COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, April 13, 2021

சாதியற்றவனின் மரணம்
 

சுகிர்த ராணி
09.04.2021


நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்

ஒரு ரயில் நிலையத்தில் அமர்ந்துகொண்டு
அதன் நடைபாதையில்
கொட்டிக் கிடக்கும் மஞ்சள் பூக்களை

தூரத்தில்
தாய்ப்பால் புகட்டியபடி
வேர்க்கடலையைப் படி நிறைய
அளந்து விற்கும் பெண்ணொருத்தியின்
தாய்மை பூத்திருக்கும் முகத்தை

சிதிலமடைந்த கற்கோவிலின்
படியிலமர்ந்து
உங்கள் முகத்தை நீங்களே ஏந்தி
தொல்பொருளாய்க் காத்திருக்கும்
அந்த ஏகாந்தத்தை

நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்
உங்கள் பண்ணைநிலம் ஊடாக
நடக்கும்போது
நடவு நடும் பெண்ணின்
ரவிக்கைக் கிழிசலை மறைக்க
நீங்கள் வீசி எறிந்த
துண்டின் பெருமையை

வீட்டு முற்றத்தில்
காலைநேர தேநீரை
நீங்கள் அருந்தும்போது
நேநீர்க் கோப்பையின் நிழலில்
இளைப்பாறும் சிட்டுக்குருவியை

நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்

இராக்கால மொட்டைமாடி பொழுதுகளில்
எரிந்து விழும் நட்சத்திரங்களுக்கிடையே
குளிர்ந்து வீசும் தென்றலை

உங்களுக்கான மர அலமாரியில் ஒளித்து வைத்திருக்கும்
உங்கள் காதலியுடையதோ காதலனுடையதோ
பழந்துணியின் வாசத்தை

நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்

ஆனால் ஒருபொழுதும்
எழுதி விடாதீர்கள்

அரிவாளால் வெட்டுண்டு
ஈ மொய்த்தபடி
வாய் பிளந்து கிடக்கும்
ஒரு சாதியற்றவனின் மரணத்தை.

Search