தமிழக மக்கள் போராடிப் பெற்ற உரிமை
ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. அவர்கள் வேலைகளை ராஜினாமா செய்கிறார்கள். கருத்து சொல்பவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. சொன்ன கருத்தை நீக்கிவிடுகிறார்கள். சிலைகள் அவமதிக்கப்படுகின்றன. அவமதித்தவர்கள் மனநலம் பிறழ்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. பெரியார் சிலையை அவமதித்தபோதெல்லாம் அமைதி காத்தவர்கள் எம்ஜிஆர் சிலைக்கு காவி அடையாளம் தரப்பட்டபோது லேசான முணகலை வெளிப்படுத்தினார்கள்.
உரிமைகள் பறிப்பு வேகம் பிடிக்கிறது. எட்டு வழிச்சாலை வேண்டாம் என்பீர்களா, ஹைட்ரோகார்பன் எதிர்ப்பா, மீத்தேன் திட்டத்தை தடுப்பீர்களா, நியூட்ரினோ வைத்துக் கொள்ளுங்கள் புதிய சட்டத்தை, இனி கருத்து கேட்போ, பாதிப்பு மதிப்பீடோ கிடையாது, எல்லாம் எங்கள் விருப்பப்படி என்கிறார்கள். மாநில உரிமைகள் துச்சம் என்கிறார்கள். இடஒதுக்கீடும் கிடையாது, கல்வியும் கிடையாது போ என்கிறார்கள். கண்ணீரால் காத்த சுதந்திரப் பயிர் கார்ப்பரேட் வெறி மதவெறி, சாதிவெறி, பதவிவெறி கொண்டு சூறையாடப்படுகிறது.
தமிழக மாணவர்களின் மருத்துவ கல்வி தொடர்பாக, மாறாத வடுவை உருவாக்கிவிட்ட அனிதா மரணத்துக்கு, தொடர்ந்து பிரதீபா, சுபஸ்ரீ மரணங்களுக்கு நீதி கிடைக்காமல் வஞ்சிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களின் ஆறாப் புண்ணின் மீது உப்பு தடவி சுகம் காண்கிறது பாசிச பாஜக அரசாங்கம். மருத்துவ முதுகலை படிப்பில் மத்திய தொகுப்பில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு தராமல் வஞ்சிக்கிறது. 18 ஜுன் 1951ல் இந்திய அரசியல்சாசனத்தின் முதல் திருத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிரிவு 15ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்தப் பிரிவோ அல்லது பிரிவு 29ன் இரண்டாவது பிரிவோ, ஒரு மாநிலம் சமூகரீதியாக மற்றும் கல்விரீதியாக பின்தங்கிய குடிமக்கள் பிரிவினரின் அல்லது பட்டியல் சாதிகள் அல்லது பட்டியல் பழங்குடியினரின் முன்னனேற்றத்துக்காக சிறப்பு நடவடிக்கை எடுப்பதில் இருந்து மாநிலத்தை தடுக்காது. ஆக, இடஒதுக்கீடு யாரும் தந்த சலுகை அல்ல. திராவிட இயக்கம் நடத்திய போராட்டங்கள், மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக 1951ல் அரசியல் சாசனத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் திருத்தத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமை. அது வந்தாக வேண்டும். இதில் என்ன குழப்பம்?
மாநில அரசுகள் முதுகலை மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50% இடங்களை மத்திய தொகுப்புக்கு ஒப்புவித்துவிடுகின்றன. இளங்கலை மருத்துவப் படிப்பை பொறுத்த வரை, மொத்தமுள்ள இடங்களில் 15% மத்திய தொகுப்புக்குச் செல்கிறது. இந்த மத்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு விதிகள் பின்பற்றப்பட்டு சமூக நீதி காக்கப்பட வேண்டும் என்பது அரசியல் சாசனப்படி உறுதி செய்யப்பட வேண்டிய உரிமைதானே. இதில் என்ன பிரச்சனை?
திமுக மாநிலங்களவை உறுப்பினர் இந்த கோரிக்கையுடனான வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடுத்தபோது, ஜுன் 23 அன்று வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல என்றது. அரசியல் சாசனம் உறுதிசெய்துள்ள உரிமையை உச்ச நீதிமன்றம் அவ்வளவு எளிதாக ரத்து செய்து விட முடியாது. வழக்கு தமிழ்நாடு தொடர்பானது, எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்று சொல்லி வழக்கை தற்காலிகமாக முடித்து வைத்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் அரசாங்கம், ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள் என பல தரப்பினரும், மத்திய தொகுப்பில் இருந்து, தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு சட்டத்துக்கு ஏற்ப, தமிழ்நாடு மத்திய தொகுப்புக்கு ஒப்புவித்த இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று தொடுத்துள்ள 13 வழக்குகளில் மத்திய அரசும் இந்திய மருத்துவ கழகமும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு தருவதை தவிர்க்க ஏதேதோ சொல்லிப் பார்க்கிறார்கள். 1986ல் இருந்து இதுதான் நடைமுறை, இத்தனை ஆண்டுகளாக ஏன் கேட்கவில்லை, மத்திய தொகுப்புக்கு வந்து விட்ட பின், அதன் மீதான உரிமையை மாநில அரசு இழந்துவிடுகிறது, மத்திய தொகுப்பு என்று விதிகளில் குறிப்பிடப்படவில்லை, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உருவாக்கப்பட்ட நடைமுறை என்பதால் உச்சநீதி மன்ற வழிகாட்டுதல் அடிப்படையில்தான் எதுவும் செய்ய முடியும்.... இந்த வாதங்கள் எதுவும் அரசியல்சாசன உரிமையின் முன் நிற்காது. இடஒதுக்கீடு தொடர்பாக ஜுலை 27 அன்று சென்னை உயர்நீதிமன்றம் தந்துள்ள தீர்ப்பு எல்லா தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டாக வேண்டும் என்று சொல்லிவிட்டது.
பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீடு அமலாக்கம் என்ற பிரச்சனை, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிற, 2015ல் சலோனி குமாரி என்பவர் தொடுத்த வழக்கோடு தொடர்புடையது என்றும் அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்குப் பிறகுதான் இடஒதுக்கீடு பற்றிய முடிவு எடுக்க முடியும் என்றும் மத்திய தொகுப்பே உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி உருவாக்கப்பட்டது என்பதால் அதன் ஒப்புதல் இல்லாமல் சேர்க்கை நடைமுறையில் மாறுதல் செய்ய முடியாது என்றும் இந்திய மருத்துவ கழகம் சொல்கிறது. 1986 முதல் மத்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. விளைவாக 2007ல்தான் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு மத்திய தொகுப்பில் இடஒதுக்கீடு தரப்படுகிறது. அதாவது மத்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு என்ற கோட்பாடு ஒப்புக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதாவது, உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படியே, பட்டியல் சாதியினருக்கு, பட்டியல் பழங்குடியினருக்கு முறையே 15% மற்றும் 7.5% என ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும்போது, பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் அது ஏன் மறுக்கப்பட வேண்டும்? அரசியல்சாசனத்தின் அடிப்படையிலான தமிழகத்தின் சட்டப்படி அது பிற்படுத்தப்பட்டோருக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதுதானே நீதி?
உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்சனையில் நிலுவையில் இருக்கும் பிரச்சனைகளுக்கு ஒட்டுமொத்தமாக தீர்வு தரும் வரை, மத்திய மருத்துவ தொகுப்பிலும் அவர்களை சேர்க்க முடியாது என்று இப்போது மத்திய அரசு சொல்கிறது. அதாவது பிற்படுத்தப்பட்டோருக் கான இட ஒதுக்கீடு கிடையாது என்கிறது. ஊரடங்கால் ஜுலை 31 வரை சேர்க்கைக்கு நீட்டிப்பு தரப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதுகலை மருத்துவ படிப்புக்கான சேர்க்கையிலேயே பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு 50% தரப்பட வேண்டும், அதுவரை சேர்க்கை தள்ளி வைக்கப்பட வேண்டும் என்று வழக்கில் வலியுறுத்தப்பட்டபோது, இது கொரோனா சிகிச்சையை பாதிக்கும் என்று மத்திய அரசு சொன்னது.
இப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில், மத்திய தொகுப்பில் இருந்து பிற்படுத்தப்பட்டோருக்கு 27% ஒதுக்கீடு தரத் தயாராக இருப்பதாகவும், அதையும் சேர்த்தால் மாநிலத்தின் மொத்த ஒதுக்கீடு 50%அய் மிகக் கூடாது என்றும் மத்திய அரசு நிபந்தனை முன்வைக்கிறது. உண்மையில் அரசியல்சாசனப்படியாக இயற்றப்பட்ட சட்டப்படி, பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை மத்திய அரசு மறுக்க முடியாது. சந்து பொந்துகள் தேட வேண்டும்.
ஜுலை 27, 2020 தீர்ப்பிலும், பத்தி 92ல், நாடாளுமன்றம் இயற்றுகிற சட்டத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்றால், இடஒதுக்கீடு அடிப்படை உரிமையோ, சட்டப்படியான உரிமையோ அல்ல என்று சொல்லப்படுகிறது. ஆனால், அரசியல்சாசன முதல் திருத்தம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் தரும் திருத்தம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு இயற்றியுள்ள 1993 இடஒதுக்கீடு சட்டத்தின் கீழ், மனுக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டாக வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. மத்திய தொகுப்பில் இடஒதுக்கீடு உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் முன்வைப்புகள் மத்திய அரசிடமும் இருப்பதால், இது பிற்படுத்தப்பட்டோருக்கு சாதகமான அறிகுறி என்று சொல்கிற தீர்ப்பு, கடைசியில், மூன்று மாத அவகாசத்தில் மத்திய, மாநில அரசு, இந்திய மருத்துவ கழகம், பல் மருத்துவ கழகம் இணைந்து குழு அமைத்து முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்கிறது.
அந்த 3% பேர், என்னதான் முயற்சி செய்தாலும் கங்கை, காவிரி நீர் மொத்தத்தையும் அள்ளிக் குடித்து விட முடியாது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் மற்ற பிரிவினரும் அதிகார வெளிகளில் பங்கேற்பது விஞ்ஞானரீதியாக தவிர்க்க முடியாதது. இல்லையென்றால் இந்த பரந்த நாட்டை, அதன் மக்கள் நலன்களை பராமரிக்க, பேண முடியவே முடியாது. குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் என நாட்டின் முக்கிய பதவிகளிலேயே மற்ற பிரிவினரைச் சேர்ந்தவர்களைக் கொண்டுதான் நிர்வகிக்க முடிகிறது. ஆர்எஸ்எஸ் கூட்டம் இந்த எளிய உண்மையை புரிந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
கடந்த நான்காண்டுகளில் 11,000 இடங்கள் பறிக்கப்பட்டுவிட்டதாக குறிப்பிட்டு ராமதாஸ் மோடிக்கு கடிதம் எழுதுகிறார். 27% உடனே தரப்பட வேண்டும் என்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் 3580 இடங்களை மத்திய தொகுப்புக்கு தமிழ்நாடு தந்துள்ளதாகவும் அவற்றில் 2729 இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்குச் சேர வேண்டும் என்றும் வில்சன் சொல்கிறார்.
ஏற்கனவே தலைமுறை தலைமுறையாக பெரும் இழப்புகளுக்கு ஆளாகி, பின் பெரும் போராட்டங்கள் நடத்தி தங்கள் உரிமைகளை பெற்று வந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் பிரிவினருக்கு தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். ஜெயலலிதா போன்ற ஒரு சர்வாதிகார ஆட்சியாளர் இடஒதுக்கீட்டுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்ய நேர்ந்தது. தமிழ்நாட்டின் இப்படித்தான் ஏற்கனவே நடந்துள்ளது. இனியும் இப்படித்தான் நடக்கும்.
இதனால் மருத்துவ சேர்க்கை கிடைக்காத உயர்சாதி மாணவர் நிச்சயம் மாடு மேய்க்கவோ, முடிதிருத்தும் தொழிலுக்கோ செல்ல மாட்டார். ஆனால் இட ஒதுக்கீடு மறுக்கப்படும் பிற்படுத்தப்பட்ட மாணவர் பல பத்து ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விடக்கூடும். மூவாயிரம் ஆண்டு கால அடிமை முறையை மாற்ற இட ஒதுக்கீடு மிகவும் அவசியம்.