COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, August 4, 2020

பாஜகவினால் தொடங்கப்படும் ஊழிக்காலம்
சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020

ஆர்.ஆர்.சீனிவாசன்

வளர்ச்சி, சுதேசி, தேசபக்தி, இறையாளுமை, தேசப்பாதுகாப்பு, மூலோபாயத் திட்டம் போன்ற சொற்கள் இன்று பாஜகவினால் சூழலியல் அழிவுக்குப் பயன்படுத்தப்பட உள்ளன. அல்லது பயன்படுத்தப்பட ஆரம்பித்துவிட்டது. இன்று இவ்வரைவு பற்றி எல்லோரும் பேச ஆரம்பித்திருக்கிறோம், ஆனால் 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களி லேயே சூழலியல் அழிவு வேலைகளையும் தொடங்கியது. அது பெரிய அளவில் வளர்ந்து கொரோனா காலத்தில் உச்சம் பெற்றது. இப்போது சட்டரீதியாக மாற்றம் பெற்ற சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 என்று நம்முன் வந்துள்ளது.
அழிவுக் காலம் 1
2014 ஜுன் முதல் 2020 மார்ச் வரை என்ன நடந்தது?
மோடி ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியா வின் சுற்றுச்சூழலுக்கு எதிராக அமைதியாக ஒரு மாபெரும் யுத்தம் தொடங்கிவிட்டதை நாம் உணரமுடிகிறது. முந்தைய காங்கிரஸ் அரசின் அழிவுத் திட்டங்களை உயிர்ப்பித்ததுடன் பல்வேறு காடழிவு, நாடழிவுத் திட்டங்களையும் பாஜக உற்சாகமாகத் தொடங்கிவிட்டது.
2006 வன உரிமைச் சட்டம் காட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு பல்வேறு உரிமைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக 2008ல் நடைமுறைக்கு வந்த இச்சட்டத்தில் 'கிராம சபை' முடிவு செய்யாமல் காட்டிற்குள் புகுந்து ஒரு தொழிற்சாலையையும் அமைக்கவோ,  கனிமம் எடுக்கவோ முடியாது. மோடி ஆட்சிக்கு வந்தவுடன் கிராமசபை முடிவுகளுக்கு கட்டுப்படாமல் காடுகளை அழிக்க வழி வகுத்து செயல்பட ஆரம்பித்தது.
தேசிய காட்டுயிர் அமைப்பின் ((National wildlife board) தனித்துவமிக்க வல்லுநர்களின் அதிகாரங்களைக் குறைக்கும் செயல்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாஜக ஈடுபட்டது. இது காடுகளினுள் சாலை போடுவது, காட்டை அழிப்பது போன்றவற்றை சட்டரீதியாகவும் மாற்றியது. நிலக்கரிச் சுரங்க நடைமுறைகளை மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் இல்லாமல் நேரடியாகச் செயல்படுத்த புதிய முறைகளைக் கொண்டு வந்தது. இது அடிப்படையில் சட்டவிரோதமானது. புதிய பாசனத் திட்டங்களும் எந்தச் சுற்றுச் சூழல் விதிமுறைகளும் பின்பற்றப்படாமல் நேரடியாக அனுமதிக்கப்பட்டன.
அதிகம் மாசுக்குள்ளான பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகளை அழுத்தும் சுற்றுச் சூழல் விதிகளையும் தளர்த்தி தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக மாற்றிவிட்டனர். காடுகளின் தேசியப் பூங்காவின் உள்ளே அதைச் சுற்றி, 10 கி.மீட்டருக்குள் எந்தத் தொழிற்சாலையும் வரக்கூடாது என்பது நடைமுறை. ஆனால், நடுவண் சுற்றுச்சூழல் அரசோ, 5 கிலோ மீட்டருக்குள்ளேயே தொழிற்சாலைகள் வர அனுமதி தர ஆரம்பித்துவிட்டது.
காடுகள் பாதுகாப்புச் சட்டத்தையும் தளர்த்தி அழிவுக்கு வித்திட்டுவிட்டார்கள். நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கையான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ((National Green Tribunal) பரிமாணங்களையும் முடக்கும் வேலையிலும் இறங்கி அதன் அதிகாரத்தையும் கட்டுப்படுத்தத் துவங்கிவிட்டார்கள். ஏற்கனவே நம்மிடம் இருக்கும் அனைத்து சுற்றுச்சூழல் சட்டங்களையும் மறுமதிப்பீடு செய்ய, அதை மாற்றியமைக்க புதிய சுற்றுச்சூழல் கமிட்டிகளை உருவாக்கியுள்ளனர். இது அச்சட்டங்களை மேம்படுத்துவதற்கு அல்ல. தொழிற்சாலைகளும், முதலாளிகளும் சுமுகமாக மேலும் பல தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்குத்தான்.
 'கங்கையைச் சுத்தப்படுத்துவோம்' என்று பாஜகவின் அறிக்கை சொன்னது. அது சுற்றுச் சூழல் அக்கறையல்ல, மதவாதப் பரப்புரை மற்றும் இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான அரசியல், மதவாதச் சிந்தனை மட்டுமே. நதிகளுக்கும் மதச் சாயம் பூசப்பட்டது தவிர வேறொன்றுமில்லை.
கிரீன்பீஸ் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களையும் முடக்குவதற்கான அடிப்படை  யும் முதலாளிகளுக்கு சாதகமானதே. தேசப் பற்று, சுதேசி என்று பேசி இந்திய நாட்டையும் காட்டையும் பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்பதற்கு ஏதுவான ஓர் அரசே இப்போது உள்ளது.
மக்களின் அடிப்படை பிரச்சனையான உணவிலும் தவறான முடிவையே எடுத்துள்ளது. மரபணு மாற்றுப் பரிசோதனைகள் வேண்டாம், நமது பாரம்பரிய உணவு முறைகளும், விதைகளும் போதுமானது என்று பல்வேறு அறிஞர்களும் விவசாயிகளும் எடுத்துரைத்த பிறகும் அதை வேகமாக வயல்வெளிப் பரிசோதனைகளுக்கு அனுமதிப்பது இந்தியாவின் விவசாயத்தை அழிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டதாகும்.
'நில அபகரிப்புச் சட்டம்' மக்கள் மத்தியில் மோடியின் உண்மையான முகத்தைக் காட்டியதுடன், பாஜகவின் 'நாட்டை விற்கும்' திட்டத்தையும் மக்களுக்கு வெளிப்படையாக அறிவித்தது.
இவை யாவும் கொரோனா வருவதற்கு முன்பாக நடந்தவை.
அழிவுக் காலம் 2
கொரொனா இந்தியாவில் பரவ ஆரம்பித்து மக்கள் செத்துக் கொண்டிருக்கும்போது அதிரடியாக முப்பதுக்கும் மேற்பட்ட உயிர்ப்பன்மயக் காடுகளினுள் பெரும் அழிவுத் திட்டங்களை பாஜக கொண்டு வந்துள்ளது. ஊர் பற்றியெரியும் போது கொள்ளையடிப்பது போன்றது இது.
கரோனோ லாக்டவுன் என்ற நடுவண்  அரசு, இந்தப் பொது முடக்கத்தைப் பயன்படுத்தி மத்திய சுற்றுச்சூழல் வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் மூலம்  சத்தமில்லாமல் உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த 30 பல்லுயிர்க் காடுகளை சுரங்கம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட தனியார் திட்டங்களுக்காகத் தாரை வார்க்கும் படுபாதகச் செயலை செய்துள்ளது. எவ்வித கள ஆய்வுகளும்  மேற்கொள்ளாமல் தனியார்மயமாக்குவது பற்றி வீடியோ கான்பரன்சிங் கலந்தாய்வு மூலம்  இந்த முடிவுகளை மேற்கொண்டுள்ளது.   
அருணாசலப்பிரதேசத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கு மிக முக்கியமானது. இந்தப் பள்ளத்தாக்கு நாட்டின் மிகப்பெரிய எட்டலின் நீர்மின் திட்டத்துக்காக அணை அமைப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ளது. அசாமில் உள்ள டெஹிங் பட்காய் யானை காப்புப் பகுதியில் நிலக்கரி சுரங்க திட்டம், கோவாவின் பகவான் மகாவீர் வனவிலங்கு சரணாலயம் வழியாக நெடுஞ்சாலை, கிர் தேசிய பூங்காவின் வழியாக சுண்ணாம்புக் கல் சுரங்கம், கர்நாடகாவில் ஷராவதி சரணாலயத்தில் புவிதொழில்நுட்ப விசாரணை மய்யம் உள்ளிட்ட 30 திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் மூலம் 15 புலிகள் காப்புப் பகுதிகள், சரணாலயங்கள், சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் மற்றும் ஏராளமான வனப்பகுதிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.  
இவை யாவும் மக்கள் கருத்துக் கேட்பு, சுற்றுச்சூழல் அறிக்கை என யாருடைய ஆலோசனைகளையும் கேட்காமல் பொது முடக்க காலத்தில் நடந்துள்ளது. கொரோனாவை விட இது மிகப் பெரிய அழிவாகும்.
அழிவுக் காலம் 3
சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020
2014 முதல் இன்று வரை பெரும் சூழலியல் அழிகலைச் செய்து வரும் பாஜக அரசு இப்போது இருந்த கொஞ்சநஞ்ச சனநாயக முறைகளையும் அகற்ற முயற்சி செய்து வருகிறது.
50 கோடி ரூபாய்க்கு அதிகமாக முதலீடு செய்யும் பெரிய திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு சட்டம், 2006ன் விதிகள் அவசியமாகும். அதன்படி நடைமுறையில் உள்ள சுற்றுச் சூழல் சட்ட விதிமுறைகள், 2006ல் சில திருத்தங்களை செய்து ஏப்ரல் 11, 2020 அன்று மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதை 22 மொழிகளில் வெளியிட்டு, ஆகஸ்ட் 11, 2020 வரை பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என இது தொடர் பான ஒரு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதையும், கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.சந்திரசூட் இது தொடர்பாக அளித்த தீர்ப்பையும் மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை. முழுமையாக கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்படைப்பதே இதன் நோக்கமாமும். நாம் வாழும் ஊரில் நமது விருப்பத்திற்கு எதிராக எல்லா அழிவுத் திட்டங்களையும் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்.
சூழலியல் தாக்க மதிப்பீடு சட்டத்தின் வழிக்காட்டுதல்கள் 2006ல் திருத்தப்பட்டன.  அதாவது பதினோரு ஆண்டுகளில் 12  முறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஜுன் 13, 2002ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், முதலீட் டின் அடிப்படையில் சூழலியல் தடையில்லா சான்றிதழ் பெறுவதிலிருந்தும், மக்களின் கருத்து கேட்பிற்கும் சூழலியல் தாக்க மதிப்பீடு அறிக்கை அளிப்பதிலிருந்தும் விலக்களித்தது. குழாய் பதிப்பு மற்றும் அதிவிரைவு சாலை திட்டங்களுக்கு சூழலியல் தாக்க மதிப்பீடு அறிக்கை வழங்க வேண்டும் என்ற விதிமுறையில் விலக்களிக்கப்பட்டது. நூறு கோடிக்கும் குறைவான முதலீட்டில் புதிதாக தொடங்குகிற தொழிலுக்கு முழு விலக்களிக்கப்பட்டது.
ஜனவரி, 16, 2020ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தமானது, வேதாந்தா மற்றும் பிற கார்ப்பரேட் நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப எண்ணெய் எரிவாயு திட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டன. அதன்படி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுப்பு பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 314 இடங்களில் இனி வேதாந்தாவும் ஓஎன்ஜிசியும் வேலையை தொடங்கலாம்.
சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு சட் டம், 2020, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சூழலியல் தாக்க மதிப்பீடு சட்டம், 2006அய் நீர்த்துப்போகச் செய்வதோடு, சூழலியல் பாதுகாப்புச் சட்டம், 1986அய் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. கடந்த காலத்தில் பசுமை தீர்ப்பாயத்தில் பெறப்பட்ட முக்கியத் தீர்ப்புகள் மற்றும் திருத்தங்கள் யாவற்றையும் பழைய நிலைக்கே மீண்டும் தள்ளி விடுகிறது.
சூழலியல் தாக்க மதிப்பீடு அறிக்கையை வழங்குவது, கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துவது மற்றும் சூழலியல் தடையில்லா சான்றிதழை மத்திய மாநில அரசுகளிடம் பெறுவது ஆகிய முக்கிய மூன்று சூழலியல் பாதுகாப்பு நடைமுறைகளில் இருந்து விலக்களிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது.
கருத்துக் கேட்பு, சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு போன்றவை கண்துடைப்பாகவே இருந்து வருகின்றன. ஆனாலும் சிறிதளவாவது ஜனநாயகப் பண்பைக் கொண்டுள்ளன.
இனி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என சேலம் - சென்னை எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்திற்கு பெயர் சூட்டப்பட்டு, விளை நிலங்களை பிளந்து கொண்டு சாலை போடலாம். ஏனெனில், இந்த திருத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே பசுமை வழி சாலைத் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று, இதற்கு சூழலியல் முன் அனுமதியொன்றும் தேவையில்லை என மத்திய அரசின் தேசிய சாலை போக்குவரத்துத் துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. சுற்றுச்சூழல் அமைச்சகமும் இதற்கு ஒத்தூதியது. இனி திருத்தச் சட்டம் வந்துவிட்டால், யாரையும் கேட்காமல் நமது வீட்டுக் கூரையின் மீதே சாலை போட்டுவிடுவார்கள். எதிர்த்துக் கேட்டால் தேசத்துரோகி பட்டம் கிடைக்கலாம்; அல்லது குண்டர் சட்டம் பாயலாம்.
தேனியில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்துக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்ற பெயரில், சூழலியல் தடையில்லா சான்றிதல் தேவையில்லை என்கிற அறிவிப்பு வரலாம். முன்னதாக நியூட்ரினோ ஆய்வுக் கூடத் திட்டத்தை, திட்ட வகையினம்,  அ வகையினத்தில் கொண்டு வராமல், திட்ட வகையினம், ஆ வகையினத்தில் கொண்டு வந்து தடையில்லா சான்றிதழ் அவசி யமில்லை என மத்திய அரசு பசுமை தீர்ப்பாயத்தில் வாதிட்டது. ஆனால், திட்டம் (கேரள மாநிலம்) இடுக்கியில் உள்ள மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவில் இருந்து 4.9 கிமீ தொலைவில் வருவதை சுட்டிக்காட்டி  திட்டத்தை அ வகையினத்தில் கொண்டு வந்தது பசுமைத் தீர்ப்பாயம். திட்டம் அ வகையில் வந்ததால் சூழலியல் தடையில்லா சான்றிதல் பெறுவது கட்டாயமாகிவிட்டது. தற்போது இந்தத் திட்டம், சூழலியல் அனுமதி பெறுவதற்கான நடைமுறையால் முடங்கியுள்ளது. ஆக, இனி புதிய வரைவு சட்டமாகிவிட்டால், இத்திட்டம் நிச்சயமாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக மாற்றப்பட்டு சூழலியல் தடை நீக்கப்பட்டுவிடும்.
திட்டத்தை வகைப்படுத்துவது
தற்போதைய திருத்தத்தில் திட்டங்கள் அ, ஆ 1 மற்றும் ஆ 2 என மூன்றாக வகைப் படுத்தப்பட்டு திட்டத்தின் அளவு மற்றும் பண்பைப் பொறுத்து சூழலியல் முன் அனுமதியின் அவசியத் தன்மையை தீர்மானிக்கின்ற முறை நடைமுறையில் உள்ளது. ஆ 2 வகையினத்தில் உள்ள சில திட்டங்களுக்கு சூழ லியல் முன் அனுமதி அவசியமில்லை என்கிறது. ஆக, திட்டங்களை அ வகையில் இருந்து ஆ 2க்கு மாற்றிவிட்டால் மேற்கூறிய எந்தத் தடையும் நிறுவனங்களுக்கு இல்லாமல் போகிறது.
பொதுமக்கள் பங்கேற்பிற்கு கட்டுப்பாடு
புதிய திருத்தத்தின்படி, இனி தொழிற்சாலைகளின் சூழலியல் விதிமீறல்கள் பற்றி மக்கள் புகார் தெரிவிக்க முடியாது. மாறாக, தொழிற்சாலை பிரதிநிதிகளோ, அரசு பிரதிநிதிகளோ நிறுவன சூழலியல் விதிமீறல் பற்றி அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும். (Procedure of Public Consultation. (Draft_EIA_2020 பக்கம் 46). அதாவது, நிலக்கரி கனிமத்தை எடுக்கிற நிறுவனம், தாமாக முன்வந்து சுரங்கப் பணியால் பாதிப்பு வந்துவிட்டது எனக் கூறுமாம். இவ்வாறு விதிமீறலை மாசுக் கட்டுப்பாடு வாரியம் கண்டறிந்தால் நாளைக்கு இரண்டாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் பணத்தை செலுத்திவிட்டு செல்லலாம். வண்டிவண்டியாக கனிம வளங்களை அள்ளிச் செல்பவர்களுக்கு ஆயிரம் பத்தாயிரம் ரூபாய் ஒரு பணமே இல்லை என்பது இவர்களுக்கு தெரியாது போலும்!
மறுபக்கம், பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து நிறைய திட்டங்களுக்கு விலக்களிக்கப் பட்டுள்ளது. அவை வருமாறு,
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள்
ஆ 2 வகையில் வருகிற திட்டங்கள்
கடலுக்குள் 12 நாட்டிக்கல் மைல் தொலைவிற்கு அப்பாலுள்ள திட்டங்கள்
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து நூறு கி.மீ தொலைவில் வருகிற திட்டங்கள்
பொதுமக்கள் கருத்துக் கேட்பு கால அவகாசமும் 30 நாட்கள் என்பதில் இருந்து  இருபது நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. (Draft EIA 2020 பக்கம் 48).
 இந்தியாவில் 48.69 - 84.2 மில்லியன் ஹெக்டேர் பொதுச் சொத்தாகவும், இந்திய நிலபரப்பில் அது 15% - 25% ஆகவும் உள்ளது. 5 பில்லியன் டாலர்/வருடம் பொதுச் சொத்து மூலம் ஏழை மக்களுக்கு ஊதியமாக கிடைக்கி றது.  77% இந்திய கால்நடைகள் மேய்ச்சல் நிலங்கள் போன்ற பொதுச் சொத்துகள் மூலம் பராமரிக்கப்படுகின்றன. 55% பாலும், 74% இறைச்சியும் இந்த மேய்ச்சல் நிலங்களில்  மேயும் கால்நடைகளில் இருந்து இந்திய மக்களுக்கு கிடைக்கிறது.
ஆனால் வறண்ட புல்வெளிக்காடுகள் (ராமநாதபுரம்), தரிசு நிலங்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அப்பகுதி தொழிற்சாலைகளுக்காக திறந்துவிடப்படவும் இந்த வரைவு வழிசெய்கிறது. ஆக, இவ்வரைவின் மூலம் பொதுச் சொத்து அழியும் வாய்ப்பிருக்கிறது.
பொதுச் சொத்து வருடத்திற்கு 1.9% சீரழிக்கப்படுகிறது என அரசின் புள்ளி விவரமும்,  50 வருடங்களில் 31% - 55% பொதுச் சொத்து அளிக்கப்பட்டுள்ளது என பிற ஆய்வுகளும் கூறுகின்றன.  இதனால் மண், நீர் , உணவுச்சத்து வளம் குறைந்து, உணவு, குடிநீர், கால்நடை தீவனம் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
2013 புள்ளிவிவரப்படி, சூழல் சீர்கேட்டால் இந்தியாவிற்கு 3.75 ட்ரில்லியன் டாலர் இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இது 5.7% என்றும் உலக வங்கி ஆய்வுகள் கூறுகின்றன.
காடுகளில் ஏற்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்களை பொறுத்தமட்டில் ஆகஸ்ட் 2014ல் இருந்து அனுமதி கோரப்பட்ட 687 திட்டங்களில் வெறும் 5 திட்டங்கள் மட்டுமே இந்தியாவில் நிராகரிக்கப்பட்டுள்ளன. அரசின் இச்செயல் காடுகளை பயன்படுத்தும் பழங்குடி இன மக்கள் மீது அரசு எவ்வளவு தூரம் அக்கறை கொண்டுள்ளது என தோலுரித்துக் காட்டுகிறது.
இவ்வாறு மோடியின் ஆட்சிக் காலத்தில் காடுகளும் பன்மயச்சூழலும் அழிக்கப்படுவது பெரும் ஊழிக்காலத்தை அரசே வரவழைப்பது போன்றதாகும்.

Search