COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, August 4, 2020

பறிபோகும் மாநில உரிமைகளும்
மோடியின் விவசாய சீரழிவுக் கொள்கைகளும்

ஆர்.வித்யாசாகர்

சேகர், தர்மபுரி மாவட்டத்திலுள்ள புதுப்பட்டி கிராமத்தில் 4 ஏக்கர் விவசாயம் செய்கிறார். சுமார் ரூ.4 லட்சம் செலவு செய்து 1000 அடி ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்கிறார். இவர் கூறுகிறார், 'மின்சாரம் இலவசமாக கிடைப்பதால்தான் ஓரளவிற்கு விவசாயம் செய்ய முடிகிறது. 4 ஏக்கரில் கூட 2 ஏக்கர் மட்டுமே ஆழ்துளை கிணற்றை நம்பி விவசாயம் செய்ய முடிகிறது. மும்முனை மின் விநியோகம் குறிப்பிட்ட நேரத்திற்குதான் கிடைக்கிறது. இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் விவசாயம் செய்வதே சாத்திய மில்லை. மின்செலவுக்கே வருகின்ற உற்பத்தியில் பாதிக்குமேல் செலவாகிவிடும். மீதி இடு பொருள் செலவையும் சேர்த்தால் வருமானமே இருக்காது. மின்செலவை அரசாங்கம் வங்கிக் கணக்கில் செலுத்துவது என்பது நடவாத காரியம். பெரும்பாலான விவசாயிகளுக்கு ஒன்றும் கிடைக்காது. கிணற்றை நம்பி, மின்சாரத்தை நம்பி விவசாயம் செய்யும் லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும். நான் உற்பத்தி செய்யும் பருத்தி, நெல் போன்றவற்றை விற்பதற்கு தனியார் வியாபாரிகளையே நம்பி இருக்கிறேன். எப்போதும் உற்பத்தி பொருட்களின் தரத்தை குறைகூறி மிகக் குறைவான விலையையே அவர்கள் தருகிறார்கள். வெகு தூரம் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களுக்கு விளைபொ ருட்களை எடுத்துச்செல்வது கடினம். விவசாய உற்பத்தி விற்பனை முழுவதும் தனியார் வியாபாரிகள் கைகளில் சென்றால் அவர்கள் வைத்ததுதான் விலை என்றாகிவிடும். எங்களைப் போன்ற சிறு குறு விவசாயிகள் நகர்ப்புறங்களை நோக்கி வேலைக்கு படையெடுக்க வேண்டியதுதான். ஒப்பந்த விவசாயம் மிகவும் மோசமானது. இதன் மூலம் எங்கள் மாவட்டத்தில் ஓட்டாண்டிகளான பல கரும்பு விவசாயிகள் உள்ளனர்'. சேகர் மட்டுமல்ல, பல விவசாயிகள் இதே கருத்துகளை கூறியுள்ளனர். மோடி அறிவித்திருக்கும் கொள்கை மாற்றங்களை பற்றிய அச்சத்திலிருக்கின்றனர்.
கொள்கை சீர்திருத்தங்களின்  பின்னணியில்
மோடி ஆட்சிக்கு வந்த இந்த 6 ஆண்டுகளில், அவர் முக்கியமாக இரண்டு அம்ச கொள்கைகளை தொடர்ந்து  நடைமுறைப்படுத்தி வருகிறார். ஒன்று அதிகாரங்களை மத்தியில் குவிப்பது. அரசியலமைப்பு சட்டம் அங்கீகரித்துள்ள கூட்டாட்சி முறையில்  மாநிலங்களுக்கான  உரிமைகளை படிப்படியாக ஒழித்து, அதிகாரங்களை மத்தியில் குவிப்பது, இரண்டாவது சுயசார்பு இந்தியா என்ற வெற்று முழக்கம் மூலம் நாட்டின் செல்வாதாரங்கள் முழுவதை யும் அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது.  இவற்றைச் செய்ய தேசிய வெறி, வகுப்புவாத பாசிச அரசியலை தந்திரமாக பயன்படுத்துவது.
கரோனா இல்லாத காலங்களிலேயே ஜனநாயகத்திற்குப்புறம்பான பண மதிப்பிழப்பு போன்றவற்றை தன்னிச்சையாக மக்கள் மீது திணித்தார். இப்போது கரோனா ஊரடங்கை  பயன்படுத்தி, கரோனா நிவாரணம் என்ற பெயரில் மிக வேகமாக மாநிலங்களின் உரிமைகளை பறிப்பது முதல், ரயில்வே முதல் மின்சாரம் வரை, விமான நிலையங்கள், தொலைபேசி, வங்கி, ஆயுள் காப்பீடு, பாதுகாப்பு உற்பத்தி துறை என ஒரு பொதுத் துறை நிறுவனத்தைக்  கூட மிச்சம் வைக்காமல் பொருளாதாரம் முழுவதையும், பெரு முதலாளிகளிடம் ஒப்படைப் பதுடன், அவர்களுக்கு பல சலுகைகளையும் வாரி வாரி வழங்குவது வரை, தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். ஒரு மாநிலத்தின் மின்சாரத் தேவை, மின் கட்டணம், எந்தெந்த பிரிவு மக்களுக்கு மானியங்கள் அளிக்க வேண்டும், போன்றவற்றை தீர்மானம் செய்யும் உரிமை மாநில அரசாங்கங்களுக்கு இது வரை இருக்கிறது. ஆனால் புதிய மின் சட்ட திருத்தத்தின் நோக்கம், மின்துறையில் மாநிலங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது  என்பதுடன் சாதாரண மக்களுக்கு அளிக்கக் கூடிய மானியங்களை ஒழிப்பது, மின் உற்பத்தியை முழுதும் தனியார் கைககளில் விட வேண்டும் என்பதே ஆகும். மாநிலத்திற்கு, மாநிலம் வேறுபாடும் விவசாய உற்பத்தி, அதற்கேற்ப விவசாய உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய வழி செய்யும் உரிமையை முற்றாக மாநிலங்களிடமிருந்து பறிக்கும் வண்ணம் ஒரே நாடு ஒரே சந்தை என்ற பெயரில் மற்றொரு சட்ட திருத்தம் கொண்டு வருகிறார் மோடி. இதிலும் பெரும் வணிகர்களும், ஊக வணிகர்களும் தங்குதடையின்றி 'சுதந்திரமாக' செயல்பட பல வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருக்கிறது. காவேரி நீர் மேலாளுமை ஆணையத்தை சத்தமின்றி மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தமிழகம் மற்றும் இதர தென் மாநிலங்களின் உரிமைகளை குழி தோண்டி புதைத்திருக்கிறார். மாநிலங்களின் அதிகாரத்தின் கீழ் செயல்பட்டு வந்த கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அதிலும் மாநிலங்களுக்கு உள்ள உரிமைகளை பறித்திருக்கிறார்.
மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய  நிதி ஆதாரங்களை மத்திய அரசு ஒழுங்காக அளிப் பதில்லை. தமிழக அரசு பல முறை கேட்டும், இன்னும் ஜிஎஸ்டி வரியில் மாநிலத்திற்கு வரவேண்டிய பங்கு முழுமையாக வரவில்லை. நிதி ஆணைய அறிவிப்புகளில் மாநில நிதியின் பங்கு வெட்டி சுருக்கப்படுகிறது. 'கரோனா பேரிடர் நிவாரணத்திற்காக தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிய ரூ.9,000 கோடியில், இது வரை வெறும் ரூ.621 கோடியை மட்டுமே விடுவித்துள்ளது. ரூ.425 கோடிக்கு, மத்திய அரசு நேரடியாக உதவிகள் செய்திருப்பதாகக் கூறுகிறது. தமிழக அரசு கேட்ட நிதியை இன்னும் முழுமையாக மத்திய அரசு விடுவிக்க வில்லை. தமிழ்நாடு கேட்ட மொத்த தொகையையும் விடுவித்துவிட்டோம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது தவறு' என்று தமிழக அமைச்சர் பாண்டிய ராஜன் கூறியுள்ளார் (தினகரன், 17.07.2020).
மத்திய அரசு உருவாக்கும் கொள்கைகளையும், சட்டத் திருத்தங்களையும் ஏற்றுக்கொள்ள மாநில அரசாங்கங்கள் நிர்பந்திக்கப்படுகின்றன. மாநில அரசாங்கங்கள் தங்கள் தேவையை ஒட்டி, வெளியிலிருந்து, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3% வரை கடன் வாங்க உரிமை உண்டு. இதற்கு மேல் வாங்க மத்திய அரசிடமிருந்து அனுமதி வேண் டும். கோவிட் 19 காரணமாக ஏற்பட்ட நிதி ப்பற்றாக்குறையை சமாளிக்க வெளியிலிருந்து, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 5% வரை கடன் வாங்க பல மாநில அரசாங்கங்கள் அனுமதி கோரியிருந்தன. மாநிலங்கள், மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 5% வரை வெளியில் கடன் வாங்கிக் கொள்ளலாம் ஆனால், அதற்கு முன் மத்திய மின் சட்ட திருத்தம், முனிசிபல் வரி அதிகரிப்பு, தண்ணீர் வரி, ஒரே நாடு - ஒரே பொது விநியோகம், தனியார் தொழில் செய்ய எளிமைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் போன்றவற்றை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு நிபந்தனை விதித்தது. இதற்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. தெலங்கானா முதலமைச்சர் நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். ஆனால் பாஜகவின் அடிமையாக செயல்படும் தமிழக ஆளும் கட்சி மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் மிக மந்தமான நிலையையே எடுக்கிறது. 
இந்த பின்புலத்தில், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒழித்துக்கட்டி, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே வரி, ஒரே தேர்தல் என்பன போன்ற மோடியின் கொள்கைகள் இன்று ஒரே விவசாயம், ஒரே விவசாய சந்தை, ஒரே மின்சார கட்டணம் என விவசாய சமூகத்தை ஒட்டுமொத்தமாக அழிக்கும் கொள்கைகளுக்கு வழி வகுத்திருக்கின்றன. 
இந்திய மக்கள் கரோனா பெருந்தொற்றோடு போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், வேலை வாய்ப்புகளை இழந்து, வருமானம் இழந்து அவதியுறும் இந்த வேளையில், பாஜக அரசு பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும், சர்ச்சைக்குரிய புதிய சட்ட முன்வரைவுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள் உரிமைகளை அழிக்கும் சட்டங்கள் முதலில், அதற்கு பிறகு விவசாய சமூகத்தின் தலையில் கை வைக்கும் சட்ட முன்வரைவுகள் இப்போது. கரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி, நாட்டையே தனியார் கைககளில், சந்தை பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க பல சீர்திருத்தக் கொள்கைகளை மோடி அரசு அறிவித்துக் கொண்டிருக்கிறது. இவற்றில் எல்லாம் மாநில உரிமைகள் ஒழிக்கப்பட்டு, மாநில அரசாங்கங்கள் பெரும்பாலான துறைகளில் வெறும் குமாஸ்தாக்களாக சுருக்கப்பட்டுவிட்டன.
இந்திய விவசாயத்தை சந்தை சக்திகளுக்கு இரையாக்கும் தொடர்நடவடிக்கைகள்
30 ஆண்டுகால புதிய தாராளவாதக் கொள்கைகளின் விளைவாக, விவசாயம் தொடர்பான பொதுத்துறை முதலீடுகளை குறைப்பது, விவசாயத்திற்கான வங்கிக் கடனை குறைப்பது, பொதுத்துறை விரிவாக்க  சேவைகளை (ங்ஷ்ற்ங்ய்ள்ண்ர்ய் ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்) முடிவுக்கு கொண்டு வருவது, விவசாயப் பொருட்களின் இறக்குமதியை தடையின்றி திறந்துவிடுவது, மானியங்களை குறைப்பது, இடுபொருள் விலைகள் கட்டுப்பாடு இல்லாமல் உயர்த்துவது, விளை பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்காமல் செய்வது, சாத்தியமான  விவசாயம் என்பதை  காணாமல் போகச் செய்வது, விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தும் கார்ப்பரேட் ஆதரவு திட்டங்கள் போன்றவற்றால் விவசாயத்தில் ஏற்கனவே ஒரு பெரும், நீண்ட  நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில், விவசாய குடும்பங்களில் 75%த்திற்கு மேல் பெரும் கடன் சுமையில் அவதியுறுகின்றனர். வரலாறு காணாத அளவில் இந்த காலகட்டத்தில்தான் விவசாயிகள் தற்கொலைகள் பல்கிப் பெருகியது. எரியும் வீட்டில் எண்ணெய் ஊற்றியது போல விவசாயிகளை மேலும் ஒன்றுமில்லாதவர்களாக்கி விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் இறுதி ஆணியை அடிக்க ஆரம்பித்துவிட்டார் மோடி.
நிபுணர்களின் கருத்தின்படி, ஏற்கனவே பல முறை, பல்வேறு வடிவங்களில் திணிக்க முயன்று, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் தோற்றுப் போன சீர்திருத்த நடவடிக்கைகளை, பாஜக அரசு மீண்டும், கரோனா ஊரடங்கை பயன்படுத்தி, ஏப்ரல் 17, 2020 அன்று மின்சார திருத்த சட்டத்தையும், ஜ÷ன் 5, 2020 அன்று இதர சட்ட திருத்தங்களையும் 'ஆத்ம நிர்பார்' (சுயசார்பு) என்ற பெயரில் மக்கள் மீது திணித்திருக்கிறது. 21 நாட்களுக்குள் இவற்றின் மீது கருத்து கூற மக்களுக்கு கெடு  விதிக்கப்பட்டது. இதில் யார் யார் கருத்து கூறினார்கள், இறுதியில் எந்த வடிவத்தில் வரும் என்பது மோடிக்கு மட்டுமே தெரியும். (ஏற்கனவே கொண்டு வந்த தொழிலாளர் விரோத சட்ட திருத்தங்களுக்கு, பல அமைப்புகளிடமிருந்து வந்த கருத்துகளையும், ஏன் பாஜககாரர்கள் சொன்னவற்றை கூட,  கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை). இந்திய அரசாங்கத்தின் தேசிய விவசாயக் கொள்கையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள அம்சம் 'ஒப்பந்த விவசாயம் மூலமும், நிலத்தை குத்தகைக்கு எடுப்பதன் மூலமும் தனியார் துறை ஊக்குவிக்கப்ப டும். இதன் மூலம்தான் துரிதமாக தொழில்நுட்ப மாற்றம் ஏற்படும், விவசாயத்தில் அதிக மூலதனம் பெருகி, விவசாயப் பொருட்களுக்கான சந்தை உத்தரவாதம் பெறும்' என்பதாகும். விவசாய சமூகம் பற்றியோ, விவசாயிகளின் வாழ்வாதாரம் பற்றியோ அரசின் கொள்கைகளில் இடமில்லை. ஏற்கனவே எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளுக்கேற்ப,  வேலைகளை முழுமூச்சாக மோடி தற்போது துவங்கியுள்ளார். கரோனா நெருக்கடி அதிகாரங்களை மத்தியில் குவிக்க அவருக்கு கிடைத்த ஓர் 'அரிய வாய்ப்பு'.
கொள்கைரீதியான மாற்றங்கள் கொண்ட சட்ட திருத்த முன்வரைவுகள்
1. மின்சாரம் சட்டத் திருத்தம், 2020 (இக்கட்டுரையில் மத்திய மின்சார சட்டம் என்று குறிப்பிடுகிறோம்).
2. அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்தம், 2020
3. விவசாய உற்பத்தி வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்கமளித்தல் மற்றும் எளிதாக்கல்) சட்டத் திருத்தம், 2020
4. விவசாயிகள் (மேம்பாடு மற்றும் பாதுகாப்பு) விவசாய சேவைகள் மற்றும் விலை உத்தரவாதம் மீதான ஒப்பந்த சட்டத் திருத்தம், 2020.
இந்த சட்டத் திருத்தங்கள் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடையவை. ஒன்றை ஒன்று சார்ந்தவை.
மத்திய மின் சட்டம் 2020
நிலத்தடி நீரை நம்பிய விவசாயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தியாவில் 56% விளை நிலங்கள் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு பாசனத்தை மட்டுமே நம்பியுள்ளன. ஆற்று வாய்க்கால் நீர்ப்பாசன வசதி உள்ள நிலங்கள் 25%க்கும் குறைவு. இதுவும் 60% உ.பி., பஞ்சாப், ஹரியானா, பீகார், ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டுமே இருக் கிறது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த நிலப்பரப்பான 130 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் சாகுபடி பரப்பு 46 லட்சம் ஹெக்டேர்தான். இதில், ஆறு, ஏரி, கண்மாய், நிலத்தடி நீர் உட்பட பாசனம் பெறும் நிலங்கள் 26 லட்சம் ஹெக்டேர்கள்தான். தமிழகத்தில் நீர்ப்பாசனம் பெறும் நிலங்களில் 64% நிலங்கள் நிலத்தடி நீரை நம்பியுள்ளன. இவை ஆழ்துளை கிணறுகள் மூலம், பூமிக்கு அடி ஆழத்திலுள்ள நீரை மின்சாரம் மூலம் மேலே கொண்டு வந்தால்தான் விவசாயம் செய்ய முடியும். மற்றவை, மழையை நம்பி விவசாயம் செய்யும் மானாவாரி நிலங்கள். மின்சாரம் சார்ந்த நிலத்தடி நீர் விவசாயம் நாட்டின் உணவுப் பாதுகாப்பையும், கிராமப்புற வாழ்வாதாரங்களையும் தக்க வைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. இந்தியாவில் சுமார் 3 கோடி பம்ப் செட்டுகள் விவசா யத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் 70% மின்சாரம் மூலமாகவும் மீதமுள்ளவை டீசல் மூலமாகவும் இயங்குகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30 லட்சம் பம்ப்செட்டுகள் மூலம் விவசாயத்திற்கு நீர் இறைக்கப்படுகிறது. மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி 21.7 லட்சம் பும்ப்செட்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில், 20%தான் விவசாயத் துறைக்கு பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கடந்த காலங்களில் 50 விவசாயிகளுக்கு மேல் துப்பாக்கிச்சூட்டில் உயிர் தியாகம் செய்து  போராடிப் பெற்றதுதான் இந்த உரிமை. 
மத்திய மின் சட்டம் என்ன சொல்கிறது?
இந்தியாவில், 2003ல் கொண்டுவரப்பட்ட,  மின் சட்டத்திற்கு பிறகு ஏற்கனவே வேகமாக தனியார்துறை மின் உற்பத்தியில் புகுத்தப்பட்டிருக்கிறது.  மார்ச் 2019, மத்திய அரசு புள்ளி விவரப்படி, நாட்டின் மொத்த மின்னுற்பத்தி திறனில், 47% தனியார் கைகளிலும், 30% மாநில அரசாங்கங்களிடமும், 24% மத்திய அர சாங்கத்திடமும் உள்ளது. தமிழ்நாட்டில் மின் உற்பத்தி திறனில் 57% தனியார்வசமும், 24% மாநில அரசாங்கத்தின் வசமும், மீதம் மத்திய அரசாங்கத்தின் வசமும் உள்ளது. மொத்தத்தில் மின் உற்பத்தியில் பெரும்பங்கு தனியார் கைகளில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் மிக அதிக மின்னுற்பத்தி திறன் கொண்டவை தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களே. மாநில அரசாங்கத்தின் ஒரு யூனிட் மின்சாரத்திற்கான உற்பத்தி செலவு ரூ.3 ஆக இருந்தபோது (2017) தனியார் அனல்மின் நிலைய உற்பத்தியாளர்களிடமிருந்து ரூ.5.50க்கு மின்சாரம் வாங்க மாநில அரசாங்கம் நிர்பந்திக்கப்பட்டது. அதே சமயத்தில் காற்றாலை மின்சாரம் யூனிட்டிற்கு ரூ.4க்கும் அணு மின்சாரம் ரூ.4.50க்கும் தனியார் நிறுவனங்கள் மூலம் விற்கப்பட்டது. (எகனாமிக் டைம்ஸ் 22.02.2017). இந்தியாவில் மின் உற்பத்தியில் தனியார் துறையில் பெரும்பங்கு வகிப்பது, ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமங்களாகும்.
மாநில மின்சார வாரியங்கள், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகங்களாக (கம்பனிகளாக) 2003லிருந்து மாற்றப்பட்டு, இவை மின் உற்பத்தியாளர்களிடமிருந்து (தனியார் உற்பத்தியாளர் உட்பட) மின்சாரத்தை வாங்கி விநியோகம் செய்ய வேண்டும். மின் பகிர்மான கம் பெனிகள் (டிஸ்காம்) என இவை அழைக்கப்பட்டன. தனியார் மின் உற்பத்தியாளர்கள் வங்கியில் தாராளமாக கடன் வாங்கி மின் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டது. மின் பகிர்மானத்திற்கு மாநில அரசாங்கங்கள் ஏற்படுத்தியிருந்த உள்கட்டுமான வசதிகளை இந்த நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டன. மாநில அரசாங்கங்கள் இலவசமாக வழங்கும் மின்சார மானியங்களுக்கு மின் பகிர்மான கம்பனிகளுக்கு பணம் செலுத்த வேண்டும். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் தற்சமயம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மாநில அரசாங்கங்கள் பகிர்மான கம்பனிகளுக்கு மானியத் தொகையை செலுத்துவதில் அதிக பாக்கி இருக்கிறது. எனவே பகிர்மான கழகங்களால், தனியார் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கும் மின்சாரத்திற்கு முழுமையாக பணம் செலுத்த முடியவில்லை. தனியார் உற்பத்தியாளர்கள் வங்கிகளில் வாங்கிய கடன் வாராக்கடனாக இருக்கிறது, மற்ற மாநிலங்களில் மக்களுக்கு பல விதங்களில் வழங்கப்படும் மின் மானியங்களால் தனியார் கம்பனிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டை கார்ப்பரேட் ஆதரவு கும்பல்கள் முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த கம்பெனிகளுக்கு லாபத்தை பெருக்குவது, மின்சார உற்பத்தியையும், விநியோகத்தையும் முழுமையாக தனியார்மயமாக்குவது, விவசாயிகளுக்கும் பிற பிரிவினருக்கும் கிடைத்துக் கொண்டிருக்கும் மானியங்களை ரத்து செய்வது ஆகிய நோக்கங்களோடுதான் மத்திய மின்சட்டம் 2020 வருகிறது.
மின்சாரம் லாப நோக்கத்திற்கானது அல்ல. மக்களின் வாழ்வாதாரங்களை பெருக்க, அரசாங்கத்தால் நீர்ப்பாசன வசதி செய்து தர முடியாத விவசாயத்திற்கு நிலத்தடி நீர் பெற, மக்களுக்கு வெளிச்சம் தர, தொழில்கள் முன்னேற  பயன்பட வேண்டியதாகும். எனவே தான் மின்னுற்பத்தி, மக்களின் தேவை அறிந்து செயல்பட, மாநில அரசாங்கங்களின் அதிகார வரம்பிற்குள் வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில், 30 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், 11 லட்சம்  குடிசைகளுக்கு இலவச மின்சாரம், விசைத்தறி, கைத்தறி போன்ற தொழில்களுக்கு மின்மானியங்கள் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு  வருகின்றன. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில்தான் மத்திய மின் சட்டம், 2020 கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள்: மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள மின் விநியோக ஒழுங்குமுறை ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும். எனவே மின்சாரம் சம்மந்தமாக மாநில அரசுகள் எந்த முடிவையும் இனி எடுக்க முடியாது.
நாட்டின் மின் உற்பத்தி மற்றும் மின்சாரம் சம்பந்தமான தனியாருடனான அனைத்து ஒப்பந்தங்களையும் முறைப்படுத்த ஒரு ஒய்வு பெற்ற  நீதிபதி தலைமையில் மின்சார ஒப்பந்தங்கள்  அமலாக்க ஆணையம் மத்திய அரசின் கீழ் அமைக்கப்படும். தனியாரிடம் வாங்கும் மின்சாரத்திற்கான விலை நிர்ணயமும் இதில் அடங்கும். மின்சாரம் கொள்முதல் செய்வதை மத்திய அரசின் இந்த ஆணையம் முடிவு செய்யும். (ஆந்திராவில், கடப்பா மாவட்டத்தில் சூரிய மின் உற்பத்தி செய்த ஒரு பன்னாட்டு நிறுவனம், ஆந்திர மாநில அரசாங்கம், அந்த கம்பெனி நிர்ணயித்திருந்த யூனிட்டிற்கு ரூ.4.50 என்பதை ரூ.2.44 ஆக குறைக்க முயற்சித்தபோது அது ஒரு பெரிய பிரச்சனையாகி, சில நிதி நிறுவனங்கள், ஜப்பான், கனடா, பிரான்ஸ் நாடுகளின் தூதுவர் உட்பட இந்தப் பிரச்சனையை பிரதமரிடம் கொண்டு சென்றனர். மத்திய எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங், ஆந்திர அரசின் முயற்சியை உடனே கைவிட ஆணை இட்டார். இது போன்றவை நடவாமலிருக்க, கார்ப்பரேட் துறைக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசே இந்த உரிமைகளை கைவசம் எடுத்துக் கொள்கிறது.
விவசாயத்திற்கு, குடிசை வீடுகளுக்கு, குடிசை தொழில்களுக்கு, இதர பிரிவினருக்கு வழங்கும் இலவச மின்சார மானியத்தை மாநில அரசாங்கங்கள் நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தலாம், ஆனால் இவர்கள் அனைவருக்கும் மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டு, மின் கட்டணம் முதலில் மின்பகிர்வு நிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டும். அதாவது தனியார் கம்பனிகளுக்கு செலுத்தப்பட வேண்டும்.
ஒரே நாடு, ஒரே மின் கட்டணம் என்று அனைத்து பயன்பாடுகளுக்கும் ஒரே கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் கைகளில்.
படிப்படியாக பெரும்பகுதி மின்உற்பத்தியை தனியாரிடம் கொடுத்து விட்டு, தற்சமயம் கடன் சுமையால் அவர்கள் மின் உற்பத்தியை நிறுத்தி விட்டால் என்ன செய்வது என்ற வாதத்தை மத்திய அரசு முன் வைக்கிறது. இதனால் பொதுத் துறை மின்உற்பத்தி முற்றிலும் ஒழிக்கப்பட்டு, மின் உற்பத்தி முழுதும் கார்ப்பரேட்மயமாக்கப் பட்டு மின்சாரத்தின் விலை தாறுமாறாக ஏறும். மின்சாரம் ஆடம்பரப் பொருள் என்றாகி சாமான்ய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும். அத்தியாவசிய தேவையான மின் உற்பத்தி அரசின் கைகளில் இல்லாமல் தனியார் கைக ளில் போய்விடும். இது எதிர்காலத்தில்  மக்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
இலவச மின்சாரத்தை நங்கள் நிறுத்தப் போவதில்லை, விவசாயிகள் முதலில் பணத்தை கட்டிவிட்டு பிறகு அரசாங்கத்திடமிருந்து வங்கிக் கணக்கில் அந்த தொகையை பெறலாம் என்று மத்திய அரசு  சொல்கிறது. ஆனால் சமையல் எரிவாயு மானியத்தில் நம் அனுபவம் என்ன? தமிழகத்தில் விவசாயிகள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை அவர்கள் பயன்படுத்தும் மின் மோட்டார்களுக்கு ஒரு குதிரை திறனுக்கு ரூ.125 மின் வாரியத்திற்கு கட்ட வேண்டும் என்று இருந்தது. விவசாயிகள் இந்த பணத்தை முதலில் காட்டினால், இந்த பணத்தை மணி ஆர்டர் மூலம் விவசாயிகளுக்கு அரசாங்கம் அனுப்பும் என்ற ஒரு திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்தார். ஆனால் இது நடைமுறையில் தொடரவில்லை. விவசாயிகள் பணம் கட்டியது கட்டியதுதான். இப்போதும் மானியம் வங்கியில் செலுத்துவது என்பதை அரசாங்கம் செய்யாது. இலவசமாக வழங்கும் மின்சாரத்திற்கான தொகையை, மின் பகிர்மான நிறுவனங்களுக்கு கட்டாத மாநில அரசாங்கங்கள், மக்களின் வங்கிக் கணக்கில் அந்த பணத்தை போடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. நிதி பற்றாக்குறை என்று வரும்போதெல்லாம் அரசாங்கங்கள் கை வைப்பது மக்களுக்கு தர வேண்டிய மானியங்களில்தான். (இலவச மின் இணைப்பு முற்றிலும் இல வசமில்லை. தமிழகத்தில் லட்சக்கணக்கனான விவசாயிகள் மின்இணைப்பிற்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இணைப்பு கிடைப்பதில்லை. தமிழக அரசு தட்கல் முறையில் மின் இணைப்பு பெற ஒரு திட்டம் வைத்திருக்கிறது. 5 குதிரைத்திறன் கொண்ட பம்ப் மோட்டார் இணைப்பிற்கு ரூ.2,50,000 கட்ட வேண்டும். அதிகப்படியான ஒவ்வொரு 2.5 குதிரை திறனுக்கும் ரூ.25/000 செலுத்த வேண்டும்).
மின் உற்பத்தி விநியோகம் முழுற்தும் தனியார் கைகளில் போய்ச் சேருமானால், கஜா, ஒக்கி, வார்தா புயல்கள் போன்ற பேரிடர் காலங்களில் ஏற்படும் மின் துண்டிப்பை சரி செய்ய அரசு மின்சாரத்துறை போல மின்வாரிய ஊழியர்களைப் போல சேவை செய்ய தனியார் நிறுவனங்கள் முன்வராது. 2001ல் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தின்போது மகாராஷ்டிராவில் அதிக மின்கட்டணம் வசூலித்த என்ரான் கார்ப்பரேசன், மின்சார உபகரணங்களுக்கு ஏற்பட்ட நாசங்களை கண்டுகொள்ளவே இல்லை. மாநில மின் வாரியம்தான் அவற்றை முழுவதும் சரி செய்தது.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்தம் 2020
1955ல் கொண்டு வரப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், மிக முக்கியமான உணவு பண்டங்களை தனியார் பெருவியாபாரிகள், நிறுவனங்கள் பதுக்கி வைப்பதைத் தடுப்பதற்கானதாகும். நுகர்வோரைப் பாதுகாக்கவே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. இது அத்தி யாவசியப் பொருட்களின் உற்பத்தி, விநியோகம், வர்த்தகம் போன்றவற்றை அரசாங்கம் கட் டுப்படுத்தும் சட்டம். இது போர்க் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். தற்போது இந்தியா உணவுத் தன்னிறைவு பெற்று சுமார் 7 கோடி டன் தானியம் இந்திய உணவுக் கழகத்தில், கையிருப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் இருப்பதால் அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்வதில், விற்பதில் தனியார் முதலீடுகள் வர தடையாக இருக்கிறது. குளிர் சாதன வசதி போன்றவற்றில் அவர்கள் மூலதனமிட தயங்குகிறார்கள். ஆகையால் தற்போதைய சூழலுக்கு 1955ல் கொண்டு வரப்பட்ட சட்டம் தேவையில்லை என்று கூறப்படுகிறது. இந்த சட்டம் சுதந்திரமான வர்த்தகத்திற்கு தடையாக இருக்கிறது, எனவே இந்த நிலையை மாற்ற அத்தியாவசிய பொருட்கள் சட்டத் திருத்தம் 2020 என கூறப்படுகிறது. 
இந்த சட்டப்படி உணவு தானியங்கள், பருப்பு வகைகள், உருளை கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் போன்றவற்றை, மிகவும் அசாதாரண சூழலில் மட்டும், அதாவது போர், பஞ்சம், விலைவாசி அதிகம் உயர்வது (அழுகும் பொருட்களின் விலை கடந்த 12 மாத சராசரி விலை அல்லது  ஐந்து ஆண்டு சராசரி விலையை விட 100% மற்றும் இதர பொருட்களின் விலையில்  50% அதிகரித்தால் மட்டும்) அரசு தலையிடும்.
இப்படி விலைவாசி உயரும் சமயங்களைத் தவிர மற்ற நேரங்களில் வியாபாரிகள் எவ்வளவு வேண்டுமானாலும் சரக்குகளை கையிருப்பு வைத்துக்கொள்ளலாம். ஏற்றுமதி செய்பவர்களும் எவ்வளவு கையிருப்பு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
நாட்டில் போதுமான உணவு பொருட்கள் இருக்கிறது, உணவு உற்பத்தியில் தன்னிறைவு ஏற்பட்டுவிட்டது என்ற காரணம் ஏற்க கூடியது அல்ல. உணவுப்பொருட்களை சந்தை பொருளாதாரத்தின் கைகளில் முழுமையாக சிக்க வைக்காமல், மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்றவாறு எளிய மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்த, அரசு உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யும் முறை உருவானதால்தான் உணவு உற்பத்தியில் தன்னிறைவு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், 2019ல் உலக பசி குறியீட்டில் 119 நாடுகளில் இந்தியா 103ஆவதாக இருக்கிறது. 2017ல் 100வது இடத்தில் இருந்த இந்தியா மேலும் பின்னுக்குச் சென்றிருக்கிறது. எனவே, உணவு தானியம் கையிருப்பில் குவிந்துள்ளது என்பது மக்களுக்கான பொது விநியோகம் முறையாகச் சென்று சேரவில்லை என்பதைக் குறிக்குமே தவிர உணவு உற்பத்தியில் முழுமையாகத் தன்னிறைவு பெற்றதாகக் கருத முடியாது. உதாரணமாக ஆந்திர மாநிலம் அரிசி உற்பத்தியில் உபரியான மாநிலம் என்பதால் ஆந்திராவில் அனைவரும் உணவில் தன்னிறைவு பெற்றுவிட்டார்கள் என்று பொருளல்ல.
இந்தியாவில் பருவ நிலை மாற்றங்கள், வெள்ளம், வறட்சி போன்றவற்றை கணக்கில் கொண்டால் உணவு உற்பத்தியில் தன்னிறைவு எப்போதும் தொடர முடியுமா என்பது கேள்விக்குறி. எனவே அத்தியாவசியப் பொருட்களின் சந்தையை முழுமையாக தனியார் கைகளில் ஒப்படைப்பது என்பது பெட்ரோல், டீசல் விலை விசம் போல் ஏறிக்கொண்டிருப்பதை போல முடியும். ஏற்கனவே தனியார் வர்த்தகத்தால்தான் விலைஉயர்வு விண்ணை தொடுகிறது. பெரும்பான்மையான சிறு, குறு விவசாயிகள் கூட வெளியிலிருந்து உணவு பொருட்களை வாங்குபவர்களாகத்தான் இருக்கிறார்கள். எனவே இந்தச் சட்டம் அனைத்து சாமான்ய மக்களையும் பாதிக்கக்கூடியதாகும்.  வர்த்தகத்தை, தனியார்மயமாதலை ஊக்குவிப் பதைவிட அனைவருக்கும் வேலை, வருமானம், உணவு என்பதே முக்கியம். எனவே அத்தியாவசியப் பொருட்கள் மீது அரசின் கட்டுப்பாடுகளும், ஒழுங்குபடுத்துதலும் முக்கிய தேவைகள். ஆனால் இந்த சட்டம் அதற்கு நேர்மாறாக இருக்கிறது.
விவசாய உற்பத்தி வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்கமளித்தல் மற்றும் எளிதாக்கல்) சட்ட திருத்தம், 2020
ஒரே தேசம், ஒரே சந்தை என்ற பெயரில் மாநிலங்களுக்கான அதிகாரங்களை உடைத்தெறியும் இந்த சட்டத்திற்கு, சொல்லப்பட்ட நியாயங்கள், இந்திய விவசாயிகளுக்கு தங்கள் பொருட்களை விற்பதற்கு பரந்த சந்தை, எங்கு அதிக விலை கிடைக்குமோ அங்கு விற்று அதிக வருமானம் பெற, விவசாய சந்தையில், விவசாய உற்பத்தி பொருட்கள் சார்ந்த தொழில்களில், உணவு சில்லறை வணிகத்தில் அதிக மூலதனத்தை ஈர்க்க போன்றவை. விவசாய உற்பத்தி சந்தை குழுக்களுக்கான (தமிழ் நாட்டில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள்) தற்போதைய விதி முறைகள் கார்ப்பரேட் விவசாயத்திற்கு தடையாக இருக்கும் என்ற கருத்துகூட சட்ட வரைவு விவாதத்தின் போது குறிப்பிடப்பட்டிருக்கிறது. நிச்சயமாக சிறு, குறு விவசாயிகளின் நலன்களில் இவர்களுக்கு அக்கறை இல்லை.
விவசாய உற்பத்தி சந்தை குழுக்கள், மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடு உடையது. கரும்பு, பருத்தி போன்ற உற்பத்தி பொருட்களுக்கு வெவ்வேறு சந்தை ஏற்பாடுகள் உண்டு. பெரும்பாலும் அத்தியாவசிய பொருட்கள் விவசாய உற்பத்தி சந்தை குழுக்கள் மூலமே விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இங்கு விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும். வியாபாரிகளும் உரிமம் பெற வேண்டும். பதிவு செய்யும் விவசாயிகள் தங்களுடைய உற்பத்தியின் கணிசமான பகுதியை சட்டப்படி இங்குதான் விற்க வேண்டும். இவற்றை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநில அரசாங்கங்களுக்கே உள்ளது. இதற்கு வெளியிலும் விவசாயிகள் தங்கள் பொருட்களை தனியார் வியாபாரிகளிடம் விற்கலாம். இந்த சந்தை குழுக்களில் மொத்த மற்றும் சில்லறை வியா பாரிகள் பொருட்களை வாங்கலாம். இதற்கு மாநிலத்திற்கு மாநிலம் அங்கு விளையும் பொருட்களுக்குத்தக்க  கமிஷன், கட்டணம் போன்ற விதி முறைகள் உண்டு. பல மாநிலங்களில், தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகள் போல் தங்கள் பொருட்களை விவசாயிகள் நேரடியாக நுகர்வோருக்கு விற்கவும் வழியுண்டு. இவை மாநில அரசாங்கங்களின் அதிகார வரம்பில் நடைமுறைப்படுத்தப்பட்டவை. இந்திய உணவு கழகம் கூட விவசாய சந்தை குழுக்களிடமிருந்து உணவு தானியங்கள் வாங்குகிறது.
விவசாய சந்தை குழுக்களில் இடைத்தரகர் கமிஷன் போன்றவற்றால் விவசாயிகளுக்கு கிடைக்கும் விலையில் சரிவு ஏற்படுகிறது. சில சமயங்களில் அடி மாட்டு விலைக்கு பொருட்களை விற்க விவசாயிகள் நிர்பந்திக்கப்படுகின்றனர். உதாரணமாக மத்திய பிரதேசத்தில் வெங்காயத்தின் விலை கிலோவிற்கு வெறும் ரூ.2 அல்லது ரூ.3 கிடைத்தபோது (நுகர்வோருக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை விற்ற சமயத்தில்) விவசாயிகள் வெங்காயத்தை தெருவில் கொட்டி எரித்தார்கள். பஞ்சாபில் உருளை கிழங்கை விற்காமலேயே தூக்கி எறிந்தனர். விவசாய சந்தை குழுக்களில் மற்றவர்களை வர விடாமல் குறிப்பிட்ட சில வியாபாரிகள் ஆதிக்கம் செலுத்துவது என்பது நடக்கிறது. அகில இந்திய அளவில் 487 சதுர கிலோ மீட்டருக்கு ஒரு சந்தை குழுதான் இருக்கிறது. (2004ல் தேசிய விவசாயிகள் கமிஷன், எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைத்தபடி 5 கி.மீ சுற்றளவிற்கு ஒரு விவசாய சந்தை குழு இருக்க வேண்டும்).
விவசாய சந்தை குழுக்களில் பிரச்சனைகள் இருப்பினும் அவற்றை சரி செய்ய பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் மாநில அரசாங்கங்களின் அதிகார வரம்பிற்குற்பட்ட இந்த சந்தை குழுக்களை ஒழித்துக் கட்டும் வண்ணம் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இந்த சட்டப்படி,
சந்தை குழுக்களை புறக்கணித்து, அதற்கு வெளியே புதிய சந்தைகளுக்கான கதவுகளை திறந்து விடுவது. வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வழி வகுப்பது.
நாடு முழுவதும் ஒரே சந்தையாக மாறி, மாநிலத்திற்கு உள்ளேயும், மாநிலம் விட்டு  மாநிலத்திலும் விவசாயிகள் தங்கள் பொருட் களை விற்கலாம்.
உற்பத்திக்கு முன்பே எதிர்கால வர்த்தகம் செய்ய வியாபாரிகளுக்கு அனுமதி.
மாநில அரசாங்கங்களின் அதிகாரத்தில் உள்ள விவசாய விற்பனை குழுக்கள் இயங்க பல தடைகள்.
ஒப்பந்த விவசாய தாளாளர்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து உற்பத்தி பொருட்களை வாங்க வழி வகை செய்வது. (ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடும் பெருநிறுவனங்கள் 'தாளாளர்கள்' என குறிப்பிடப்பட்டிருக்கிறது).
இந்தியாவில் 2 ஹெக்டருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் மொத்த விவசாயிகளில் 86% (2015 - 2016 விவசாய கணக்கெடுப்பு). இவர்கள் பெரும்பாலும் வாங்கிய கடனுக்காக அருகில் உள்ள வியாபாரிகளிடம் உற்பத்தி பொருட்களை விற்கும் நிர்பந்தத்திலிருக்கிறார்கள். ஏனென்றால் இவர்களுக்கு அருகில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் இல்லை. பேராசிரியர் ஹிமான் ஷ÷ ஹிந்துவில் எழுதிய கட்டுரையில்  (மே 25, 2020) உற்பத்தி செய்யப்படும் கோது மையில் 69%, நெல்லில் 73% கொள்முதல் நிலையங்களுக்கு வருவதில்லை என சில ஆய்வுகளை சுட்டிக்காட்டி விளக்கியிருக்கிறார். விவசாய உற்பத்தி சந்தை குழுக்களுக்கே செல்ல முடியாத சிறு குறு விவசாயிகள் எப்படி மாநிலம் விட்டு மாநிலம் சென்று அதிக விலை கிடைக்கும் இடத்தில் விற்க முடியும். பெரும் பான்மை விவசாயிகளின் கால்கள் கடனால் கட்டப்பட்டிருக்கின்றன. இந்த நிலைமையில் அவர்களுக்கு வியாபாரிகளையும், வியாபார தலங்களையும் தேர்ந்தெடுத்து விற்பனை செய்ய வழி இல்லை.
எதிர்கால வர்த்தகம் என்பது அதிக நிதி மூலதனத்தை ஈர்த்து விவசாயிகளை மேலும் மேலும் ஏமாற்றுவதிலேயே முடியும். முன்னால் ஒப்புக்கொள்ளும் விலையைவிட சந்தை விலை அதிகமாக இருக்கும் நேரங்களில் வர்த்தகம் துவங்கும். இதனால் விவசாயிகள் இழப்பிற்குத்தான் ஆளாவார்கள்.
விவசாய உற்பத்தி சந்தைக்குழுக்களில் ஏற்கனவே தமிழ்நாடு உட்பட மாநில அரசாங்கங்கள் பல மாற்றங்களை செய்திருக்கின்றன. விவசாயம் தொடர்ந்து நெருக்கடியை சந்திப்பதற்கு சந்தை குழுக்கள் காரணமல்ல. பீகார் போன்ற மாநிலங்களில் விவசாய உற்பத்தி சந்தைக்குழுச் சட்டம் என்பதே இல்லை. எனவே, அங்கெல்லாம் விவசாயிகளின் பொருள் கள் முறையாகச் சந்தைப்படுத்தப்பட்டு உரிய விலை கிடைத்துவிட்டதா? அங்கு தனியார் வியாபாரிகள் புதிது புதிதாக சந்தைகளை விரித்து  பொருட்களை விற்க வரும் விவசாயி களிடம் கமிஷன் வாங்குகிறார்கள். குறைந்த பட்ச ஆதரவு விலையைவிட குறைவான விலைக்கு விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்க நிர்பந்திக்கப்படுவதாக   ஆய்வுகள் கூறுகின்றன. மோடியின் புதிய சட்டம் இந்த விளைவுகளை எல்லா இடங்களுக்கும் கொண்டு வந்துவிடும். கட்டுப்பாடின்றி தனியார் நிறுவனங்களுக்கு விவசாய சந்தையை திறந்துவிடுவதே நோக்கம். விவசாயிகள் இன்னும் மோசமாக சுரண்டப்படுவார்கள். விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையை அதிகப்படுத்த மோடி திட்டமிட்டிருப்பது போல தெரிகிறது.
விவசாயிகள் (மேம்பாடு மற்றும் பாதுகாப்பு) விவசாய சேவைகள் மற்றும் விலை உத்தரவாதம் மீதான ஒப்பந்த சட்ட திருத்தம், 2020.
ஒப்பந்த விவசாயம் என்பது, சர்க்கரை ஆலைகளிடம் கரும்பு விவசாயிகள் உற்பத்தி ஆரம்பிப்பதற்கு முன்பே ஒப்புக்கொள்ளும் விலையில் ஆலைகளிடம் ஒப்பந்தம் போட்டு விவசாயம் செய்வது. கரும்பு மட்டும் அல்லாது, பருத்தி, பருத்தி விதை உற்பத்தி, காய்கறிகள், பழவகைகள் போன்றவற்றிற்கு ஏற்கனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒப்பந்த விவசாயம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  இதில் ஈடுபடும் விவசாயிகள் படும் துயரக்   கதைகள் ஏராளம். ஆனால் ஒப்பந்த விவசாயம் மூலம் விவசாயிகளுக்கு உத்திரவாதமான விலை கிடைக்கும். விவசாய உற்பத்தி செய்ய ஒப்பந்தம் போடும் தாளாளர்களிடமே விற்கலாம். இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்ற பொய்யின்  அடிப்படையில் இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே ஒப்பந்த விவசாயத்திற்கான சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஒப்பந்த விவசாயத்தை ஊக்குவிக்க மற்ற மாநிலங்களும் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களான பெப்சிகோ, ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே மற்றும் அய்டிசி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே 40,000 கிராமங்களில் கார்ப்பரேட்  விவசாயம் செய்வதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வுப்போக்கை நாடு முழுவதும் கொண்டுவரத்தான் இந்த புதிய சட்ட திருத்தம். சர்க்கரை ஆலைகளுடன் ஒப்பந்த விவசாயம் செய்யும் கரும்பு விவசாயிகளின்  நிலை என்ன என்பது நமக்குத் தெரிந்ததே. தமிழகத்திலும், மற்ற சில மாநிலங்களிலும் ஏற்கனவே பருத்தி விதை உற்பத்தி முழுமையாக ஒப்பந்த விவசாயம் மூலம் நடக்கிறது. இதில் குழந்தைகள் அதிகமாக ஈடுபடுத்தப்படுவதோடு, விவ சாயிகளுக்கும் குறைந்த விலையே கிடைக்கிறது. விதை கம்பெனிகள் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். ஒப்பந்த விவசாயத்தில் சில இடு பொருட்களை கம்பெனிகள் தருகின்றன. நிலம் உழைப்பு விவசாயியுடையது. லாபம் நஷ்டம், எதுவாயினும் விளைபொருட்களுக்கு ஏற்கனவே ஒப்புக்கொண்ட விலைதான். அதிலும் கரும்பு ஒப்பந்த விவசாயம் போல விவசாயிகளுக்கு இந்த தொகை உடனே கிடைப்பதில்லை. ஒப்பந்த விவசாயம் அதிகமாக ஊக்குவிக்கப்படுவதன் மூலம் விவசாயிகள் மேலும் மேலும் ஒட்டாண்டிகளாக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு துறையிலும் மோடி மாநிலங்களின் உரிமைகளை பறித்து, அதிகாரங்களை  மத்தியில் குவிக்கிறார் என்பதற்கு மற்றொரு உதாரணம் காவேரி நீர் மேலாளுமை ஆணையத்திற்கு நேர்ந்த கதி. காவேரி காப்பாளர் என்று திருவாரூர் விவசாயிகள் எடப்பாடியாருக்கு பட்டம் அளித்து 50 நாட்களுக்குள், மத்திய அரசு காவேரி நீர் மேலாளுமை ஆணையத்தை மத்திய  நீர் ஆதாரத்திற்கான அமைச்சகத்தின் (ஜல் சக்தி அமைச்சகம்) கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, ஏப்ரல் 27, 2020 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது. காவேரி காப்பாளரிடமிருந்து பெரிய எதிர்ப்பு ஒன்றும் இல்லை.
இக்கொள்கைகள் நடைமுறைக்கு வந்தால், விவசாயம் வேகமாக தனியார்மயமாகி, சந்தைக்கான உற்பத்தி, ஏற்றுமதிக்கான உற்பத்தி, அதிக லாபத்திற்காக உற்பத்தி என்றாகி, மக்கள் உணவு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும். விவசாயத்தை நம்பியுள்ள மக்கள் ஒட்டாண்டிகளாக்கப்பட்டு அவர்கள் உழைப்பு மலிவாக சுரண்டப்படும். மாநில அரசாங்கங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
இதற்கு மாறாக முழுமையான நிலச்சீர்தி ருத்தம், விவசாய வளர்ச்சிக்கான ஏற்பாடுகள் போன்றவை மூலம், அமுல் போன்ற கூட்டுறவு முறை மூலம் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை போன்றவற்றை ஊக்குவிப்பதன் மூலம்தான் விவசாயத்தை வளர்ப்பதோடு விவசாய சமூகத்திற்கான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்த முடியும். உணவு பாதுகாப்பும் காப்பாற்றப்படும்.
இந்த சட்ட வரைவுகள் பெரும்பான்மை சாமான்ய மக்களை பாதிக்கும் என்பது தெரிந்திருந்தும், பல பொய்களை சொல்லி, மக்கள் விரோத கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை மக்கள் மீது திணிக்கும், மாநிலங்களின் உரிமைகளை அழிக்கும், மோடியின் சதியை முற்றாக எதிர்க்க வேண்டும்.

Search