COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, April 13, 2021

தலையங்கம்

 சாதிவெறிப் படுகொலைச் சங்கிலி
உடைத்தெறியப்பட வேண்டும்


அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோகனூரைச் சேர்ந்த அர்ஜுனும் சூர்யாவும் தலித்துகள். ஒருவருக்கு எட்டு மாதங்களுக்கு முன் ஒரு குழந்தை பிறந்தது.  இன்னொருவருக்குஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

இருவரையும் ஆதிக்க சாதி வெறியர்கள், கும்பல் சேர்ந்து படுகொலை செய்துவிட்டார்கள். அடித்தும் வெட்டியும் கொன்றுவிட்டார்கள்.
பானைக்கு ஓட்டு போட்டியா என்று கேட்டு, அந்த தலித் இளைஞர்கள் ஆமாம் என்று சொல்ல அதன் பின் அந்த கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடந்திருக்கிறது. குடிபோதையில் தாக்குதல், முன்விரோதம் என்றெல்லாம் காவல்துறையினர் வழக்கம்போல் கதை வசனம் எழுதப் பார்க்கின்றனர். இந்த சாதிவெறி தாக்குதலில் தலித்துகள் இன்னும் மூவர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடிபோதை என்றால் வன்னிய சாதிக்காரனை வன்னிய சாதிக்காரன் அடித்து, வெட்டிக் கொல்வானா? பெண்கள் மீது வன்முறை தாக்குதல்கள், பாலியல் வன்முறை தாக்குதல்கள் நடக்கும் போதெல்லாம், பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம் சொல்வது போல், குற்றம் செய்த ஆணைக் காப்பாற்ற அவன் குடித்திருந்தான் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். எந்த ஆணும் குடி போதையில் தனது தாயை, உடன் பிறந்த பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாக நமக்கு புகார்கள் வருவதில்லை. இன்று, அப்பட்டமான கொடூரமான சாதியாதிக்கப் படுகொலை செய்துவிட்டு, குடி போதை என்று சாக்கு சொல்கிறார்கள். குடி போதையில் செய்தாலும், இல்லை என்றாலும் படுகொலை படுகொலைதான். சாதியாதிக்கப் படுகொலை சாதியாதிக்கப் படுகொலைதான். காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் பதிவு செய்தாக வேண்டும்.
தலித்துகள் வாக்களிக்க முடியாது என்ற நிலைக்கெல்லாம் தமிழ்நாடு எப்போதோ முடிவு கட்டிவிட்டது. இது சமூக நீதி காக்கும் பண்பாடு கொண்ட மாநிலம். பாஜகவுடன் கூட்டணி என்றாகிவிட்டதாலேயே பாஜக போல் பாசிச வெறி பிடித்து செயல்பட பாமக முடிவு செய்தால், பாமகவுக்கும் தமிழ்நாடு முடிவு கட்டும். தமிழ்நாட்டு மக்கள் பாமகவுக்கு ஏற்கனவே போதுமான அளவு பாடம் புகட்டி கட்டம் கட்டி ஓரம்கட்டித்தான் வைத்திருக்கிறார்கள்.
மாம்பழத்துக்குப் போடும் உரிமை உனக்கு இருப்பது போல், பானைக்கு போடும் உரிமை எனக்கு இருக்கிறது. மாற்றம், முன்னேற்றம் என்று ஒபாமா பாணியில் பேசித் திரிந்து, இந்த சாதாரண யதார்த்தத்தை கூட ஒப்புக்கொள்ள, புரிந்துகொள்ள முடியாத, சாதிவெறி தலைக்கேறி தட்டுகெட்டுத் திரிகிற, சகமனிதனை மதிக்கத் தெரியாத முரட்டு முட்டாள் இளைஞர் கூட்டம் ஒன்றைத்தான் உருவாக்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்களை பல பத்தாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்வதில் ராமதாசும் அன்புமணியும் காட்டிய அக்கறையையும் கவனத்தையும்தான் சோகனூர் இரட்டைக் கொலைகளில் பார்க்க முடிகிறது. பாசிச பாஜக நாட்டு மக்களை கூறுபோட முயற்சி செய்யும்போது, அதற்கு இசைவாக தமிழ்நாட்டு கூறுபோட ராமதாசும் அன்புமணியும் பாமகவும் முயற்சி செய்கின்றனர்.
ஒவ்வொரு வினைக்கும் ஒரு சமமான எதிர் வினை இருக்கும்தானே. சோகனூர் இரட்டைக் கொலைகளை ஒட்டி பாமகவை தடை செய் என்று இன்று குரல்கள் எழுகின்றன. வன்னியர் முன்னேற்றம் என்ற எந்த நோக்கும் இலக்கும் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இல்லை என்று தமிழ்நாடு போதுமான அளவு பார்த்துவிட்டது. நாயக்கன்கொட்டாயை எரித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதுடன் சாதிவெறியை தூண்டி விட்டு பதவி குளிர்காயும் பாமகவின் ஆட்டம் போதுமென தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்தார்கள். இளவரசனுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லைதான். தெய்வம் நின்றுதான் கொல்லும். இந்த தெய்வம் பொதுவாக அதிகாரத்தை பறித்துவிடுகிறது. தமிழ்நாட்டு மக்கள் பொதுவாக தேர்தல்களில் கவனிக்க வேண்டியவர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கிறார்கள். பாமகவையும் கவனித்தார்கள். இனியும் நல்ல கவனிப்பு இருக்கும்.
அர்ஜுன், சூர்யா படுகொலைக்கு, பகுதியின் தலித் இளைஞர்கள் இன்னும் மூவர் கடுமையாக தாக்கப்பட்டதற்கு காரணம் என கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் அஇஅதிமுகவைச் சேர்ந்தவர். மேல் மட்டத்தில் இருந்து வேர்க்கால் மட்டம் வரை, சாதிவெறி தாக்குதலை கட்டவிழ்த்துவிடுவதில் பாமகவும் அஇஅதிமுகவும் வலுவான கூட்டணி அமைத்திருக்கிறார்கள். திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியிலும் பெருமாள் ஏரி கிராமத்தில் பானைச் சின்னத்துக்கு பிரச்சாரம் செய்த ஒருவரை ஆதிக்க சாதி வெறியர்கள் கொடூரமாக தாக்கியதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு வெற்றி நடை அல்ல, சாதிவெறி நடை போடுகிறது. சாதியாதிக்க வெறியர்களை சட்டத்துக்கு உட்படுத்தி தண்டிக்காமல், ஊக்குவித்து வந்த ஓர் ஆட்சி முடியப் போகும் நேரத்திலும், ஊறிவிட்ட நஞ்சாக, சாதிவெறி உயிர்ப்பலி கேட்கிறது.
இப்போது, கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்துவிடுவார்கள். நீதிமன்றத்தில் நிறுத்துவார்கள். பின் அவர்கள் பிணையில் வருவார்கள். தண்டனை பெற்றாலும், திருந்தியோ, திருந்தாமலோ, சிறையில் சாதிப் பெருமையில் கூட காலம் கழிப்பார்கள். இடையில் ராமதாசும் அன்புமணியும் சாதிவெறி பிடித்த இன்னும் பல நூறு இளைஞர்களை உருவாக்கியிருப்பார்கள். இந்த சாதிவெறிச் சங்கிலியை தமிழ்நாட்டில் உடைத்தெறிந்தாக வேண்டும். இந்தத் தேர்தலில் பாமக, அதிமுக சாதிவெறி சக்திகளுக்கு நிச்சயம் பாடம் உண்டு. அது மட்டும் போதாது. சாவு வீட்டுக்குப் போனதெல்லாம் சட்டவிரோத நடவடிக்கை என்று வரையறுக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களை சிறையில் அடைக்க முடியும் என்றால், சாதியின் பெயரால் படுகொலை செய்பவர்கள், அதற்கு தூண்டுதலாக இருப்பவர்கள், இருந்தவர்கள், போகிற போக்கில் எதையாவது சொல்லி அந்த வன்முறை தாக்குதலை நியாயப்படுத்துபவர்கள் என அந்தச் சங்கிலியில் சின்ன தலை முதல் பெரிய தலை வரை ஒரு தலையையும் விடாமல் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். கடுமையான தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும். சாதிவெறி தாக்குதல் நடத்தினால், சாதிவெறியை தூண்டினால், யாராக இருந்தாலும் தப்பித்து விட முடியாது என்ற சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
தான் விரும்பிய கட்சிக்கு வாக்களித்ததற்காக, பிரச்சாரம் செய்ததற்காக சாதியாதிக்க வெறி தாக்குதலுக்கு உள்ளாகி இன்று நடந்திருக்கிற இந்தப் படுகொலைகளே கடைசி என்ற நிலை தமிழ்நாட்டில் உருவாக்கப்படுவதுதான் மொத்த நாட்டுக்கும் நல்லது. அவசியம்.

Search