போர் வேண்டாம், அமைதி வேண்டும்
உமாமகேஸ்வரன்
கல்வான் பள்ளத்தாக்கிற்கு பக்கத்திலுள்ள சச்சரவுக்குட்பட்ட அந்த நிலம் பூமியின் மிகக் கொடுமையான நிலப்பரப்பு என்று கூறலாம். இந்த இரண்டு தேசங்களையும் பிரிக்கும், இமாலயத்தின் மிக உயரமான இடத்தில் உள்ள இந்த நிலப்பரப்பு, எந்தக் காலத்திலும் எல்லையை அதிகாரபூர்வமாக வரையறுக்க முடியாத சபிக்கப்பட்ட பகுதியாகவே பார்க்கப் படுகின்றது. எனவேதான் சமீபத்திய மோதலில் தற்காலிக சண்டை நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு 2100 கி.மீ. நீளமுள்ள உண்மையான எல்லைக் கோடு உருவாக்கப்பட்டது.
ஜுன் 15 அன்று இரவு, சீனா கூடாரம் அமைத்திருந்த பகுதியில் இந்திய - சீன வீரர்கள் கல்வான் நதிக்குப் பக்கத்தில் கூரான வளைவுள்ள பகுதிக்குப் அருகில் மோதிக் கொண்டனர். இது 1967க்குப் பிறகு எல்லையில் நடந்த முதல் தாக்குதலாகும்.
இதே போன்ற தாக்குதல் மே மாதத்தில் பேன்காங் ஏரியின் வடக்குக் கரையில் நடந்தது. உயிரிழப்புகள் இல்லை என்றாலும், ஏராளமான வீரர்கள் படுகாயமடைந்தனர். எல்லையில் இதுபோன்ற பகைமையான சூழல் ஏற்படும் போது, ஒருவருக்கு ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளக் கூடாது என பல வருடங்களுக்கு முன்பு ஒப்புக்கொண்டனர். பேன்காங் ஏரி மலைகளின் சரிவுகள் எட்டு திசைகளிலிருந்து ஏரியை நோக்கி செங்குத்தாக வருகின்றன. இதை 'விரல்கள்' என்று குறிப்பிடுகிறார்கள். உண்மையான எல்லைக் கோடு இதனூடாக துல்லியமாக எங்கு செல் கிறது என்பதற்கு இந்தியாவும், சீனாவும் வெவ்வேறு விளக்கமளிக்கிறார்கள். இந்த எட்டு விரல்களில் 3 விரல்கள் இந்திய எல்லைக் கோட்டு பகுதியிலும், மீதமுள்ள 5 விரல்கள் சீன எல்லைப் பகுதியிலும் உள்ளன. இந்தியா இந்த 8 விரல்கள் எல்லைக் கோட்டுப் பகுதியும் தனது என்று உரிமை கோருகிறது. இப்படிப்பட்ட சிக்கலான வரையறுக்க முடியாத வரை யறுக்கப்படாத எல்லைக் கோடுகளைக் கணக்கிட்டு எல்லையை யாராலும் வரையறுத்துத் தீர்மானிப்பது சிரமம். இந்தச் சூழலில் போர் எப்படி தீர்வாக முடியும்? இரு நாடுகளுக்கும் ஏற்புடைய தீர்வை எட்டுவது பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே சாத்தியம்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே தீர்க்கப்படாத, பல ஆபத்தான எல்லைப் பிரச்சனையாக லடாக் உள்ளது. இந்த மலைப் பகுதி மக்கள் தொகை மிகக் குறைவாக உள்ள பகுதியாகும். இமய மலையின் மிக உயரமான பகுதியான லடாக் திபெத்துடன் மிக நெருக்கமான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளைக் கொண்டுள்ளது. இந்தியா 1947ல் சுதந்திரம் அடைந்தது. சீனா இரண்டு வருடங்களுக்குப் பின் 1949ல் மக்கள் சீனக் குடியரசை மாவோ தலைமையில் அமைத்தது. திபெத்தியப் போருக்குப் பின் 1950ல் சீனா லடாக்கின் வடக்குப் பகுதியை (அக்சாய் சின் என்று அழைக்கப்படுகின்ற) கைப்பற்றியது. அது இன்று வரை சீனா வசமே உள்ளது. இந்தப் பகுதிக்காக நடந்த போரில், சீனா இந்தியாவை வெற்றி கொண்டு அந்தப் பகுதி வரை சீனா எல்லையாக வரையறுத்துக் கொண்டது. இந்த எல்லை உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு என்று அழைக்கப்படுகிறது.
சீனா தனது பகுதியில் சாலைகள் அமைத்ததுபோல் இந்தியா தனது பகுதியில், சுமார் 5000 கி.மீ. அளவுக்கு கடந்த 20 வருடங்களாக சாலைகள் அமைத்து கடந்த வருடம், இந்தியா, எல்லா தட்ப வெப்பங்களுக்கும் தாக்குப் பிடிக்கும் லே நகரத்துடன் இணைக்கும் சாலை ஒன்றை கட்டி முடித்தது. இந்தச் சாலை இப்போது ராணுவ பயன்பாட்டிற்கு திறந்து விடப்படுகிறது. இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் தளவாடங்கள் இந்த வழியாக மலைப்பாதையை ஒட்டிய எல்லைப் பகுதியை மிக எளிதாகச் சென்றடைய முடியும்.
இதுவும், அரசியல் சட்டப் பிரிவு 370அய் ரத்து செய்து லடாக்கை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததும் சீனாவிற்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியது. தனது மேற்கு எல்லைப் பகுதியில் இந்தியாவின் மேலதிகமான நடவடிக்கைகளை சீனா மிகவும் கூருணர்வுடன் பார்க்கிறது என்று எம்.டெய்லர் ப்ரேவெல் பாதுகாப்பு ஆய்வுகள் திட்ட இயக்குனர் கூறுகிறார்.
எனவேதான் சீனா, 1962ல் எந்தக் காரணங்களுக்காக போர் தொடுத்ததோ, அதை நோக்கி மீண்டும் நகர்கிறது. ஜின்ஜியாங் மற்றும் திபெத் ஆகியவற்றை இணைக்கும் சாலை சீனாவிற்கு மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள பொருளாதார மற்றும் ராணுவத் திறன் வேறுபாடுகளை கணக்கில் கொண்டு பார்க்கும்போது, இந்திய அரசு ராஜதந்திரத்தை நம்பியிருப்பதும் சில விட்டுக் கொடுத்தல் மூலமாகவோ அல்லது இல்லாமலோ இந்த நெருக்கடியை தீர்க்க நினைப்பதை குறை காண முடியாது. ஆனால் எந்த ஊடுருவலும் நடக்கவில்லை, எந்த பிரதேசத்தையும் இழக்கவில்லை, இந்தியாவின் பலமான அரசியல் தலைமை, ராணுவ வலிமை ஆகியவற்றால் சீனா பலவந்தமாக பின்வாங்க வைக்கப்பட்டிருக்கிறது. என்கிற பொய்யான கதையாடல் கட்டமைக்கப்படுகிறது. 'டோக்லம் வெற்றி' இதுபோன்ற கதையாடலுக்கு மிகச் சிறந்த உதாரணம்.
இப்போது நடக்கும் ராணுவ அளவிலான பேச்சுவார்த்தை முடிவுகள் முறைமையான ஒப் பந்தமாக மாற்றப்பட வேண்டும். திருத்திய மைக்கப்பட்டுள்ள உண்மையான எல்லைக் கட்டுப் பாட்டுக் கோடு வரையறுக்கப்பட வேண்டும்.
அரசாங்கம் எதிர்கட்சிகள் மற்றும் ஊடகங்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். பொது மக்களுக்கு பிரச்சனையை விளக்க வேண்டும்.
இந்திய சீன எல்லை தாக்குதலை தொடர்ந்து அதற்கு எதிர் வினையாக சீனப் பொருட்களுக்கும், சீன முதலீடுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று பாஜகவும், சங் பரிவார் கூட்டமும், அதை ஊதிப் பெரிதாக்கி காணொளி ஊடகங்கள் பரப்புரை செய்வதும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்தியா முழுவதும் இதற்கு பெரிய ஆதரவு இருப்பது போன்றதொரு மாயத் தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது. மோடி அரசின் நிதி ஆயோக் முன்னாள் உதவி தலைவரும், தற்போது கொலம்பிய பல்கலைக் கழக பொருளாதாரத் துறையின் சர்வதேச வர்த்தகக் கொள்கை சிறப்புப் பிரிவு பேராசிரியருமான திரு.அரவிந்த் பானகரியா தி வயர் வலையதள இதழுக்கு அளித்த பேட்டியில் சீனாவின் வர்த்தகம் பற்றி விளக்கும்போது, சீனா அவர்களுடைய மொத்த ஏற்றுமதியில் வெறும் 3% அளவுக்குத்தான் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது, ஆனால் இந்தியாவின் மொத்த இறக்குமதியில் அது 15% ஆகும் என்றார். இந்திய பொருளாதாரத்தின் சிக்கலான இந்தக் காலக் கட்டத்தில் சீனாவுடன் வர்த்தகப் போர் என்று பேசுபவர்கள், இறுதியில் இந்தியாவின் வளர்ச்சி பல வருடங்களுக்கு பின்னோக்கி சென்று விடும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். கோவிட் 19 காரணமாக ஏற்பட்டுள்ள அதிர்ச்சியும் ஊரடங்கும் முன் எப்போதும் கண்டிராதவை, நாம் சீனாவுடன் நீண்ட காலம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும், ஏனென்றால் வர்த்தகப் போர் இந்தியாவுக்குத் தீங்கு பயக்கக் கூடியது, சீனாவிடமிருந்து வரும் அச்சுறுத்தலை நாம் தொடர்ந்து நீண்ட காலம் கையாள வேண்டியிருக்கிறது, ஏனென்றால், நாம் அதனுடன் நீண்ட பொது எல்லையைக் கொண்டிருக்கிறோம் என்றார்.
பிசினஸ் ஸ்டண்ட்டேட் பொருளாதார பத்திரிகையின் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான டி.என்.நினன், சீனாவைத் தாக்க வேண்டும் என்றால், சரியாக குறி வையுங்கள், நீங்களே உங்களுடைய பாதங்களைச் சுட்டுக் கொள்ளாதீர்கள் என்கிறார். இடுப்பிலிருந்து சுட்டுக் கொள்ளும் நம் தேச பக்தர்களுக்கு சிந்திக்க ஒரு கேள்வி, ஒரு வருடத்திற்கு சீனா செய்யும் ஏற்றுமதி சுமார் 2.5 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள். இந்தியா இதில் வெறும் 3% அளவுக்கே இறக்குமதி செய்கிறது. சீனா 3 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களை அந்நிய செலாவணி கையிருப்பாக வைத்திருக்கிறது. இது மிகப் பெரிய வர்த்தக உபரித் தொகை. எனவே நாம் யாரை காயப்படுத்தப் போகி றோம்? தொலைபேசி, கைப் பேசி கருவிகளை விற்கும் சில வர்த்தகர்களை மட்டும, சீனா வையோ, ஷிஜின்பிங்கையோ அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.
சீனா 22,117 கி.மீ நீளமுள்ள உலகத்திலேயே மிக நீண்ட ஒட்டு மொத்த நிலப்பரப்பு எல்லையைக் கொண்டுள்ளது. ரஷ்யாவுக்கு அடுத்த படியாக, 14 நாடுகளுடன் அதன் எல்லை உள்ளது. கிழக்கு ஆசியா முழுமையிலும், தென் கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, மத்திய ஆசியா, வடகிழக்கு ஆசியா, ரஷ்யா என அதன் எல்லை நீள்கின்றது. சீனாவிற்கு இந்தியா தவிர வேறு எந்த நாடுகளுடனும் பெரிய அளவில் எந்த எல்லைப் பிரச்சனையும் இல்லை.
இந்தியாவின் நிலப்பரப்பு எல்லை நாடுகளாக, பாகிஸ்தான், வங்காள தேசம், மியான் மர், நேபாளம், பூடான் மற்றும் சீனா ஆகியவை உள்ளன. கடல்சார் எல்லைகளாக ஸ்ரீலங்கா மற்றும் மாலத் தீவுகள் உள்ளன.
இந்தியா தனது அண்டை நாடுகள் அனைத்திலும் ஏதோ ஒரு வகையில் பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றது. பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனையான காஷ்மீர் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக தீராத பிரச்சனையாக 4 போர்களுக்குப் பின்னும் தொடர்கின்றது.
வங்காள தேசத்துடன் ப்ராக்கா நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனை ஏற்கனவே இருந்து வருகின்றது சமீபத்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவை வங்க தேசத்தில் இந்து மற்றும் இதர சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதாக ஒரு தோற்றத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்திய துள்ளதுடன் அமித் ஷா வங்காள தேசத்தை செல்லரிக்கும் கரையான் என்று வர்ணித்த அரசியல் சொல்லாடல் ஆகியவை அந்த நாட்டு அரசு மற்றும் மக்களைப் பெருமளவில் காயப்படுத்தி இருக்கிறது.
டாக்காவில் இருக்கும் இந்திய தூதர் கடந்த நான்கு மாதங்களாக வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்திக்க முயற்சித்து நேரம் ஒதுக்கக் கோரியதாகவும் அது இன்று வரை வழங்கப்படவில்லை என்றும் அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய ஸ்ரீலங்கா உறவுகள் எப்போதுமே சீராக இருந்ததில்லை. இந்தியாவின் நிலைபாடு சிங்கள பேரினவாத அரசுக்கும் ஈழத் தமிழர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கும் இடையே ஊசலாட்டமாகவே இருந்து வந்தது. ஈழப் போரின் இறுதி கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டபோது வாய்மூடி மௌனம் காத்தது. ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றத்தின் காரணமாக இந்தியாவுடனான நட்புறவிலும் சமீப காலங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 3 பிரிவுகளாக மாற்றி, சட்ட சபையை கலைத்து மாநில அரசு அந்தஸ்திலிருந்து மத்திய யூனியன் பிரதேசமாகக் குறைத்து உச்சகட்டமாக காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் யாவும் ரத்து செய்து எடுத்த நடவடிக்கைகள் அய்ரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன. பாகிஸ்தானுக்கு இது கூடுதலாக ஒரு பெரிய பரப்புரை ஆயுதமாக மாறியிருக்கிறது.
நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டபோது, இந்தியா தலையிட்ட தும் கடந்த நவம்பர் மாதம் மேம்படுத்தப்பட்டு சரிசெய்யப்பட்ட அரசியல் வரைபடம் வெளி யிட்டதும், தலைமுறை தத்துவமாகவும் பண் பாட்டுரீதியாகவும் உறவு கொண்டுள்ள நேபா ளம் நம்மோடு விரோதம் பாராட்டும் அளவுக்கு சென்றுவிட்டது. அதன் எதிர்வினையாக, காலாபாணி உளிட்ட இந்தியப் பகுதிகளை அரசியல் சாசனத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றி நேபாள வரை படத்தை வெளியிட்டுள்ளது. இது மேலும் சரி செய்ய முடியாத அளவுக்கு நிலைமையைச் சிக்கலாக்கியுள்ளது. பூடானும், மாலத் தீவுகளும் மிகச் சிறிய நாடுகள். பாதுகாப்பு மற்றும் பொரு ளாதார நலன்களுக்கு அவை முழுமையாக இந்தியாவை நம்பியே உள்ளன.
இந்தியாவின் நீண்டகால நட்பு நாடான ஈரானுடனும் (நீட்டிக்கப்பட்ட அண்டை நாடு என்று அழைக்கப்படுகின்ற) நமது உறவுகள் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. அமெ ரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையேயான அணுஆயுதம் குறித்த பிரச்சனையால் ஏற்பட்ட பொருளாதாரத் தடையால், ஈரானின் எண்ணெய் உற்பத்தி ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டது. மோடி அரசு அமெரிக்காவின் தடையை ஏற்று இறக்குமதியை 23.9 மில்லியன் டன்னிலிருந்து 1.7 மில்லியன் டன்னாக கடந்த ஆண்டு குறைத்துவிட்டது. 2003ல் ஈரான் அதிபர் முகம்மது கதாபிக்கும் வாஜ்பாயிக்கும் இடையே ஏற்பட்ட சாபார் துறைமுகத்திலிருந்து ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி யுள்ள சாகேதான் வரையிலான ரயில்வே இருப்புப்பாதை அமைக்கும் ஒப்பந்தம் 17 ஆண்டு கால தாமதத்திற்கு பிறகு அமெரிக்காவின் நிர்ப்பந்ததிற்கு அடிபணிந்து இந்தியா கைவிட்டுவிட்டது. 400 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுடன் இந்த திட்டத்தை இப்போது நிறைவேற்ற ஈரான் சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியா அமெரிக்காவிற்கு அடிபணிந்து தன்னுடைய நீண்டகால நட்பு நாட்டை இழந்துவிட்டது.
நாடுகளுக்கிடையேயான உறவுகள் தனி நபர்கள் சார்ந்தது அல்ல. மாறாக, அந்தந்த நாட்டின் அயல்உறவுக் கொள்கைகள் மற்றும் பொருளாதார நலன்கள் சார்ந்தது ஆகும். மோடி அதை மேலதிகமாக இரு தனி நபர் களுக்கிடையேயான உறவாக மாற்றியதன் விளைவை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் ஊடகங்களின் உதவியுடன் உலக அரங்கில் தன்னைப் பலம் வாய்ந்த தலைவர் என்று காட்டிக் கொள்ள உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அவர் நடத்திய பிரம்மாண்ட மான நிகழ்ச்சிகள் முட்டாள்தனமானவை என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. எந்த உருப்படியான நிகழ்ச்சிநிரலோ, பரஸ்பர நலன் சார்ந்த பேச்சு வார்த்தைகளோ நடைபெறாமல் வெற்று ஆரவாரமாக சீன அதிபருடன் மகாபலிபுரத்தில் நடந்த கூத்துகளும், அகமதாபாத்தில் ஒரு லட்சம் பேரைத் திரட்டி (கொரானா அச்சம் சூழ்ந்த பிப்ரவரி மாத இறுதியில்) டிரம்புக்கு அளிக்கப்பட்ட ஆரவாரமான வரவேற்பும் நிதர்சனமான சாட்சிகள். இதை ஊடகங்கள் 'கட்டித் தழுவல் ராஜதந்திரம்' என்று வர்ணித்தன. அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில், ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் டிரம்ப்பை ஆதரித்து அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் செய்து உங்களுக்காக மீண்டும் டிரம்ப் ஆட்சி என்று சொன்னது, கேலிகூத்தின் உச்சம். அமெரிக்க உள்நாட்டு அரசியலில் தேவையற்ற தலையீடு. இதுவரை எந்த நாட்டு அதிபர்களும் செய்யாத முதிர்ச்சியற்ற செயல்.
அண்டை நாடுகளுடனான உறவுகளை சரி செய்வதும், பரஸ்பரம் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் எடுப்பதும் அவசரமான, அவசியமான தேவையாகும். பாகிஸ்தானுடன் நட்புனர்வை புதுப்பிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். பயங்கரவாதம் முடிவுக்கு வரும் வரை பேச்சுவார்த்தை கிடையாது என்கின்ற வறட்டுத்தனமான நிலைபாடு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். மற்ற அண்டை நாடுகளுடனான உறவுகளும் சீர் செய்யப்பட வேண்டும். இந்தியா தரப்பில் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு கூட்டமைப்பை மீண்டும் புதுப்பிப்பதற்கான முன்முயற்சி வேண்டும். இன்றைய பொருளா தார நெருக்கடி, பெருந்தொற்று ஏற்படுத்தி யிருக்கும் பேரழிவு ஆகியவற்றிலிருந்து மீண்டு பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளை துரிதப்படுத்த அமைதியான சூழல் அவசியமான தேவை. சீன இந்திய எல்லைத் தகராறு பிரச்சனைக்கு நிச்சயம் போர் தீர்வாக முடியாது. பேச்சுவார்த்தை மூலம் (படைக்குறைப்பு, படை விலக்கல்) தீர்வு காணப்படவேண்டும்.
சீன எல்லைத் தகராறு விசயத்தில் எதிர் கட்சிகளின் நிலைபாடு விமர்சனம் சார்ந்து இருந்தபோதும் போர் பதட்டம் தவிர்க்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தை, ராஜதந்திர வழி முறைகள், ஆகியவை மேற்கோள்ளப்பட்டு, சகஜ நிலை வேண்டும்.
இந்தியா, வள்ளுவர் வகுத்தளித்த காலம் என்னும் உரைகல்லில் சோதிக்கப்பட்ட கோட்பாட்டை வினைவலியும் தன் வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிச் செயல் என்கிற குறளை கவனத்தில் கொள்வது நாட்டிற்கு நன்மை பயக்கும்.