COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, August 4, 2020

ஆகஸ்ட் 15ல் அனைவரும் முழங்குவோம்
சுதந்திரம் வேண்டும்! நீதி வேண்டும்!
ஜனநாயகம் வேண்டும்!

எஸ்.குமாரசாமி

நமது அன்பிற்குரிய தாய்நாடு, வெள்ளையரிடம் இருந்து சுதந்திரம் பெற்று இந்த ஆகஸ்ட் 15 2020ல் 73 ஆண்டுகள் முடிந்து விட்டன. நாடு கொரோனாவிடம் இருந்தும் கார்ப்பரேட் கொள்ளையரிடம் இருந்தும் சுதந்திரம் அடையவில்லை.
நகரங்களில் கிராமங்களில் வயல்வெளிகளில் சேவை தொழில்களில் பணிபுரியும் கோடிக்கணக்கான மக்களுக்கு மூச்சு முட்டுகிறது. 14 கோடி பேர் செய்து வந்த வேலையை இழந்து விட்டனர். 40 கோடி பேருக்கு வருமானத்துக்கு வழியேதும் அமையவில்லை.
இந்தப் பேரிடர் பெருந்தொற்று காலத்திலும் தேசத்தின் செல்வங்கள் கூவி விற்கப்படுகின்றன. நாட்டு மக்கள் நசுக்கப்படுகிறார்கள். நாடும் நாட்டு மக்களும் சுதந்திரம் வேண்டும் என்கிறார்கள்.
விரட்டி வதைக்கிற நீண்டகால பாதிப்புகள் விளைவிக்கக் கூடிய உயிர்ப்பலி வாங்குகிற கொரோனாவோடு சேர்ந்து வாழப் பழக மக்கள் விரும்பவில்லை; அதிலிருந்து விடுதலை பெறுவதையே விரும்புகிறார்கள்.
சமூக பொருளாதார அரசியல் நீதி, சமத்துவம், சகோதரத்துவம், அச்சத்தில் இருந்து ஆதிக்கத்தில் இருந்து விடுதலை ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான சுதந்திரமே மக்களின் விருப்பமும் தேவையும் ஆகும்.

கொரோனா உலகையே புரட்டிப் போட்டுள்ளது
1980களில் உலகம் ரீகன், மார்க்ரெட் தாட்சர் தலைமையிலான கடும்போக்கு முதலாளித் துவத்தை சந்திக்கத் துவங்கியது. அய்க்கிய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், 'அரசாங்கம் தீர்வல்ல, அரசாங்கமே பிரச்சனை' என்றார். மூலதனத்துக்கு அதனை கொழுக்க வைக்கும் சந்தைக்கு எந்த அரசுக் கட்டுப்பாடும் கூடாது, நல அரசு மக்களுக்கான சலுகைகள், மானியங்கள் ஒழிய வேண்டும் என்பதே அவர்களது முன்வைப்புகள்.
தீவிர பொருளாதார நெருக்கடி, சோசலிச சவால் என்ற பின்னணியில் கீய்னிசிய, அதாவது, பொதுச் செலவு அரசு தலையீடு மக்கள் நுகர்வை அதிகரிப்பது, வேலை வாய்ப்பை நல நடவடிக்கைகளை பெருக்குவது என்ற பொருளாதார மாதிரிக்கு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதலாளித்துவ உலகம் சென்றது. சோசலிச முகாமின் சரிவுக்குப் பின், மில்டன் ஃப்ரீட்மன் வழிநடத்திய சிகாகோ பள்ளியின் கடும்போக்கு முதலாளித்துவ கொள்கைகள் அரியணையில் அமர்ந்தன. வன்முறையால் ஆட்சி மாற்றம், வரம்பற்ற அடக்குமுறை சர்வாதிகாரம், அனைத்து வளங்களையும் கொள்ளையடிப்பது, நல அரசு முகமூடியை வீசி எறிவது ஆகியவை நடந்தேறின. இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு ஏகாதிபத்திய உலகம் தீவிரவாத எதிர்ப்புப் போர் என்று தானே பெயர் வைத்த ஒரு போரை துவக்கியது. வேட்டைக்கார முதலாளித்துவம், பேரிடர் முதலாளித்துவம், கார்ப்பரேட்டுகள் - அதிகாரத்துவம் - அரசியல்வாதிகள் இணைந்த ராணுவ அச்சு பலப்பட்டது. வளர்ச்சி முழக்கங்கள் முன்வைக்கப்பட்டு, கார்ப்பரேட் மற்றும் ராணுவ அச்சின் வளர்ச்சியும் மக்கள் வாழ்க்கை தரம் மற்றும் உரிமைகளின் வீழ்ச்சியும் உறுதி செய்யப்பட்டன.
இருபதாம் நூற்றாண்டு சோசலிசம் தோற்றுவிட்டது, முதலாளித்துவம் வென்றுவிட்டது, வரலாறும் வர்க்கப் போராட்டமும் முடிந்து விட்டன என்று கூக்குரலிட்டவர்கள் இருபத்தி யோராம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே மிகப்பெரிய முதலாளித்துவ நெருக்கடியை சந்தித்தனர். விஞ்ஞான தொழில்நுட்ப புரட்சி எல்லாம் தாண்டி முதலாளித்துவ உலகின் வளர்ச்சி, தேங்கி நின்றது. இந்த நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டு 2020ல் முடியும் போது, முதலாளித்துவ உலகம் கொரோனாவால் புரட்டிப் போடப்பட்டிருக்கும்.
முதலாளித்துவத்தின் சக்ரவர்த்திகள், அம்மணத்தை புதிய அலங்கார ஆடையாக அணிந்துள்ளனர். ட்ரம்ப் தலைமை தாங்கும் அய்க்கிய அமெரிக்கா 1,71,89,754 என்ற எண்ணிக்கையுடனும் பொல்சனரோ தலைமையிலான பிரேசில் 45,68,037 என்ற எண்ணிக்கையுடனும் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா 15,84,384 என்ற எண்ணிக்கையுடனும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
தீவிர வலதுசாரி, தேசியம் பேசும், மக்களை/சமூகத்தை பிளவுபடுத்தும், மனித உரிமைகளை மிதிக்கும் கார்ப்பரேட் ஆதரவு கட்சிகள், விளிம்புநிலை எதிர்க்கட்சி நிலை என்பவற்றை எல்லாம் தாண்டி இருபத்தியோராம் நூற்றாண்டு துவங்கிய பிறகு தேர்தல் மூலம் ஆட்சிகளையே பிடித்துவிட்டார்கள். ட்ரம்ப், பொல்சனரோ, மோடி, ஓர்பன், எர்டோகன் என இவர்களை பட்டியிலிட முடியும்.
பெருந்தொற்றுக்கு ஈடுகொடுக்க வளர்ந்த நாடுகளும் அவர்களது பொது சுகாதார கட்டமைப்பும் அரசு நிறுவனங்களும் வக்கற்றுப் போயுள்ளன என்பதை கொரோனா வெளிச்சம் போட்டு காட்டியது. முதலாளித்துவ உலகின் முதன்மையான நாடு அய்க்கிய அமெரிக்கா. அதன் அதிபர், டொனால்ட் ட்ரம்ப். முதலாளித்துவ சமூகத்தின் அழுகலை, இழிவை டொனால்ட் ட்ரம்ப்பின் கொரோனா கால நடவடிக்கைகள் வெளிப்படுத்தும்.
தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பல அறிவியல் அறிவுசார் துறைகளில் முதன்மை நிலையில் உள்ள அய்க்கிய அமெரிக்காவின் அதிபர், மாதக் கணக்கில் முகக்கவசம் அணிய மறுத்தவர். கொரோனா ஒரு சதி என்று பேசிய வர். தமது நினைவாற்றல் அறிவு ஆகியவற்றுக்கு சான்றாக, 1. நபர் (பெர்சன்), 2. பெண், 3. ஆண், 4. நிழல்பட கருவி (காமிரா), 5. தொலைக்காட்சி என திரும்பத்திரும்ப எந்த குறிப்பையும் பார்க்காமல் ஊடகத்தினர் முன் அய்ந்து விசயங்களை தான் சரியாக சொல்லி விட்டதாகவும், அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஜனநாயக கட்சியின் ஜோ பிடனால் இவ்வாறு சரியாக சொல்ல முடியுமா என்று அறிவார்ந்த சவால் விட்டுள்ளவர் ட்ரம்ப்.
ட்ரம்ப் பற்றி, முதலாளித்துவத்தின் நிலை பற்றி வருத்தமும் சோர்வும் அக்கம்பக்கமாக, நம்பிக்கையும் வெளிப்படுத்துகிற பிரான்சிஸ் ஃபுகியாமா சொல்லியுள்ள விசயங்கள் கவனிக்கத்தக்கவை ஆகும்.
'அய்க்கிய அமெரிக்கா பிரம்மாண்டமான அரசு ஆற்றலும் தொற்றுகளை கையாண்ட கள அனுபவமும் உள்ள நாடு. ஆனால், தற்போது அங்குள்ள பிளவுண்ட நிலையும் திறனற்ற அதிபரும் அந்த நாடு கொரோனாவை திறமையாக எதிர்கொள்ள விடாமல் தடுத்து விட்டனர். அதன் அதிபர் நாட்டை, சமூகத்தை அய்க்கியப்படுத்தாமல் பிளவுபடுத்துகிறார்'.
'அவர், தாம் தலைமை தாங்கும் அரசுடன், அதன் நிறுவனங்களுடன் தாம் பதவியேற்ற நாளில் இருந்து போரிட்டு வருகிறார். அவரால் அந்த அரசை கொரோனா கால சூழல் கோரியதற்கு ஏற்ப செயல்பட வைக்க முடியவில்லை. அவர், தமக்கு அரசியல் ஆதாயம், மோதல் மற்றும் வெறுப்பை பரப்புவதில்தான் உள்ளதே தவிர தேச ஒற்றுமையில் அல்ல என்று உணர்ந்து, இந்த நெருக்கடியிலும் நாட்டிற்குள் சண்டைகளை துவக்குகிறார்; சமூகப் பிளவுகளை தீவிரப்படுத்துகிறார்'.
ஃபுகியாமா புதிய உலகு பற்றியும் பேசுகிறார்.
'அய்ரோப்பாவின் இதயப் பகுதி உட்பட எங்கும் மக்களின் தடையில்லா நகர்வுக்கு தடுப்புச் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. நாடுகள் பொது நன்மைக்காக ஆக்கபூர்வமாக ஒத்துழைப்பதற்குப் பதிலாக, தமக்குள் சுருங்கி, ஒன்றோடு ஒன்று பிணக்கு கொண்டு, தமது போட்டியாளர்களை, தமது தோல்விகளுக்கு பலிக்கடாக்கள் ஆக்குகின்றனர். இடம்பெயர்ந்து புகலிடம் தேடுவது, உடனடி எதிர்காலத்தில் சாத்தியமே இல்லை'.
'பெருந்தொற்று, வளரும் நாடுகளின் மக்களை பிழைத்திருத்தலின் விளிம்பு நிலைக்கு தள்ளிவிடும். கடந்த இருபது ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் அனுபவித்த கோடிக்கணக்கானவர்களின் நம்பிக்கையை நெருக்கடி நொறுக்கிவிட்டது. குடிமக்களின் அதிகரித்த எதிர்ப்பார்ப்புகள் சிதைந்து போன தும், மக்களது சீற்றமும் புரட்சிக்கான பாதை வகுப்பவை ஆகும்'.
கொரோனாவுக்கு பிந்தைய உலகில்,
    அய்க்கிய அமெரிக்காவின் செல்வாக் கும் தலைமை நிலையும் மேலும் சரியும்.
    சீனத்தின் வளர்ச்சி, அதனை கட்டுப்படுத்தும் முயற்சிகளை எதிர்கொண்டாக வேண்டும்.
    மக்கள் கைகளில் செலவழிக்க பணம் இருப்பதை உறுதி செய்யாத எந்த நாட்டின் பொருளாதாரமும் செழிக்காது.
    தேச அரசுகள், தேச சந்தைகள், தேசப் பொருளாதாரம் ஆகியவையே முன்னே வரும். மூலதனம் மற்றும் கூலியுழைப்பின் தடையற்ற நகர்வு கொண்ட உலகமயம் (உற்பத்தி மற்றும் நுகர்வின் உலகளாவிய தன்மைக்கு உட்பட்டு) பின்னுக்குச் செல்லும்.
    கண்காணிப்பு அரசு, பாதுகாப்பு (செக்யூரிடி) அரசு முன்னே வருவதும் மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள் அரித்துப் போவதும் நடக்கும்.
பெருந்தொற்றுக்கு அஞ்சாமல், ராணுவம் ஏவப்படும் என்ற ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு அஞ்சாமல், ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலைக்குப் பிறகு, அய்க்கிய அமெரிக்கா நெடுக போராட்டங்களில் மக்கள் அணிதிரண்டது, உலக மக்களுக்கு நம்பிக்கை தருவதாக அமைந்தது. அய்க்கிய அமெரிக்கா இந்தோ பசிபிக் பகுதிக்கு 3,75,000 போர் வீரர்களையும் பெரும்எண்ணிக்கையில் போர்க் கப்பல்களையும் விமானங்களையும் அனுப்பி கொரோனா காலத்தில் போர்ப் பதட்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்போது, சின்னஞ்சிறிய கியூபா, பெருந்தொற்று தடுப்பு பணிகளுக்காக 34 நாடுகளுக்கு மருத்துவர்களை அனுப்பியுள்ளது புதுவகை உலக மயத்தின் தேவையை முன்னிறுத்தியுள்ளது.
வரலாற்றின் குறுக்குச்சாலையில் மக்கள் சமூகத்துக்கு இடது திசையில் திரும்பவும் வலது திசையில் திரும்பவும் வாய்ப்புண்டு.
மார்க்சிய அறிஞர் எல்லன் மெய்க்சின்ஸ் வுட் முதலாளித்துவ சமூகத்தின் ஆற்றலுக்கும் யதார்த்தத்துக்கும் உள்ள முரண்பாடு பற்றி பேசுகிறார். பிரம்மாண்டமான உற்பத்தி சக்திகள் இருந்தபோதும், தனிச்சொத்து ஆள்வதால், மக்கள் தேவைக்காக அல்லாமல் லாபத்துக்காக உற்பத்தி நடப்பதால், லாபத்தை அதிகரிக்க கூலி குறைக்கப்படுவதால், சமூகத்தின் ஆற்றலுக்கேற்ப மக்களின் வாழ்க்கை யதார்த்தத்தில் முன்னேறுவதில்லை.
முதலாளித்துவத்தின் உள்உறையும் ஆற்றல் அறிய, 50 லட்சம் மக்கள் தொகை மட்டுமே உள்ள நியுசிலாந்தின் உதாரணம் உதவும். அதன் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் சோசலிஸ்டோ கம்யூனிஸ்டோ அல்ல. அந்த நாட்டில் இரண்டு ஆண்டுகளில் 90,000 புதிய வேலை வாய்ப்புகள் உள்ளன. 14 கோடி மரங்கள் நடப்பட்டன. 5 லட்சம் மக்களை மருத்துவர் கள் சென்று சந்தித்தனர். புதிதாக 2000 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். குறைந்தபட்ச சம்பளம் ஒரு மணி நேரத்துக்கு 17 நியுசிலாந்து டாலர் (ரூ.750) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1 லட்சம் புதிய பள்ளி மாணவர்களுக்கு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தானியங்கி, அரை தானியங்கி துப்பாக்கிகள் தடை செய்யப்பட்டுள்ளன. சிறையில் இருப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது. புகலிடம் தேடுவோர் கூடுதல் எண்ணிக்கையில் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவையெல்லாம் முதலாளித்துவ வரம்புகளுக்குள்ளேயே சாத்தியமென்றால், ரஷ்ய, சீன சோசலிசத்தைக் காட்டிலும் மேலான தொழில் நுட்பம் கொண்ட, ஜனநாயகம் கொண்ட இருபத்தியோராம் நூற்றாண்டு சோசலிசம் எவ்வளவு மகத்தானதாக இருக்கும்!
கொரோனாவும் இந்தியாவும்
கொரோனாவை அடுத்து, இந்தியாவில் மார்ச் இறுதியில்தான் பொருளாதாரம் பொது முடக்கத்துக்கு ஆளானது. ஆனால், அதற்கு முன்பே, இந்திய பொருளாதாரம் மோடி ஆட்சியில் தத்தளித்து தடுமாறிக் கொண்டிருந்தது.
இந்திய அரசாங்கத்தின் திட்ட அமலாக்கத் துறை சில விவரங்களை தந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 2015 - 2016ல் 8%. 2016 - 2017ல் 8.3%. 2017 - 2018ல் 7%. 2018 - 2019ல் 6.1%. 2019 - 2020ல் 4.2%. தனிநபர் நுகர்வு செலவு வளர்ச்சி விகிதம் 2015 - 2016ல் 8%. 2018 - 2019ல் 7.2%. 2019 - 2020ல் 5.6%. (ஒருவேளை மக்கள் குறைவாக செலவழித்து நிறைய சேமித்துவிட்டனரோ?). வங்கி டெபாசிட் வளர்ச்சி விகிதம் 2018 - 2019ல் 10% என இருந்தது, 2019 - 2020ல் 7.9% ஆனது. வங்கிக் கடன் வளர்ச்சி விகிதம் 2018 - 2019ல் 13.3% என இருந்தது, 2019 - 2020ல் 6% ஆனது. ஒட்டுமொத்த மூலதன உருவாக்க வளர்ச்சி விகிதம் 2018 - 2019ல் 9.8% என இருந்தது, 2019 - 2020ல் -2.8% ஆனது. 2019 - 2020ன் முதல் காலாண்டில் அது 4.6% என்றும் இரண்டாம் காலாண்டில் -3.9% என்றும் மூன்றாம் காலாண்டில் -5.2% என்றும் நான்காம் காலாண்டில் -6.5% என்றும் ஆனது.
விவசாயமல்லாத துறைகளில் வளர்ச்சி விகிதம் எனக் காணும்போது, உற்பத்தி துறையில் 2018 - 2019ல் 5.7% இருந்தது, 2019 - 2020ல் 0.03% ஆனது. மின்சாரம், தண்ணீர், பிற சேவைகளில் 2018 - 2019ல் 8.2% இருந்தது 2019 - 2020ல் 4.1% ஆனது. கட்டுமானத்தில் 2018 - 2019ல் 6.1% இருந்தது 2019 - 2020ல் 1.3% ஆனது. சுற்றுலா விருந்தோம்பல் துறையில் 2018 - 2019ல் 7.7% இருந்தது 2019 - 2020ல் 3.6% ஆனது. நிதி, உள்கட்டுமானம், வீடு மனை வணிகத்தில் 2018 - 2019ல் 6.8% இருந்தது 2019 - 2020ல் 4.1% ஆனது.
2019 - 2020 கணக்காண்டு 2020 மார்ச் 31ல் முடிவுக்கு வந்தது. 2020 - 2021 கணக்காண்டு ஏப்ரல் 1 2020ல் துவங்கியபோதே, இந்திய பொருளாதாரம் கொரோனா பொது முடக்கம் வருவதற்கு முன்பாகவே, குப்புற விழுந்திருந்தது.
நாடு துயரத்தின் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, கரை கண்ணுக்குத் தெரியாதபோது, மோடியும் நிர்மலாவும் பாருங்கள், பொருளாதாரத்தில் பசுமை துளிர்கள் தெரிகின்றன, 2020அய் மோசமான ஆண்டாக கருதாமல், கொரோனாவை வாய்ப்பாக்கி, இந்த ஆண்டை மகத்தான ஆண்டாக்குங்கள் என்கிறார்கள். ஜ÷லை முடிந்துவிட்டது. ரிலையன்சின் ஜியோ மார்ட்டும் பணமதிப்பகற்ற நடவடிக்கைக்குப் பிறகு எழுச்சி பெற்ற நிதி தொழில்நுட்ப நிறுவனங்களும் மட்டுமே தப்பித்து நிற்கின்றன. கைகொடுத்து காப்பாற்றி யுள்ளது விவசாயம் மட்டுமே. நல்ல விளைச்சல் வந்ததால், அரசு கிட்டங்கிகளில் தானியம் போதுமான அளவுக்கு இருந்ததால், குறைந்தபட்ச உணவுப் பாதுகாப்பு மூலம் மிகப்பெரிய பஞ்சம், பட்டினிச் சாவுகள் வராமல் பார்த்துக் கொள்ள முடிகிறது.
இப்போது அந்த விவசாயத்தின் மீது கார்ப்பரேட் பிடியை இறுக்க, இரக்கமற்ற சந்தையின் ஏற்றஇறக்கங்களுக்கு அதனை உட்படுத்த, அரசு தலையீட்டின் மூலமான அதற்கான பாதுகாப்பை அகற்ற, மாநில உரிமைகளை எல்லாம் காலில் மிதித்து மத்திய அரசு அவசர சட்டங்கள் போட்டுள்ளது. காங்கிரஸ் அவசர நிலை கொண்டு வந்தது, காங்கிரஸ் ஜனநாயகத்தை மதிக்கவில்லை என்று சொன்ன பாஜக, நாடாளுமன்றத்தை கூட்டாமல், எந்த மட்டத்திலும் எந்த கலந்தாலோசிப்பும் இல்லாமல், அவசர சட்ட ஆட்சி நடத்துகிறது. விளைநிலங்கள், வனங்களுக்கு ஆபத்து வரும் வகையில் சூழல் மீதான தாக்கம் பற்றிய ஆய்வு, மக்களிடம் கருத்து கேட்பு என்ற சட்டப்படியான பாதுகாப்புகளை அழித்திட முயற்சி செய்கிறது. (சூழல் அமைப்பு ஒன்று வரைவுத் திட்டம் தொடர்பான கருத்துகளை மின்னஞ்சல் அனுப்ப கேட்டுக் கொண்டதால் அந்த நடவடிக்கை பயங்கரவாத நடவடிக்கை எனக் குறிப்பிடப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அறிவிப்பு தரப்பட்டுள்ளது).
நிதி வழங்குதல், அதிகாரம் என்ற அடிப் படை விசயங்களை மாநில உரிமைகளை பாஜக அரசு சிறிதும் மதிப்பதில்லை. புதிய கல்விக் கொள்கை அறிவிப்பிலும் மாநிலங்களின் கருத்துகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. இந்தியை திணிக்கும், சமஸ்கிருதத்தை நுழைக்கும் முயற்சி தொடர்கிறது.
கொரோனாவை வாய்ப்பாக்கி 151 ரயில் தடங்கள், ராணுவ உற்பத்தி, விண்வெளி என கட்டற்ற தனியார்மயம் மூலம் 2020ஆம் ஆண்டை மோடி அம்பானி, அதானிக்கு அர்ப்பணித்துள்ளார்.
இடம்பெயர் தொழிலாளர்களில் இருந்து அகவிலைப்படி முடக்கப்பட்ட மத்திய அரசின் ஊழியர், ஓய்வூதியதாரர்கள் 1.16 கோடி பேர் வரை, நாடு முழுவதும் உள்ள சாமானியர்களும் சாதாரணர்களும் திக்குத் தெரியாத காட்டில் தள்ளப்பட்டுள்ளனர். மோசமான தொழிலாளர் சட்டத் திருத்தங்கள், போராடி பெற்றவற்றை எல்லாம் பறித்துவிட்டன.
ஆகஸ்ட் 5 2019ல், ஜம்மு காஷ்மீர் துண் ôடப்பட்டு அந்த மக்கள் மீது போர் தொடுக்கப்பட்டது. அந்த ஜனநாயகப் படுகொலையை கொண்டாட ஆகஸ்ட் 5, 2020 அன்று மதச்சார்பின்மையும் மசூதியும் தகர்க்கப்பட்ட அயோத்தியில் மீண்டும் ராமர் கோயில் கட்டுவது துவங்கும்.
சிறுபான்மையினரை மேலும் விளிம்பு நிலைக்கு தள்ளும் குடியுரிமை திருத்தச் சட் ம், கும்பல் படுகொலைகள், கொரோனா வயே இசுலாமிய போராக சித்தரிப்பது என இந்து ராஷ்டிராவின் பயணம் தொடர்கிறது.
நாடு முழுவதும் மாணவர்கள் மீது, கல்வி நிறுவனங்கள் மீது, அறிவாளிகள் மீது, கருத்துரிமை மீது தாக்குதல்கள் தொடர்கின்றன. இடஒதுக்கீட்டுக்கு, பெண்களுக்கு, தலித்துகளுக்கு, சிறுபான்மையினருக்கு மோடி ஆட்சியில் பாதுகாப்பில்லை.
தன்னை முன்னிறுத்தும், நாடுகளுக்கு இடையிலான உறவுக்கு மாறாக, தலைவர்களுக்கு இடையிலான உறவை முன்னிறுத்திய மோடியின் அயல்உறவு கொள்கை எந்தப் பயனையும் தரவில்லை. மோடிக்கு உரை எழுதித் தருபவர்கள், யாரொடும் பகை கொள்ளலன் என்றபின் போரொடுங்கும் புகழொடுங்காது என்ற கம்பனின் வரிகளை அவருக்கு கவனப்படுத்தினால் நல்லது. சீனத்தோடு பதட்டம், பாகிஸ்தானோடு பகை, நேபாளத்தோடு, வங்கதேசத்தோடு உரசல், மியான்மருக்குள் நுழைந்து துல்லிய தாக்குதல் என ஒரே நேரம் பக்கத்து நாடுகள் பலவற்றுடன் நல்லுறவுகளுக்கு ஊறு விளைவித்த பெருமை மோடி அரசுக்கு மட்டுமே உரித்தானது.
ஜனநாயக உரிமைகள், வாழ்வாதார உரி மைகள் பறிக்கப்பட்டு மக்கள் தவிக்கும்போது, உச்சநீதிமன்றம், அரசியல்சாசன அறத்தையோ, மக்கள் உரிமைகளையோ காக்கவில்லை என தொடர்ந்து விமர்சித்து வந்த மூத்த வழக்கறி ஞர் பிரசாந்த் பூசன் மீது உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது. முன்னுதாரணம் இல்லாத விதத்தில், ரூமா பால், விக்ரம்ஜித் சென், மதன் பி.லோகுர், செல்லமேஸ்வர், ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி, அப்தப் ஆலம், கோபால கவுடா என்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எட்டு பேர், இந்த வழக்கு விமர்சன சுதந்திரத்தை, கருத்துரிமையை பறிப்பது என சாடியுள்ளனர். பேரிடர் பெருந்தொற்று காலத்தில் ஜனநாயகத்துக்கு நேர்ந்துள்ள பேராபத்தை இந்த நிகழ்வும் வெளிப்படுத்துகிறது. கொரோனா பரவலை தடுப்பதில் அக்கறை செலுத்தாத மோடி அரசு, மத்தியபிரதேசத்தில் ஆட்சியை கவிழ்த்து ருசி கண்டு, இப்போது, ராஜஸ்தானில் அந்த முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது.
அய்ந்து கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு, பெண்களுக்கு ஜன்தன் கணக்கில் ரூ.500 தாண்டி கொரோனா கால சிறப்பு நிவாரணம் எதுவும் அறிவிக்க மோடி முன்வரவில்லை. இந்திய மக்கள் வறுமையின் விளிம்பில் வாழ பழகிக் கொண்டுள்ளனர், எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்று கருதுகிறார்கள் என்று நரேந்திர மோடி தப்புக்கணக்கு போட்டுள்ளார்.
மற்ற உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியா கொரோனாவை சிறப்பாகவே கையாண்டுள்ளதாக மோடி தம்பட்டம் அடிக்கிறார். மகாபாரதப் போர் 18 நாட்களில் முடிந் ததென்றும் 21 நாட்களில் கொரோனா எதிர்ப்புப் போர் முடியும் என்றும் சவடால் அடித்தவர் மோடி. 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் மக்கள் தொகையில் 10 லட்சம் பேரில் எத்தனை பேருக்கு தொற்று, எத்தனை பேர் மரணம் என்ற கணக்கு பட்டியலில், இந்தியா நூறாவது இடத்தை நெருங்கியுள்ளது. மக்கள் தொகை அடர்த்தியில் இந்தியாவை விட கூடுதலாக உள்ள நைஜீரியா, வங்கதேசம், இந்தோனேசியா, வியட்நாம் போன்ற நாடுகள் கொரோனா மரணத்தை தடுப்பதில் இந்யாவை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன. 9,60,00,000 மக்கள் தொகை உள்ள வியட்நாமில் 99 நாட்களுக்குப் பிறகு, இப்போதுதான் புதாக தொற்று வந்துள்ளது. 509 பேருக்கு தொற்று வந்த அந்த நாட்டில், ஒருவர் கூட கொரோனாவால் உயிரிழக்கவில்லை. (கட்டுரை எழுதிய தேதிக்குப் பிறகு 3 மரணங்கள்). கொரோனா உயிரிழப்பு பட்டியலில், அய்க்கிய அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்த அய்ந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது.
இந்திய மக்கள், கொடிது கொடிது, கொரோனாவை விட மோடி ஆட்சி கொடிது என்கிறார்கள்.
கொரோனாவும் தமிழ்நாடும்
அஇஅதிமுக கொரோனா காலத்திலும் தேர்தல் தயாரிப்புகளில் இறங்கியுள்ளது. செயல்படு கிற, செவிசாய்க்கிற சாமான்ய தலைவராக பழனிச்சாமியை நிறுத்துகிறது. ஜெயலலிதா, வாஜ்பாயியையே கலங்கடித்தவர். இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ், போயஸ் தோட்டத்துக்கு வந்து அவரோடு பேச வேண்டும் என்ற நிலையை உருவாக்கியவர். ஆனால், மத்திய அரசு கோலெடுத்தால் ஆடும் குரங்காகவே இப்போதைய அஇஅதிமுக அரசு இருக்கிறது. அஇஅதிமுகவுக்குள் நாடாளுமன்ற தேர்தல் அனுபவம் மற்றும் அதற்குப் பிந்தைய நடப்புகளால் பாஜகவோடு கூட்டு சேர்வது நல்லதல்ல என்ற எண்ணமும் உள்ளது. ஆனால், ஆட்சியில் நீடிக்க விரும்புவதாலும் பகுத்தறிவு பாரம்பரியத்தை விட ஜெயலலிதாவின் இந்துத்துவ ஆதரவே மேலோங்கிய நிலையில் உள்ளதாலும் அஇஅதிமுக பாஜகவோடு சேர்ந்துகொண்டு பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவை நாடுவது என்பதையே செய்கிறது. அப்பட்டமான ஆபாச வசவுகளை, ஆணா திக்க வக்கிரங்களை, தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷ் கதிதான் வரும் என்ற கொலை மிரட்டல்களை சங்பரிவார் சமூக ஊடகங்களில் வெளியிடும்போது கண்டுகொள்ளாத அஇஅதிமுக அரசு, காவிக் கூட்டத்தை திருப்திப்படுத்த கருத்து சுதந்திரத்தை மிதித்து, குண்டர் சட்டத்தை ஏவவும் தயாராக உள்ளது. சாத்தான் குளம் காவல்நிலைய கொலைக்கு துணிச்சல் தந்தவர்கள், காவி ரவுடிகள் முன்பு பவ்யமாக நடந்துகொள்கின்றனர்.
பழனிச்சாமியால் தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதியோ, அதிகாரங்களோ பெற்றுத்தர முடியவில்லை. கூட்டுறவு வங்கிகளால் கடன் தர முடியவில்லை. ஊராட்சிகளின் செயல்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன. மாநிலம் நெடுக இந்த பெருந்தொற்று காலத்திலும் குழந்தைகள், பெண்கள், தலித்துகள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன.
மின்கட்டணம், நிலஅளவை வரிகளை உயர்த்தியுள்ள அரசு, மரணக் கணக்கை மறைத்த, மாநிலம் முழுவதும் கொள்ளை நோயை பரவவிட்ட, கடவுளுக்கே வெளிச்சம் என்று கைகாட்டிவிட்டு தப்பிக்கப் பார்த்த, கொள்ளை நோய் காலத்திலும் ஊழல் கொள்ளையை மறவாத அரசு, தமிழ்நாட்டில் உள்ள இருதுருவ அரசியலால் தப்பித்து விடுவோம் என்று ஒரு நப்பாசை கொண்டுள்ளது.
இரண்டு முறை ரூ.1,000, அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் விலையில்லாமல் தரப்பட்டதால், தமிழ்நாட்டில் பட்டினிச் சாவு இல்லை என்பதை ஒரு சாதனை என ஆளும்கட்சியினர் சாதிக்கின்றனர். பட்டினிச் சாவு இல்லை, பஞ்சம் இல்லை என்பதை பெருமையாகப் பேசி, மக்கள் நலன் பேணாத, தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட ஏகப்பெரும்பான்மை மக்களின் துன்ப துயரங்களுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து சுதந்திரம் பெறுவதே மக்களின் விருப்பமாகவும் தேவையாகவும் உள்ளது.

காக்க காக்க மக்கள் ஒற்றுமை காக்க
காக்க காக்க மக்கள் போராட்டங்கள் காக்க

ஆகஸ்ட் 15, 2020ல் அனைவரும் முழங்குவோம்.

விவசாயம், விளைநிலங்கள், வனங்கள், சுற்றுச்சூழல் காத்திடுவோம்.

எட்டு மணி நேர வேலை நாள்,
அய்ந்து நாட்கள் வேலை வாரம்,
மாதம் ரூ.26,000 குறைந்தபட்ச சம்பளம்,
நிரந்தரமான, பாதுகாப்பான, கவுரவமான வேலைகள்,
20 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்
என்ற கோரிக்கைகள் வென்றிட கோடிக் கைகளை உயர்த்திடுவோம்.

குழந்தைகளுக்கு, பெண்களுக்கு, வஞ்சிக்கப்படும் சிறுபான்மையினருக்கு,
அச்சமற்ற சுதந்திரம் வேண்டும். தலித்துகளுக்கு சமத்துவம் வேண்டும்.

கட்டற்ற தனியார்மயமும் வெறுப்பரசியலும் வேண்டவே வேண்டாம்.
 
இடஒதுக்கீடு, மாநில உரிமைகள் காத்திடுவோம்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றிடுவோம்.

சுதந்திரத்தைப் போற்றிடுவோம்.
சுதந்திரத்துக்காகப் போராடுவோம்.

Search