COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, April 13, 2021

பெரியார் சொல் கேளீர்.....

வரி குறைப்பு எங்கே?

19.09.1937 , குடி அரசு, தலையங்கம்


பெரியாரின் எழுத்தும் பேச்சும் - தொகுதி 25, பக்கம் 149 - 151
குடி அரசு, 1937  (2)


புரோகிதக்  கூட்டத்தார்  தேசாபிமானம்  என்னும்  போர்வையைப் போர்த்துக்கொண்டு  பாமர மக்களை ஏமாற்றி பதவியடைவதற்குச்  செய்த சூழ்ச்சிகளில் பெரியது சகல துறைகளிலும் வரிகளைக் குறைத்து விடுவதாகக் கூப்பாடு  போட்டு  மக்களை ஏமாற்றினதாகும்.

  இந்தக்  கூப்பாடுகள்  நடக்கும் போதே  இவை  முழுப்புரட்டென்றும் மொத்தத்தில் ஒரு  தம்பிடி வரிகூடக் குறைக்க இவர்களால்  முடியாதென்றும்  இவர்கள்  மேலும் மேலும்  வரிபோடத்தான் போகிறார்கள்  என்றும்  நாம்  அடிக்கடி சொல்லிவந்தோம். அதுபோலவே இன்றைக்கு புரோகித ஆட்சி ஏற்பட்டு  இந்த  2,  3  மாத  இடையில் எவ்வளவோ காரியம்  செய்துவிட்டதாகப் பறை அடித்தும் அவசரப்பட்டுச் செய்வதாக யாரும் ஆத்திரப்படக் கூடாது என்று பொது மக்களுக்குச்  சமாதானம் சொல்லிக் கொண்டு இஷ்டப்படிக்கெல்லாம்  ஆடிக்  குதித்துக்கொண்டும்  அகங்காரமாகவும் ஆணவமாகவும் பேசிக் கொண்டும் திரிகிற  இந்தப் புரோகிதக் கூட்ட ஆட்சியானது வரி  விஷயத்தில் ஏதாவது காரியம் செய்திருக்கிறதா வென்று பார்த்தால் அந்த விஷயத்தில் ஒரு  காசுகூடக் குறைக்கவில்லை என்பதோடு இன்னமும் எந்தெந்தத் துறையில் புது வரி  போடலாம் என்றே ஆலோசனை செய்து வருகிறது.


ஸ்தல ஸ்தாபனங்களிலும் இதே மாதிரி  பித்தலாட்டம் பேசிப் பதவி பற்ற இந்த  புரோகிதக் கூட்டம் மதராசிலும் மதுரையிலும் மற்றும் இரண்டொரு இடத்திலும் முனிசிபாலிட்டிகளில் புது வரிகள் போட்ட விஷயங்களையும் ஈரோடு முதலான சில முனிசிபாலிட்டிகள் வரி குறைத்து வரவுசெலவுத் திட்டத்தை சரிப்படுத்திக் கொடுத்தும் அதை ஒப்புக்கொள்ளாமல் இருப்பதுமான காரியங்களைக்  கவனித்தால் வரி குறைப்புப் பித்தலாட்டத்தை  ஒருவாறு உணரலாம்.


ஆனால் தேசத் துரோகிகள் என்று இந்தப் புரோகிதக் கூட்டத்தார்களாலும் அவர்களது  கூலிபெற்ற அடிமைகளாலும் சொல்லப்பட்ட ஜஸ்டிஸ் கட்சியார் தைரியமாய் தோல்கேட்டுச் சுங்கங்களை எடுத்துவிட்டதோடு பூமிவரிகளிலும் 100க்கு 12ணீ வீதம் குறைத்து விட்டார்கள்.  அதற்குப் பின் பதவிக்கு வந்த "மகா மகா தேசத் துரோகிகள் கழுதைகள் நாய்கள்௸ என்றெல்லாம் இந்தப் புரோகிதக் கூட்டத்தாரால்  வசவு சொல்லப்பட்ட இடைக்கால மந்திரிகள்  2  மாத காலத்தில் பூமி வரியில் மேலும்  100க்கு 12ணீ வீதம் குறைத்து மொத்தத்தில் 100க்கு 25  வீதம் நிரந்தரமாய் குறைத்து வரவு செலவு திட்டத்தையும் சரிக்கட்டிக் கொடுத்து விட்டு விலகிக் கொண்டார்கள்.


இவ்வளவுக்கும் இந்த மேல்படி இருதிறத்து மந்திரிகளும் பதவிக்கு வரும்போதும்  தேர்தலுக்கு நிற்கும்போதும் வரி குறைக்கிறோம்  என்று சொல்லி  வாக்கு கேட்டவர்கள்  அல்ல என்பது யாவருக்கும் தெரியும். பதவிக்கு வந்தால் தங்களால் கூடியதைச்  செய்வோம்  என்று மாத்திரம் சொன்னார்கள்.
ஆனால்  இன்றைய  புரோகித  சரணாகதி  மந்திரிகளோ அப்படிக்கு இல்லாமல் சகல துறைகளிலும் அதாவது காடுகளில் மாடு மேய்க்க வரி இல்லை, ரயில் சவாரி செய்ய வரி இல்லை, பூமிக்கு தண்ணீர் பாய்ச்ச வரி இல்லை, கல்விக்கு சம்பளமில்லை என்றும் இன்னும் இம்மாதிரி எவ்வளவோ அளப்புகள் வாய்க்கு வந்தபடி எல்லாம் அளந்தும் பேசி மக்களை ஏய்த்து பதவிக்கு வந்தவர்கள்  இன்று  மூலைமுடுக்குகளில் இருட்டறைகளில் உட்கார்ந்துகொண்டு புது வரிகள் போட  யோசனை  செய்கிறார்கள். ஒரு  புது  வரியும் போட்டாய்  விட்டது. 


அதாவது ஜவுளிக்கடைக்காரர்களுக்கு (மில் ஜவுளி துணி விற்பவர்களுக்கு) வரி  போட்டாய் விட்டது. இனி புகையிலை வரி போட புள்ளி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


இவ்வளவு மாத்திரமல்லாமல் பூமி வரியையும் வேறுவகையில் அதிகப்படுத்தப் போகிறார்கள்.  தஞ்சாவூர்  ஜில்லா  மிராசுதாரர்கள்  இது தெரிந்து  இப்போதே  அழுக  ஆரம்பித்து  விட்டார்கள். வரி அதிகமென்றும் தாங்க முடியாதென்றும் கூப்பாடு அதிகமாய்ப் போட்டவர்கள் அந்த ஜில்லாக்காரர்களே ஆகும்.
ஜஸ்டிஸ் மந்திரிகள் மீதும் இடைக்கால  மந்திரிகள் மீதும் வரி குறைக்கவில்லை என்று  அதிகக் குறை கூறினவர்களும் அந்த  (தஞ்சை)  ஜில்லாக்காரர்களேயாகும். இன்று அந்த  ஜில்லாக்காரர்களே முதல்முதலில் அழஆரம்பித்திருப்பதைப் பார்த்து உண்மையிலேயே நாம்  சிரிப்போமே தவிர சிறிதும் சங்கடப்படப்  போவதில்லை.


புரோகித மந்திரிகள் புதிதாகப் போடக்  கருதி இருக்கும் பூமி வரி என்ன என்றால் பூமி வைத்திருக்கின்றவர்களுக்கு  வெள்ளாமையின்  மீது அதாவது விளைந்த பலனின் பொருமானத்தின் மீது வருமானவரி மாதிரி புது வரி விதிப்பது  என்பதாகும். இந்த வரித் தொகையைக்  கொண்டு சேலம் ஜில்லாவில் மதுவிலக்கு  செய்ததால் சர்க்காருக்கு  குறைந்துபோன  25 லக்ஷ  ரூபாய்  வருமானத்துக்கு  பிரதி  செய்ய  இந்த வரி போடப்படுகிறதாம். இன்னும்  இது போல் பல வரிகள் போட்டுத்தான் இனி மேலும் "மது விலக்கு௸ செய்யும் நஷ்டத்து வரவு  செலவை சரிக்கட்ட வேண்டிய யோக்கியதையில் இன்றைய புரோகித மந்திரிகள் நிலை  இருக்கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும்  இந்த மந்திரிகளால் வரிச்சுமை ஒரு காசு  அளவு கூட குறையாது என்பதை நாம் பந்தயங்கட்டிக் கூறுவோம்.......

Search