புலம் பெயர் தொழிலாளர்கள்
ஆர்.வித்யாசாகர்
நம் நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்களின் நிலைமையும் கடல் பறவையின் நிலையை ஒத்ததாக ஆகிவிட்டது. தற்சமயம் நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் கரோனா பெருந்தொற்று, அதை அரசுகள் கையாளும் விதம் காரணமாக, புலம் பெயர் தொழிலாளர்கள் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த மாநிலங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்வ தும், அங்கு பிழைக்க வழியின்றி அங்கிருந்து மீண்டும் வேலை தேடி அவர்கள் ஏற்கனவே வேலை செய்து கொண்டிருந்த பழைய இடங்களுக்கே செல்வதும் நடந்து கொண்டிருக்கிறது. புலம் பெயர் தொழிலாளர்களில் பாதிக்கும் மேல் திரும்பிப்போக வழியின்றி பிழைக்க வந்த இடங்களிலேயே துன்புறுகின்றனர்.
ஜ÷ன் ஒன்றாம் தேதிக்குப் பிறகு, புலம் பெயர் தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊர்களுக்கு ஏற்றிச்செல்லும் ரயில்கள் நிரம்பி வழியும் அளவிற்கு அங்கிருந்து மீண்டும் தொழிலாளர்கள் அவர்கள் வேலை செய்த இடங்களுக்கு பயணிப்பதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகிறார்கள். புலம் பெயர் தொழிலாளர்களுக்காக மும்பையிலிருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் திரும்பி வரும்போது அவற்றில் ஜூன் 28 வரை ஏற்கனவே சொந்த ஊர் திரும்பிய சுமார் 1.8 லட் சம் தொழிலாளர்கள் வேலைக்காக திரும்பி மும்பைக்கே வந்திருக்கின்றனர் என்று மத்திய ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். ஊரடங்கு காலத்தில் ஊர் திரும்பிய 13 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்கள் திரும்பி வருவார்கள் என்று மகாராஷ்டிர மாநில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாள் ஒன்றுக்கு 15,000 பேர் திரும்பி வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் பீகார், ஜார்கண்ட், மத்தியபிர தேஷ், ஒடிஷா, உத்தரபிரதேஷ், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து, பல்வேறு இதர மாநிலங்களுக்கும், பெரும் நகரங்களுக்கும் சென்று உழைத்து உற்பத்தியை பெருக்கும், புலம் பெயர் தொழிலாளர்கள். மாநிலங்களுக்கிடையே புலம் பெயரும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள், நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 10% உருவாக்குவதாக, ஆபரேஷன் ரிசர்ச் குரூப், ஜூலை 1, 2020ல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கிறது. ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தின் பொருளாதார பேராசிரியர் சந்தோஷ் மெஹ்ரோத்ரா, புலம் பெயர் தொழிலாளர்கள் திரும்பிச்செல்வதால் இந்தியாவின் வளர்ச்சி 15 ஆண்டுகளுக்கு பின் தள்ளப்பட்டுவிட்டது என்கிறார். பல மாநிலங்களிலும், பெருநகரங்களிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்பும் தொழிலாளர்கள் இல்லாததால் தொழில்கள் முடங்கி போயிருக்கின்றன. ஆனால் இவர்களது வாழ்க்கையை பாதுகாக்க மத்திய, மாநில அரசாங்கங்களிடம் எந்தத் திட்டமும் இல்லை. அதை பற்றிய உள்ளார்ந்த அக்கறையும் இல்லை. பீகார், மத்தியபிரதேஷ், உத்தர பிரதேஷ், ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்கள் முதலாளிகளுக்கு ஆதரவாக, தொழிலாளர் நலன்களுக்கு எதிராக சட்டங்கள் இயற்றுவதில் காட்டும் வேகத்தை புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும், மாற்று ஏற்பாடுகளும் செய்வதில் காட்டுவதில்லை.
மோடியின் அலட்சியம்
கரோனா ஊரடங்கால் புலம் பெயர் தொழிலாளர்கள் பட்ட இன்னல்கள் நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறியிருந்த நேரத்தில், ஊடகங்கள் பல செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்த நேரத்தில், மோடி இந்த பிரச்சனையைப் பற்றி ஒரு முறை கூட பேசவில்லை. புலம் பெயர் தொழிலாளர்களின் பிரச்சனைகள் உச்சத்திலிருந்த சமயத்தில், மோடி, மே மாதம் 12ம் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், எதுவும் நடவாததுபோல் இந்த பிரச்சனையை பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. தட்டுகளை தட்டவும், விளக் கேற்றவும், வானிலிருந்து மலர் தூவவும் காட்டிய அக்கறை புலம் பெயர் தொழிலாளர்கள் மீது காட்டப்படவில்லை. அவர், புலம் பெயர் தொழிலாளர்கள் சந்தித்தித்துக்கொண்டிருக்கும் துன்ப துயரங்கள் பற்றியோ அவலங்கள் பற்றியோ எந்த கவலையையும் கொண்டதாக தெரியவில்லை. முன்னெப்போதும் இல்லாத அளவில் மக்கள் வேலைகளை இழந்து அவதியுறுவது, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக் காமல் மக்கள் அவதியுறுவது, மிகவும் நம்பிக்கை இழந்த நிலையில் மக்கள் இருப்பது எதையுமே அவர் உரையில் கண்டுகொள்ளவில்லை. பண மதிப்பிழப்பு திட்டம் கொண்டுவரப்பட்ட போது, 'இது ஊழலுக்கு எதிரானதொரு யாகம்' எனவே மக்கள் தாங்கள் படும் துன்பங்களை பொறுத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆன்மீகமான பொன் மொழிகளை உதிர்த்தார். ஏப்ரல் 14 அன்று ஊரடங்கை நீட்டித்து அறிவித்தபோது, அதே போன்று தியாகம், தவம் என்ற வார்த்தைகளைத்தான் மோடி பயன்படுத்தினார். அதாவது, மக்களின் தவம் மற்றும் தியாகத்தின் மூலம் 'சுய சார்பு இந்தியாவை' (ஆத்மநிர்பார்) கட்டுவேன் என்கிறார்.
புலம் பெயர் தொழிலாளர்களின்
தொடரும் துயரங்கள்
ஏதோ புலம் பெயர் தொழிலாளர்கள் பிரச்சனைகள் முடிந்துவிட்டது போல் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பொது ஊடகங்களிலும் (இணைய தள ஊடகங்களை தவிர) இவர்கள் பற்றிய செய்திகள் அரிதாகிவிட்டது. மே 1 முதல் ஜுன் இறுதி வரை 4611 ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும் அவற்றில் 63.07 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்பியதாகவும், திரும்பியபோது ரயிலிலேயே 110 பேர் மரணம் அடைந்ததாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது தவிர சாலை வழியாக 41 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஜ÷லை மாதத்திலிருந்து சிறப்பு ரயில்களும் பெரும்பாலும் நிறுத்தப்பட்டுவிட்டன. ஆனால் யாரும் கேட்காமலேயே மீண்டும் தொழிலாளர்களை, பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து அவர்கள் ஏற்கனவே வேலை செய்த இடங்களுக்கு ஏற்றிச் செல்ல சிறப்பு ரயில்களை இயக்கத் தொடங்கி உள்ளனர். நிர்மலா சீதாராமன் சொன்ன எட்டு கோடி பேரில் சிறப்பு ரயில்கள் மூலம் ஊர் திரும்பியவர்கள் வெறும் 63 லட்சம் பேர். சாலை வழியாகச் சென்றவர்களை சேர்த்தால் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர்தான் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர். நிதி அமைச்சரின் மதிப்பீடுபடி மொத்தம் 8 கோடி பேர் என்று பார்த்தால் அதில் வெறும் 12.5% தொழிலாளர்கள்தான் ஊர் திரும்பியிருக்கின்றனர். பலர் குடும்பம் குழந்தை குட்டிகளுடன் நடந்தும், லாரிகளிலும், படகுகளில், சைக்கிள்களிலும், மொபெட்டுகளிலும், பேருந்துகளிலும் சொல்லொணா துயரங் களை அனுபவித்து ஊர் திரும்பியதும், திரும்பும் வழியில் பலர் விபத்துகளில் உயிர் இழந்ததும் நாம் அறிந்ததே. இன்னும்கூட பலர் ஊர் திரும்ப முடியாமலும், அவர்கள் இருக்கும் இடத்திலும் வாழ வழியின்றி கடல் பறவைகள் போல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஜுலை 11, 12 தேதிகளில் நூற்றுக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் சென்னை சென்ட்ரல் அருகே ரிப்பன் மாளிகை வெளியே ஊர் திரும்பிச்செல்ல வழிதேடி அலைந்தனர். சிறப்பு ரயிகள் கடந்த 15 நாட்களுக்கும் மேல் நிறுத்தப்பட்டதால், ஊர் திரும்ப வழி தேடி விண்ணப்பிக்கின்றனர். ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் கூற, காவல் துறை அவர்களை திருப்பி அனுப்பி இருக்கிறது.
புலம் பெயர் தொழிலாளர்கள் இன்றி முடங்கி இருக்கும் தொழில்கள்
நாட்டின் பல தொழில் நகரங்களில் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தொழில்கள் முடங்கிப் போயிருக்கின்றன. பெங்களூ ருவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டபோதும் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் பல தொழில்கள் முடங்கிப்போயிருக்கின்றன. அமைப்பாக்கப்படாத தொழிலாளர்களுக்கு வேலை ஏற்பாடு செய்யும் நிறுவனமான 'லேபர் நெட்' என்ற அமைப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு நாளும் 1000 பேருக்கு மேல் வேலைக்கு ஆள் கேட்டு விண்ணப்பிக்கின்றனர் என்று கூறுகிறது. பேக்கரிகளில் ரொட்டி செய்வதற்கு ஆட்களிலில்லை. பெங்களூரு நகரத்திலுள்ள விவசாய பண்ட விற்பனை குழு மங்களில் தானிய மூட்டைகளை ஏற்றி இறக்க ஆட்களில்லை. ஒரு கெய்சர் வாங்கினால் அதை பொருத்துவதற்கு மின் பணியாளர்கள் கிடைப்பதில்லை. 40% ற்கும் அதிகமான புலம் பெயர் தொழிலாளர்கள் திரும்பி சென்று விட்டதால் உணவகங்களில் பணியாற்ற கடுமையான ஆட்கள் பற்றாக்குறை போன்ற பத்திரிகை செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. தொழில் களில், கட்டுமானப் பணிகளில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் முடங்கிக்கிடக்கின்றன. லார்சன் & டியூப்ரோ கம்பெனி நாட்டின் பல் வேறு பகுதிகளில் உள்ள அதன் திட்டப் பணிகள் நடைபெறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில், கரோனாவிற்கு முன் பணியிலிருந்த 2.25 லட்சம் மக்களில், ஒரு லட்சம் பேர் ஊர் திரும்பிவிட்டதால் வேலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக அதன் நிர்வாக அதிகாரி ஹிந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். பெங்களூருவில் உள்ள பல மாடி கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள், விமான நிலையம், மெட்ரோ ரயில் பாதைகள், போன்றவை பெரும் பங்கு உருவானதற்கு காரணம் புலம் பெயர் தொழிலாளர்களே. கர்நாடகா முதலமைச்சரும், வேறு சில அமைச்சர்களும் புலம் பெயர் தொழிலாளர்களை திரும்பி போக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். க்ரிடாவுடன் நடத்திய பேச்சுவார்தைக்குப்பின், புலம் பெயர் தொழி லாளர்கள் திரும்புவதை தடுப்பதற்காக கர்நாடக அரசு சிறப்பு ரயில்களை மே 6 ஆம் தேதி யிலிருந்து ரத்து செய்தது. பல ஜனநாயக சக்திகள், மற்றும் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு குரலை சமாளிக்க முடியாமல் மீண்டும் மே 8ம் தேதியிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்கத் துவங்கியது.(தி ஹிந்து 27 ஜூன், 2020). வாடகைகைக்கு குடியிருந்த பல புலம் பெயர் தொழிலாளர்கள் வீட்டை காலி செய்ய நிர்பந்தப்படுத்தப்பட்டனர். தங்க இடமின்றி, உண்ண உணவின்றி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நகரத்தை விட்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். ரயில்கள் இயங்க ஆரம்பித்தும் கூட பலர் நடந்தோ, லாரிகளிலோ வேறு வழிகளிலோ ஊர் செல்ல வேண்டியதாயிற்று. ஏனெனில் இணைய தளத்தில் ரயில் பயணத்திற்கு பதிவு செய்வது, காத்திருப்பு பட்டியல் போன்றவை அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்ததால் அவற்றை படிப்பது மிகவும் கடினம் என்பதால்.
மும்பை மெட்ரோபாலிட்டன் பிராந்திய வளர்ச்சி ஆணையம், பாதிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரும்பி சென்றுவிட்டதால் அதன் கட்டுமான பணிகள் பெரிதும் பாதித்திருப்பதாக கூறுகிறது. கட்டுமானம் தவிர பல தொழில்கள் தொழிலாளர்கள் இல்லாமல் முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
தங்கள் சொந்த ஊர்களில் இருக்க முடியாமல் வெளியேறும் தொழிலாளர்கள்
அவர்கள் வேலை செய்த இடங்களிலும், ஊர் திரும்பி வருவதற்குள்ளும் அவர்கள் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். இருப்பினும் ஏன் வேலை செய்த இடங்களுக்கே மீண்டும் செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்?
'தி வயர்' இணைய தள பத்திரிகையில் மே 11, 2020 அன்று வெளியான இதழில், அபிஜித் மஹந்தி, புலம் பெயர் தொழிலாளர்கள் அவர்கள் வேலை செய்த இடங்களுக்கே திரும்பிச்செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் ஏன் இருக்கிறார்கள் என்று சொந்த ஊர் திரும்பியவர்களின் நிலையை மிகவும் தெளிவாக விளக்கி இருக்கிறார்.
34 வயதான, பாஜுராம் மரண்டி, ஒரிசா மயூர்பன்ச் மாவட்டத்தில் வசிக்கும் சந்தால் பழங்குடியினர். இரண்டு வருடம் பெங்களூருவில் கட்டிட வேலை செய்து விட்டு தற்சமயம் ஊர் திரும்பியிருக்கிறார். 'அரசாங்க அதிகாரிகள் எங்களை வீட்டில் இருங்கள் என்கிறார்கள். ஆனால் என் குழந்தைகளுக்கு உணவு வேண்டும். சர்க்கரை நோயால் அவதியுறும் என் தந்தைக்கு மருந்து வாங்க வேண்டும். இங்கு வேலை ஏதும் இல்லை. நாங்கள் உயிர் வாழ்வது எப்படி?' என்று கேட்கிறார். இவரின் பெற்றோர்கள் உட்பட இவர் மனைவி, மூன்று குழந்தைகளுடன் உயிர் வாழ வேண்டும்.
பாஜுராம் போலவே மன்காடியா பழங் குடியைச் சார்ந்த 46 வயதான ரபி மன்காடியா, 2016 முதல் பழைய டெல்லி பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தச்சு பணியில் ஈடுபட்டிருந்தார். இப்போது வீடு திரும்பியிருக்கிறார். கடந்த ஆண்டு இவர் வீடு கட்ட வாங் கிய கடனுக்கு வட்டியை கேட்டு கடன் கொடுத்தவர் அடிக்கடி வந்து நெருக்குகிறார். 'எனக்கு வேலை இல்லை. என்னிடம் பணம் இல்லை என்று சொல்வதை காதில் போட்டுக்கொள்வதில்லை. ஊரடங்கு நீடிக்கப்பட்டிருப்பதால், எப்படி வேலை செய்வது, கடனை எப்படி அடைப்பது என்ற பெருங்குழப்பத்தில் இருக்கிறேன். என்னுடைய சகோதரிக்கு வருகிற செப்டம்பர் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. இந்தத் திருமணத்திற்கு எங்கிருந்து எங்களுக்கு பணம் கிடைக்கும் என்று தெரியவில்லை. டெல்லியிலிருந்து திரும்பிய இரண்டு வாரங்களுக்குள், உணவுக்காக, வீட்டு செலவிற்காக இருந்த இரண்டு ஜோடி ஆடுகளையும் விற்று விட்டேன். இன்னும் எதை விற்க நிர்பந்தம் வரும் என்று தெரியவில்லை. அறிமுகமில்லாத இடத்தில் சாவதை விரும்பாமல்தான் நான் ஊருக்கு திரும்பி வந்தேன். இங்கு கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் இறப்பதைப் பாருங்கள்' என்று கூறுகிறார். இவருடைய மனைவி ரைபாரி, 'எங்கள் குழந்தைகளுக்கு இரண்டு வேளை உணவாவது வேண்டும். ஆனால் நங்கள் ஒரு வேளைதான் சாப்பிடுகிறோம். இருக்கிற உணவு தானியங்கள் தீர்ந்து போகும் நாளை நினைத்தால் பெரும் அச்சமாக இருக்கிறது' என்கிறார்.
இவர்கள் திரட்டும் மஹுவா, கெண்டு, நெல்லிக்காய், புளி போன்ற உப வனப் பொருட்களுக்கு சந்தைகள் மூடப்பட்டிருக்கின்றன. இந்த நேரத்தில் மிகக் குறைந்த விலைக்கு விற்க வியாபாரிகள் நிர்பந்திக்கின்றனர். விவசாயமும் சாத்தியமில்லாமல், வருமானமும் இல்லாமல்தான் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை தேடி மீண்டும் வெளியேற வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். இது போன்ற நிலையில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அமிழ்ந்திருக்கிறார்கள்.
அசாமை சார்ந்த பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக அவர்கள் வேலை செய்துகொண்டிருந்த மாநிலங்களிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி இருக்கின்றனர். சொந்த ஊர்களில் வேலை ஏதும் இல்லாமல் கடுந்துன்பங்கள் ஒரு புறம், பெரும் வெள்ளத்தால் இருந்த கொஞ்ச நஞ்சம் வாழ்வாதாரங்களையும் இழந்து தவிக்கும் கையறு நிலை மறுபுறம்.
கொக்ராஜார் மாவட்டத்திலுள்ள தீபக் பிரம்மா பல வருடங்கள் குஜராத் மாநிலத்தில் புலம் பெயர் தொழிலாளியாக பணியாற்றிக் கொண்டிருந்தார். ஊரடங்கு காரணமாக கையிலிருந்த பணத்தையெல்லாம் செலவு செய்து ஊர் திரும்பிவிட்டார். வேலையும் இன்றி, உயிர் வாழ வழியுமின்றி உணவு தேவைக்காக தனது 15 நாள் பெண் குழந்தையை ரூ.45,000ற்கு விற்றிருக்கிறார். காவல்துறை அக்குழந்தையை மீட்டுவிட்டது என்றாலும், தீபக், தற்சமயம் ஆள் கடத்தல் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார் (டைம்ஸ் ஆப் இந்தியா, 25.07.2020). சிறிதளவேனும் அரசாங்கங்களுக்கு இவர்கள் மீது அக்கறை இருந்திருக்குமேயானால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
சுமார் 2.3 கோடி, மாநிலங்களுக்கிடையே மற்றும் மாநிலங்களுக்குள்ளும் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கு திரும்பி இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கி றது (ஸ்ரீதர் குண்டு, ஸ்க்ரோல், மே 25, 2020). 2017 - 2018ஆம் ஆண்டின் தொழிலாளர் கணக்கெடுப்பின்படி ஏற்கனவே கிராமப்புறங்களில் 1.5 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் இல்லை. சிறுகுறு தொழில்களை முன்னேற்ற மத்திய அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் திட்டங்கள் ஒருவேளை 'நிறைவேற்றப்பட்டாலும்', 100 நாள் வேலை திட் டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினாலும் கூட திரும்பி வரும் புலம் பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலையை உருவாக்குவது என்பது நடவாத காரியம் என்கிறார் ஸ்ரீதர் குண்டு.
தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, பீகா ரிலும், உத்தரபிரதேசத்திலும் மற்ற மாநிலங்களைவிட கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அதிகம். நாட்டின் கிராமப்புற வேலையற்றோர் எண்ணிக்கையில் 15% உத்தரபிரதேசத்திலும், 10% பீகாரிலும் மட்டுமே இருக்கிறார்கள். இங்கிருந்துதான் அதிக அளவில் தொழிலாளர்கள் வெளி மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து செல்கிறார்கள். திரும்பி வரும் தொழிலாளர்களுக்கு கவுரவமான வாழ்க்கைக்கான நிவாரணங்களை கொடுப்பதற்கான திறன் இந்த அரசாங்கங்களிடம் இல்லை. தொழிலாளர்கள் அதிகமாக புலம் பெயர்ந்து செல்லும் மாநிலங்களிலெல்லாம், அதிக பொருளாதார ஏற்றதாழ்வுகள் கொண்ட, வறிய மக்களை அதிகமாக கொண்ட மாநிலங்களாக இருக்கின்றன. எனவே இவற்றால் திரும்பி வரும் புலம் பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்த வழியில்லை. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், 2005ல், பீகாரிலிருந்து தொழிலாளர்கள் வேலைதேடி இடம்பெயர்ந்து செல்ல தேவை இல்லாத நிலையை உருவாக்குவேன் என்றார். ஆனால் இது வரை அவர் சொன்னது வெற்று வார்தைகளாகவே இருக்கிறது. இந்த ஓராண்டில் இது நடக்கும் என்று நம்புவதற்கில்லை. இதுபோன்ற காரணங்களால் சொந்த ஊரிலேயே வாழ முடியாமல் மீண்டும் வேலைக்காக இம்மக்கள் வெளியே துரத்தப்பட்டு கொண்டே இருக்கிறார்கள்.
புலம் பெயர் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு ரூ.50,000 கோடியை அறிவித்தது. ஒரு புறம் இதனால் புலம் பெயர் தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்றாலும், மறு புறம் இத்திட்டம் முழுவதும் பொருளாதார சீர்திருத்த கொள்கைகளுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனால் தனியார் முதலாளிகளுக்குத்தான் லாபமே தவிர தொழிலாளர்களுக்கு அல்ல. எனவே இந்த திட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.
100 நாள் ஊரக வேலை திட்டத்தின் கீழ் கூலியை நாளொன்றிற்கு ரூ.20 கூடுவதாக மத்திய அரசு அறிவித்தது. இது நாளொன்றிற்கு ரூ.182லிருந்து ரூ.202 என உயர்ந்தது. 100 நாள் வேலை செய்வோருக்கு இந்த கூலி கிடைப்பதில்லை என பல ஆய்வுகள் கூறுகின்றன. அந்தந்த மாநிலங்களில் அறிவித்திருக்கும் குறைந்தபட்ச கூலி அளவில் இது 40 முதல் 50% குறைவு. தமிழ் நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்த ஆய்வின்படி, தகுதி உள்ள 1854 பேர்களில், 622 பேருக்கு மட்டுமே தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட்டை கிடைத்து உள்ளது. ஒருவருக்குக் கூட முழுமையாக வேலை கிடைக்கவில்லை. ரூ.170க்கும் குறைவாக கூலி வழங்கப் பட்டுள்ளது (தீக்கதிர், 11.06.2020).
புலம் பெயர் தொழிலாளர்களுக்கும்
ஏழை மக்களுக்கும் வழங்கப்படாத
இலவச உணவு தானியம்
ரேஷன் அட்டை இல்லாத 8 கோடி புலம் பெயர் தொழிலாளர்களுக்கு, மே, ஜுன், மாதங்களில், மாதம் தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மே மாதம் அறிவித்திருந்தார். இதன்படி ஜுன் மாத இறுதிக்குள் 8 லட்சம் டன் உணவு தானி யங்களும், 38,000 டன் பருப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விநியோகித்திருக்க வேண்டும்.
ஆனால் உண்மையான புலம்பெயர் தொழிலாளர்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கலால் சரியாக செயல்படவில்லை என்று மத்திய அரசாங்கம் கூறியது. ஜுலை 9 வரை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மாநிலங் கள் பெற்ற தானியங்களில் 29% மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் 2.24 கோடி, ஜுன் மாதத்தில் 2.25 கோடி புலம் பெயர் தொழிலாளர்களுக்கு மட்டும்தான் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது. பருப்பு விநியோகிப்பதில் 38,000 டன்களுக்கு பதிலாக வெறும் 10,645 டன்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டிருந்தது.
புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றிய தகவல்களை இதுவரை மத்திய அரசோ மாநில அரசுகளோ சேகரிக்கவில்லை. ஜுலை 2 அன்று மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்திற்கான அமைச்சகம் புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றிய எந்தத் தகவலும் இல்லை, எனவே உணவு பாதுகாப்பு சட்டதின் கீழ் இலக்காக இருக்கும் 80 கோடி பேரில் 10% புலம் பெயர் தொழிலாளர்களாக இருக்கலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில்தான் 8 கோடி பேர் என்று மதிப்பீடு செய்ததாக கூறியது.
ஜுலை 9 அன்று, மத்திய அரசு, ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியங்கள் வழங்கும் காலத்தை நீட்டித்து அறிவித்தது. மாநில அரசுகள் ஏற்கனவே உணவு தானிய கழகத்திடமிருந்து பெற்ற உணவு தானியங்களை ஆகஸ்ட் 31 வரை புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அளிக்கலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை வழங்காத உணவு தானியங்களை எப்படி வழங்குவார்கள்?
பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ் ஜுலை 9 அன்று, நவம்பர் இறுதி வரை உணவு பாதுகாப்பு சட்டத்தின் இலக்கில் உள்ள 80 கோடி பேருக்கு, ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்களுக்கு மாதா மாதம் ஒரு நபருக்கு 5 கிலோ அரிசியும், ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்குவது நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில்கூட இது வரை அதிகபட்சமாக 23 கோடி பேருக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. மீதி ஏழை மக்களின் கதி என்ன? அரசிடமிருந்து இதுவரை விளக்கம் ஏதும் இல்லை. இந்த திட்டம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பொருந்தாது. உணவுப் பொருட்கள் ஏழை மக்களுக்கு ஒழுங்காக கிடைத்தால் ஓரளவுக்கேனும் உணவுப் பற்றாக்குறையை அவர்களால் தீர்க்க முடியும். ஆனால் அதுவும் இல்லாத நிலையில் மீண்டும் வேலை தேடி புலம் பெயரத் தயாராகிவிட்டனர்.
மீண்டும் வெளியில் வேலை தேடி...
நான்கு நாட்கள் நடந்தும், இடையிடையே லாரிகளை பிடித்தும் மோசமான நிலைமைகளில் உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த 50 வயதான பல்வந்த் சாஹ்னி ஒரு மாதத்திற்கு முன்புதான் மும்பையிலிருந்து ஊர் போய்ச்சேர்ந்தர். ஆனால் ஜுன் 4 அன்று மீண்டும் மும்பை செல்ல கோரக்பூர் ரயில்வே நிலையத்தில் மும்பை செல்லும் சிறப்பு ரயிலில் ஏறுகிறார். 'நான் வேலை செய்த தொழிற்சாலை இப்பொழுது இயங்குகிறது. எனது முதலாளி தொலைபேசி மூலம் என்னை அழைத்திருக்கிறார். அதனால் நான் கிளம்பிவிட்டேன். கரோனா ஆபத்து இருந்தாலும் வாழ்க்கையை மீட்க அந்த ஆபத்தை தாங்கி கொள்ளலாம்' என்கிறார். மும்பை செல்ல கோரக்பூர் ரயில் நிலையத்திலிருந்து மூன்று சிறப்பு ரயில்களும், லக்னோவிலி ருந்து ஒரு சிறப்பு ரயிலும் இயக்கப்படுகின்றன. இவற்றில் பயணிக்க ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் காத்து கிடக்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு சோகமான கதை இருக்கிறது.
சமீப காலமாக, பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பேருந்துகள், பீகார், உத்தரபிரதேசம், சட்டிஸ்கர், ஜார்க் கண்ட், ஆகிய மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வர இயக்கப்படுவதாக பத்திரிகை செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பத்திரிகை செய்திகளின்படி, பஞ்சாபில் விவசாயத்தில் இருந்த, ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் தற்போது, சொந்த கிராமங்களில் வேலை வாய்ப்புகள் எதுவும் இல்லை என்கின்றனர். பீகாரை சார்ந்த ஒரு தொழிலாளி, நூறு நாள் வேலை திட்டத்திற்காக அட்டை வழங்க விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை. இங்கு வாழ வழியில்லை. பஞ்சா பிலிருக்கும், முதலாளிகள் மீண்டும் வேலைக்கு அழைக்கின்றனர். எனவே மீண்டும் பஞ்சாபிற்கு செல்லப் போகிறேன் என்கிறார். கரோனாவிற்கு பயந்து பட்டினி கிடக்க முடியுமா என்று கேட்கிறார்.
பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு, விவசாயம், தொழிற்சாலைகள், கட்டுமானம் ஆகிய துறைகள் செயல்படத் துவங்கியுள் ளன. தமிழ்நாட்டில் இன்னும் வெளிமாநில பயணிகளை அனுமதிக்காததால் தொழிலாளர்கள் இங்கு திரும்பி வரத் துவங்கவில்லை. கட்டுப்பாடுகள் தளர்த்தப்படின் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மீண்டும் வந்து கொண்டிருப்பார்கள்.
கிழக்கு மத்திய ரயில்வே மண்டல மக்கள் தொடர்பு அதிகாரியின் கூற்றுப்படி, பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து, அகமதாபாத், அமிர்தசரஸ், செகந்திராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் ஏராளமான தொழிலாளர்கள் பயணம் செய்கின்றனர். மேலும், தேவைக்கேற்ப அதிக ரயில்களை இயக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம் என்கிறார்.
ஊரடங்கில் ஏற்பட்ட தளர்வுகளுக்குப் பின் தற்போது பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து பெங்களூருவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பஞ்சாப் பட்டிண்டா மாவட்டத்திலிருந்து ஒரு பேருந்து, பீகாரின் தர்பங்கா மாவட்டத்திலிருந்து விவசாயத்திற்காக 50 தொழிலாளர்களை ஏற்றி வந்தது. லூதியானாவிலிருந்து ஒரு பேருந்து பீகாரில் அதே மாவட்டத்திலிருந்து 30 தொழிலாளர்களை ஏற்றி வந்தது.
ஹரியானா, பஞ்சாப் மற்றும் சில மாநிலங்களிலுள்ள தொழிற்சாலைகள், தொழிலாளர்களை விமானம் மூலமும், மகிழுந்துகளை அனுப்பியும் அழைத்து வருகின்றன. லூதியானாவில் உள்ள கம்பள தொழிற்சாலைகள் பீகாரிலிருந்து தொழிலாளர்களை விமானம் மூலம் திருப்பி அழைத்து வந்திருக்கிறது. மூன்று வாரங்களுக்கு முன்புதான் படாத பாடு பட்டு சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் மீண்டும் வேலை செய்த இடத்திற்கே வந்துவிட்டனர். ரயிலிலோ, பேருந்திலோ வர நாளாகும், ரயிலில் பயணச் சீட்டு கிடைப்பது கடினம். வேலை பாதிக்காமல் இருக்க தொழிலாளர்களை விமானத்தில் அழைத்து வந்தோம் என்று ஜிந்தால் கம்பளி தொழிற்சாலை முதலாளி கூறி இருக்கிறார்.
சென்னையில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர்கள் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட 3 விமானங்களில் பீகாரிலிருந்து 150 கட்டிட தொழிலாளர்களை ஜுன் 15க்குப் பிறகு அழைத்து வர ஏற்பாடுகள் செய்தனர். அங்கிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்களை விடவும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் கரோனா நிலைமை தமிழகத்தில் மோசமாக இருப்பதால் எதையும் அனுமதிக்கவில்லை.
ஊரடங்கு நேரத்தில் தொழிலாளர்களை கண்டுகொள்ளாமல்விட்ட, பெரும் துயரங்களுக்கு ஆட்படுத்திய முதலாளிகள் தற்போது தங்களுக்கு லாபம் வேண்டும் என்பதற்காக தொழிலாளர்களை மீண்டும் அதிக செலவு செய்து அழைத்து வருகின்றனர். ஊர்திரும்பிச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் திரும்பி வரக்கூடாது என்ற எண்ணத்தில்தான் சென்றனர். ஆனால் அவர்களுக்கு அந்த ஆடம்பரத்தை தாக்கு பிடிக்க முடியாது என்பது போல் பலர் தற்போது வேலை செய்த இடங்களுக்கே திரும்பிக் கொண்டிருக்கின்றனர். தாங்கள் பலி ஆடுகள் என்று தெரிந்திருந்தும் வேறு வழியின்றி புறப்படுகின்றனர்.
மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சி, மக்களுக்கான வாழ்வாதாரங்களை உத்தரவாதப்படுத்தும் திட்டங்கள், ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாவதற்கான கொள்கைகள் எதுவுமின்றி சந்தை பொருளாதாரத்தையும், பெரு முதலாளிகளின் நலன்களை தூக்கிப்பிடிக்கும் அரசுகள் இருக்கும் வரை மீண்டும் மீண்டும் மக்கள் சொல்லொணா துயரங்களில் தள்ளப் பட்டுக்கொண்டே இருப்பார்கள் என்பதற்கு புலம் பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கையே சாட்சி.