ஏற்கத்தக்கதல்ல.
அனைவருக்கும் பாப் மார்லி பாடலின் சில வரிகளை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

Dont worry be happy

When you worry you make It double

Dont worry be happy


"கவலைப்படாதே மகிழ்ச்சியோடு இரு
நீ கவலைப்படும் போது உன் கவலை இரட்டிப்பாகும்.
கவலைப்படாதே மகிழ்ச்சியோடு இரு௸

Because when you worry

Your face will frown

And that will bring everybody down


"ஏனென்றால் நீ கவலைப்படும்போது
உன் முகம் சிடுசிடுக்கும்
அது அனைவரையும் கீழே பிடித்து இழுக்கும்
கம்யூனிஸ்டுகள் இறுக்கமானவர்களாக, சிடுசிடுப்பானவர்களாக இருக்க வேண்டிய தில்லை. கம்யூனிஸ்டுகள் மகிழ்ச்சியானவர்கள். கம்யூனிஸ்டுகள் மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, புரட்சியில் ஈடுபடுபவர்கள். அதனால், கம்யூனிஸ்டுகள் எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பதுதான் நல்லது.
முதலாளித்துவம் மனிதர்களது வளர்ச்சியை பொருளாதாரரீதியாக, அறிவுபூர்வமாக, கலாச்சாரரீதியாக, அரசியல்ரீதியாக முடக்கிப் போட்டுவிடுகிறது. சக மனிதர்களோடு போட்டியிட்டு பிழைத்திருக்கும் சவால், எது மகிழ்ச்சி என்பதைக்கூட மக்கள் காணவிடாமல் தடுத்து விடுகிறது. மக்கள் மகிழ்ச்சியை உணர வேண்டும், அனைத்தும் தழுவிய மகிழ்ச்சியை அனுப விக்க வேண்டும் என்பதற்காகவே,  போராட்ட அரசியலை, கம்யூனிச இலட்சியத்தை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். போராட்டத்தைக்  கொண்டாடுகிறோம். கொண்டாட்டமாய் போராடுகிறோம்.
தேர்தல் திறந்து வைக்கக் கூடிய புதிய கதவுகள் மூலம் வரக்கூடிய புதிய வாய்ப்புகளை இறுகப் பற்றிக் கொண்டு மாற்றத்திற்கான போராட்ட அரசியலை உயர்த்திப் பிடித்து முன்னேறுவோம்...

Search